துப்பறிவின் கச்சிதம்
ஒற்றன்
(நாவல்)
கோ. நடேசய்யர்
(ப-ர்): பெருமாள் சரவணகுமார்
வெளியீடு
மலைவாசம் பதிப்பகம்,
தொடர்புக்கு:
0094 766071062, 80981 91407
பக். 120
ரூ. 120
கடந்த நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களில் தமிழில் பத்திரிகைகளின் எண்ணிக்கைப் பெருகி, தொடர்கதைகள் அவற்றில் வெளியாகத் தொடங்கியபோது நாவல் என்பதன் ஏகதேச வடிவம் மக்களிடையே அறிமுகமானது. தொடர்கதைகளுக்குக் கிடைத்த வரவேற்பு தனிப்பட்ட நாவல்கள் எழுதி வெளியிடுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது. பெரும்பாலும் ஆங்கிலக் கல்வி பெற்று, அதுசார்ந்த பணிகளில் இருந்தவர்கள்தான் இந்த முயற்சியில் இறங்கினார்கள். இந்தக் கதை வடிவம் நமக்கு அன்னியமானது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரையிலும் புதினங்கள் நீள்கதைகளாகவே இருந்தன. எனவே கதையைச் சுவாரசியமாகச் சொல்வதுதான் முதன்மை நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்தின் அடியாகப் பிறந்தது துப்பறியும் நாவல் என்ற வகைமை.
ஒரு கொலை அல்லது கொள்ளை, இதன் பின்னணியிலுள்ள மர்ம முடிச்சு, இந்த முடிச்சை நீட்டிப்பதற்காகவும் வாசகரைக் கதையின் முடிவுவரை ஊகத்தில் வைத்திருப்பதற்காகவும் பின்னப்படும் தற்செயல் சம்பவங்கள் துணைக் கதாபாத்திரங்கள், மாண்டவர் திடீரென மீளுதல், மாறுவேடத்தில் பாத்திரங்கள் தோன்றுதல், முடிச்சு அவிழ்தல், தீயவர்கள் கைதுசெய்யப்படுதல் அல்லது மரணமடைதல்; இதுதான் பொதுவான கதைப் போக்கு. ஆரம்பகாலத்தில் துப்பறியும் நாவல்களைப் பலர் எழுதிப் பார்த்திருந்தாலும், இதில் வெற்றி பெற்றவர்களாக ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ராஜூ ஆகியோரைச் சொல்லலாம்.
இவர்களின் காலகட்டத்தில், 1915இல், வெளியான ‘ஒற்றன்’ நாவல், 107 ஆண்டுகளுக்குப் பிறகு(2022) மறுபதிப்பைக் கண்டிருக்கிறது. இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தழிழ்த்துறை விரிவுரையாளர் பெருமாள் சரவணக்குமார் இப்புத்தகத்தைத் தேடிக் கண்டெடுத்துப் பதிப்பித்திருக்கிறார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் இதற்கு ஒரு அறிமுக உரை தந்திருக்கிறார். நடேசய்யர் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பைத் தந்திருக்கலாம்.
முதல்பதிப்பின் முகப்புப்பக்க ஒளிநகலில் அக்காலத்து வழக்கத்தையொட்டி, நாவலின் தலைப்பு ‘ஒற்றன் or Spy’ என்று தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உள்ளது.
தஞ்சாவூரில் பிறந்த கோ. நடேசய்யர்(1887-1947), தஞ்சை திரு.வி.க. கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். பின்னர் 1914இல் அங்கேயே வர்த்தகமித்ரன் என்ற இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். 1919இல் தென்னிந்திய வியாபாரிகள் சங்க விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்ற அவர், அங்கே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்துகொள்கிறார். பின்னர் 1920இல் நிரந்தரமாக இலங்கையில் குடியேறி, மரணம்வரையிலும் அத்தோட்டத் தொழிலாளர்கள் நலனுக்காக வாழ்வை அர்ப்பணித்தார். தமிழில் தேசநேசன், தேசபக்தன், சுதந்திரன் ஆகிய இதழ்களையும் ஆங்கிலத்தில் தி சிட்டிசன், இண்டியன் எஸ்டேட் லேபரர் ஆகிய இதழ்களையும் தொடங்கியவர். வணிகவியல் துறை சார்ந்து சில நூல்களையும் எழுதியிருக்கிறார். ‘ஒற்றன்’ அவரது புனைவு முயற்சி.
பிற துப்பறியும் நாவல்களிலிருந்து ஒற்றன் கருவிலும் களத்திலும் பாத்திரப் படைப்பிலும் முற்றிலும் வேறானது; தனிச்சிறப்பானது. ஆங்கிலத்தில் ‘எஸ்பியனிஜ்’ என்றழைக்கப்படுகிற, ஒரு நாட்டு அரசாங்கத்திற்காகப் பிறநாடுகளில் ஈடுபடும் உளவுவேலைதான் நாவலின் மையக்கரு. நாவலின் சம்பவங்கள் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்கின்றன; பாத்திரங்கள் அனைவருமே வெளிநாட்டவர்கள். உளவும் இந்தியா தொடர்பானதல்ல.
முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் வியன்னாவில் ஆஸ்திரிய, ரஷ்ய, ஜெர்மன் சக்ரவர்த்திகளின் சந்திப்பு நிகழ்கிறது. அவர்களது ஆலோசனையின் ரகசிய குறிப்பைக் கடத்தும் நோக்குடன் பிரிட்டீஷ் ஒற்றர் ஒருவரும் அமெரிக்க ஒற்றர் ஒருவரும் காத்திருக்கிறார்கள். அந்த ரகசியக் குறிப்பு பிரிட்டீஷ் ஒற்றனிடம் பல இடையீடுகளுக்கிடையில் கடைசியில் வந்து சேர்கிறது. இதுதான் கதை.
இந்நாவலின் கரு மட்டுமல்ல, கதை சொல்லும் பாணியுமே வித்தியாசமானது. காட்சி வர்ணனை மிகக் குறைவு. கதாபாத்திரங்களின் தோற்ற வர்ணனை இல்லவே இல்லை. கதாபாத்திரங்கள் வெளிநாட்டவர்கள் என்பதாலோ என்னவோ, அக்காலகட்டத்து நாவல்களின் ‘நன்னெறி’ புகட்டும் இடையீடுகள் இல்லை.(கடைசியில் எவ்லின் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியில் மட்டும் நீதிநெறி கொஞ்சம் தலைகாட்டுகிறது!) ’இப்போது இன்னார் என்னவானார் என்று பார்ப்போம்’ என்று கதையை வளர்க்கும் தேவையற்ற சம்பவங்கள் கிடையாது. விறுவிறுப்பு தொய்யாத கச்சிதத்தோடு நாவல் நகர்கிறது.
மின்னஞ்சல்: srinipotty66@gmail.com