உள்ஒதுக்கீடு: சமூக நீதியின் நீட்சி
பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மத்தியில் ஒப்பீட்டளவில் அதிகம் பின்தங்கியவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதே, அதிகம் பின் தங்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று 2024, ஆகஸ்டு 1ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இடஒதுக்கீடு தொடர்பாக இதுவரை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சில முற்போக்கான மைல்கல் தீர்ப்புகளில் இதுவும் ஒன்று. இந்தத் தீர்ப்பில் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று சொல்லியிருப்பதைவிட அவ்வாறு வழங்குவதற்கு மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரமுண்டு என்று சொல்லியிருப்பது அதிக முக்கியத்துவமுடையது. பல வழிகளிலும் முற்போக்கானதாக இருக்கும் இந்தத் தீர்ப்பு தலித் அறிவுஜீவிகள் மத்தியில் கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது புரிந்துகொள்ளக்கூடியது மட்டுமல்ல எதிர்பார்த்த ஒன்றும்கூட. சற்று வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில் இந்தத் தீர்ப்பைக் கடுமையாக விமர்சிப்பவர்களில் மிகப் பெர