திருவாலங்காடு
ஓவியம்: ட்ராட்ஸ்கி மருது
1
பராவாக்கின் இடையறாப் பெருக்கு காரைக்கால் அம்மையின் கவிதைகள், அபர வெளியில் அவனுடைய எலும்புச் சொற்கள். அவற்றில் ஊர்ந்து பயணப்பட்டபோது திருவாலங்காடு மறைந்துபோய்விட்டிருந்தது. பழையனூர் நீலியின் ஆவியையும் காணவில்லை. செய்வதறியா திகைப்பில் நீலகண்டத்து நஞ்சை மீச்சிறிது அருந்தித் தொலைந்துபோகிறான். ஈமபூமியில் ‘வீசி எடுத்த பாதம் அண்டம் உற’ நிமிர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறான் சிவன். நடமாடும் பேய்கள் ஒன்றினையொன்று அடித்து ஒக்கலிக்கின்றன. விழுது நிணத்தை விழுங்கிய பேய், தன் பிள்ளைக்குக் காளி என்று பெயரிட்டுப் புழுதி துடைத்து முலைகொடுத்துப் போகிறது, திரும்பி வருதல் இல்லாமல். கன்னியின் கிளையில் கால்நீட்டிக் கடைக் கொள்ளியை இழுத்து மசித்து மையாக்கி இரு கண்ணிலும் எழுதிக்கொண்டு நெடுநெடு என்று நகைக்கிறது இன்னொரு பேய். கல்லறைத் தோட்டத்தில் அரசவைக் கோமாளி யாரிக்கின் மண்டையோட்டைக் கண்ணுறும் ஹாம்லெட் நிலையாமை பற்றிய விசாரத்தில் இறங்கிவிடுகிறான். சிவனுடைய பிரம்ம கபாலப் பிட்சை ஓட்டில் நித்தியத்துவத்தின் துளி ஒட்டிக்கொண்டிருப்பதைத் தரிசிக்கிறாள் காரைக்கால் பேய். ‘கண்ணார் கபாலக் கலம்’.
2
உடலோடு அனைத்தையும் உதறிவிட்ட கணம். ஒன்று இரண்டு மூன்று என்று மும்முலையாய் உற்பவித்த மாங்கனிகள். ருசி பேதம் மனக் கலவரம். பரமதத்தன் அவளது அடிபணிந்த கணம் எல்லாவற்றையும் துடைத்து அழித்துவிடுகிறது. பிறகு ஓயாத நடை. ‘காரைக்கால் அம்மை போல் நடந்தார் ஆர்?’ கீழாய்த் தலை கடக்கிறாள் கயிலை மலையை. அளக்கிறாள் மனத்தால் ஆலங்காட்டை.
3
பிரளய அக்கினியை எங்கு வைத்துள்ளாய் என்று வினவுகிறாள் சிவனை. அவள் கவிதைக்குள்தான் பதுங்கியிருக்கிறது அது. ‘அழவாட அங்கை சிவந்ததோ அங்கை/அழகால் அழல் சிவந்தவாறோ?’ கனிந்து எரிகிறது கவிதை. தீக்குள் விரலாய் அங்கம் குளிர்ந்து அனல் ஆடுகிறான் சிவன் ஆலங்காட்டில்.
4
திருவாலங்காடு சுந்தரேசய்யரின் பிடில் வாசிப்பு பற்றி தி. ஜானகிராமன் எழுதும்போது அவருடைய வாசிப்பு பல்லவச் சிற்பங்களை நினைவுபடுத்துவதாய்க் குறிப்பிடுகிறார். வடிவ உணர்வு, முழுமை, எளிமை என எல்லாவற்றிலும், ஒருமைக்கு அவசியமில்லாத அலங்காரங்களும் கிளை வேலைப்பாடுகளும் ஹொய்சால, நாயக்கச் சிற்பங்களில்தான் என்கிறார். காரைக்கால் அம்மையின் கவிதை பல்லவச் சிற்பம்தான். ‘அடி பேரின் பாதாளம் பேரும் . . . அறிந்தாடும் ஆற்றாது அரங்கு’ என்கிற சிற்ப வரிகளுக்கு பாலா அபிநயம் பிடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்பது யாருக்கும் தெரியப் போவதில்லை. ‘ந பூதோ ந பவிஷ்யதி’