தங்கலான்: கலையும் அரசியலும் முயங்கும் களம்
திரைப்பட ஊடகத்தைத் தீவிரமான கலைச் சாதனமாகக் கருதித் திரைப் படங்களை உருவாக்கும் இயக்குநர்கள் தமிழில் மிக மிக அரிதானவர்கள். அத்தகைய மிகச் சில படைப்பாளிகளில் ஒருவர் பா. இரஞ்சித். பொழுதுபோக்குக்காகவோ வணிக நோக்கங்களுக்காகவோ தன்னுடைய கலையில் அவர் அதிகம் சமரசம் செய்துகொள்வதில்லை. பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுத்த படங்களில் அவர்களுக்கான சமரசமும் திரைப்படத்தின் தேவையை மீறி அவர்களை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறையும் ஓரளவு இருந்தன. வணிகம், நாயக பிம்பங்கள், கேளிக்கை ஆகியவை சார்ந்த சமரசங்களோ விலகல்களோ இல்லாத படைப்பாக உருவாகியிருக்கிறது தங்கலான்.
தெளிவான அரசியல் பார்வையும் அதைத் திரைப்படக் கலையின் வழியாக முன்வைப்பதற்கான அழகியல் கூறுகளும் இரஞ்சித்திடம் உள்ளன. தலித்துகளின் வாழ்நிலையைத் தன் புனைவின் வழியே காட்சிப்படுத்தும் அவர் தலித்துகள்மீதான கழிவிரக்கத்தைத் தூண்டும் அல்லது கோரும் கதையாடல்களைக் கவனமாக அல்ல, இயல்பாகவே தவிர்த்துவிடுகிறார். தலித்துகள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறையையோ சுரண்டல்களையோ அவர் சித்தரிப்பதில்லை என்று இதற்குப் பொருளில்லை. ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் காட்டி இரக்