பயணத்தின் சுவடுகள்
வரும் டிசம்பர் மாத இதழ் காலச்சுவடின் 300ஆவது இதழ். இந்த ஆண்டில் காலச்சுவடு பதிப்பகத்தின் 30ஆம் ஆண்டு தொடங்குகிறது. குறிப்பிடத்தக்க இந்த இரு நிகழ்வுகளையும் ஒட்டிக் காலச்சுவடு இதழுடன் நேரடிப் பணியாளர்களாகவும் வெளியிலிருந்து பங்காற்றியவர்களாகவும் செயல்பட்டு வருபவர்கள் காலச்சுவடுடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த வரிசையில் முதலாவதாகக் காலச்சுவடு இதழ்ப் பணிகளில் தொடக்கத்திலிருந்தே பங்கெடுத்துவரும் கலா முருகன் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அவர் தற்போது காலச்சுவடு பதிப்பகத்தின் நூல் வடிவமைப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
– பொறுப்பாசிரியர்
காலச்சுவடு அறிமுகம்
1986 ஏப்ரல் மாதம் பாக்கியம் பிள்ளை நடத்திய பாரதி அச்சகத்தில் அச்சுக்கோப்பாளர் பணியில் சேர்ந்தேன். உலோக எழுத்துகளை அச்சுக்கோத்து அச்சிடும் பிரஸ் அது.
1987இன் இறுதியில் சுந்தர ராமசாமியின் முதல் காலச்சுவடு இதழின் பணி பாரதி அச்சகத்தில் தொடங்கியது. அப்படித்தான் எனக்குக் காலச்சுவடு அறிமுகம் கிடைத்தது. வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும் அணிந்த உயரமான மனிதர் காரில் வந்து காலச்சுவடு இதழுக்கான கையெழுத்துப் பிரதிகளைத் தந்து செல்வார். அவர்தான் எழுத்தாளர் சுந்தர ராமசாமி. நாங்கள் வியப்புடனும் மரியாதையுடனும் அவரைப் பார்ப்போம். ஆனால் அதிகமாகப் பேசிப் பழகியதில்லை. எங்கள் அச்சக உரிமையாளர் பாக்கியம் பிள்ளை, சு.ரா. கொண்டுவரும் கையெழுத்துப் பிரதிகளை வாங்கிக்கொள்வார். அச்சக உரிமையாளர் இல்லாத நேரங்களில் நானும் அந்தப் பணியைச் செய்திருக்கிறேன்.
சு.ரா.வின் தலையங்கத்துடன் அவரது கட்டுரை, பசுவய்யா என்ற புனைபெயரில் அவர் மொழிபெயர்த்த கவிதைகள் அடங்க, ராஜ் கௌதமன், ஜெயமோகன், சின்னக் கபாலி ஆகியோரது கட்டுரைகள், சுகுமாரன் கவிதைகள், அம்பை சிறுகதை, அச்சுதன் அடுக்கா, விஷ்ணுஸித்தன், ஜெயமோகன், சி. மோகன் ஆகியோரது மதிப்புரைகள் ஆகியவற்றுடன் 64 பக்கங்களைக் கொண்ட முதல் இதழின் (1988 ஜனவரி-மார்ச் காலாண்டிதழ்) பணி நடைபெற்றது.
இதழுக்கான கதை, கட்டுரை, கவிதைகள் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பிரித்துக்கொடுத்து அச்சுக்கோப்போம். எட்டிலிருந்து பதினாறு பக்கங்கள்வரை அச்சுக்கோத்து முடித்ததும் அவற்றை வடிவமைத்துப் பிரதி எடுத்துக் கொடுப்போம். இதழ்ப் பணி முடியும்வரை சு.ரா.வின் நண்பர் காலஞ்சென்ற எம். சிவசுப்ரமணியன் அவர்கள் மதிய உணவு கொண்டுவந்து அங்கேயே உணவருந்திவிட்டுக் காலைமுதல் மாலைவரை மெய்ப்புப் பணிகளை மேற்கொள்வார். அவருடன் தி.அ. ஸ்ரீனிவாஸனும் அடிக்கடி அங்கு வந்திருக்கிறார். முதலில் அச்சுக்கோத்த பதினாறு பக்கங்களையும் திருத்தம்செய்து இறுதி வடிவம் மேற்கொண்டு அச்சாக்கம் செய்த பின்னர்தான் அடுத்த பிரதிகளை மெய்ப்புக்குக் கொடுக்க இயலும்; இல்லையென்றால் எழுத்துருக்கள் பற்றாக்குறை ஏற்படும். மின்சாரம் தடைப்படும் காலங்களில் அடுத்த பக்கங்களைத் தயார்செய்ய கால தாமதம் ஏற்படும். பணி முடிந்ததும் சு.ரா. வந்து அச்சுக்கோத்த பிரதிகளை வாங்கிச் செல்வார். சில நேரங்களில் கண்ணனும் பிரதிகளை வாங்க வந்திருக்கிறார்.
இவ்வாறு சு.ரா.வின் எட்டு காலச்சுவடு இதழ்களின் (1988 ஜனவரி-மார்ச் முதல் 1989 அக்டோபர்-டிசம்பர் வரை) பணிகளும் பாரதி அச்சகத்தில் நடைபெற்றன. அச்சகத்தில் நான் பணிபுரிந்த பத்து ஆண்டுகளில் அங்கு வெளிவந்த இதழ்களிலேயே இலக்கணப் பிழைகள் எதுவும் இல்லாமல் புள்ளி, கமா போன்ற ஒவ்வொரு விஷயங்களோடு இதழுக்குப் பயன்படுத்தும் எழுத்துரு, வடிவ நேர்த்தி, ஓவியங்கள், அட்டை வடிவம் என அனைத்தையும் அச்சு இயந்திரத்தில் ஏற்றிய பின்பும் கூர்ந்து கவனித்துத் தனிச்சிறப்போடு வெளிவந்த ஒரே இதழ் காலச்சுவடுதான்.
எம்.எஸ். வரும்போது மதிய உணவு கொண்டுவந்து எங்களுடன் சேர்ந்து உணவருந்துவார். அந்நேரங்களில் அவர் எங்களிடம் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். அப்போது அவர் அதிகம் பேசியது சு.ரா. பற்றிதான். அவர், சு.ரா. வெளியூர் சென்று வரும்போதெல்லாம் தனக்கு ஏதேனும் பரிசு வாங்கி வந்து தந்திருக்கிறார் என்றும், ஒருமுறை வெளியூர் சென்று வந்தபோது பை ஒன்றைத் தனக்குப் பரிசளித்ததாகவும் அந்தப் பை ராசியானது என்றும் கூறி எம்.எஸ். எப்போதும் அதைத் தன்னுடன் எடுத்துச் செல்வார். பின்னாட்களில் அந்தப் பையின் ஜிப் அறுந்தபோதிலும் அதைச் சரிசெய்து தன்னுடன் பத்திரப்படுத்தியிருந்ததைக் கவனித்திருக்கிறேன். சு.ரா. பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் எம்.எஸ். கூறிய பல விஷயங்களிலிருந்து சு.ரா.மீதும் அவரது குடும்பத்தினர்மீதும் எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டிருந்தது. சு.ரா.வின் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. அந்நாட்களில் எம்.எஸ்ஸிடம் அடிக்கடி “சார், நான் காலச்சுவடில் பணிக்கு வரலாமா?” என்று கேட்டதும் உண்டு. அவர் அதற்கு எதுவும் சொல்ல மாட்டார். நான் 2007இல் காலச்சுவடு அலுவலகத்தில் பணியில் சேர்ந்தபோது சு.ரா. இல்லை என்பது எனக்கு மிகுந்த துயரத்தை அளித்தது.
பா. சுதா, கலா முருகன், அடூர் கோபாலகிருஷ்ணன், ப. சிவக்குமார் (பி.எஸ்)
எஸ்.வி. ஷாலினி, சவிதா, பேரா. ஜெகநாதன், ஜே.பி. சாணக்யா
நீண்ட இடைவெளிக்குப் பின்
1996 செப்டம்பர் ஒன்றாம் தேதி எனக்குத் திருமணம். ஆகஸ்ட் 15 அன்று பணியை நிறுத்திவிட்டேன். அதன் பின்னர் பத்து வருடங்கள் பணிக்குச் செல்லவில்லை. 2007 ஜூன் மாதம் பாக்கியம் பிள்ளையின் அண்ணன் எம். சுப்பிரமணிய பிள்ளையும் அ.கா. பெருமாளும் என்னைக் காலச்சுவடில் பணிக்கு அழைத்துவரும்படி கண்ணன் கூறியதாக இந்து கல்லூரியில் பணிபுரியும் என் தங்கையின் கணவரிடம் சொல்லி அனுப்பியிருந்தார்கள். இரண்டு நாள் கழித்துக் காலச்சுவடு அலுவலகத்திற்கு வந்தேன். அலுவலகத்தைப் பார்த்ததும் பத்து வருட இடைவெளியில் அச்சுப் பணிகள் எல்லாம் எனக்கு மறந்ததுபோல் தோன்றியது. கண்ணனைச் சந்தித்தபோது அவரிடம் “சார், எனக்கு கணினிப் பணி எல்லாம் அத்துபடி இல்லை” என்று கூறினேன். ஆனால் அவரோ “எல்லாம் இங்கே கற்றுக்கொள்ளலாம். நீ நாளை பணியில் சேர்கிறாயா?” என்று கேட்டார். முன்னரே காலச்சுவடில் பணிசெய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் உடனே சரி என்றேன். கண்ணன், டிடிபி அறையை எட்டி நோக்கி அங்கிருந்த எம்.எஸ்.ஸிடம், “சார், யார் வந்திருக்கா பாருங்க! கலா! ஞாபகம் இருக்கா?” என்று கேட்டார். உடனே அங்கிருந்த எம்.எஸ். “எடீ, எப்படி இருக்கே?” என்று அவருக்கே உரித்தான சிரிப்புடன் எழுந்து வந்தார். எனக்கு ஒருவித நிம்மதி. ‘எம்.எஸ். சார் இருக்கிறார். ஏதாவது தெரியவில்லை என்றால் அவரிடம் கேட்கலாம்’ என்று நினைத்துக்கொண்டேன்.
நான் காலச்சுவடில் பணியில் சேர்ந்தபோது கவிஞர் ராஜமார்த்தாண்டன் (பதிப்பக எடிட்டர்), எனக்கும் ஒரு மாதத்திற்கு முன்னால் பணியில் சேர்ந்திருந்த எஸ்.வி. ஷாலினி (பதிப்பக ஒருங்கிணைப்பு), ஜெயா (நூல் இறுதி வடிவம் மேற்கொள்ளுதல்), காயத்ரி (நூல் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்), ஐயப்பன் (நூல் தட்டச்சு செய்தல்) ஆகியோர் நூல் உருவாக்கக் குழுவில் இருந்தார்கள்.
நான் புதிதாக வந்ததால் முதலில் இரண்டு மூன்று நாட்கள் பணிகளைப் பற்றி அறிந்துகொள்ளச் சொன்னார்கள். ஜெயா 2007 டிசம்பர் புத்தகச் சந்தைக்குப் பின்னர் பணியிலிருந்து விலகுவதாக இருந்தார். அவருக்குப் பின்னர் நூல் தயாரிக்கும் பொறுப்பை நான் ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள்.
முதல் பணி
ஹோலிகிராஸ் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவராக இருந்த கில்ட் பெர்னார்ட் கொண்டுவந்த தமிழ்ப் பாடநூல் திட்டத்திற்கான நூல் பணியினை முதலில் செய்தேன். நூல் அச்சாக்கம் பெற்று வந்ததும் சென்னை அலுவலகத்தில் நூல் தயாரிப்புப் பணியைக் கவனித்துவந்த நாகம் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, நூலுக்குப் பயன்படுத்தியிருக்கும் எழுத்துருக்களை மட்டும் சற்றுக் கவனிக்கும்படி கூறினார்.
2007-2008இல் 45 நூல்கள் காலச்சுவடில் வெளியாகின. 2007 சென்னை புத்தகச் காட்சியின்போது காலச்சுவடு நூல் பட்டியல் தயாரிக்கும் பணியை நான் மேற்கொள்ள நேர்ந்தது. அப்பணியின்போது காலச்சுவடு நூல்கள், அவற்றை எழுதிய ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டேன்.
2008 ஏப்ரலில் காலச்சுவடு 100ஆவது இதழுடன் பதிப்பகத்தின் 250ஆவது நூலையும் சேர்த்துச் சென்னையில் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் எட்டு நூல்கள் வெளியாயின. அந்த நூல்கள்: ‘சுந்தர ராமசாமியின் காலச்சுவடு (முழுத் தொகுப்பு)’, ‘காலச்சுவடு பெண் படைப்புகள்’, ‘காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம்’, ‘சொல்லில் அடங்காத வாழ்க்கை (காலச்சுவடு கதைகள்)’, ‘காலச்சுவடு நேர்முகம்’, ‘நான் கொலைசெய்யும் பெண்கள்’, ‘சந்தியாவின் முத்தம்’, ‘பாரதி கருவூலம்: இந்து நாளிதழில் பாரதியின் எழுத்துக்கள்’ (250ஆவது நூல்). சு.ரா.வின் காலச்சுவடு இதழ்களைத் தொகுத்து நூலாக்கும் பணிகளை மீண்டும் நானே செய்யும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது.
அதன் பின்னர் நான் காலச்சுவடில் நூல்களை மறுபதிப்பு செய்தல், இதழ் தயாரிப்பு, மின்னிதழ்கள், மின்நூல்களைப் பதிவேற்றுதல், அட்டை முகப்பு செய்தல், அச்சக மேற்பார்வை போன்ற பல பணிகளைச் செய்யத் தொடங்கினேன்.
2007இல் நான் பணியில் சேர்ந்தபோது 197 நூல்கள் வெளிவந்திருந்தன. 2024இல் தற்போது வெளிவந்திருக்கும் ‘விஜயநகரம்’ 1290ஆவது நூல்.
முன்வரிசையில்: கண்ணன், கமலா ராமசாமி, மைதிலி சுந்தரம், ரோஹிணி மணி
பின்வரிசையில்: எஸ்.வி. ஷாலினி, கலா முருகன், மணிகண்டன், ஜெபா, ரத்னா, அகிலா, சுபா
சிறப்பு நிகழ்வுகள்
2011 ஏப்ரல் மாதம் கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் நினைவரங்கில் ‘சு.ரா. 80’ இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது. விழா நிகழ்வுகளில் பங்குகொண்ட பல எழுத்தாளர்கள் சு.ரா. பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் உரையாற்றினார்கள். சண்முகராஜா இயக்கத்தில் நெய்தல் கிருஷ்ணன் பிரதான பாத்திரத்தில் நடித்த ‘குதிரை முட்டை’ மேடை நாடகத்துடன் விழா சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் சு.ரா.வின் ‘மனக்குகை ஓவியங்கள்’, ‘சுந்தர ராமசாமி நேர்காணல்கள்’, ‘வாசனை’, கு. அழகிரிசாமி நினைவோடை, கண்ணனின் ‘அகவிழி திறந்து’, தங்கு ராம் மொழிபெயர்ப்பில் ‘The Ways of Dogs’ (சு.ரா.வின் ‘நடுநிசி நாய்கள்’ தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு), கமலாம்மாவின் ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ (சு.ரா. பற்றிய நினைவுகள்) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. ஆர்வத்துடன் நூல் பணிகளைச் செய்தேன். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அந்த நிகழ்வுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுவிட்டதை எண்ணி இன்றும் வருந்துகிறேன்.
2014இல் காலச்சுவடு புதிய அலுவலகத்தை அப்போதைய மறைந்த எம்.எஸ். முன்னிலையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா திறந்துவைத்தார். சு.ரா. நினைவு நூலகம் மட்டும் இருந்த சுந்தர விலாசத்தின் மாடியில் பதிப்பாசிரியருக்கான தனி அறையோடு ஆசிரியர் அறை, டிடிபி, கணக்குப் பிரிவு, இதழ் என ஒவ்வொரு பிரிவுக்கும் குளிர்சாதன வசதியோடு தனித்தனி அறைகள் கொண்ட புதிய அலுவலகத்தைக் கண்டதும் எங்கள் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம்.
2018இல் கண்ணன்-மைதிலி இணையரின் 25ஆவது திருமண வெள்ளி விழா நிகழ்வு சுந்தர விலாசத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் காலச்சுவடு நண்பர்களும் எழுத்தாளர்களும் பங்குகொண்டனர். அதற்கு மறுநாள் நடைபெற்ற ‘நெய்தல்’ அமைப்பு நடத்திய சு.ரா. நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வில் காலச்சுவடில் பத்து வருடங்கள் பணிநிறைவு பெற்றமைக்காக நாகம், பி.எஸ். ஆகியோருடன் எனக்கும் காலச்சுவடு முத்திரை பதித்த கேடயத்துடன் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதை எனது பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதி மகிழ்வுற்றேன்.
உலகப் புத்தகச் சந்தையில் காலச்சுவடு
2007 அக்டோபரில் பிராங்பர்ட்டில் நடைபெறும் உலக புத்தகச் சந்தையில் பங்குகொள்வதற்காக முதல்முறையாக இந்தியாவிலிருந்து இளம் பதிப்பாளர் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பின் பேரில் காலச்சுவடு பதிப்பாளர்-ஆசிரியர் கண்ணன் அதில் பங்குபெற்றார். அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் பிராங்பேர்ட் புத்தகச் சந்தைக்குக் காலச்சுவடு பதிப்பகம் சார்பாகக் கண்ணன் சென்று வருகிறார். நான் பணிக்கு வந்த அதே வருடம் காலச்சுவடு அரங்கு உலகப் புத்தகச் சந்தையில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றது எனக்கு மிகுந்த சந்தோஷம். ஷார்ஜாவில் நடைபெறும் உலகப் புத்தகச் சந்தைக்கும் 2022முதல் காலச்சுவடு பதிப்பகம் சார்பாகக் கண்ணனின் மனைவி மைதிலி, ஒருங்கிணைப்பாளர் ஜெபாவையும் அழைத்துச் சென்று வருகிறார். உலகளாவிய பதிப்பகத்தில் பணிபுரிகிறோம் என்ற பெருமிதம் எனக்குண்டு.
காலச்சுவடில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சீரியமுறையில் பணியாற்றியமைக்காகக் காசோலையை கலா முருகனுக்கு வழங்கும் கமலா ராமசாமி.
காலச்சுவடு ஆசிரியர்களுடனான பணி அனுபவம்
கமலாம்மா: அம்மா, சு.ரா.பற்றி எழுதிய ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூல் பணியை நான் அலுவலகப் பணி முடித்து அனைவரும் வீடு திரும்பிய பின்னர் அப்போதைய காலச்சுவடு டிடிபி அறையான சு.ரா.வின் ‘ஜன்னல்’ அறையில் கமலாம்மாவுடன் சேர்ந்து செய்தேன். அம்மா தனது நினைவுகளைச் சொல்ல நான் தட்டச்சு செய்வேன். சு.ரா.பற்றி சொல்லும்போது இடையிடையே அம்மாவின் கண்கள் நீர் பொங்கும். வார்த்தைகள் வராது. உடனே, “நாளை பார்க்கலாம்மா” என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிடுவார். சு.ரா.வின் மறைவை அம்மாவால் ஜீரணிக்கவே இயலவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அம்மா கண் கலங்குவதைப் பார்க்கும்போது எனக்கும் வருத்தம் ஏற்படும். அந்நினைவுகள் இப்போதும் என் மனக்கண் முன் வந்துசெல்கின்றன.
‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ வெளிவந்த பின் அம்மா, ‘அன்புடன் கலா மற்றும் குடும்பத்திற்கு’ என்று கையொப்பமிட்டு நூலின் ஒரு பிரதியையும் அதனுடன் ஒரு புடவையையும் பரிசாக வழங்கினார். சு.ரா.வின் மனைவி கமலாம்மா கையால் அந்தப் பரிசைப் பெறும்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
கண்ணன்: ஆரம்பத்தில் கண்ணன் சாருடன் உரையாடுவது, அவரது கட்டுரைகளைத் தட்டச்சு செய்வது, திருத்தங்கள் மேற்கொள்வது போன்றவற்றை எனக்குப் புரிந்துகொள்ளச் சற்றுச் சிரமமாக இருந்தது. சிறிய தவறு ஏற்பட்டாலும் அதைப் பெரிய குற்றமாகக் கருதுவார். ஒரு சந்தேகம் ஏற்பட்டால் அதை அவரிடம் தெளிவாகக் கேட்டறிந்த பின்புதான் எனக்குத் திருப்தி ஏற்படும். கண்ணன் காலச்சுவடுமேல் கொண்டுள்ள பற்று மிகவும் அலாதியானது. சிறு தவறும் ஏற்படாதவண்ணம் நூல்களை மிகவும் தரமானதாகக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். நூல்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக நூல்களின் வடிவமைப்பில் தொடங்கி எடிட்டிங், அச்சாக்கம், நூலுக்குப் பயன்படுத்தும் தாள், பைண்டிங், அட்டை வடிவம், நூலின் விலை, கூரியர் அனுப்பும் முறை. அவர்கள் கேட்கும் நூல்கள் உரிய நேரத்தில் உரிய முகவரிக்குத் தரமான கட்டுடன் சென்றுசேருவது என எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருப்பார். எங்களையும் அப்படியே வழிநடத்துவார். அப்பணிகளில் ஏதேனும் சிறு குறை தென்பட்டாலும் அதை விரும்ப மாட்டார்.
ராஜமார்த்தாண்டன்: ராஜமார்த்தாண்டன் எடிட்டராக இருந்த காலங்களில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். அவர் பிழைதிருத்தம் செய்துகொண்டிருக்கும் நேரங்களில் நாங்கள் இடையிடையே அவரிடம் சந்தேகங்கள் கேட்டுச் சிரமப்படுத்துவோம். எந்த நேரத்தில் எந்த நூலைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டாலும் அவர் பொறுமையாகச் சொல்லித்தருவார். தேவைப்பட்டால் உடனே எழுந்து நூலகத்திற்குச் சென்று அது தொடர்பான நூலைத் தேடி எடுத்துப் படித்து எங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வார். அவர் பிழை திருத்திக்கொண்டிருக்கும்போது அவரது கவனத்தைச் சிதறடிக்கச்செய்வது குறித்து எங்களுக்குத்தான் வருத்தமாக இருக்கும். நெய்தல் கிருஷ்ணனும் சுகுமாரனும் அவரது நெருங்கிய நண்பர்கள்.
ராஜமார்த்தாண்டன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர். 2009இல் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி அறிந்து மிகவும் துயரத்துடன் காணப்பட்டார். ஒரு வாரத்திற்கு மேல் அவர் அலுவலகம் வரவேயில்லை. பணிக்கு வருவதற்கு முன்னால் தினமும் அலுவலகத்திற்கு எதிரில் இருக்கும் கடையில் தேநீர் அருந்தி, சிறிது ஓய்வெடுத்துவிட்டு அதன் பின்தான் வருவார். 2009 ஜூன் 6 அன்று அவர் தேநீர்க் கடையிலிருந்து காலச்சுவடுக்கு வருவதற்காகச் சாலையைக் கடக்கும்போது விபத்துக்குள்ளாகி உயிர் இழந்த சம்பவம் எங்களை அதிர்ச்சியடையச் செய்து துயரில் ஆழ்த்தியது.
அந்நாட்களில் மாதத்தில் ஒரு சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு காலச்சுவடு, சுந்தர விலாசத்தின் மாடியில் ‘காகங்கள்’ இலக்கியக் கூட்டம் நடைபெறுவதுண்டு. அக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர் ஒருவரை வரவேற்று இலக்கிய நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். அ.கா. பெருமாள் வழியாகத் தோல்பாவைக் கூத்துக் கலைஞரை அழைத்து தோல்பாவை நிகழ்ச்சி நடத்தக் கண்ணன் திட்டமிட்டிருந்தார். அந்நிகழ்வு மழை காரணமாக நின்றுபோய்விட்டது. அடுத்து அதே நிகழ்வை நடத்தத் திட்டமிட்டபோது ராஜமார்த்தாண்டன் மரணம் ஏற்பட்டுவிட்டதால் நிகழ்ச்சியை நடத்த இயலவில்லை. அதன் பின்னர் ‘காகங்கள்’ கூட்டம் நடைபெறுவதேயில்லை.
ஆ.இரா. வேங்கடாசலபதி: வேங்கடாசலபதி 2007இல் தன் மனைவி அனிதா சலபதியுடன் வந்திருந்தபோது எனக்கு அறிமுகமானார். அனிதாவும் மைதிலியும் நல்ல நண்பர்கள். சலபதி சென்னைக்குத் திரும்பிச் சென்ற பின்பும் அனிதா ஒரு மாதக் காலம் சுந்தர விலாசிலேயே தங்கியிருந்தார். அந்த நாட்களில் அனிதா எங்களுடனும் மிகுந்த நட்புடன் பழகினார். அதன் பின்னர் காலச்சுவடு வரும்போதெல்லாம் எங்களிடம் அன்போடும் நட்போடும் நலம் விசாரிப்பார்கள். அவர்களது ஒரே மகள் கன்னலும் எங்களிடம் மிகவும் பிரியத்துடன் பழகுவாள்.
வேங்கடாசலபதி பணியில் கண்டிப்பானவர். நான் பணியில் சேர்ந்த சமயங்களில் என்னுடன் பணிபுரிந்த சக பணியாளர்கள் ‘சலபதி சார்’ என்றால் மிகவும் பயப்படுவார்கள். அவருக்குப் பணியில் சிறு தவறு நேர்ந்தாலும் பிடிக்காது. குறித்த நேரத்தில் குறித்த பணிகளை முடிக்க வேண்டும் என்று விரும்புபவர். அதில் ஒரு சிறு தவறும் ஏற்படக் கூடாது என்று கருதுபவர். விஷயங்களைத் தேடி, முறையான தரவுகளுடன் வாசகர்களுக்குச் சரியான தகவல்களை வழங்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். பிழைகளில் மட்டுமல்லாமல் நூல் வடிவம், எழுத்துருக்கள் போன்றவற்றிலும் மிகுந்த கவனம் செலுத்துபவர். சிறு வயதிலேயே புத்தகப் பிரியராகவும் ஆய்ந்தறிபவராகவும் இருந்தார்.
காலச்சுவடில் 2009இல் வெளியான ஆ. சிவசுப்பிரமணியனின் ‘ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’ நூல் ஆ.இரா. வேங்கடாசலபதி முன்னுரையுடன் வெளிவந்தது. அவர் லண்டன் சென்று தேடி எடுத்துவந்த பல அரிய புகைப்படங்களைக் கொண்ட நூல் அது. அவருடனான எனது முதல் பணி அதுதான். இன்றளவும் அந்தப் பணி அனுபவம் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதன்பின் அவருடன் பல நூல் பணிகளைச் செய்திருக்கிறேன்.
கண்ணன் - மைதிலி போலவே சலபதி - அனிதா ஆகியோரும் என்மேல் அக்கறை எடுத்து எனக்கும் என் குடும்பத்திற்கும் பல உதவிகள் செய்துள்ளார்கள்.
சுகுமாரன்: 2009இல் ராஜமார்த்தாண்டன் மறைவுக்குப் பின்னர் சுகுமாரன் காலச்சுவடின் பதிப்பகப் பொறுப்பாசிரியராக வந்தார். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்கள் நாகர்கோவில் அலுவலகத்திற்கு வந்துசெல்வார். அவர் வரும்போது கண்ணன், ஷாலினியோடு சேர்ந்து காலச்சுவடில் வெளியிட விரும்பும் நூல்கள் பற்றியும் அதற்கான ஓவியம், அட்டை வடிவம் போன்ற விவரங்கள் குறித்தும் உரையாடுவார். அவர் தி. ஜானகிராமனின் தீவிர வாசகர். சு.ரா.வை மிகவும் விரும்புபவர். கமலாம்மாமீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். அந்நாட்களில் அவர் திருவனந்தபுரத்தில் வசித்துவந்தார். அவரது மனைவி பிரேமாமணி எங்கள் அலுவலகத்திற்கு அருகில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணியில் இருந்தார். மிகவும் அன்பானவர்.
சுகுமாரனிடம் எந்த ஆசிரியரின் நூலுக்குப் பின்னட்டைக் குறிப்பு, அட்டை மடிப்புக்கான விஷயங்கள் கேட்டாலும் ஐந்தே நிமிடத்தில் தந்துவிடுவார். எந்த நூலில் எந்த ஆசிரியர் எந்தப் பக்கத்தில் யாரைப் பற்றிக் கூறியிருக்கிறார், என்ன கூறியிருக்கிறார் என்பதை அச்சுப் பிசகாமல் அவர் மனதில் பதிய வைத்திருப்பதை எண்ணிப் பலமுறை வியந்திருக்கிறேன்.
2013 ஏப்ரலில் காலச்சுவடு இதழ்ப் பணியைச் சென்னை அலுவலகத்திலிருந்து நாகர்கோவில் தலைமை அலுவலகத்திற்கு மாற்றியபோது காலச்சுவடு இதழ் பொறுப்பாசிரியரானார். அப்போது சென்னையில் காலச்சுவடு இதழ், நூல் தயாரிப்புப் பணியிலிருந்த கீழ்வேளூர் பா. ராமநாதன் நாகர்கோவில் அலுவலகம் வர இயலாத காரணத்தால் சென்னை அலுவலகத்தில் முன்னர் பணிபுரிந்த முரளியை அழைத்திருந்தார்கள். அவருக்கும் உடனே வர இயலாத நிலையில் என்னிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார்கள். ஒவ்வொரு மாதமும்15ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதிவரை காலச்சுவடு இதழ்ப் பணியையும் இதர நாட்களில் நூல் வடிவமைப்புப் பணியையும் கவனித்தேன். அதன் பின் மூன்று இதழ்களின் வடிவமைப்புப் பணிகளை சுகுமாரன் உதவியுடன் செய்தேன். அவருடன் தொடர்ச்சியாக நூல் பணிகளையும் செய்திருக்கிறேன். காலச்சுவடில் நூல் முகப்பு வடிவம்செய்ய எனக்கு சுகுமாரன் சில வழிமுறைகளைச் சொல்லித்தந்தார்.
பெருமாள்முருகன்: பெருமாள்முருகனுடன் நிறைய நூல் பணிகள் செய்திருக்கிறேன். மிகவும் சாதுவானவர். கடிந்து பேசிப் பார்த்ததில்லை. அவரது நூல் பணிகளைச் செய்வதில் எங்களுக்குச் சிரமமிருக்காது. ஏனெனில் அவரே பலமுறை படித்துத் திருத்தப் பணிகள் எல்லாம் முடித்து இறுதிப் பிரதியையே எங்களுக்கு மென்பிரதியாக அனுப்புவார். அவர் அனுப்பிய மென்பிரதியை நூல் வடிவத்தில் அனுப்பினால் அதைப் படித்துத் திருத்தங்களைக் கூறுவார். அதன் பின்னர் நாங்கள் இறுதி வடிவம் செய்து அனுப்பினால் அவரே மீண்டும் ஒருமுறை திருத்தம் மேற்கொள்வார். எளிதில் அவரது நூல் பணிகள் முடிந்துவிடும். அவர் திருத்தம் மேற்கொள்ளும்போது ஒற்றுப் பிழைகள் கூறும் இடங்களைக் கூர்ந்து கவனித்துப் பயன்பெற்றிருக்கிறேன்.
நஞ்சுண்டன்: 2007இல் காலச்சுவடு வெளியிட்ட கன்னட மொழிபெயர்ப்புச் சிறுகதைகளான ‘அக்கா’ நூல் வடிவமைப்பின்போது எனக்கு நஞ்சுண்டனின் அறிமுகம் கிடைத்தது. நூல் வடிவமைப்பு, நூல் விவரப் பக்கங்களைச் சரிசெய்வது எனச் சில விஷயங்களைக் குறித்தும் அவரிடமிருந்து அறிந்துகொண்டேன். நூல் திருத்தங்கள் செய்யும்போது மிகவும் கறாராக இருப்பார். மிகவும் நல்ல மனிதர். எல்லோருடனும் அன்புடன் பழகுவார். நாங்கள் நூல் திருத்தப் பணிகள் செய்யும்போது இலக்கியப் பிழைகளைச் சரிசெய்வது குறித்துச் சொல்லித் தருவார். அவரது மறைவு எங்கள் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
அம்பை: சு.ரா. காலத்திலிருந்தே காலச்சுவடில் எழுதிவருபவர் அம்பை. மிகவும் சுறுசுறுப்பானவர். எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருப்பார். திருத்தங்களைக் கறாராகச் சுட்டிக்காட்டுவார். ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’, ‘அம்பை கதைகள்’, ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’, ‘ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்’ போன்ற நூல்களின் வடிவமைப்பை அவருடன் இணைந்து செய்திருக்கிறேன். அவர் வரும் நாட்கள் எங்களுக்கு மிகவும் குதூகலமாக இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்துகொண்டே இருப்பார்.
அ.கா. பெருமாள், தி.அ. ஸ்ரீனிவாஸன், அரவிந்தன், ஆ. சிவசுப்பிரமணியன், ய. மணிகண்டன், பி.ஏ. கிருஷ்ணன், ஜி. குப்புசாமி, பழ. அதியமான், ப. சரவணன், தியடோர் பாஸ்கரன், சு.கி. ஜெயகரன், குளச்சல் யூசுப், ஆனந்த், நெய்தல் கிருஷ்ணன், சச்சிதானந்தன் சுகிர்தராஜா, சல்மா, இசை, தேவேந்திர பூபதி, சுகிர்தராணி, பெருந்தேவி போன்ற பல ஆசிரியர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். இப்பேர்ப்பட்ட ஆளுமைகளுடன் பணிபுரியும் அனுபவத்தை அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
காலச்சுவடில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சீரியமுறையில் பணியாற்றியமைக்காக நினைவுப்பரிசை கலா முருகனுக்கு வழங்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி.
காலச்சுவடு குடும்பம்
காலச்சுவடில் என்னை ஒரு பணியாளராக அல்லாமல் குடும்ப உறுப்பினர் போலவே கண்ணனும் மைதிலியும் கமலாம்மாவும் முகுந்தனும் சாரங்கனும் கருதுகிறார்கள். 2011இல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நேரத்தில் தகவல் அறிந்து மைதிலியும் கண்ணனும் உடனே வந்து மருத்துவர்களை அணுகி அவசரச் சிகிச்சை தர ஏற்பாடுகள்செய்து என்னை உயிர்பெறச்செய்தார்கள்.
2018இல் எனது மகள் திருமணம் நிச்சயமானதும் கண்ணன்–மைதிலியிடம்தான் முதலில் கூறினேன். அவர்கள் எனக்குப் பண உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்து குடும்பத்துடன் வருகைதந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
2020இல் கொரோனா தாக்கியபோது என்னை உடனே மருத்துவமனைக்குப் போகும்படிக் கூறி, பி.எஸ்.ஸையும் உடன் அனுப்பி உதவிய சந்தர்ப்பங்கள், 2022இல் எனக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும் உடனே உரிய மருத்துவரை அணுகச்செய்து அறுவைச் சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து நலம் பெற உதவிய சந்தர்ப்பங்கள் என யாவும் எப்போதும் என் நன்றிக்குரியவை.
காலச்சுவடில் என் பதினேழு ஆண்டுக் காலப் பயணத்தில் என்னோடு சேர்ந்து பயணித்து, பணியில் எனக்கு உதவியாக இருந்து, என்னுடன் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் பழகிய நண்பர்கள் பலர். மணிகண்டன், ஜெபா, ஹெமிலா, ஐரின், பெருமாள், காயத்ரி, ஷாலினி, ஜெயா, ப. சிவக்குமார் (பி.எஸ்), நாகம், சுபா, மஞ்சு, ஐயப்பன், நிஷா, பிரேமா, ஸ்டெனோலின், மறைந்த ஸ்ரீதர், அனிதா என அலுவலக நண்பர்கள் எல்லோரையும் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். என் காலச்சுவடு பணி சிறக்க இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் என்னுடன் பயணித்திருக்கிறார்கள்.
மின்னஞ்சல்: bkala1971@gmail.com