குடிப்பெயர்வின் துயரம்
19ஆம் நூற்றாண்டின் இந்தியத் தமிழரின் இலங்கை நோக்கிய அசைவியக்கமும் தள்ளல் இழுவை காரணிகளின் செயற்பாடும்
(ஆய்வுக் கட்டுரை)
ரா. நித்தியானந்தன்
சவுத் ஏசியன் பப்ளிகேஷன், 39/7, போர்ச்சூன் ஆகேட், கொழும்பு - 4.
பக். 97
ரூ. 300
19ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குக் குடியேறிய தோட்டத் தொழிலாளர்கள், பிற தொழில் செய்த மக்கள் ஆகியோரின் நிலைபற்றி 80க்கும் மேல் புத்தகங்கள் வந்துவிட்டன (அணிந்துரை சந்திரசேகரன்) இவற்றில் மிக ஆழமான குறிப்பிடத்தகுந்த புத்தகம் இது. மொத்தம் இரண்டு இயல்கள். முதல் இயல் அறிமுகம் இரண்டாம் இயல் இந்திய தமிழர் இலங்கைக்கு 19ஆம் நூற்றாண்டில் குடிபெயர்ந்த காரணம், அதன் விளைவு குறித்த செய்திகளைக் கூறுகிறது.
ஒரு இனத்தின் குடிப்பெயர்ச்சி பற்றிய காரணங்கள், அவற்றின் விளைவு, இது பற்றிய கோட்பாடு ஆகிய எல்லாமே அண்மையில் உருவானவை. புலம் பெயர்தல் என்பது வரலாற்று நிகழ்வு. உந்தல், இழுவை ஆகிய காரணிகளின் அடிப்படையில் புலம்பெயர்தல் நிகழ்கிறது. இது தொடர்பான உந்தல், தள்ளல், இழுவை என்னும் சொற்கள் இத்துறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு விரிவான விளக்கம் இந்நூலில் உள்ளது.
குறிப்பிட்ட இனம் ஓரிடத்திலிருந்து குடிபெயர்வதற்குத் தூண்டுதல் ஒரு காரணம். இது தள்ளல் அல்லது உந்துதல் என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, உயர் ஊழியம், தொழில் உதவியாளர் என்னும் காரணங்களால் குடி பெயர்வதை இழுவை என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்
குடிப்பெயர்ச்சி பற்றி வந்த ஆய்வுகள் எல்லாமே பொருளாதார, சமூக காரணங்களைக் கூறுகின்றன. ஒருவகையில் பொருள்தேடல், வேலையின்மை, இயற்கைப் பேரிடர், சாதிப் போராட்டம் போன்றவற்றால் குடிபெயர்வதுண்டு. இது தூண்டுதல் எனப்படும்.
அமெரிக்காவை நோக்கி லண்டன் பெருமக்கள் பெருமளவில் குடிபெயர்ந்தனர். 1665 - 1666இல் நடந்த லண்டன் குடிப்பெயர்ச்சிக்குப் பிளேக் நோய் காரணமாக இருந்தது. இதற்கு முன்பு நடந்த குடிப்பெயர்ச்சிக்குச் சமயப் போர் காரணம்.
1839, 1861, 1862 ஆண்டுகளில் தமிழகத்தின் தஞ்சை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இப்படியாகச் சென்ற இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் வரலாற்றில் பின்னர் வறுமை பின்னணியாக இருந்தது. இதற்கு ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி முக்கியமாகப் பொறுப்பேற்க வேண்டும்; இந்த நூல் இதைக் கூறுகிறது.
19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் தமிழகத்திற்குச் செய்த அநீதி புள்ளி விவரங்களுடன் விளக்கப்படுகிறது தமிழகத்தின் பழைய ஜமீன்தார் முறையை ஒழித்துவிட்டு அதைவிடக் கொடுமையான ஒரு முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினர். இதனால் சிறு நில உரிமையாளர்கள் வரி கொடுக்க முடியாத நிலையிலாயினர்; நிலங்களை இழந்தனர். இலங்கையின் குடிபெயர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணம்.
தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சங்களுக்கு மழையின்மை ஒரு காரணம் மட்டுமே. பிற காரணங்களுக்கு ஆங்கிலேயர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழர்கள் இலங்கைக்கு கஜபாகு மன்னன் காலத்திலும் கண்டிய மன்னன் காலத்திலும் அதன் பிறகு பல காலகட்டங்களிலும் குடிப்பெயர்ந்தது ஒரு வரலாற்று நிகழ்வு.
1823 இல் காப்பி தோட்டத்தில் வேலை செய்ய 14 தமிழ்க் குடும்பங்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்தன. ஆனால் 1859 இல் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் ஆகிவிட்டது. இதற்குக் காரணமான ஆங்கிலேயர்கள் இந்திய தமிழகத்தைச் சுரண்டிய வரலாற்றைச் சுருக்கமாக இந்த நூல் பேசுகிறது.
தோட்ட மக்களை இலங்கை நகரங்களும் கிராமங்களும் உள்வாங்கவில்லை. இந்த மக்கள்மீதான உதாசீனம் சிங்களர்களிடம் உண்டு. தோட்ட மக்கள் தங்களை இந்தியர்கள் என்று கருதிக்கொண்டதும் ஒரு காரணம்.
இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அது பிரிட்டன் நாடாளுமன்றம், சமூகத்திற்குக் கிடைக்க வேண்டும். அவர்கள் தங்கள் வரலாற்றுத் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மன்னிப்பு இலங்கை மலையக மக்களுக்கு நன்மை கிடைக்க வாய்ப்பாகக்கூட அமையலாம். இந்த ஆதங்கம் நூலாசிரியரிடம் உள்ளது. வெளிப்படையாகவே இதைக் கூறவும் செய்கிறார்.
மின்னஞ்சல்: perumalfolk@gmail.com