பிரசாதத்தில் கலந்த அரசியல் நஞ்சு
திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை செப்டம்பர் மாதம் வெடித்துக் கிளம்பியது. உலகப் புகழ்பெ-ற்ற திருப்பதி கோயிலில் அதே அளவுக்குப் புகழ்பெற்ற பிரசாதமான லட்டு தயாரிப்பில் மாட்டிறைச்சி, மீனிறைச்சி, பன்றி இறைச்சிகளால் ஆன கொழுப்பு எண்ணெய்கள் கலந்துள்ளதாகச் செய்தி வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜராத்தில் உள்ள தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் லட்டுக்குப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் நடந்திருப்பது தெரியவந்ததாகச் செய்தி வந்ததையடுத்து இது பண்பாட்டு-அரசியல் பிரச்சினையாக மாறியது. இந்தக் கலப்படம் கடந்த ஆட்சியின்போது நடந்தது என்பதை வைத்துத் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு இதை அரசியல் பிரச்சினையாக மாற்றினார். கலப்படம், அலட்சியம், நிர்வாகக் கோளாறு ஆகிய குற்றச்சாட்டுக்களுடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறித் தனது கூட்டணிக் கட்சியான பாஜகவின் விசுவாசமுள்ள நண்பனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். கலப்படம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை வைத்து அரசியல் சதுரங்கத்தில் மதவாதக் காய்களை நகர்த்தினார். துணை முதல்வர் பவன் கல்யாண் இதைவைத்துச் சாமியாடியதைப் பார்த்து யோகி ஆதித்யநாத்கூட பொறாமை கொண்டிருப்பார்.
செப்டம்பர் 19 அன்று, திருப்பதி கோயிலின் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக ‘இந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவு’ தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்தது. திருப்பதி லட்டில் கலப்படத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
பவன் கல்யாண் இதற்குத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்தார். “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டு நாங்கள் அனைவரும் மிகவும் கவலைப்பட்டோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கம் உருவாக்கிய திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” என்று கூறினார். தேசிய அளவில் ‘சனாதன தர்ம பாதுகாப்பு’ வாரியத்தை நிறுவுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், தேசிய அளவில் இது குறித்து விவாதம் தேவை என்றும் பவன் கல்யாண் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட ‘பாவத்தைப் போக்குவதற்காக’ விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலில் நடைபெற்ற சுத்திகரிப்பு நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பங்கேற்றுக் கோயில் படிக்கட்டுகளைக் கழுவினார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராகப் பணியாற்றிய ஒய்.வி. சுப்பா ரெட்டி, சந்திரபாபுவின் கருத்துகளுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும் திருமலையின் புனிதத்தையும் சேதப்படுத்தும் வகையில் பேசி சந்திரபாபு மிகப்பெரிய பாவத்தைச் செய்துவிட்டார் என்று சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இந்தப் பிரச்சினையை அணுகிய விதத்திலும் பிரச்சினை உள்ளது. ஏ.ஆர். டெய்ரி ஃபுட்’ நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்த பத்து நெய் டேங்கர்களில் ஆறு பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள நான்கு டேங்கர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஜே. ஷியாமளா ராவ் தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில் ஏ.ஆர். நிறுவனத்திடம் வாங்கிய நெய்யின் மொத்த அளவு என்ன, அதில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு நிராகரிக்கப்பட்டது என்பனவற்றைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருக்க வேண்டும்.
ஜூலை 23ஆம் தேதியன்று ஆய்வக அறிக்கை வெளியானது. மறுநாள் அதுகுறித்துப் பேட்டியளித்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஜே. ஷியாமளா ராவ், லட்டு தயாரிக்கப் பயன்பட்ட நெய்யில் தாவரக் கொழுப்புதான் இருந்தது, விலங்குக் கொழுப்பு இல்லை என்றார். அந்த அறிக்கையில் காய்கறிக் கொழுப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ள அதே பக்கத்தில் விலங்குக் கொழுப்பு பற்றிய குறிப்பும் உள்ளது. இது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது அறிக்கையைப் புரிந்துகொள்ள நேரம் எடுத்தது என்றார். ஆனால் இரண்டும் ஒரே பக்கத்தில் இருக்கும் நிலையில் இந்த வாதம் செல்லுபடியாகாது.
நெய் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றித் தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியம் ஆய்வகம் கூறியிருந்தது. நெய் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பால் எந்தவகைப் பசுக்களிலிருந்து எடுக்கப்பட்டதோ, அவற்றின் தீவனத்தில் இருக்கும் எண்ணெய் வித்துக்களின் அளவு, எருமை நெய் கலந்திருப்பது, பசுக்கள் சரியான ஊட்டச்சத்து இல்லாதது போன்றவை சோதனை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வகம் கூறியது. சோதனைகளால் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதை முழுமையாகக் கண்டறிய முடியாது என்று ஆய்வக நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது குறித்துப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஆந்திர முதல்வரை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த விவகாரம் குறித்துப் புலன் விசாரணை நடக்கும்போது இதுகுறித்து நாயுடு அறிக்கை வெளியிட்டது முறைதானா எனக் கேள்வி எழுப்பியது. நாயுடுவின் அறிக்கை உலகெங்கிலும் உள்ள பக்தர்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடும் என்று நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
“கடந்த ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலப்பட நெய் பயன்படுத்தப்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. சுதந்திரமான விசாரணை, மத அறக்கட்டளைகளின் விவகாரங்களை ஒழுங்குபடுத்துதல், பிரசாதம் தயாரிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என்று கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு இதில் முதல்வரின் அணுகுமுறையைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டி விமர்சித்தது. “புலன் விசாரணை நடக்கும்போது, ஒரு மாநில முதல்வர் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது பொருத்தமானதல்ல” என்று அது கூறியது.
அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகயிடம் அமர்வு கடுமையான கேள்விகளை எழுப்பியது. “ஆய்வக அறிக்கையில் சில பொறுப்புத் துறப்புகள் உள்ளன. அது தெளிவாக இல்லை. நிராகரிக்கப்பட்ட நெய்தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பது முதன்மையான பார்வை. நீங்களே அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் நிலையில் ஊடகங்களிடம் இதுபற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன?”என்று நீதிபதி விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார். பிரச்சினைக்குரிய நெய் உண்மையில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
“இப்படி அறிக்கை வெளியிடும்போது, இது விஷயத்தில் இன்னொரு நிபுணரின் கருத்தை அறிய வேண்டும் என்ற விவேகத்தை ஏன் கடைப்பிடிக்கவில்லை,” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி விஸ்வநாதன், இந்த நெய்தான் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரமும் இல்லை, இது குறித்து இன்னொரு கருத்தும் பெறப்படவில்லை என்று கூறினார்.
இந்தச் சர்ச்சை தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரித் தொடரப்பட்ட மனுக்களை நீதிமன்றம் விசாரித்துவருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி உள்ளிட்ட பலர் சுதந்திரமான விசாரணை, மத அறக்கட்டளைகளையும் பிரசாதம் தயாரிப்பையும் ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளைக் கோரியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் நன்கு அறிந்திருந்தும் மாநில முதல்வரும் துணை முதல்வரும் இந்தப் பிரச்சினையில் ‘இந்து உணர்வு’களைத் தூண்டிவிட்டுப் பலனடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவிட்டார்கள்.
பன்முகச் சிக்கல்களும் குழப்பங்களும் நிறைந்த இந்தப் பிரச்சினையை மாநில முதல்வரும் துணை முதல்வரும் சற்றும் பொறுப்பின்றி அரசியலாக்கியிருக்கிறார்கள். அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் வாய்ப்பை எந்த அரசியல்வாதியும் விடமாட்டார் என்றாலும், சாதி, மதம் ஆகிய விவகாரங்களில் மக்களின் உணர்வுகளைத் தூண்டக்கூடிய விதத்தில் அரசியல் செய்வதிலுள்ள அபாயத்தை இவர்கள் உணரவில்லை; உணர்ந்தே இதைச் செய்திருக்கிறார்கள் என்றால் அதிகார வேட்கை அவர்களை எத்தகைய இழிவான வழிமுறையையும் கைக்கொள்ள வைத்திருக்கிறது என்றே இதற்குப் பொருள்.
ஆனால் மக்களைப் பற்றிய அரசியல்வாதிகளின் கணக்குகள் பல சமயங்களில் தவறிவிடுவதையும் பார்க்கிறோம். நாயுடுவும் பவன் கல்யாணும் மேற்கொண்ட விஷமப் பிரச்சாரத்திற்கு மக்கள் மயங்கியதாகத் தெரியவில்லை. கட்சி எல்லைகளையும் இந்துத்துவ அமைப்புகளையும் தாண்டி யாரும் இதற்காகக் குரல் எழுப்பவில்லை. திருப்பதியில் இதனால் ஒரே ஒரு லட்டுகூடக் குறைவாக விற்பதாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகளின் ஆட்டத்தை மக்கள் சட்டைசெய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது.
“கடவுள்களை அரசியல்வாதிகளிடமிருந்து விலக்கிவைக்க வேண்டும்.” We expect the Gods to be kept away from politicians,” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணையின்போது கூறினார். கடவுள்களையும் கோயில்களையும் வைத்துச் சர்ச்சைகளை உருவாக்கியே அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்கள் அவ்வளவு எளிதில் இதை விடமாட்டார்கள். ஆனால் எது உண்மையான பிரச்சினை என்பதில் பொதுமக்கள் விழிப்போடு இருந்து இதையெல்லாம் அலட்சியப்படுத்தினால் மட்டுமே இந்த விபரீத ஆட்டத்தை அரசியல்வாதிகள் தவிர்க்கும் சூழல் உருவாகும்.