பதிப்பியல் வழித்தடங்களும் வழிகாட்டிகளும்
காலச்சுவடு அக்டோபர் 2024 இதழில் வெளியான பெருமாள்முருகனின் ‘சி.வை.தா. – உ.வே.சா. யாருக்கு யார் வழிகாட்டி’ கட்டுரை தொடர்பான சில கருத்துகள்:
1887இல் கலித்தொகையை சி.வை. தாமோதரம் பிள்ளையும், சீவகசிந்தாமணியை உ.வே. சாமிநாதையரும் அச்சில் பதிப்பிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தனர். இருவர் பணியும் நிறைவெய்தும் நிலைக்கு வந்துவிட்டது. பதிப்பிற்கு எடுத்துக்கொண்ட இரண்டு நூல்களுக்கும் நச்சினார்க்கினியரே உரையாசிரியர். அவரைப் போற்றும் உரைச்சிறப்புப் பாயிரம் இரண்டு நூல்களிலும் இருந்துள்ளது. அப் பாயிரம் குறித்து சி.வை.தா. – உ.வே.சா. இடையே நிகழ்ந்த உரையாடலை சி.வை.தா.வின் கடிதங்கள் சில காட்டுகின்றன. உரைச்சிறப்புப் பாயிரத்தின் பாடங்கள் தொடர்பாக 08-07-1887, 16-07-1887 ஆகிய நாட்களில் சி.வை.தா., உ.வே.சா.வுக்கு எழுதிய கடிதங்களை ஆதாரமாகக்கொண்டு பெருமாள்முருகன், “குறுந்தொகை நானூறு பாடல்கள் கொண்ட நூல் என்பதும் அவருக்குத் (உ.வே.சா.வுக்கு) தெரிந்திருக்கவில்லை. சிறப்புப்பாயிர அடிகளைக் கொண்டு ‘குறுந்தொகை இருபது பாட்டு’ என்பதே நூற்பெயர் எனக் கருதியிருக்கிறார்.” (காலச்சுவடு, அக்டோபர் 2024, ப.66) எனக் குறிப்பிடுகிறார். சேலம் இராமசுவாமி முதலியாரைச் சந்திக்கும்வரை (21-10-1880) பழந்தமிழ் நூல்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைக்கூடத் தெரியாதவராகத்தான் உ.வே.சா. இருந்தார். கட்டுரையாசிரியர் கருதுவதுபோலச் சீவகசிந்தாமணிப் பதிப்பு நிறைவடையும் காலம்வரையில் குறுந்தொகையின் பாட்டெண்ணிக்கை தெரியாத அளவில்தான் உ.வே.சா.வின் பழந்தமிழ்ப் புலமை இருந்துள்ளதா என்பதைச் சற்று ஆராய வேண்டும்.
1887 இல் உ.வே.சா. பதிப்பித்த சீவகசிந்தாமணி முதல் பதிப்பில், ‘காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா’ எனத் தொடங்கும் கனகமாலையர் இலம்பகச் செய்யுளின் நச்சினார்க்கினியர் உரையில் இடம்பெற்ற ‘என்னெனப் படுங்கொல் தோழி’ என்னும் மேற்கோளுக்கு அகநானூறு 205, குறுந்தொகை 194 என்பவற்றை உ.வே.சா. அடிக்குறிப்பில் கொடுத்துள்ளார் (ப.447). [இன்றைய பதிப்புகளின்படி அகநானூறு 206 ஆம் பாடலாகவும், குறுந்தொகை அதே பாடலாகவும் உள்ளன.] அதே சிந்தாமணிப் பதிப்பின் பின்பகுதியில் அமைந்த ‘மேற்கோள் விளக்க’ப் பகுதியில் குறுந்தொகை 232, 280, 102, 325, 394 என்னும் குறிப்புகளையும் அவர் தந்துள்ளார். குறுந்தொகை 325 ஆம் பாடலின், “கருங்கால் வெண்குருகு மேயும், பெருங்குள மாயிற்றென் னிடைமுலை நிறைந்தே” என்னும் பகுதியில் அமைந்த ‘நிறைந்தே’ என்பதற்கு ‘நினைந்தே’ என்றொரு பாடபேதம் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பதிகம் முதலாக கேமசரியார் இலம்பகம்வரைக்குமே கூட, உ.வே.சா. ஆங்காங்கு எட்டுத்தொகை மேற்கோள்களுக்கு ஆகரங்களை – பாடலடிகள் குறித்த நூல், செய்யுள் எண் விவரங்களை (அகநானூறு 4, 16, 82, 169; புறநானூறு 253; பாலைக்கலி 10, 32, குறிஞ்சிக்கலி 2, 4, மருதக்கலி 17) பரவலாகக் கொடுத்துள்ளார். 169 என்ற எண் குறிப்புடன் அகநானூறு 170ஆம் பாடல் முழுவதையும் கூற்றுவிளக்கம், ஆசிரியர் பெயருடன் சேர்த்து அடிக்குறிப்பில் தந்துள்ளார் (ப.277). கேமசரியார் இலம்பகம்வரையில் தனியாகப் பிரித்துக் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு.
சீவகசிந்தாமணி முதல் பதிப்பின் அச்சுப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் பலமுறை உ.வே.சா. சென்று வந்துகொண்டிருந்தார். 1887ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்குச் சீவகசிந்தாமணியின் பணிகளைப் பார்க்கச் சென்னை சென்றிருந்ததையும், அப்பொழுது கேமசரியார் இலம்பகம்வரையில் நூல் அச்சாகியிருந்ததையும் ‘என் சரித்திர’த்தின் ‘புதிய ஊக்கம்’ அத்தியாயத்தில் உ.வே.சா. குறிப்பிடுகிறார் (பக். 623, 624). அங்குத் தங்கியிருந்தபொழுது ஒரு நாள் இரவில் தன்னிடமிருந்த பத்துப்பாட்டுச் சுவடியைப் பிரித்துப் பார்த்து, சீவகசிந்தாமணி நச்சினார்க்கினியர் உரையில் இடம்பெற்றுள்ள பல மேற்கோள்களுக்கு ஆகரங்களைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளார் (மேலது, பக். 624, 625). ‘புதிய ஊக்கம்’ என்னும் தலைப்பே அதனை உணர்த்துகிறது.
“அன்றுமுதல் என்னிடமிருந்த எட்டுத்தொகைச் சுவடிகளையெல்லாம் ஏடு ஏடாக வரிவரியாக எழுத்தெழுத்தாக ஆராயலானேன்... நற்றிணை முதலிய வற்றின் மூல மட்டும் அடங்கிய கையெழுத்துப் பிரதி வேறு இருந்தமையால்... கேமசரியார் இலம்பகத்துக்கு மேல் பதிப்பித்த பகுதிகளில் அடிக்குறிப்பில் அந்த மேற்கோள்களைப் புலப்படுத்தினேன்... சேர்க்க முடியாத மேற்கோள்களைப் புஸ்தகத்திற்குப் பின்பு சேர்த்து அச்சிடலாம் என்ற எண்ணத்தோடு தனியே எழுதிவைத்துக்கொண்டேன். விடுமுறை முடிந்தவுடன் என்றும் இல்லாத ஊக்கத்தோடு கும்பகோணம் வந்தேன்.” (மேலது, ப. 625) என்னும் என் சரித்திரப் பகுதி ஊன்றி நோக்கத்தக்கது. சீவகசிந்தாமணி நச்சினார்க்கினியர் உரையில் இடம்பெற்றுள்ள உரைமேற்கோள்களுக்கான ஆகரங்கள் முழுவதையும் 1887 ஏப்ரல், மே மாதமே உ.வே.சா. எழுதி முடித்துவிட்டார். அதனை முதல் பதிப்பின் அடிக்குறிப்புகளும் மேற்கோள் விளக்கப் பகுதியும் உறுதிசெய்கின்றன. “குறுந்தொகை யிலுள்ளது 20 பாட்டுத்தானா. ‘குறுந்தொகை யிருபது பாட்டு’ என்று நூற்பெயராகக் கொண்டீர்கள் போலத் தோற்றுகின்றது.” (கடிதக் கருவூலம், பக். 164, 165) என்று 08-07-1887 நாளிட்ட சி.வை.தா. கடிதப்பகுதியில் அமைந்த எதிர்மறை வினாவைக் கட்டுரையாசிரியர், கேலித் தொனியாகப் பொருள்கொண்டு, ‘குறுந்தொகை நானூறு பாடல்கள் கொண்ட நூல் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்ற முடிவுக்கு வந்திருப்பது ஏற்புடையதல்ல.
உரைச்சிறப்புப் பாயிரத்தில் அமைந்த ‘பேராசிரியன் – பேராசான்’ என்னும் பாடங்களை சி.வை.தா.வும் உ.வே.சா.வும் தெரிவுசெய்ததைப் பதிப்பியல் ஆய்வுக்குச் ‘சுவை சேர்க்கும்’ நிகழ்வாகக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார் (ப.66). தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையத்தையும் (1868), பொருளதிகாரம் நச்சினார்க்கினியத்தையும் (1885) பதிப்பித்திருந்த காரணத்தால் சி.வை.தா.வுக்குப் பேராசிரியரைப் பற்றித் தெரிந்திருக்கும். அதனால், அவர் ‘பேராசிரியன்’ என்ற பாடத்தைத் தெரிவுசெய்துள்ளார். அந்தப் புரிதல் இல்லாததால் உ.வே.சா.வுக்கு இடர்ப்பாடு இருந்துள்ளது எனக் கட்டுரையாசிரியர் கூறுகிறார் (ப.66). சீவகசிந்தாமணியும் கலித்தொகையும் பதிப்பிற்குத் தயாராகிக்கொண்டிருந்ததற்கு இரண்டாண்டு முன்புதான், 1885இல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பின் நான்கு இயல்களுக்கான உரையைப் பேராசிரியர் உரை என அறியாமல், முன் இயல்களுக்கு அமைந்த நச்சினார்க்கினியர் உரையுடன் சேர்த்து நச்சினார்க்கினியர் பெயரில் சி.வை.தா. பதிப்பித்திருந்தார். அதனை 1902, 1903 ஆம் ஆண்டுகளில் செந்தமிழ் இதழ்களின்வழி (தொகுதி 1:1, 2:11) ரா. இராகவையங்கார்தான் முதன்முதலாகத் தமிழ் உலகிற்கு உணர்த்தினார் (தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை, 1917, பக். 3,4). சி.வை.தா.வின் முன்னோடியான ஆறுமுக நாவலரே 1860இல் திருக்கோவையாருக்கு அமைந்த பேராசிரியர் உரையை நச்சினார்க்கினியர் பெயரில்தான் பதிப்பித்துள்ளார். அதனைப் பின்பற்றிச் சீவகசிந்தாமணி முதல்பதிப்பு நச்சினார்க்கினியர் வரலாற்றில் திருக்கோவையாரையும் சேர்த்து எழுதிய உ.வே.சா., பத்துப்பாட்டுப் பதிப்பிற்கு ஏடு தேடும்போது கிடைத்த அறிவால் அவ்வுரை, பேராசிரியர் உரையென்பதை அறிந்து தம் கருத்தை மாற்றிக்கொண்டதாகப் பதிவு செய்துள்ளார் (என் சரித்திரம், ப.668). உ.வே.சா.வின் முன்னோடிகளான ஆறுமுகநாவலர், சி.வை.தா. போன்றோரே பேராசிரியர் விஷயத்தில் இடர்ப்பட்டுள்ளனர். உ.வே.சா. மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. 1887 இல் பெயரளவில் மட்டும் பேராசிரியரை இருவரும் தெரிந்துவைத்திருக்க வாய்ப்புண்டு.
நச்சினார்க்கினியர் வரலாற்றில், ‘அவர் உரை எழுதாத திருக்குறள் கூட இடம்பெறுகிறது’ எனக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார் (ப.66). திருக்குறள் மரபுரையாசிரியர்களைப் பட்டியலிடும் வகையில்,
“தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் – திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்”
என்றொரு பழைய வெண்பா உண்டு. அதில் இடம்பெற்றுள்ள ‘நச்சர்’ என்பதை நச்சினார்க்கினியராகக் கருதித் திருக்குறளையும் உ.வே.சா. சேர்த்திருக்கக் கூடும். அது, நச்சினார்க்கினியரும் நச்சரும் ஒருவரா, இருவரா என்ற குழப்பமெல்லாம் தீராத காலத்தின் விளைவு.
அன்றைய பதிப்புகளில் பாடல் முதற்குறிப்பு அகராதியை நூலின் முன்பகுதியில் சிலரும், பின்பகுதியில் சிலரும் வைக்கும் வழக்கத்தினைச் சுட்டிக்காட்டும் கட்டுரையாசிரியர், அதனை நூலின் பின்னால் வைக்கும் வழக்கத்தை நிலைப்படுத்தியவராகவும் முறைப்படுத்தியவராகவும் உ.வே.சா.வைக் குறிப்பிடுகிறார் (ப.68). பதிப்புத்துறையில் உ.வே.சா. காலடி வைக்கும் முன்னரே, தமிழ்ப் பதிப்பு முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய ஆறுமுக நாவலர், தாம் பதிப்பித்த பதினொராந் திருமுறை (1852), திருக்கோவையார் (1860), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் (1861), இலக்கணக்கொத்து (1866) உள்ளிட்ட பல நூல்களில் பாடல் முதற்குறிப்பு அகராதியை நூலின் பின்பகுதியில் வைக்கும் வழக்கத்தை நிலையாகப் பின்பற்றி வந்தார். சரவணப் பெருமாளையர் பதிப்பித்த திருக்குறள் (1847), சோடசாவதானம் சுப்புராய செட்டியார் பதிப்பித்த தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை (1868) போன்ற பழம்பதிப்புகளிலும் முதற்குறிப்பு அகராதி பின்பகுதியில்தான் அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆறுமுக நாவலரின் மேற்பார்வையில் சி.வை.தா. பதிப்பித்த தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை முதற்பதிப்பிலும் (1868), நாவலர் மறைவுக்குப் பின் வந்த இரண்டாம் பதிப்பிலும்கூட (1886) முதற்குறிப்பு அகராதி பின்னால்தான் இடம்பெற்றுள்ளது. நாவலரின் மறைவுக்குப் (1879) பின் தாமே பதிப்பித்த வீரசோழியம் (1881), தணிகைப்புராணம் (1883), தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (1885) ஆகிய நூல்களில் முதற்குறிப்பு அகராதியை முன்பகுதியில் அமைக்கும் வழக்கத்திற்கு மாறிய சி.வை.தா., கலித்தொகை (1887) பதிப்பிற்குப் பின் மீண்டும் பழைய முறைக்குத் திரும்பிவிட்டார். நம்பகமான பதிப்பு முன்னோடிகளிடமிருந்து உ.வே.சா. இந்த முறையைப் பின்பற்றியுள்ளார். செய்யுள் முதற்குறிப்பு அகராதியை நூலின் பின்னால் வைக்கும் வழக்கம் நிலைபெற்றதற்குத் தமிழ்ப் பாடநூல் மரபொன்றும் காரணமாக அமைகிறது. இடைக்காலத்திலும் இன்றும் பாடநூலாகப் பயிலப்பட்டுவரும் யாப்பருங்கலக்காரிகையில் ஒவ்வொரு இயலின் பின்னும் ‘செய்யுள் முதல்நினைப்புக் காரிகை’ இடம்பெறுவது இங்கு நினைக்கத்தக்கது. முதற்குறிப்பு அகராதியை நூலின் முன்னால் வைப்பதா, பின்னால் வைப்பதா என்ற குழப்பத்தினாலோ என்னவோ இன்றுள்ள பல தமிழ்ப் பதிப்பகங்கள் அதனை எங்கேயும் வைக்காமல் விட்டுவிடுகின்றன.
‘விரிவான முன்னுரை எழுதும் முறையைத் தொடங்கிவைத்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளைதான்’ எனக் கட்டுரையாசிரியர் கூறுகிறார் (ப.67). 1868 இல் சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகத்தைப் பதிப்பித்த H. பவர், 40 பக்கத்திற்கு விரிவான இருமொழி முன்னுரையை எழுதியுள்ளார். சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கத் தொடங்கிய காலந்தொட்டு பவரின் நூலை உ.வே.சா. அறிவார் என்பதை என் சரித்திரம் (பக். 572, 610) உணர்த்துகிறது. சிந்தாமணியின் பதிப்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில்கூட (22-04-1887) தேவனாம்பேட்டை, ஹார்டிகல்சுரல் ஸொஸைட்டி எழுத்தர் பு. சிதம்பரம் என்பவர் பவரின் முன்னுரையை நினைவுபடுத்தி உ.வே.சா.வுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார் (கடிதக் கருவூலம், பக். 159, 160). அப்படியிருக்க, சி.வை.தா.வே விரிவான முன்னுரையைத் தோற்றுவித்தவர், அவரே உ.வே.சா.வுக்கு முன்னோடி, வழிகாட்டி என முடிவு செய்வது ஏற்புடையதல்ல.
1884 இல் இராமலிங்க சுவாமிகள் பதிப்பித்த திருக்கூவப் புராணத்தின் முகப்பில் 19 பக்கங்களில் ‘சிவப்பிரகாச சுவாமிகள் சரித்திரம்’ இடம்பெற்றுள்ளது. 1882 இல் பதிப்பிக்கப்பட்ட பவாநிகூடற் புராண முகப்பில், ‘பவாநிகூடற் புராணசாரம்’ என்னும் தலைப்பின்கீழ் அந்நூலின் சுருக்கம் உரைநடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல 1882 இல் பதிப்பிக்கப்பட்ட தேவாரம் ஸ்தலமுறைப் பதிப்பின் முன்பகுதியில் திருமுறையினது வரலாறு, பொழுதுகளுக்கேற்ற பண்கள், தேவாரத் தலங்கள், பாடல்கள் பற்றிய பல நுட்பமான தகவல்கள் அடங்கிய அட்டவணைகள் அமைந்துள்ளன. இவை போன்ற பதிப்புகள் உ.வே.சா.வுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சி.வை.தா.வும் அப் பதிப்புகளை அறியாதவராக இருக்க வாய்ப்பில்லை. ஆக, தம் சிந்தாமணி பதிப்பிற்கு முன் வெளியான பல பதிப்புகளின் நற்கூறுகளை உள்வாங்கிக்கொண்டு உ.வே.சா. செயல்பட்டுள்ளார்.
1857ஆம் ஆண்டே ஜி.யூ. போப் எழுதிய இலக்கண நூலின் பின்பகுதியில் 47 பக்கங்களிலான சிறந்த ‘இலக்கண அகராதி’ இடம்பெற்றுள்ளது. இராமாநுஜ கவிராயர், வி. துறு ஐயர் பதிப்பித்த திருக்குறள் (1852), H. பவரின் சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் (1868) ஆகியவற்றிலும் Index, Index Verborum எனப்படும் ‘சுட்டி’கள் 11 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. 1887 இல் வெளியான உ.வே.சா.வின் சீவகசிந்தாமணிப் பதிப்பில் இடம்பெறத் தவறிய பின்னிணைப்பு அகராதி, 1889 இல் வெளியான அவரின் பத்துப்பாட்டுப் பதிப்பில், ‘அரும்பத விளக்கம்’, ‘அருந்தொடர் விளக்கம்’ என்னும் பெயரில் 46 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. இப்படித் தமிழ்ப் பதிப்புலகில் பல முன்மாதிரிகளும் பின்பற்றல்களும் அமைந்துள்ளன. பெயர்சொல்லும்படி ஓரிரு நூல்களை மட்டுமே பதிப்பித்த சில பதிப்பாசிரியர்களும் (F.W.எல்லீஸ், ஜீ.யூ. போப், இராமாநுஜ கவிராயர், வி. துறு, H. பவர் போன்றோர்) சி.வை.தா., உ.வே.சா. ஆகியோருக்கு நல்ல முன்மாதிரிகளாக விளங்கியுள்ளனர்.
பெருமாள்முருகன் மொழியில் சொன்னால், ‘போதுமான தரவுகள் கிடைக்காத காலத்தில் கூறிய க. கைலாசபதியின் கருத்தை எடுத்து வைத்துக்கொண்டு, சி.வை.தா. – உ.வே.சா. ஆகிய இருவரின் பதிப்புகளையும், சி.வை.தா. கடிதங்களையும் மட்டும் முன்னிலைப்படுத்தி, இன்னின்னவற்றை இவர் அவரிடமிருந்தும், அவர் இவரிடமிருந்தும் பெற்றுக்கொண்டனர். அதனால், இவர் அவருக்கு வழிகாட்டி, அவரும் இவருக்கு வழிகாட்டி எனக் கூறிக் கணக்கை நேர்செய்யப் பார்ப்பது, அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழில் நடந்துவரும் சி.வை.தா. – உ.வே.சா. குறித்த இரு துருவ விவாதச் சூட்டைக் குறையாமல் தக்கவைத்துக்கொள்ள உதவுமேயன்றி, முறையான தமிழ்ப் பதிப்பியல் வரலாற்றின் படிமுறை வளர்ச்சியை நோக்கி ஆய்வாளர்களைச் செலுத்தாது.
பயன்பட்ட நூல்கள்:
இராகவையங்கார், ரா. (ப.ஆ.), 1917, தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியருரை உரையாசிரி யருரையுடன், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை.
இராமசுவாமிப்பிள்ளை (ப.ஆ.), 1882, தேவாரம், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னபட்டணம்.
இராமலிங்க சுவாமிகள் (ப.ஆ.), 1884, திருக்கூவப் புராணம், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை.
குட்டியண்ண முதலியார், ப. (ப.ஆ.), 1882, பவாநிகூடற்புராணம், பாஸ்ட்டர் அச்சுக்கூடம், சென்னை.
சரவணன், ப. (ப.ஆ.), 2024, என் சரித்திரம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.), 1887, சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும், திராவிட நத்நாகர அச்சுக்கூடம், சென்னை.
போப்பையர், ஜீ. யூ., 1857, இலக்கண நூல், The American Mission Press, Madras.
வேங்கடாசலபதி, ஆ. இரா. (ப.ஆ.), 2018, உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி 1 (1877 – 1900), உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
Bower, Rev. H., 1868, The Chintamani, The Christian Knowledge Society, Madras.
பெருமாள்முருகன், ‘சி.வை.தா. – உ.வே.சா.’ யாருக்கு யார் வழிகாட்டி?, அக்டோபர் 2024, காலச்சுவடு இதழ், நாகர்கோவில்.
மின்னஞ்சல்: rajar@nct.ac.in
கடந்த அக்டோபர் இதழ் (298) சு.ரா. நாட்குறிப்புகளில் ‘ராஜாஜிக்கு சு.ரா. எழுதிய கடித’த்தின் பின்னணி குறித்து அ.கா. பெருமாள் விளக்கியிருந்தார். 1958இல் நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆறாவது மாநாடுபற்றிய நினைவுகூரலில் “மாநாட்டிற்குத் திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, ந. சஞ்சீவி, நாரண துரைக்கண்ணன், நா. பார்த்தசாரதி, தொ.மு.சி. ரகுநாதன், கவி கா.மு. ஷெரீப் முதலான பலரும் வந்திருந்தனர்” என அச்சாகியிருந்தது. திரு.வி.க. செப்டம்பர், 17 1953இலேயே மரணமடைந்துவிட்டார். எனவே இந்த மாநாட்டில் அவர் கலந்துகொண்டிருக்க முடியாது.
சு.ரா. 27.6.97 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு எழுதிய குறிப்பில் தேதி ‘27.6.87’ எனத் தவறாக உள்ளது. பிழைகளுக்கு வருந்துகிறோம்.
- பொறுப்பாசிரியர்