பறவையியல் முன்னவர்
நாகர்கோவிலில் காலமான ராபர்ட் கிரப் நம் நாட்டின் காட்டுயிரியல் துறையில் முன்னோடி. சுற்றுச்சூழல் பற்றிய சொல்லாடல் ஏதும் உருவாகியிருக்காத காலத்தில் அந்தத் துறையில் கால் பதித்தவர். ஜேம்ஸ் டவுனில் பிறந்த இவர், குலசேகரத்தில் பள்ளிப்படிப்பை முடித்து, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் விலங்கியல் பட்டப்படிப்பு முடித்தார். 22 வயதில் பம்பாய் இயற்கை வரலாற்றியல் நிறுவனத்தில் (Bombay Natural History Society) ஆய்வாளராகச் சேர்ந்தார். காட்டுயிர் பேணல் பற்றிய அக்கறை அந்தக் காலகட்டத்தில் வெகு குறைவாகவே இருந்தது. எந்த பல்கலைக்கழகத்திலும் இப்படி ஒரு துறை இல்லாத காலத்தில் அதை வாழ்வுப் பணியாகத் தெரிந்தெடுப்பதற்குத் துணிச்சலும் உறுதியான ஈடுபாடும் தேவை.
சுற்றுச்சூழல் சார்ந்த அரசுத்துறை இல்லாத அன்று, பம்பாய் இயற்கை வரலாற்றியல் நிறுவனம்தான் இந்திய அரசுக்குக் காட்டுயிர் சார்ந்த ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தது. அதை முன்னின்று நடத்திக்கொண்டிருந்த பறவையியலாளர் சாலீம் அலிக்கு உதவியாளராகச் சேர்ந்த ராபர்ட், அவருடன் இமயமலைப் பகுதியில் பறவை மதிப்பீடுகள் செய்தார். சாலீம் அலியை ஆசானாகக் கொண்ட அந்த உறவு 29 ஆண்டுகள் நீடித்தது. 1975இல் அதே நிறுவனத்தில் கல்வியாளராகப் பணிசெய்த ஷைலஜாவை ராபர்ட் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளின் இரு மகன்களும் சுற்றுச்சூழல் சார்ந்த படிப்பு முடித்து அமெரிக்காவில் பணியாற்றுகிறார்கள்.
1969இல் குஜராத்திலுள்ள கிர் சரணாலயத்தில் கிரிஃபான் இனப் (Griffon vulture) பாறுக் கழுகுகளைப் பற்றிய கள ஆய்வில் ராபர்ட் ஈடுபட்டார். அங்குள்ள சிங்கங்கள் இரை விலங்குகளைக் கொன்று தின்றபின் எஞ்சியிருப்பதை உண்ண நூற்றுக்கணக்கில் அங்கு கழுகுகள் வாழ்ந்து வந்தன. சாலீம் அலியை வழிகாட்டியாகக் கொண்டு அவர் செய்த அந்த ஆய்வு அவருக்கு 1974இல் முனைவர் பட்டம் பெற்றுத்தந்தது. சாலீம் அலியின் முதல் முனைவர் பட்ட மாணவர் என்ற சிறப்பு மட்டுமல்ல பறவையியலில் இந்தியாவிலேயே முதல் முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பெருமையும் ராபர்ட்டுக்குக் கிடைத்தது. (இம்மாதிரி சாலீம் அலியை வழிகாட்டி யாகக்கொண்டு பறவையியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராகப் பணிசெய்து ஓய்வுபெற்று மசினகுடியில் வாழும் பிரியா தாவிதார், சென்னையில் வாழும் தாரா காந்தி ஆகியோர்.)
எழுபதுகளில் இந்திய வான்படை ஒரு நெருக்கடியை எதிர்கொண்டது. வட இந்தியாவிலுள்ள விமானத் தளங்களிலிருந்து புறப்படும் சில போர்விமானங்கள், பறவைகள் மோதியதால் விபத்துக்குள்ளாயின. பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த விமானங்களின் இழப்பைக் குறைக்க எண்ணிய தளபதிகள் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தை நாடினார்கள். வரலாற்றுக் கழகம் ராபர்ட்டை அனுப்பியது. 1981இலிருந்து ஆறு ஆண்டுகள் 22 வான்படைத் தளங்களுக்குத் தன் குழுவுடன் பயணித்துக் கள ஆய்வு செய்தார் ராபர்ட். முதல் கட்டமாக விமான இஞ்சினில் சிக்கிய பறவைகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஆனால் அடிபட்ட பறவைகளில் எஞ்சியிருந்தது வெறும் அழுகிய சதை மட்டும்தான். நாற்பது ஆண்டுகளுக்கு முன் டிஎன்ஏ பார் கோடிங் மூலம் ஓர் உயிரினத்தை இனங்கண்டுகொள்ளும் வசதியோ, மின்னணு நுண்ணோக்கிகளோ கிடையாது. என்றாலும் சில பறவைகளை அடையாளம் கண்டுகொண்டு ஆய்வைத் தொடர்ந்தார்.
கிராம மக்கள் செத்த கால்நடை களைப் புதைக்காமல் படைத்தளங்களுக்கு அருகில் வெளியில் போட்டுவிடுவது வழக்கம். அவற்றை இரையாகக் கொள்ள வரும் பாறுக் (பிணந்தின்னி) கழுகுகளும் மற்ற பட்சிகளும்தான் போர் விமானங்களில் மோதி விபத்துக்குள்ளாகின்றன என்பதை ராபர்ட் சுட்டிக் காட்டினார். அவரது அவதானிப்பு கள், ஆலோசனைகள் வான் படைக்கு மிகவும் பயனுள்ள தாக அமைந்தன. அதன் பின்னர், இந்திய வான்படை அதிகாரிகள் கோயம்புத்தூரிலுள்ள சாலீம் அலி பறவையியல் நிறுவனத்திற்கு அவ்வப்போது பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள்.
விமானங்கள் எதிர்கொள்ளும் பறவைப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டவர் என்று பன்னாட்டளவில் ராபர்ட் அறியப்பட்டார். மலேசிய அரசு அவரை ஆலோசகராக அழைத்தது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள பறவைப் பிரச்சினையை ஆராய்ந்து வழி சொல்ல அவர் அங்கு இரண்டு மாதம் தங்கி வேலை செய்தார். அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் கிழக்கு சாரவாக் பகுதியில் உள்ள அடர்ந்த மழைக்காட்டுப் பிரதேசத்தில் பறவைகளுக்கான இரண்டு சரணாலயங்கள் அமைக்கத் திட்டம் தீட்டிக் கொடுத்தார்.
ராபர்ட்டிற்கு நீர்நிலைகள் மீதும், நீர் வாழ் பறவைகள் மீதும் ஒரு தனி ஈர்ப்பு. பல ஏரிகளைச் சுற்றிக் கள ஆய்வு செய்திருக்கிறார். பம்பாயில் ஒரு அடுக்ககத்தில் வாழ்ந்தபோதும் தன் வீட்டின் துருத்துமாடத்தில் தண்ணீர்த் தொட்டி வைத்து அதில் அல்லி போன்ற நீர்ப்பூக்களையும் மீன்களையும் வளர்த்தார் என்று அவரது மாணவர் லிமா ரோசலின் கூறுகிறார். ராபர்ட் 1993இல் விருப்ப ஓய்வு பெற்று நாகர்கோவிலுக்குப் புலம் பெயர்ந்த பின் அமெரிக்காவிலுள்ள ஸ்மித்சோனியன் நிறுவனத்திடமிருந்து கிடைத்த நல்கையுடன் Institute for Restoration of Natural environment என்ற பெயரில் ஒரு தன்னார்வ அமைப்பை நிறுவினார். கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகளைத் தனது மனைவியுடன் இணைந்து ஆராய்ச்சிசெய்து அறிக்கைகள் தயாரித்தார். இந்த நீர்நிலைகள் வலசை வரும் பறவைகளைப் பெருமளவில் ஈர்க்கின்றன. இதில் சிறப்புக் கவனம் பெற்ற சுசீந்திரம்-தேரூர் நீர்ப்புலத்தை ராபர்ட் கொடுத்த அறிக்கைக்குப் பிறகு பாதுகாக்கப்பட்ட இடம் (Bird Refuge) என்று தமிழக அரசு அறிவித்தது. அண்மையில் இந்தப் பகுதி ராம்சார் திட்டத்தின் கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பன்னாட்டளவில் முக்கியமான நீர்நிலை என்று அடையாளம் காணப்பட்டது. ராபர்ட் மாணவர்களையும் காட்டுயிர் ஆர்வலர்களையும் நீர்ப்புலங்களுக்குக் கூட்டிச் சென்று, சுற்றுச் சூழலில் ஆர்வத்தை உருவாக்கினார். வலசை வரும் பறவைகளைப் பிடித்து அவற்றின் காலில் வளையம் இடும் முறையை ஆய்வு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
காட்டுயிர் பற்றிய புரிதலும் அக்கறையும் தமிழ்நாட்டில் வளராததற்கு ஒரு காரணம் ஒரு சிலரைத் தவிர அந்தத் துறையைத் தெரிந்தெடுத்துக் கொண்டு ஆய்வுசெய்த எல்லாருமே ஆங்கிலத்தில் மட்டுமே புலமை உள்ளவர்கள்; அவர்கள் தமிழில் எழுதவில்லை; அதற்கு ஆர்வமும் காட்டவில்லை. ராபர்ட் தமிழில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நாகர்கோவில் வந்தபின் அவரது மனைவி ஷைலஜாவுடன் சேர்ந்து தமிழகத்தின் நீர்ப்புலப் பறவைகள் என்ற இருமொழி களக்கையேடு ஒன்றை 2012இல் வெளியிட்டார். நிலப்பகுதிகளைவிட நீர்நிலைகளில் பறவைகளை இனம்கண்டுகொள்வது எளிது. ஓரிடத்தில் இருந்தபடி தொலைநோக்கி மூலம் நிதானமாகப் புள்ளினங்களைப் பார்க்கலாம். நீர்ப்பறவைகளும் ஏறக்குறைய நாள் முழுதும் அங்கேயே இருந்து இரை தேடிக்கொண்டிருக்கும். சிறவி, உள்ளான் போன்ற வலசை வரும் பறவைகளை அவதானிக்கவும் ஏரி, குளங்கள் சிறந்த இடங்கள். அதிலும் உவர்ப்பு நீரும் நன்னீரும் கலந்திருக்கும் முகத்துவாரங்கள், காயல் நீர்ப்பரப்புகளுக்குப் (lagoon) பூநாரை போன்ற அரிய நீர்ப்பறவைகள் இரை தேடி வருகின்றன.
இந்திரா காந்தி, சாலிம் அலி ஆகியோருடன் ராபர்ட் கிரப் (இடதுபக்கத்தில் பறவையுடன் இருப்பவர்)
நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கையேட்டில் 145 நீர்ப்பறவைகளை ராபர்ட் விவரித்துள்ளார். பறவைகளைப் படம் எடுப்பதில் புகழ்பெற்ற கிளமெண்ட் ஃப்ரான்சிஸ் போன்ற பல்வேறு வல்லுநர்கள் எடுத்த 212 வண்ணப்படங்கள் கொண்ட நூல் இது. பறவைகளை அவதானிப்பதுபற்றி மனத்தில் பதியும்படி அவர் எழுதுகிறார். “ஒரு பேனாவும் சிறு நோட்டுப் புத்தகமும் தேவை. பலத்த ஞாபக சக்தியைவிட மங்கிய மை பலம் வாய்ந்தது.” கச்சிதமான கலைச்சொற்களையும் நீர்ப்பறவைகளின் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய தமிழ்ப்பெயர்களையும் இந்த நூலில் பயன்படுத்தியிருக்கிறார்.
ராபர்ட் தமிழில் ஆர்வம் உடையவர் என்று கூறினேன். ஊடகங்களில் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துவிட்ட அதே வேகத்தில் பேச்சுத்தமிழின் தரம் குறைந்துவருவதைக் கவனித்த அவர் இந்தப் பிரச்சினை பற்றிக் ‘கட்டவிழ்ந்த தமிழ் மொழி’ என்ற நூலை 2011இல் எழுதினார். “பேச்சுத் தமிழ் பிரச்சினை பல்லாண்டுகளாக என் உள்ளத்தை அழுத்திக்கொண்டிருந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இந்நூல். தவறாக உச்சரிக்கப்படும் மெய்யெழுத்துக்களால் ஏற்படும் குழப்பத்தை விவரிக்கிறார். இந்த உச்சரிப்புச் சீரழிவு கடந்த சில பத்தாண்டுகளில் ஊடகங்களின் வளர்ச்சியோடு தோன்றியது. அதுமட்டுமல்ல, இந்தப் பேச்சுத் தமிழின் சிதைவு, எழுத்துத் தமிழையும் பாதிக்க ஆரம்பித்துவிட்டது என்கிறார்.
ஆச்சாரமான கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த ராபர்ட் கடைசிவரை மதக் கோட்பாடுகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். இப்பூவுலகின் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஏனென்றால் அவை யாவும் இறைவனின் படைப்பு என்பது அவரது நிலைப்பாடு. பறவைபற்றிய அவரது நூலில் முதல் பக்கத்தில் கடவுள் இப்பூமியையும் அதன் ஜீவராசிகளையும் படைத்தது பற்றிய விவிலிய நூல் வாக்கியங்களை அச்சிட்டிருந்தார்.
சுற்றுச்சூழல் துறைக்கு ராபர்ட் கிரப் செய்திருக்கும் பங்களிப்புகளை அறியும்போது அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன். தமிழக அரசின் காட்டுயிர் வாரியத்தில்கூட (State Wildlife Board) அவர் நியமிக்கப்படவில்லை. தேச அளவிலும் அவருக்குப் போதிய கவனிப்புக் கிடைக்கவில்லை; என்றாலும் காட்டுயிர்ப் பேணலுக்கு அவர் அளித்த பங்களிப்பு நிலைத்திருக்கும்.
மின்னஞ்சல்: theodorebaskaran@gmail.com