முற்றுப் பெறாத பாதை
கசபத்
(நாவல்)
சாளை பஷீர்
வெளியீடு:
சீர்மை பதிப்பகம்
37/13 பூரம் பிரகாசம் ரோடு
பாலாஜி நகர்
இராயப்பேட்டை
சென்னை - 14
தொடர்புக்கு: 80721 23326
பக். 125
ரூ. 150
நாவலின் தொடக்கத்தில் தாவூதப்பா என்ற பாத்திரம் சொல்கிறது, கதையின் நாயகனை நோக்கி, “டக்குபுக்குன்னு எங்கேயாவது கெளம்புற வழியைப் பாரு. காசு தேடுற வயசுல ஊரச் சுத்தக் கூடாது,” என்று.
நாவலின் இறுதியில் ஷாஃபி காக்கா கேட்கிறார், “நீங்க தொழிலுக்கு என்ன பண்றியோ? வயித்துப்பாடு எப்படி போவுது?”
இந்த அக்கறையான பார்வைகளுக்குள் அடங்கி நின்று வளர்கிறது ‘கசபத்.’ நம் வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களுமே ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன; இவையெல்லாம் இந்நாவலின் நெருக்கடிகளாக அமைந்துள்ளன. இந்த அடுக்குகள் நேர்க்கோட்டுப் பாணியில் வரவில்லை. வெவ்வேறு கதாபாத்திரங்களின் குறுக்கீடுகளில் அங்குமிங்குமாய்த் தெறிக்கின்றன.
இதனால் நாயகன் எங்கேயும் உட்கார்ந்து இளைப்பாற வழியில்லை. அப்படி சும்மா உட்கார்ந்து இளைப்பாறக் கூடாது என்கிற மனநிலை அவனிடம் உள்ளது. வாழ்க்கை வெற்றுச் சக்கையாகக் கிடக்கிறது. அந்தச் சாபத்தை எள்ளிநகையாடவும் முடியாத நாயகனின் வாழ்வை வேறொரு திசையிலிருந்து சொல்கிறார் நாவலாசிரியர்.
நம்மிடம் கேள்விகளை முன்வைக்கிறவர்களெல்லாம் நம்மீது காட்டும் அக்கறையினால்தான் முன்வைக்கிறார்களா என்ற சந்தேகம் நாயகனுக்கு வருகிறது. அதனால் இந்தத் தொரட்டுப்பாடுகளை மீற வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. இதனிடையே முளைக்கிற அல்லல்கள் இயல்பான பார்வையில் நகைச்சுவை கலந்து எழுதப்பட்டுள்ளன.
சாளை பஷீரின் முதல் நாவல் இது. ஆனால் நாவலை எப்படி வளர்த்துச் செல்வது என்கிற தயக்கமில்லாமல் வாக்கியங்கள் உருண்டோடி வருகின்றன; முத்துச் சிதறல்கள்போல வித்தியாசமான பல படிமங்கள். ஒவ்வொருவரின் வாழ்வையும் அரசியல் மட்டும் தீர்மானிக்கவில்லை; மதமும் சேர்ந்தே தீர்மானிக்கிறது. இவையிரண்டும் பின்னணியில்தான் இருக்கின்றன; களத்தின் முன்வந்து எதையும் பேசவில்லை. இதுவொரு நல்ல அணுகுமுறை. அதனால் வேலையில்லையென்றால் மார்க்கத்திற்காக வேண்டி உழைத்துப் பார்ப்போமா என்ற வேட்கையையும் உரசிப் பார்க்கிறது நாவல்.
பதின்வயது, விவரமறிந்தும் விவரமறியாமலும் அபூவை வழிநடத்த முனைகிறது. ஆகவே முன்னும் பின்னுமான மனவோட்டங்கள் அவனிடம் ஓடியோடிக் களைத்துப்போகின்றன. அபூ அதற்குள் வசப்படாமல் இருப்பதால் நாவல் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. வாழ்க்கையின் வெற்றியை வயிற்றுப்பாடு தீர்மானிக்கிறதா, அதுதான் வாழ்வின் இறுதிப் புள்ளியா?
ஓர் இளைஞன் வேலை தேடும் முயற்சியில் எவ்வளவு சிரமப்பட்டாலும் அவனை ஆறுதல்படுத்துகிற ஒரு பெண் எப்படியாவது நம் படைப்புகளுக்குள் வந்துவிடுவாள். அனைத்து நாவல்களும் இந்தக் காதல்களை வளர்த்துவந்திருக்கின்றன. கசபத் நாவல் சாங்கியமான விசயங்களைத் தூக்கிப்போட்டுவிட்டு ஒரேயொரு பயிரை மட்டும் விளைவிக்கப் பார்க்கிறது. நாவலின் நெடுகிலும் எந்தவொரு பெண்ணின் கடைக்கண் பார்வையும் இல்லை; நடமாட்டமும் இல்லை. நாவல் தன் சூழலுக்குள் பொருந்திநின்று ஒட்டி உறவாடுகின்றது; அதனால் இதை நாவலின் ஆதார பலமாகக் கொள்ள வேண்டும்.
அபூ வேலை தேடி அங்குமிங்குமாக அலைந்தாலும் மனம் உவப்படைகிற மாதிரி எதுவும் அவனுக்கு அமையவில்லை. முதல் வேலையில் முதல்நாளே அவன் கொள்கிற வெறுப்பு வெவ்வேறு சூழல்களில் நீடிக்கிறது. நாவலில் இந்த முதல்நாள் வேலைச் சம்பவம் மட்டுமே நீண்ட சம்பவமாக அமைகிறது. வேறெந்த இடத்திலும் அது தன்முனைப்பாக நீளவில்லை. அவன் எல்லாவற்றையும் தாண்டப் பார்க்கிறான். இதனால் ஊரிலுள்ள பலரோடும் அவன் ஒட்டியுறவாடப் பார்த்தாலும் அது கைகூட மறுக்கிறது. முஸ்லிம் இளைஞர்கள் பலருக்கும் உரித்தாகிற மாதிரி குடும்பங்களை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்ச் சம்பாதிக்கிற அந்த எண்ணமும் வருகிறது. “பொன்னார்ந்த தன் இளமையை அயல்நாடுகளில் தேய்த்தழித்துவிட்டு, தளர்ந்தாடும் தலையுடன் வீட்டுவாசலில் உட்கார்ந்து பேச யாருமில்லாமல்” முடிவுறுகிற ஒரு வாழ்க்கையைக் கணப்பொழுதில் காட்டிச் செல்கிறார் நாவலாசிரியர். இவ்வகையில் பார்த்தால் அந்த வலையில் சிக்கிக்கொள்ளாமல் நாவல் அடுத்த கட்டத்திற்குப் பாய்ந்தோடுகிறது. நேரடியான அனுபவத்திலுள்ள கசப்புகளை மாத்திரமல்லாமல், அடுத்தவர்களின் துயரங்களையும் அலசப் பார்ப்பதை மெச்சலாம். அதில் அபூ விரக்தியை அடையாமல் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதால் வாசகரின் பார்வையில் யாதொரு வெற்றிடமும் தெரியவில்லை.
கதை சொல்கிற போக்கிலும் நேர்க்கோடு கிடையாது. நாயகனின் மனம் அலைந்துழல்வதால் நாவலும் அங்குமிங்குமாக அலைந்துழல்கிறது. அள்ளித் தெளிக்கும் நீர்த் திவலைகளில் வானவில் தோன்றுவதைப்போல முன்னோர்களின் வாழ்க்கைப் பாடுகள் தோன்றுகின்றன; அவை கசப்பான நிறங்கள். நடுத்தர வர்க்கத்தில் சற்றே மேலெழும்பியிருக்கும் முஸ்லிம்களின் வாழ்வில் உள்ளூர்ச் சம்பாத்தியம் பலனற்றதாக இருக்கிறது. அப்படியிருந்தால் மணப்பெண் கிடைக்க மாட்டாள்.
நாவலின் கரு புதிதானதில்லை. முதலில் சுட்டிக்காட்டியபடி இரண்டு நபர்களின் கேள்விகளுக்குள் மாட்டிக்கொண்ட கதை. ஆனால் அதை வேறு சூழலில், வேறு பண்பாட்டு முறைகளில் சொல்ல வரும்போது புதிதாகத் தோன்றுகிறது. அதற்கேற்றபடி புதிய புதிய கற்பனைகள், படிமங்கள் இயல்பாய் வந்து விழுகின்றன. வளமான தமிழ் கைகொடுக்கின்றது.
“பூமியெங்கும் பறந்தலைவதற்கான மொத்தச் சிறகுகளும் வழங்கப்பட்டுவிட்டன,”
“அலைகளில் மிதக்கும் உலகம்,”
“பனையேறியின் வேகத்தோடு வெயில் ஏறிக்கொண்டிருந்தது,”
“இரவுநேரப் பயணங்களில் செல்வதும் வருவதும் இருளே; இருள் ஓர் ஆன்மத் தோழன்; எல்லாவற்றையும் எந்தப் பேதமுமின்றித் தனக்குள் பொதிந்துகொள்வான்,” இப்படியாகப் பலப்பல படிமங்கள், வர்ணனைகளோடு எழுதிச் செல்கிறார்.
இது வாழ்க்கையில்லையென்று தெரிந்த பின்னும் அடுத்தடுத்த கட்டம் என்னவென்று போய்க் கொண்டேயிருக்கும் ஒரு வாழ்க்கையை முற்றுப் பெறாமல் நீட்டிச் செல்கிறது ‘கசபத்’.