அறச்சீற்றத்தின் அழியா முகம்
“தகவல் தெரியுமா தோழர்?” என்று என் சக பேராசிரிய நண்பர் தொலைபேசியில் அழைத்தபோது, அவரது உடைந்த குரலிலிருந்து ஏதோ அசம்பாவிதம் என்று மட்டுமே என்னால் ஊகிக்க முடிந்தது. கனத்த அமைதிக்குப் பிறகு பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மரணம் குறித்த தகவலைப் பகிர்ந்தார். சிறையிலிருந்து விடுதலையான பின்னர், அவர் உடல் நலம் தேறிவருவதாக அறிந்தேன். கடந்த சில வாரங்களாக நலமின்றி இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அவசியம் என்றும் அவருக்கு நெருக்கமான சில நண்பர்கள் சொன்னார்கள். தீவிரமான சிகிச்சை தரப்பட்டும், பலனின்றிக் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி இரவு காலமானார். நண்பர்கள் உடனான தொடர் விவாதங்கள் வழியாகப் பெரும் துயரிலிருந்து சற்றே மீள முடிந்தது. இது ஒரு சக பேராசிரியரின் எதிர்பாராத இழப்பு அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கடந்த 2021 ஜுலை மாதத்தில் அருள்தந்தை ஸ்டேன் சாமி சிறையிலேயே உயிரிழந்தார். 84 வயதான முதியவரைச் சொல்லொணாத் துயரில் தள்ளி இறுதியில் இறந்துபோகும் அளவுக்குக் கொண்டுசென்றது எது? 80 விழுக்காடு மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவினால் இந்தத் தேசத்தில் என்ன பெரிய களேபரம் நடந்து விடப்போகிறது? கடும் குற்றங்களை அவர்கள் செய்யவில்லை. துவேஷத்தை விதைத்து மதக்கலவரங் களை உருவாக்கிப் பல்லாயிரம் அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்ய வில்லை. ஓடும் ரயிலில் வெடிகுண்டுகளை வைத்துப் பயங்கரவாதச் செயல்களைச் செய்யவில்லை. எந்த வழிபாட்டுத் தலங்களையும் பெரும் கூட்டத்தைக் கூட்டி இடித்துத் தள்ளவில்லை. சட்டவிரோதமாக ஆயுதக் கடத்தலில் ஈடுபடவில்லை. கூலிக்காக அரசியல் எதிரிகளைக் கொடூரமாகக் கொலைசெய்யவில்லை. இவர்கள் பிணையில்கூடச் சிறையிலிருந்து வெளியே வந்துவிடக் கூடாது என்று அரசாங்கம் இவ்வளவு தீவிரமாக இருப்பதன் பின்புலம் என்ன? இது சாய்பாபா என்ற ஒரு தனி நபரின் சோகமாக முடிவுற்ற வாழ்விற்கான சம்பிரதாயமான இரங்கற்பா அல்ல. ஒருவரின் அகால மரணத்தின் வழியாக இந்த நாட்டில் பெரும் உவகையோடும் புல்லரிப்புகளோடும் போற்றப்படும் ஜனநாயகம், தாராளவாதச் சிந்தனைகள், குடிமைச் சமூகம் குறித்த ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை அணுக்க மாகப் பார்க்கும் அவசியமான முயற்சிதான்.
எந்த ‘வெளிநாட்டுத் தீய சக்திகளோடும்’ இவர்கள் இணைந்து நாட்டின் நலனுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அப்படி இவர்கள் செய்த குற்றம்தான் என்ன? தடைசெய்யப்பட்ட மாவோயிச அமைப்பினருடன் அவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். ஆகவே இவர்களும் தேச விரோதிகளே என்ற எளிய அபத்தமான அரசியல் சமன்பாட்டின் மூலம் பெரும் எண்ணிக்கையில் சமூகச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் தொடர்ந்து மிக மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சாய்பாபா அப்படிப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2014 மே மாதம் கைது செய்யப்பட்டார்.
மாற்றுத்திறனாளியான சாய்பாபாவின் இளம்பருவம் முழுவதுமே அவரது அன்னையின் பேரன்பினால் மட்டுமே உருவானது; தன் தாயின் இறுதி நிகழ்ச்சிக்குச் செல்லவும் அஞ்சலி செலுத்தவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்தச் சில மணிநேரத்தில் கூட அவரால் பெரும் அச்சுறுத்தல் நாட்டின் பாதுகாப்புக்கு வந்துவிடுமா என்ன? புரியவில்லை. இது ஒருவிதமான சிதைவுகொண்ட நோயுற்ற மனநிலை. வயது மூப்பின் காரணமாக, கைகளில் மெல்லிய நடுக்கம் இருப்பதாகவும் அதனால் குடிதண்ணீர் டம்ளரைப் பற்றிக்கொள்ள இயலவில்லை, ஸ்ட்ரா வைத்த டம்ளர் தருமாறு சிறை நிர்வாகத்திடம் கேட்டு ஸ்டென் சாமி பெரும் போராட்டமே நடத்தினார். அவரது இந்த எளிய விண்ணப்பம்கூட மூர்க்கமாக நிராகரிக்கப்பட்டது. இவ்வளவு கடுமை காட்டப்பட வேண்டிய அளவுக்கு இவர்கள் பெரும் குற்றப் பின்னணி கொண்டவர்களோ தீவிரவாதிகளோ அல்ல. இது அனைவரையும்விட, காவல்துறைக்கு மிக நன்றாகவே தெரியும். தனிப்பட்ட நட்புரீதியான அரட்டைகளில் காவல்துறையில் உயர் பதவிகளில் இருக்கும் நண்பர்களே கனத்த மௌனத்தோடு ஏற்கும் உண்மையும் இதுவே; இவ்வளவு கடுமை தேவையில்லை என்பது அவர்களுக்குமே தெரியும். ஆனால் அரசியல்ரீதியான கருத்தாகவே இதை நாம் கருத வேண்டும். தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு வாய்மொழியாகத் தரப்படும் ஆதரவைத் தேசவிரோதச் செயலாகக் கருத முடியாது என்று பல தீர்ப்புகள் வழியாக உச்ச நீதிமன்றமே முன்மொழிந்த அரசியல் நிலைப்பாடு. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய வழக்கில் தமிழக அரசியல் தலைவர் வைகோ கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே நல்உதாரணம்.
ஆம், ஒரு புதிய அரசியல் இயல்புத்தன்மைக்கு நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். கடந்த அக்டோபர் 4ஆம் தேதி நடந்த மோதலில் 30 மாவோயிச அமைப்பினரைத் துணை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர் என்ற தகவலை எவ்விதச் சஞ்சலமுமின்றி அனைவருமே கடந்து சென்றுவிட்டோம். எங்கும் அது தொடர்பாக விவாதமே இல்லை. பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடம் அரசியல்ரீதியான பேசுபொருளாகக்கூட இது இல்லை. 1980களில் இப்படிப்பட்ட நிகழ்வு எப்படிப்பட்ட அதிர்வுகளை உருவாக்கியிருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் அதிகார வர்க்கம் எதேச்சாதிகாரத்தோடு நடந்துவிடக் கூடாது என்பதில் காட்டிய கடப்பாடு மெச்சத்தகுந்தது. அதுவே வலுவான மக்களாட்சி செழிக்கவும் அரசியல் அமைப்புகள் ஜனநாயகப்படுத்த படவும் உறுதுணையாக இருக்கும் என்றும் திட்டவட்டமாக நம்பினார்கள். இன்று அப்படிப்பட்ட கடப்பாடு காலாவதியாகிவிட்டது.
அராஜகமும் வன்முறையும் நிறைந்த உள்ளூர் முதலாளிகளின் வளர்ச்சியை மட்டுமே முன்னிலைப்படுத்தி அவர்களை எப்படியாவது சர்வதேச முதலாளித்துவச் சக்திகளின் நண்பர்களாக்கிவிட ஒட்டுமொத்த அரசு இயந்திரமே முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி; அவர்களின் விரோதிகள் தேச விரோதிகள். அதாவது உள்ளூர் குறுங்குழு முதலாளித்துவமே இந்திய தேசியத்தின் அடிநாதம். அதற்கு எதிராக உருவாகும் அனைத்துக் குரல்களுமே தேசவிரோதச் சக்திகள் என்று உரக்கச் சொல்லும் ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெல்கிறார்கள். இந்துத்துவ ஆதரவாளர்களின் அரசியல் அப்படித்தான் இருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் மக்களிடம் இதற்கு உருவாகிவரும் ஆதரவு தான் நாம் கவனிக்க வேண்டிய அம்சம். ஊடகமும் குடிமைச் சமூக அமைப்புகளும் சட்டென்று நிறம் மாறுவதுதான் நாம் பேராபத்தின் விளிம்பில் இருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. நிர்வாகத்துறை அரசியல்வாதிகளின், ஆட்சியாளர்களின் கீழ்தான் சட்டப்படி இயங்க வேண்டும்; ஆனால் நீதிமன்றமும் குடிமைச் சமூக அமைப்புகளும் அப்படி அல்ல. இன்று இவர்கள் அனைவருக்குமிடையே மெதுவாகவும் உறுதியாகவும் உருவாகிவரும் ஒத்திசைவு திடுக்கிடவைக்கிறது.
முதலாவதாக, மற்ற எந்த அமைப்பையும்விட, தீவிர மார்க்சிய அமைப்புகள் மட்டுமே இன்றைய அரசியல், பொருளதார, கலாச்சார நிலைமையைக் கடும் விமர்சனத்துக்கு உட்படுத்திவருகின்றன. மாவோயிச அமைப்புகளுமே ஆயுதம்தாங்கிய போராட்டத்தின் போதாமைகளைக் கருத்தில் கொண்ட நிலையில், ஒட்டுமொத்த எதிர்ப்புகளுமே குடிமைச் சமூகத் தளத்திற்குச் சலனமின்றி நகர்ந்துவருகின்றன. 2018இல் பீமா கோரேகானில் நடந்த முன்னெடுப்பு இன்றைய ஆட்சியாளர்களுக்கும் அவர்களது இந்துத்துவ அமைப்புகளுக்கும் பெரும் தலைவலியாகப்போனது வெள்ளிடைமலை. அந்த நிகழ்வில் பங்குபெற்ற பல செயல்பாட்டாளர்கள் எவ்வித முகாந்திரமுமின்றிச் சிறை வைக்கப்பட்டதன் பின்புலம் இதுதான்.
ஊடகத் துறை தொடங்கி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் எனப் பலதளங்களில் எதிர்ப்புக் குரல்கள் மெல்ல மெல்ல இரண்டறக்கலந்துவரும் நிலையில் யார் மாவோயிஸ்ட் என்று பிரித்தறிய இயலாத நிலைக்கு ஆட்சியாளர்களும் ஆதிக்க வர்க்கமும் தள்ளப்பட்டிருக்கின்றன. அதனால்தான், காரணமே இல்லாமல், தோழர் ஆனந்த் தெல்டும்ப்டெ பீமா கோரேகான் நிகழ்வில் பங்குபெற்றதற்காகவும் பிரதமரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு 2020இல் கைதுசெய்யப்பட்டார். இதே காரணத்தைச் சொல்லித்தான் என் பல்கலைக்கழகத் தோழர் ரோனா வில்சனும் சிறையில் அடைக்கப்பட்டார். பிரதமரைக் கொலைசெய்யும் திட்டம் குறித்துச் சிலருக்கு ரோனா அனுப்பிய மின்னஞ்சல்களைக் காவல்துறை கைப்பற்றியதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இஸ்ரேல் அரசிடமிருந்து வாங்கிய ‘பெகசஸ்’ என்னும் மென்பொருள் நிரலி வழியாக ரோனாவின் கணினிக்குள் திட்டமிட்டே பல தகவல்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானபோது, காவல்துறையும் விசாரணை அமைப்புகளும் தங்களது கள்ள மௌனம் வழியாகக் கடந்துபோக முயன்றன.
இப்படிப்பட்ட தீவிர இடதுசாரிச் சமூகச் செயல்பாட்டாளர்கள்மீதான அதிகாரவர்க்கத்தின் குற்றச்சாட்டு அபத்தமான ஜோடனைகள் என்று எளிதாகப் புரிந்துவிடும். உறுதியான குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களையும் முன்வைக்க முடியாமல் போனதால், இப்படியாக மனித உரிமை மீறல்களைத் தயவுதாட்சண்யமின்றிச் செய்துவருகின்றன. அதாவது என்ன குற்றம், அதற்கான சாட்சியம் எது ஆதாரங்கள் என்னென்னவென்று அவற்றை ஐயமின்றி நிரூபிக்க வேண்டிய விசாரணை அமைப்புகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நீதிமன்றத்தின் முன் தெளிவாகச் சொல்லக்கூட முடியாமல் மழுப்புவதைச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. “தடைசெய்யப்பட்ட மாவோயிச அமைப்பினரோடு தொடர்பில் இருந்தார், அவர்களின் தலைவர்களோடு தொலைபேசியில் பேசினார். அந்த அமைப்பினரை வீட்டில் ஒருநாள் தங்க அனுமதித்தார்.” இப்படியான ‘மாபெரும்’ குற்றங்களைச் செய்ததாகச் சொல்லும்போது, நீதிமன்றங்கள் இயல்பாகவே இவற்றை நிராகரிக்கக் கூடிய சூழல்தான் இருக்கும்; அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) 2019இல் பல திருத்தங்களை இன்றைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்தனர். இதன்படி, தீவிரவாதச் செயல்களில் நேரடியாக ஈடுபடுவது மட்டுமல்ல, அதற்கு ஆதரவான செயல்களைச் செய்வது மட்டுமல்ல, அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டாலும் அது தேசத்துரோகமே.
அதாவது நாட்டில் நிலவும் அநீதிகளையும், மனித உரிமை மீறல்களையும் அதை நியாயப்படுத்தும் திட்டங்களைப் பற்றியும் எந்தச் செயல்பாட்டாளரும் கல்வியாளரும் ஊடகவியலாளரும் விவாதிக்க முடியாது. அப்படிச் செய்தால், அது தீவிரவாதத்திற்கான தயாரிப்பு நடவடிக்கை என்று முத்திரை குத்திச் சிறையில் அடைக்க முடியும். அசாமில், பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில், மாநில அரசின் சில திட்டங்களை விமர்சிக்க அவர் பணி இடை நீக்கம் செய்யப்படுகிறார். அதற்கு மாநில முதல்வர் அளித்த பதில்தான் திடுக்கிடவைக்கிறது. பல்கலைக்கழகப் பேராசிரியர் அரசிடமிருந்து சம்பளத்தைப் பெறும்போது, அரசுக்கு எதிராகப் பேசுவது குற்றமே என்று திருவாய் மலர்ந்தருளுகிறார். இந்த அறிவிலிக்கு அரசுக்கும் (State) அரசாங்கத்துக்கும் (Government) வேறுபாடு தெரியவில்லை. நான் அரசு ஊழியனே தவிர, அரசாங்கத்தின் வேலையாள் அல்ல. ஒரு அரசியல் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படுகிறது என்றால் சட்டமியற்றவும் நிர்வாகத்தை மேற்கொள்ளவுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்த தேர்தலில் அந்தக் கட்சி நிராகரிக்கப்படலாம்.
இந்த எளிய அரசியல் புரிதல்கூட இல்லாத பித்துக்குளிகள் அதிகாரத்தில் இருக்கும்போது, மனித உரிமை மீறல்தான் இயல்பான அரசியலாக இங்கு இருக்க முடியும். அதனால்தான் சாதாரண மாவோயிச ஆதரவாளர்களைக்கூடத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தி விசாரணையின்றிச் சிறைவைக்க முடிகிறது. கருத்தியல், கோட்பாட்டுரீதியான ஆதரவு நிலைப்பாடு கூடத் தயக்கமின்றி, தேசத் துரோக நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் திட்டங்களை, கொள்கைகளை விமர்சிப்பது ராஜத்துரோகமாகக் கட்டமைக்கப்படுவது ஏதேச்சையாக நடப்பதல்ல. இந்துத்துவ அமைப்புகளின் நீண்டகாலத் திட்டம் இன்று நனவாகிறது. ஸ்டென் சாமி, சாய்பாபா, ஆனந்த் தெல்தும்ப்டெ, ரோனா வில்சன் போன்றோரை விசாரணையின்றி எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சிறைவைக்க முடியுமென்றால், நமது மக்களாட்சியின் போதாமைகள் நியாயப்படுத்தப்படுகிறது என்றே பொருள்.
இவர்களையெல்லாம் குற்ற உணர்ச்சியே இல்லாமல் கொடுமையாகச் சிறையில் அடைக்க முடிகிறதென்றால் அதன்மூலம் கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், குடிமைச் சமூக அமைப்பினருக்கு விடப்படும் பகிரங்க எச்சரிக்கை. இன்று இந்த எச்சரிக்கை சிறப்பாகவே வேலை செய்கிறது. அரசின் நிலைப்பாட்டை, கொள்கைகளை விமர்சிக்கவோ சுட்டிக்காட்டவோ உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் பெரும் தயக்கத்தைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ‘எதுக்கு சார், வம்பு, நாம எழுதித்தான் நாடு திருந்தப்போகுதா’ என்று அங்கலாய்க்கும் பேராசிரியர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிப்பது பெரும் அச்சத்தை உருவாக்குகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக வகுப்பறைகளில் கிண்டல் செய்யும் ஆசிரியர்கள் யார் யார் என்பதைப் பற்றிய தகவல்களைத் திரட்டும் வேலையை மாணவர்களைக் கொண்டே ஆட்சியாளர்களால் தயக்கமின்றிச் செய்ய முடிகிறது.
விரிவுரையாளர் பணிக்கான நேர்காணலுக்குச் செல்லும் நபர்களின் சமீபத்திய சமூக வலைதளப் பக்கங்களை நகல் எடுத்து வைத்துக்கொண்டுதான் நேர்காணலையே தொடங்குகிறார்கள். ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை அந்த நபர் பகிர்ந்திருந்தால், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையினைப் புதைத்துவிட வேண்டியதுதான். வேலைக்கான தகுதி மட்டும் போதுமானதல்ல, அவரின் அரசியல் பின்புலமும் நிலைப்பாடும் முக்கியமே. ஊடகத்துறையில் அனைவருமே அர்னாப் கோஸ்வாமிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் திட்டமிடும்போது, நீதித்துறையிலும் கல்வித்துறையிலும் சும்மா இருப்பார்களா என்ன? அர்னாப் கோஸ்வாமி போன்ற நபர்களை மட்டுமே தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்க்க முடியுமென்றால் மக்களுக்கு மனச்சிதைவு உருவாகும் என்பதைச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.
இப்படி மற்ற துறைகளிலும் நீடித்தால் அது ஏறக்குறைய பாசிசத்தின் முதல்படிக்கு வந்துவிட்டோம் என்றே பொருள். அரசியல்/நிர்வாகம் ஒருபுறமும் நீதித்துறை மறுபுறமும் கல்வி / குடிமைச் சமூக அமைப்புகள் இன்னொரு புறமுமாக முழுமையான இறையாண்மை பெற்ற தளங்கள். இதில் இன்றைய இந்துத்துவ அரசியல் மெல்ல மெல்ல நிர்வாகத்தை விழுங்கிவிட்டது; மற்ற இரு தளங்களையும் முழுவதுமாகக் கபளீகரம் செய்ய மிகத் தீவிரமாக முயன்றுவருகிறது. எப்படி அதிகாரிகள் அரசின் திட்டங்களை விமர்சிக்க இயலாதோ, நீதிமன்றங்கள் அரசின் கொள்கைகளை நிராகரிக்க முடியாதோ அதைப் போலவே, கல்வி/குடிமைச் சமூக அமைப்புகளும் ‘நிர்வகிக்கப்பட வேண்டும்’ என்ற வேட்கை பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. இந்த எதேச்சாதிகாரத்தை எதிர்ப்போர் தேசத்துரோகிகள். அவர்கள்மீது பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் பாயும். இந்த ஆபத்தான சித்தாந்தவாதிகள் தொடர்ந்து தேர்வு செய்யப்படுவதுதான் நமது ஜனநாயகம் எவ்வளவு வலுவற்றதாக இருக்கிறது என்ற உண்மையைத் தெளிவுபடுத்துகிறது.
ஒரு பெரும் மக்கள் திரளால் எளிய அரசியல் புரிதல்கூட இல்லாமல் ஆபத்தான சித்தாந்தக் கும்பலைத் தொடர்ந்து எப்படி அங்கீகரிக்க முடிகிறது? ‘வரலாறு நிறைவுற்றுவிட்டது’ என்று 1990களில் ஆரூடம் சொல்லிய அறிவுஜீவிகள் உலகம் முழுவதும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் மேலும் மேலும் உக்கிரமடைவதை எப்படி வகைப்படுத்தப்போகிறார்கள்? எந்த ஒரு விசைக்கும் சமமான எதிர் விசை இருந்துதான் ஆகும்; இது சமூக இயங்கியலின் அடிப்படையும்கூட. குறுங்குழு முதலாளித்துவத்திற்கும் மதவாதப் பாசிசத்திற்கும் இருக்கும் இணக்கமான உறவு முன்னெப்போதும் இல்லாதவகையில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இவை இரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்கள் போலத்தான். நாங்கள் மதவாதத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு குறுங்குழு முதலாளித்துவத்தை மானசீகமாக வரவேற்கும் அரசியல் கட்சிகளோடு கூட்டணி மேற்கொள்வது பாசிசத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதுதான், முழுமையாக நிராகரிப்பதோ அல்லது நீர்த்துப்போகச் செய்வதோ அல்ல. பிரதானமான இடதுசாரிகளுக்குத் தெரியாதா என்ன? ஜோதிபாசு பிரதமர் ஆவதை மிக உக்கிரமாகத் தடுத்த அவரது கட்சியின் அறிவுஜீவிகளுக்கு மதவாதப் பாசிசத்துக்கும் குறுங்குழு முதலாளித்துவத்திற்குமான ஒத்திசைவு தெரியாமல் போனது உண்மையிலேயே எரிச்சலூட்டுகிறது. இது என்ன அபத்தமான மார்க்சியம் என்று புரியவில்லை. இந்தச் சூழலில்தான் இந்த நாட்டில் கலகக்குரல்களின் வீரியம் சற்றும் குறையவில்லை என்று நமக்குத் தொடர்ந்து நம்பிக்கை தந்த ஆளுமைகள்தான் பேராசிரியர் சாய்பாபா போன்றோர். அயராத, தளராத, அர்ப்பணிப்புணர்வுடன் நமக்கு நம்பிக்கையினைத் தொடர்ந்து விதைத்தபடியே வருகிறார்கள்.
ஆக, அவர் நம்மைவிட்டுப் பிரியவும் இல்லை, பெரும் மக்கள் போராட்டத்தில் தோற்கவும் இல்லை, முலாம்பூசிய இடதுசாரிகள் போலத் தரகுவேலைக்காரர்களாகவும் மாறவில்லை. அபாரமான நம்பிக்கையினைத் தந்துவிட்டுச் சென்றுள்ளார். தோழரே, உங்களின் திடீர் இழப்பு பெரும் துயரமானதுதான், ஒருபோதும் உழைக்கும் மக்களைத் துவண்டுவிடச் செய்யாதது. உங்களின் போராட்டத்தில் இருந்துவரும் அறச்சீற்றம் இனிவரும் காலங்களில் பெரும் திரளான உழைக்கும் மக்களின் ஜனநாயக வேட்கையில் தார்மீகக் குரலாக ஒலித்துக்கொண்டே இருக்கும். இது சத்தியம், போய் வாருங்கள் தோழர்.
மின்னஞ்சல்: rthirujnu@gmail.com