வாழ்வை மாற்றிய களம்
ஊக்கத்துடன் பணியாற்றியமைக்கான நினைவுப் பரிசினை கமலா ராமசாமியிடமிருந்து பெறும் பி.எஸ். உடன் சுகுமாரன். கண்ணன். பழ. அதியமான், பெருமாள்முருகன், ஆ.இரா. வேங்கடாசலபதி, மைதிலி சுந்தரம்.
அன்று எனக்குத் தெரியவில்லை, நான் சந்திக்கப்போகும் மனிதர் என் வாழ்க்கைப் பாதையைச் செம்மைப்படுத்தப் போகிறாரென்று. 05.05.1993 அன்று, மணிமேடை சந்திப்பில் இருந்த சுதர்சன் டெக்ஸ்டைல்ஸுக்குச் சென்று வேலை வேண்டி அதன் உரிமையாளர் சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். பத்தொன்பது வருடங்கள் மருந்துக் கடையில் வேலைபார்த்து, பின் சொந்தமாக ஆரம்பித்த மருந்து மொத்த வியாபாரம் நஷ்டமடைந்து, மிகவும் நொடித்துப்போயிருந்த நேரம் அது. மனைவி, ஆறு வயதான மகள், ஒரு வயதான மகன் என நால்வராய் வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. வாழ்வாதாரத்திற்காக மருந்துக் கடைத் தொழிலிலிருந்து அனுபவமற்றத் தொழிலான ஜவுளிக் கடையில் காசாளரானேன். வாழ்க்கையில் மிகவும் நொந்துபோய், கடனாளிகளைக் கண்டு பயந்தும் வாழ்ந்துகொண்டிருந்தேன். இந்த விஷயத்தைப் பெரிய சாரிடம் (சுந்தர ராமசாமியை அப்படித்தான் அழைப்போம்) சொன்னவுடன் அவர் எனக்கு நம்பிக்கை தரும் பல ஆறுதல்களைச் சொல்லி மனோ தைரியப்படுத்தி என்னை வேலையில் சேர்த்தார். அப்போது கண்ணன் சார், மைதிலி மேடம் மேற்பார்வையில் கடை நடந்துகொண்டிருந்தது.
பல மாதங்கள் சென்ற பின்னர்தான் சு.ரா. காலச்சுவடு என்னும் பத்திரிகை நிறுவனர் என்பதையும் சிறந்த எழுத்தாளர் என்பதையும் என்னுடன் கடையில் வேலை பார்த்துவந்த சுப்பையன் மூலம் தெரிந்துகொண்டேன். ஜவுளிக் கடையில் வேலைபார்க்கும்போது சு.ரா. வீட்டுக்குச் சென்று தபால் உறைகளை வாங்கிவந்து தபாலிலும் கொரியரிலும் அனுப்புவேன். என்னுடன் வேலை பார்த்துவந்த லீலாவும் ஜவுளிக்கடை வேலைகளுக்கிடையில் சு.ரா.வுக்குத் தட்டச்சுசெய்து கொடுப்பார். அப்போதுதான் சு.ரா. கதைகள், கட்டுரைகளைச் சொல்லச் சொல்ல லீலா தட்டச்சுசெய்வார் என்ற விவரம் தெரியவந்தது.
வாசகர்கள் கடைக்கு வந்து தாங்களே புத்தகங்களைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் வசதியுடன் ஒரு புத்தகக்கடை நாகர்கோவில் நகரில் அமைய வேண்டும் என்பது சு.ரா.வின் ஆசை. சு.ரா. ஆரம்பித்துச் சில காலங்களில் நின்றுபோன காலச்சுவடு பருவ இதழினை மீண்டும் கொண்டுவர கண்ணன் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். ஜவுளிக்கடை வேலையைக் குறைத்துக்கொண்டு காலச்சுவடு சம்பந்தமான வேலைகளுக்கு அவர் நெடுநேரம் செலவிட்டார்; சு.ரா.வின் கனவான ‘சுதர்சன் புக்ஸ்’ஐ 2004இல் உருவாக்கினார். மைதிலி சுந்தரம், கண்ணனுக்கு மிகவும் உதவியாயிருந்தார். ஜவுளிக்கடை வேலைகள் பெரும்பாலானவற்றை அவர் எடுத்துக்கொண்டார். இப்போது மைதிலி தலைமையில் ‘சுதர்சன் புக்ஸ் & கிராஃப்ட்ஸ்’ என அந்நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
சென்னைப் புத்தகக் காட்சியில் 2004இல் ‘சுதர்சன் புக்ஸ்’ நாகராஜனுடன் கலந்துகொண்டேன். பலதரப்பட்ட பதிப்பகங்கள், விற்பனைக்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் பிரமிப்பாக இருந்தன. அதேபோல் புதுதில்லி புத்தகக் காட்சிக்கு இதுவரை மூன்று முறை கலந்துகொண்டு திரும்பியுள்ளேன்.
இப்படித்தான் காலச்சுவடுடன் இணைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காலச்சுவடு கலந்துகொண்ட சென்னைப் புத்தகக் காட்சிகள் அனைத்திலும் பொறுப்பெடுத்துச் செயல்பட்டேன். பல்வேறுபட்ட ஆளுமைகள், எழுத்துலக நண்பர்கள், பல வாசகர்கள் என விரிவான தொடர்புகள் ஏற்பட்டன. என் கல்லூரி தமிழ் பேராசிரியர் அ.கா. பெருமாள், பேராசிரியர் பத்மநாபன் ஆகியோரும் காலச்சுவடு நலம் விரும்பிகளாக இருந்து வந்தனர்.
நாகர்கோவில் பக்கத்திலுள்ள கிராமமான திருப்பதிசாரத்தில் 19 வருடங்கள் வசித்து வந்தோம். அங்கு எனது பக்கத்து வீட்டுக்காரர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் தி.அ. ஸ்ரீநிவாஸன். அவர் மூலமாக காலச்சுவடு, சு.ரா.பற்றி அதிகமும் தெரிந்துகொண்டேன். சுந்தர ராமசாமி ஆரம்பித்த பத்திரிகையின் பெயரைக் காலச்சுவடு எனத் தேர்ந்தெடுத்தவர்களில் இவரும் ஒருவராக இருந்தார் என்பது பின்னர் வாய்ப்பேச்சின்போது தெரியவந்தது.
இப்படி படிப்படியாகக் காலச்சுவடின் முழுநேரப் பணியாளராக 2010இல் மாறினேன். இந்த 17 வருடங்களில் நானும் கண்ணனின் குடும்பத்தில் ஒருவனாகவே என்னைக் கருதினேன். என் குடும்ப நலத்திலும் ஆரோக்கியத்திலும் கண்ணன் குடும்பத்தினர் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்கள்.
சுதர்சன் புக்ஸ் நிறுவனத்தில் பல லட்சம் இழப்பு ஏற்பட்டபோது மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானேன். பல மாதங்கள் தூக்கமின்மை, பசியின்மையில் அவதிப்பட்டேன். இந்த விஷயம் சு.ரா.வுக்குத் தெரிந்து மருத்துவ ஆலோசகரான கவிஞர் ஆனந்த்திடம் அனுப்பி மனநல ஆலோசனை பெற்று நலம் பெறச் செய்தார். அத்தனை செலவுகளும் அவருடையது. புகைப்பழக்கம் மிக அதிகமாக இருந்த நேரத்திலும் என்னை யோகா வகுப்பிற்கு அனுப்பிவைத்தார். 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி புகைப் பழக்கத்தைக் கைவிட்டேன்.
மனக் கலக்கம் ஏற்பட்ட நேரத்தில் மருத்துவத்திற்கும் கலந்தாலோசனைகளுக்கும் அனுப்பி நலம் பெறச் செய்தது காலச்சுவடுதான்; என் மகள் திருமணத்திற்குப் பொருளுதவிசெய்து உதவியதும் காலச்சுவடுதான்.
காலச்சுவடு பணிகளில் பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். பல ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது. ராஜ மார்த்தாண்டன், பெருமாள்முருகன், ஆ.இரா. வேங்கடாசலபதி, தேவிபாரதி, கவிஞர் ஆனந்த், சுகுமாரன், அரவிந்தன், அ.கா. பெருமாள், ஸ்டாலின் ராஜாங்கம், பழ. அதியமான், களந்தை பீர் முகம்மது, லாவண்யா போன்ற பலர். நண்பர்களாக ஸ்ரீதர், கீழ்வேளூர் ராமநாதன், கலாமுருகன், ஜெபா, நிஷா, நாகம், முத்து வைரவன், அய்யாசாமி, விஸ்வநாதன், தொ. பத்திநாதன், பெருமாள், வெங்கடேஷ், செந்தூரன் போன்ற பலர். கவிஞர் ராஜ மார்த்தாண்டன், என்னுடன் பணிசெய்த ஸ்ரீதர் ஆகியோரின் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
நெய்தல் கிருஷ்ணன் காலச்சுவடு நலன்விரும்பிகளில் முக்கியமானவர். கிருஷ்ணன் என்னுடைய தனிப்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான உதவிகளையும் செய்து தந்தவர். சு.ரா. அமெரிக்காவில் இறந்து, அவரது உடலைத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டு நானும் நெய்தல் கிருஷ்ணனும் அ.கா. பெருமாளும் ஆம்புலன்ஸில் வந்துசேர்ந்தது என்றும் மறக்க முடியாத நினைவு.
காலச்சுவடு பதிப்பகம் ஆரம்பித்துச் சில வருடங்களில் பல இலட்சங்கள்வரை இழப்பு ஏற்பட்டாலும் மனந்தளராமல் காலச்சுவடு வளர்வதற்கு கண்ணன் மிகக்கடுமையாக உழைத்தார். காலச்சுவடு பணியாளர்களும் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பைத் தந்தார்கள். 30 ஆண்டுக் காலப் பதிப்பு சாதாரண விஷயமில்லை. எத்தனையோ சிரமங்கள் வந்தாலும் அதனைக் கடந்து இன்று பதிப்பகம் வளர்ந்துகொண்டிருக்கிறது. 2008 ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சென்னை பிலிம் சேம்பரில் நடைபெற்ற ‘காலச்சுவடு 20 ஆண்டுகள் - 100 இதழ்கள் - 250 நூல்கள்’ விழாவில் எனக்கும், நாகம், லோகநாதன் ஆகியோருக்கும் காலச்சுவடுக்கு நெடுநாள்களாக ஆத்மார்த்தமாகப் பங்களிப்பவர்கள் என்ற நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு நெய்தல் கிருஷ்ணன் நடத்திய சு. ரா. நினைவுப் பரிசு நிகழ்வில் காலச்சுவடில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்த பணியாளர்களான கலா, நாகம் ஆகியோருடன் எனக்கும் கேடயமும் பத்தாயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டன.
இதுவரை காலச்சுவடைச் சம்பளம் தருகிற நிறுவனமாக நான் நினைத்துப்பார்க்கவில்லை. சு.ரா., கமலாம்மா, கண்ணன், மைதிலி, ராம் சாரங்கன், முகுந்தன் ஆகியோரும் என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே கருதிவருகிறார்கள். என் மகள் அனு, மகன் ஜே.கே ஆகியோரும் காலச்சுவடில் சில காலம் பணியாற்றி யிருக்கிறார்கள். இவர்களுக்குக் காலச்சுவடு ஒரு பயிற்சிப் பட்டறையாக இருந்திருக்கிறது. இப்போது மூன்றாம் தலைமுறையாக என் வளர்ப்பு மகன் துரை ஸ்ரீராமையும் காலச்சுவடு நிறுவனத்தில் இணைத்துள்ளேன்.
காலச்சுவடுக்கும் எனக்குமான பந்தம் தொடர வேண்டும். எனது செயல்பாடுகள் குறையும் காலம்வரை காலச்சுவட்டுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே என் கனவு; அது நனவாகும்.
மின்னஞ்சல்: sivakumarindira488@gmail.com