திருமதி முதலை
பல மைல் தூரத்துக்குச் சதுப்பு
நிலங்கள், நீண்டு விரிந்து கிடந்த மணல் பரப்புகள், அலையடித்துக் கொண்டுவந்து போட்ட சத சதவென்று இருந்த வண்டல் படிவுகள், உப்பங்கழிகள், இவை எவற்றாலும் பிரபல மானுடவியல் அறிஞர் பாட்ஸ்டோனை மனம் தளரச்செய்ய முடியவில்லை. ரயிலிலும் பின்னர் ஜீப்பிலும் அடுத்து மாட்டு வண்டியிலும் பயணித்துக் கடைசியில் ஒரு மைல் தூரத்துக்குத் தட்டுத் தடுமாறி நடந்து எங்கள் கிராமத்துக்கு வந்துசேர்ந்தார்.
வானளாவிய கட்டடங்கள் நிறைந்த மேலை நாட்டு நகரங்களிலேயே வாழ்க்கையைக் கழித்திருந்த டாக்டர் பாட்ஸ்டோனுக்கு இந்திய மண்ணில் காலடி பதித்ததும் ஏற்பட்ட முதல் ஆசை மிகவும் ஆதிகாலத்துக் கிராமம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்பதுதான்.
அந்தக் காலத்தில், அதாவது நாங்கள் பள்ளியில் படித்திருந்த காலத்தில், நகரங்களுக்கும் கிராமங்களுக்குமான இடைவெளி இன்றிருப்பதுபோல் பெரிதும் சுருங்கியிருக்கவில்லை. நகரங்களின் உருத் திரிந்த நிழல்களாகக் கிராமங்கள் மாறியிருக்கவில்லை. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் அடையாளமான பெரிய பெரிய சிவப்பு முக்கோணங்கள், அரசியல் கட்சிகளின்