சாதிப் பெயரில் ஊர்கள்: இழிவா, வரலாறா?
அடையாறு ஏரிக்கரையோரம் (1905)
சில வாரங்களுக்கு முன் நடுநிசி நெருங்கும் வேளையில் என்னைக் கைப்பேசியில் அழைத்த எழுத்தாளர் இமையம் ஒரு சம்பவத்தைச் சொன்னார். அச்சம்பவம் தன்னை மிகுந்த சஞ்சலத்திற்கு உள்ளாக்கிவிட்டதாகவும் அதன் தாக்கத்தில் ஒரு கதை எழுதியிருப்பதாவும் கூறிவிட்டு அது தொடர்பாகச் சில விளக்கங்களைக் கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்துக்கொண்டார். அவர் மாணவர் ஒருவர் வகுப்பறையில் தன்னுடைய சொந்த ஊரின் பெயரைச் சொல்ல மறுத்ததாகவும், அதற்காக அம்மாணவர் கூறிய காரணம் தன்னைத் திடுக்கிடவைத்ததாகவும் குறிப்பிட்டார். அதாவது ஒடுக்கப்பட்ட சாதியைக் குறிக்கும் பெயரால் ஊர்ப்பெயர் அமைந்திருந்த நிலையில், அதைச் சொன்னால் தனக்கு எதிர்மறை விளைவு ஏற்படும் என்றஞ்சி அப்பெயரைத் தவிர்த்திருக்கிறார்