சிறிய கட்சிகள்: கூட்டணி என்னும் நிர்ப்பந்தம்
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்கவிருக்கின்றன. தமிழ்நாட்டில் 1967க்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் மாநிலக் கட்சிகளே செல்வாக்குச் செலுத்திவருகின்றன. தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகள் அளிக்கும் கூட்டணி வாய்ப்புக் கேற்பவே இயங்க வேண்டிய நிலையில் இங்கிருக்கின்றன. தேசியக் கட்சிகள் முதல் மாநில அளவில் பல்வேறு தரப்புகளைப் பிரதிபலிக்கும் கட்சிகள்வரை கூட்டணியில் இடம்பிடிக்கப் போராடிவருகின்றன.
செல்வாக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேசியக் கட்சிகள் தாங்கள் அமைக்கும் ஒன்றிய அரசில் மாநிலக் கட்சிகளுக்கு இடமளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதால் கூட்டணிக் கணக்குகளில் மதிப்பான தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்டுவருகின்றன. இக்கணக்குகளில் மாநில அளவில் செயல்படும் சிறிய கட்சிகளின் இடம் என்ன என்பதை அலசிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
1990களுக்குப் பிறகு தேர்தல்கள் பெரிதும் மாறியிருக்கின்றன. பெரும் செலவு பிடிக்கும் செயல்முறையாகத் தேர்தல் ஆகியிருக்கிறது. தேர்தல் வெற்றி தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் பணம் மையமான பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது சட்டத்திற்குள் வராத சட்டமாகிவிட்டது. அபரிமிதமாகப் பணம் செலவிடாமல் தேர்தல் பணிகள் அங்குலம்கூட நகர முடிவதில்லை என்பதே கள யதார்த்தம். இதற்கான வாய்ப்பைப் பெற்றிராத கட்சிகள் கூட்டணித் தலைமையையோ ஆட்சித் தலைமையையோ வகிக்க முடிவதில்லை.
இதனாலேயே சமூக, பொருளியல் அதிகாரம் கொண்ட குழுக்களைப் பிரதிபலிக்கும் கட்சிகளும், ஆண்ட வாய்ப்பைப் பெற்ற கட்சிகளும்தான் இங்கு பெரிய கட்சிகளாக இருக்க முடிகிறது. சிறிய கட்சிகள் என்று குறிப்பிடப்படுபவை அளவில் சிறியவை என்பதால் மட்டுமல்ல; இன்றைய தேர்தலை எதிர்கொள்வதற்கான சமூக அதிகாரமும் பண வலிமையும் இல்லாத காரணத்தாலும்தான் அவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. உதாரணத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனக்கு ஆதரவளிக்கக்கூடிய மக்களை முழுவதும் திரட்டிவிடவில்லை என்றாலும் ஒப்பீட்டளவில் பிற இரண்டாம் நிலைக் கட்சிகளை விடவும் மக்கள் திரட்சியைக் கொண்டிருக்கிற கட்சிதான். ஆனாலும் அது சிறிய கட்சி. எண்ணிக்கைப் பலமே மக்களாட்சியைத் தீர்மானிக்கிறது என்று சொல்லப்பட்டாலும் எண்ணிக்கைப் பலம் என்பதும் இன்று இன்னும் பல ‘வலிமைகளின்’ வழியாகவே அர்த்தம் பெறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல்களின்போது மாநிலத்திலிருக்கும் செல்வாக்கைக் காட்டித் தேசியக் கட்சிகளிடமிருந்து அதிக இடங்களை மாநிலக் கட்சிகள் பெற்றுவிடுகின்றன. ஆனால் அதே மாநிலக் கட்சிகள் மாநிலத் தேர்தலின்போது சிறிய கட்சிகளை நடத்தும் விதம் வேறுபடுகிறது.
கடந்த சில பத்தாண்டுகளில் தேர்தல் முறையில் நடந்திருக்கும் மாற்றங்களில் முக்கியமானது கூட்டணி இயங்கும் விதம். தேர்தலுக்குக் கூட்டணி என்பது மாறி ஐந்தாண்டுக்கு ஒருமுறை வருகிற தேர்தலை மனதில் வைத்து வருடம் முழுவதும் கூட்டணி என்ற நிலை உருவாகிவிட்டது. கூட்டணியில் இடத்தை இழந்துவிடக் கூடாது என்பதாலும் கூட்டணியின் தலைமையில் உள்ள கட்சியின் ஆட்சி அமையும்போது கிடைக்கும் அதிகார நெருக்கம் கருதியும் தேர்தல் காலத்தைத் தாண்டியும் கூட்டணி தொடர்கிறது. சிறிய கட்சிகள் இதை விரும்பிச் செய்கின்றன என்றும் அந்த விருப்பத்திற்கான நிர்ப்பந்தத்தைப் பெரிய கட்சிகள் ஏற்படுத்துகின்றன என்றும் இதைப் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் நிரந்தரக் கூட்டணி என்ற நிலைப்பாட்டால் பாதிக்கப்படுவது சிறிய கட்சிகள்தாம். சமூகத்தின் கவனிக்கப்படாத தரப்புகளையும் அவற்றின் தேவையையும் வலியுறுத்தப் பிறந்தவையாகவே பெரும்பாலும் சிறிய கட்சிகள் இருக்கின்றன. ஜனநாயகத்தில் இத்தகைய குரல்கள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான வழியைச் சிறிய கட்சிகளே ஏற்படுத்தியிருக்கின்றன. தலித்துகள், மதச் சிறுபான்மையினர், எண்ணிக்கைச் சிறுபான்மையினர் போன்ற தரப்பினரைப் பிரதிபலிக்கும் கட்சிகளை இந்த வகையில் குறிப்பிடலாம். கடந்த முப்பதாண்டுகளில் இத்தகைய கட்சிகளின் திரட்சி முக்கியமானதாக மாறியிருக்கிறது. இவர்களுடனான கூட்டணி தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துகொண்ட பெரிய கட்சிகள் அதேவேளையில் அவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் திட்டமிடுகின்றன. அந்தச் சூழ்நிலையில் உரு வானதுதான் எப்போதைக்குமான கூட்டணி என்ற கணக்கு.
தேர்தல் அல்லாத காலங்களில் தாங்கள் பிரதிபலிக்கும் தரப்பினருக்கான பணிகளைச் செய்கிற கட்சிகள், தேர்தல் வருகிறபோது, அதுவரை செய்துவந்த பணிகள், நிலவும் அரசியல் வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணியை முடிவு செய்துகொள்ளும் என்பது பொதுவான கணிப்பு. இதன்படி இக்கட்சிகள் அதுவரை செய்துவந்த போராட்டங்கள், கோரிக்கைகள் போன்றவை தேர்தல் முழக்கங்களிலும் பிரதிபலிக்கும். ஆனால் தேர்தல் அல்லாத காலங்களிலும் கூட்டணி என்னும் நிர்ப்பந்தம் சிறிய கட்சிகளின் இந்தத் தனித்துவத்தை வலுவிழக்கச் செய்கிறது. தேர்தல் அல்லாத காலங்களிலும் கூட்டணித் தலைமையை ஏற்றிருக்கும் பெரிய கட்சிகளின் விருப்பத்திற்கேற்பச் சிறிய கட்சிகள் தங்கள் குரல்களை மாற்றிக்கொள்கின்றன. ஒருகட்டத்தில் சிறிய கட்சிகள் அதற்குப் பழகிவிடுகின்றன. இதனால் அவற்றின் தனித்துவம் பறிபோகிறது. யாருக்குப் பிரதிநிதியாகத் தம்மை இக்கட்சிகள் முன்னிறுத்திக்கொள்கின்றனவோ அவர்களுடைய ஆதரவையும் இதனால் இழக்கின்றன. இந்த இழப்பு கூட்டணியில் அதன் பேர வலிமையைக் குறைக்கிறது.
அதாவது, ஒரு கட்சி தான் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவினருக்காகப் போராடும்போதே வலிமை பெறுகிறது. ஆனால், தேர்தல் இல்லாத காலங்களிலும் ஆளும் கூட்டணியில் இருப்பதால் ஒரு அளவுக்கு மேல் போராட முடியாது, வேண்டிய தீர்வுகளைத் தம் மக்களுக்குப் பெற்றுத்தர முடியாது. இதனால் ஏற்படும் பலவீனம் கூட்டணியில் அதன் நிலையையும் பலவீனப்படுத்தும். கூட்டணியிலிருந்து விலகி நின்று மக்களுக்கான போராட்டங்களில் முனைப்பாக ஈடுபட்டால் கட்சியின் வலிமை உயரும். ஆனால், எந்த ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அதே கட்சியின் தலைமையில் அமையும் கூட்டணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும். இதனால் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறையும்.
கடந்த ஐந்தாண்டுகளில் இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தன. ஆனால் கூட்டணி ஆட்சி அமையவில்லை. கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான ஆட்சி இருந்தது. இடதுசாரிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை. இக்கட்சிகள் ஏற்கெனவே செய்துவந்த போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தன. ஆட்சியாளர்களுக்கு எதிராக இவை போராட வேண்டும் அல்லது கோரிக்கைகள் எழுப்பி நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால் அவை நடந்தனவா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சிறிய கட்சிகள் கூட்டணியிலும் தொடர வேண்டும், தங்கள் பிரச்சினைகளையும் பேசியாக வேண்டும் என்கிற நிலையில் இருந்தனர். இரண்டும் முரண்பட்ட நிலை. இரண்டையும் முரணில்லாத விதத்தில் பேசுவது கடினம்.
இந்த நிலையில் இந்தச் சிறிய கட்சிகள் என்ன செய்தன? இரண்டையும் செய்தன. ஆனால் இரண்டையும் சமமாகச் செய்ய முடியவில்லை. தங்கள் கோரிக்கைகளை எழுப்பினர், போராடினர். ஆனால் அவற்றை அழுத்தம் தரத்தக்கதாக மாற்ற முடியவில்லை அல்லது எழுப்பப்பட்ட கோரிக்கை நிறைவேறும்வரை போராடாமல் பெயரளவில் நின்றுகொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர். வெகுசில தருணங்களில் இவர்கள் எழுப்பியவற்றுள் யாருக்கும் தொந்தரவு தராத, தங்களுக்கும் பெயர் வாங்கித் தரக்கூடிய மென்மையான கோரிக்கைகளை மட்டும் அரசு நிறைவேற்றித் தந்தது. நீண்டகால விளைவைத் தரக்கூடிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையிலும் பெற முடிந்த எளிய பயன்களுக்காக ஆளுங்கட்சியை ஆதரிக்க வேண்டிய நிலையிலேயே சிறிய கட்சிகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் குரூர வன்முறையான வேங்கை வயல் பிரச்சினையில் அரசு கடைசிவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டம் நடத்திய கட்சிகளும் நடத்திய போராட்டங்களின் கணக்கில் அவற்றைக் காட்டியனவே தவிர அப்பிரச்சினையில் அடுத்த கட்ட அழுத்தத்தைத் தர முடியவில்லை. ஆளும் கூட்டணியில் இருப்பதால் அரசுக்கு எதிராகத் தீவிரமாகப் போராட முடியவில்லை. ஆளும் கூட்டணியில் இருந்தும் கோரிக்கைகளுக்கான தீர்வையும் பெற முடியவில்லை. தமிழகத்தில் சாதி வன்முறைகள், ஆணவப் படுகொலைகள் விசயத்திலும் இதுதான் நிலைமை. தேர்தல் பாதை, அதன் வழியான அதிகாரப் பரவலாக்கம் என்கிற எல்லைக்குள்ளிருந்து கட்சிகளிடையே நடத்திருக்கும் இத்தகைய மாற்றங்கள் விவாதிக்கத் தக்கவை. இவை தொடர்ந்து ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றியும் விவாதிக்க வேண்டும். இவை கடந்த சில பத்தாண்டுகளில் தேர்தல் சார்ந்து நடந்திருக்கும் மாற்றங்களோடு தொடர்புடையவை.
மாநில சுயாட்சி, கூட்டாட்சி, கூட்டணி ஆட்சி போன்றவை பற்றிய குரல்கள் வலுவாக எழும் காலம் இது. இவை குறித்த விவாதங்களும் நடக்கின்றன. பெரிய கட்சிகளின் நிழலில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் கூட்டணிக் கட்சிகளின் சங்கடங்களைப் பற்றியும் விவாதிக்க வேண்டும். கூட்டணியில் நிரந்தர உறுப்பினராக இருந்தாலும் அதிகாரத்தில் பங்கு இல்லை என்னும் நிலையில் உள்ள சிறிய கட்சிகள் எப்போது தமக்கான அதிகாரத்தைப் பெறும் என்னும் கேள்வியையும் சேர்த்து விவாதிக்க வேண்டும்.
