எல்லை விரிந்த தமிழ் உள்ளம்
தெ.ஞா. ‘வைணவ உரைவளம்’ குறித்த ஆய்வறிஞராக அறியப்பட்டபோதிலும், சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம் முதலான தமிழிலக்கியப் பரப்பு முழுதும் நடந்து பழகியவர். அந்தந்த நூல்களின் ஆழ்ந்தகன்ற நுட்பத்தை அறிந்து கேட்போர் மனம்கொள்ள எடுத்துரைக்கும் ஆற்றல் அவரிடம் பொதிந்திருந்தது. அவரது நூலான ‘குறுந்தொகைத் தெளிவு’ அவரின் சங்கநூல் பயிற்சிக்குச் சான்று. தினமணியில் அவர் தொடர்ந்து எழுதிய ‘சொல்தேடல்’ பகுதி, இன்றைய இணைய வாசகர்களுக்கு அவர் உருவாக்கிக் கொடுத்த பல்துறைச் சொற்களின் களஞ்சியம் எனலாம்.
கம்பன் பிறந்த தேரழுந்தூரை அடுத்துள்ள குழையூரில் பிறந்து குடந்தைக் கல்லூரியில் பொருளியல் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் டாக்டர் மு. வரதராசனாரிடம் தமிழ் முதுகலை பயின்றவர். பின்னாளில் தாம் பயின்ற அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து, அதன் பொறுப்பு முதல்வராகவும் பதவி வகித்தவர். நீதிபதி மு.மு. இஸ்மாயில், மூத்த தமிழறிஞர்களான அ.ச. ஞானசம்பந்தன், கி.வா.ஜ. முதலானவர் களிடம் நெருங்கிப் பழகி அவர்களின் அன்பு
