மார்ச் 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மார்ச் 2026
    • கட்டுரை
      சென்னைப் புத்தகக் காட்சி பொன்விழாவை நோக்கிய பயணம்
      வரலாற்றியல் கண்ணோட்டத்தில் யாழ்ப்பாணத்தின் சாதியியல்
      ஒரே நாடு, ஒரே மொழிக்குடும்பம்: பரப்புரையும் யதார்த்தமும்
      நாங்களே எமது மீட்பர்கள் காலனியத் தமிழகத்தில் தலித் கல்வி இயக்கம்
    • கதை
      ‘உ வினு எ- ஃபாத்து!’
      மன்னிப்புக் கேட்பவர்
    • அனுபவம்
      யாருமற்றவள்
    • அஞ்சலி: எஸ்.எஸ். ராஜகோபாலன் (1931&2026)
      மாந்தருக்குள் ஒரு பாடநூல்
    • சச்சிதானந்தன் சுகிர்தராஜா
      கோப்புகள், கோமகன்கள், கோதைகள்: சக்தி, செல்வம், சாசனம்
    • அஞ்சலி: தமிழறிஞர் தெ. ஞானசுந்தரம் (1941 &2026)
      எல்லை விரிந்த தமிழ் உள்ளம்
    • எப்ஸ்டீன் ஆவணங்கள்
      சோம்ஸ்கியின் அறமும் எப்ஸ்டீனுடனான அவரது நட்பும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கற்றனைத்தூறும்- 15
      தண்டனை: அன்பின் அடையாளமா?
    • மதிப்புரை
      குடும்பம் - வேலை - கருணை
    • தலையங்கம்-2
      பகடைக்காயாக்கப்படும் பெண்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
      வே.நி. சூர்யா கவிதைகள்
    • தலையங்கம்
      சிறிய கட்சிகள்: கூட்டணி என்னும் நிர்ப்பந்தம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2026 அஞ்சலி: எஸ்.எஸ். ராஜகோபாலன் (1931&2026) மாந்தருக்குள் ஒரு பாடநூல்

மாந்தருக்குள் ஒரு பாடநூல்

அஞ்சலி: எஸ்.எஸ். ராஜகோபாலன் (1931&2026)
சு. உமா மகேஸ்வரி

2007-2008 கல்வியாண்டு. அப்போது நான் பெருந்துறையில் ஆசிரியராகப் பணி செய்துகொண்டிருந்த நாட்கள்.

ஈரோடு சம்பத் நகர் பகுதியில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் நடைபெற இருந்த சமச்சீர் கல்விக்கான சந்திப்பு பற்றி அறிந்தேன். பள்ளி முடிந்து மாலை 5.30 மணியளவில் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றேன். அங்கு என்னைத் தவிர மூன்று பேர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களுடன் 75 வயது மதிக்கத்தக்கப் பெரியவர் ஒருவர். மிக உயரமாக ஒல்லியான தேகத்துடன் அமர்ந்திருந்தார். பேரா. அ. மணி, அந்த வயதான மனிதரை அறிமுகப்படுத்தினார். ‘இவர் டாக்டர் எஸ்.எஸ்.ஆர்., சமச்சீர் கல்வியைக் கொண்டு வரத் தமிழக அரசு முத்துக்குமரன் குழு என்ற ஒன்பது நபர்கள் அடங்கிய குழு அமைத்துள்ளது. இவரும் குழுவின் உறுப்பினர். நம்மோடு கல்வி குறித்து உரையாட வந்துள்ளார்’ என்று கூற, ஆரம்பமானது அன்றைய சந்திப்பு. அதுதான் எஸ்.எஸ்.ராஜகோபாலன் என்ற மிகச்சிறந்த மனிதரை முதன்முதலில் அறிந்துகொண்ட சந்தர்ப்பம். பின்னாட்களில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கொஞ்சமும் எண்ணியதில்லை.

நான் சென்னைக்கு வந்த பிறகு, 2017இல் முனைவர் வசந்தி தேவி தலைமையில் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவானது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புப் பணிசெய்ய என்னைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதை ஏற்று இயக்கத்தில் ஈடுபட்டேன்.

அப்போது டாக்டர் எஸ்.எஸ்.ஆர். அந்த அமைப்பின் ஆலோசகராகப் பொறுப்பு வகித்தார். எஸ்.எஸ்.ஆருடன், இணைந்து பணியாற்றும் வாய்ப்பு, பத்தாண்டுக் காலம் கழித்து அமைந்ததை எண்ணியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஈராண்டுகள் மட்டுமே அந்த இயக்கத்தில் செயல்பட்டேன். ஆனாலும் எஸ்.எஸ். ஆருடனான தொடர்பு அவர் வாழ்நாளின் இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.

இயக்கத்தில் ஈடுபட்ட காலத்தில், எஸ். எஸ். ஆரும் அவரது துணைவியாரும் வசித்துவந்த சாலிக்கிராம வீட்டிற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். எப்போதும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி எதையாவது படித்துக்கொண்டிருப்பார். அது ஆங்கில இதழாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்தும் இதழ்களைத் தருவித்து வைத்திருப்பார். பெரும்பாலும் அவை கல்வி, அறிவியல் சார்ந்த இதழ்களாகவே இருக்கும். அம்மா சீதா, வீட்டை மிகத் தூய்மையாக வைத்திருப்பார். வயதானாலும் அந்தச் சுவடே தெரியாமல் சுறுசுறுப்பாக இயங்குவார். அட்டவணை போட்டதுபோல, சரியான நேரத்தைக் கடைப்பிடிப்பர் இருவரும். விடியற்காலை நான்கு மணிக்கு முன்பே எழுந்துவிடுவேன் என்பார் எஸ்.எஸ்.ஆர். விடியற்காலை நாம் எழுந்தால் அதற்கு முன்பாகவே அவரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருக்கும்.

அவர் படித்த ஆங்கிலக் கட்டுரைகள், பள்ளிக்கல்வியுடன் தொடர்புடையவை என  ‘உங்களுக்குப் பயனுடையதாக இருக்கும்’ என்ற ஒரு வரியைச் சேர்த்து அனுப்புவார்.

முகநூலில் நான் அன்றாடம் கல்வி குறித்து எழுதிவந்த நாட்கள் அவை. தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் பல ஆயிரம் ஆசிரியர்களை இணைத்து ‘அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (A3)’ என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். அதில் இணைந்துள்ள ஆசிரியர்களுக்கு மிகச்சிறந்த கல்வியாளரான எஸ்.எஸ்.ஆரைஅறிமுகப்படுத்த விரும்பினேன்.

ஆகவே ஒரு சந்திப்பின்போது அவரது கல்விப் பயணம் குறித்துச் சில கேள்விகளை முன்வைத்தேன். அவரும் ஏராளமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். “பாரேன் நீ. . . அந்த காலக் கதையெல்லாம் கேட்கக் கேட்க இவருக்கு எவ்வளோ சந்தோஷம்” என்றார் சீதாம்மா.

அவரது பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து பேசும்போது கல்வி எப்படி இருக்க வேண்டும்? வகுப்பறையை ஆசிரியர் எவ்வாறு கையாள வேண்டும்? ஆசிரியர் அறத்துடனும் நேர்மையுடன் எவ்வாறு செயல்பட வேண்டும், அதிகாரிகளுக்குப் பயப்பட்டு அவர்கள் செய்யும் தவறுக்குத் துணை போகக் கூடாது எனப் பலவற்றையும் தமது அனுபவத்திலிருந்து பகிர்ந்துகொண்டார்.

தனது 19 வயதில், ஆசிரியராகப் பணியேற்று, ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, குறைந்த வயதில் (25 வயது) உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். தனது மாணவர்களுடன் சேர்ந்து கிராமங்களில் மண் சாலைகள் அமைப்பது, வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவது, கழிப்பறைகள் கட்டுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பசுஞ்சோலைகள் அமைப்பது எனப் பள்ளி வளாகத்தில் மிக அருமையான ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பள்ளி வளாகம் தவிர்த்து மருத்துவ அமைப்புகளில் 20 ஆண்டுகள் மக்களுக்காகப் பணியாற்றியுமிருக்கிறார். கல்வித் தளத்திலும் இவரது பணிகள் கணக்கற்றவை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் கழகப் பள்ளியில்தான் 1950இல் பணியேற்றிருக்கிறார். அதன் பிறகு 16 ஆண்டுகள் இவருடைய பணி இன்றைய திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களான பெருந்துறை, பல்லடம், பவானி, அவினாசி ஆகிய இடங்களில் மிகச்சிறப்பாக விரிந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் மொழிப் போராட்டத்தில் இவரும் இவரது மாணவர்களும் கலந்துகொண்டிருந்ததை அத்தனை ஆர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.

பவானியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோது கல்வி அதிகாரி ஒருவர் பள்ளிக்கு வந்தபோது வளாகத்தில் நின்று சிகரெட் புகைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கண்டித்துள்ளார். அதனால் அவர் சிகரெட் துண்டைக் கீழே போட்டுவிட, ‘வாட்ச் மேன் இருக்கிறார் , ஆனாலும் இங்கு யாரும் அதை எடுக்க மாட்டோம், நீங்களே எடுத்து தூரப் போடுங்கள்’ என்று கூறிவிட்டு, தான் பாடம் நடத்த வேண்டும் என்று வகுப்புக்குச் சென்றுவிட்டாராம். அதிகாரிகள் என்றாலும் தைரியமாக உண்மைக்காக நின்றிருக்கிறார்.

சுயமரியாதை நிரம்பியவர், அதற்கு உதாரணம், ஒரு முறை அதிகாரி ஒருவரை டிபிஐ வளாகத்தில் சந்திக்கச் சென்றபோது, எதிரே இருந்த நாற்காலியில் இவரே அமர்ந்துகொள்கிறார். அதற்கு அந்த அதிகாரி ‘நான் உங்களை உட்காரச் சொல்லவில்லையே’ எனக் கேட்க, ‘உட்கார்ந்துகொள்வது எனது உரிமை’ என்று கூறி எழுந்து கொள்ள மறுத்துவிட்டாராம். அரசு அதிகாரிகளிடம் சரியான மரியாதை கிடையாது என்று அரசுப் பணியையே துறந்தார். அதன் பிறகு கோவை சர்வஜனா அரசு உதவிபெறும் பள்ளி இவரது அருமையை உணர்ந்து, பள்ளி முதல்வராகப் பணியாற்ற அழைத்தபோது, அங்கு தலைமை ஆசிரியராக 23 ஆண்டுகள் பணி செய்துள்ளார்.

ஒருமுறை பள்ளி துவங்கும் ஜூன் மாத முதல் தேதியில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்க, அதே கிராமத்தில் ஆசிரியர் பணிக்குப் படித்துத் தனது நிலத்தில் விவசாயம்செய்து வந்த ஒருவரை அணுகிப் பள்ளி ஆசிரியராக வரக் கூறியிருக்கிறார். அதற்கு அவர், ஆசிரியர் தொழிலில் 100 ரூபாய்தான் சம்பளம் வரும், எனது நிலத்தில் ஆயிரக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று கூற, ‘அது உங்கள் தனிப்பட்ட வருமானம். பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்தால் அது சமூகப் பணி’ என்று எடுத்துக் கூற, இறுதியில் அவர் பள்ளியில் ஆசிரியராகச் சேரச் சம்மதித்திருக்கிறார். மாணவர்கள் கல்வி பெற வேண்டுமெனில் ஆசிரியர் இல்லாமல் காலியான வகுப்பறைகள் இருக்கக் கூடாது எனக் கூறி, உடனே அவருக்கு வேலைக்குச் சேரக் கையொப்பமிட்ட ஆணை பிறப்பித்துள்ளார் எஸ். எஸ்.ஆர். ஒரு தலைமை ஆசிரியராக அது எனது கடமை என்கிறார். இன்று ஒரு ஆசிரியர் நியமனம் என்றால் தகுதித் தேர்வு எழுதினாலும், அரசு நியமனம் செய்யப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக எத்தனையோ வகுப்பறைகள் காலியாகவே உள்ளன.

பிரம்மாண்ட கட்டடம் நல்ல கல்விக்கு அடையாளமாகாது. வகுப்பறைதான் கல்வித் தரத்தை எடுத்து இயம்பும். அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்பது தனியார் நிர்வாகிகளால் பரப்பப்படும் பொய்யுரை என்கிறார் எஸ்.எஸ்.ஆர்.

அவரைப் பார்க்கும்போதெல்லாம்  ‘நீங்கள் படித்து முடித்த புத்தகத்தைத் தாங்கப்பா’ என்று கேட்பேன். அதற்கு இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

“எனக்கு புத்தகம் வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் படிக்கப் புத்தகங்கள் கேட்பீர்கள். நான் கொடுத்ததில்லை. என்னிடம் உள்ள புத்தகங்கள் உங்களுக்கு உகந்தவையாக இருக்காது. என்னுடைய வாசிப்பு முற்றிலும் மாறுபட்டது. பொழுதுபோக்கு நூல்கள் ஏதும் கிடையாது. அறிவியல், கணிதம் பற்றிய நூல்களை விரும்பிப் படிப்பேன். கதைகள், நாவல்கள் படிப்பதை நிறுத்திப் பல ஆண்டுகளாகிவிட்டன. இதழ்களில் வரும் சிறுகதைகளைக்கூடப் படிக்க மாட்டேன். தனி நபரிடம் இருப்பதைவிடப் பொது நூலகத்தில் இருந்தால் பலரும் படிக்கலாம் என்பதால் நூலகங்களுக்குக் கொடுத்துவிடுவேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற இயலாமைக்கு மன்னிப்பு வேண்டுகின்றேன்.” அவருக்கு என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. எப்பேர்ப்பட்ட மனிதர் அவர். ஆனால் ஒருமுறை வீட்டிற்குப் போனபோது ‘உஷ்ணராசி’ என்ற புத்தகத்தைக் கொடுத்து, “இதை நீ படி, வச்சுக்கோ” என்றார்.

தனது பணியைத் தொடங்கிய காலத்திலிருந்தே ஆசிரியர் இயக்கத்தில் பங்கேற்று, தலைமை ஆசிரியர்களைப் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். ஏ. எல். முதலியார் குழு, கோத்தாரிக் கல்விக் குழு ஆகியவற்றில் கலந்துகொண்டு தனது கல்விசார் சிந்தனைகளை முன்வைத்த அனுபவங்களைப் பெற்றவர். தமிழ்நாடு முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய மூவரும் கல்விப் பிரச்சினைகளை ஆலோசிக்க இவரை அழைத்துப் பேசுவார்கள் என்று சில நிகழ்வுகளைக் கூறி என்னிடம் பிரமிப்பை ஏற்படுத்துவார். அந்த அளவிற்கு அவர்களுடன் பழகும் வாய்ப்பு இவரது பணியின் நேர்மைக்குக் கிடைத்திருக்கிறது. இன்றைய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், பதவி ஏற்றதும் இவர் வீட்டுக்குச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கக் கேட்டதற்கு, “நான் ரொம்ப பழைய ஆள், நிறைய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது பணியில் இருப்பவர்களைப் பயன்படுத்துங்கள் என்று கூறிவிட்டேன்” என உரையாடலின் போது குறிப்பிட்டார்.

இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நிறைய நாடுகளுக்குக் கல்விப் பயணம் சென்று வந்துள்ளார். “அந்த நாட்களில் அரசாங்கமே என்னை அனுப்பிவைத்தது” என்றார்.

இருவருமே மிக எளிய ஆனால் உயர்ந்த மனிதர்கள். அம்மாவின் இறப்பு 27/09/2024 அன்று நிகழ்ந்தது. இரண்டு நாட்கள் கழித்துத்தான் எஸ்.எஸ்.ஆரைச் சந்திக்கச் சென்றேன். வெகு நேரம் பேசினார். தனது உடன்பிறப்புகள், அவரது அப்பா குறித்தும், சீதா அம்மாவை எப்படித்தான் திருமணம் செய்து கொண்டார் என நீண்ட நேரம் பேசினார். அப்போது அவரது குரலைப் பதிவுசெய்து கொண்டேன். அதுதான் அவர் என்னோடு இயல்பாகப் பேசிய கடைசி உரையாடல். அதன் பிறகு சந்திப்புகளில் அம்மாவை இழந்த மனநிலை அவரைப் பலவிதங்களில் பாதித்ததை மட்டுமே அறிய முடிந்தது.

69 ஆண்டுக் காலம் உடன் வாழ்ந்த சீதாம்மாவின் இழப்பு அவரை நிலைகுலையச் செய்துவிட்டது. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அம்மாவின் இழப்பைத் தொடர்ந்து, நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். அப்போது இரண்டு முறை அவரைச் சென்று பார்த்துப் பேசி வந்தேன். தனது உணவையும் எழுத்துச் செயல்பாடுகளையும் குறைத்துக்கொண்டார்.அங்கிருந்து சில மாதங்களுக்கு முன்பு கோடம்பாக்கம் ஜே வி மருத்துவமனையில் தங்கி அங்கேயே இல்லத்தில் இருப்பதுபோல் இருந்துள்ளார். 95ஆம் வயதில், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி இரவு 11.54 க்குத் தனது இன்னுயிரை நீத்தார். பிப்ரவரி மாதம்தான் அவரது பிறந்த நாளும்கூட.

இருவருமே தங்களுக்கு என்று எந்தச் சொத்துகளையும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஓய்வூதியத்தில் அடிப்படைச் செலவுகள் போக மீதி எல்லாவற்றையும் தேவைப்படும் மனிதர்களுக்கு, மாணவர்கள் படிப்புக்கு எனச் சேவையாற்றி வந்தனர். இறுதியில் இருவரின் உடல்களையும்கூட சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மாணவர்கள் பயன் பெறக் கொடையாக அளித்த பேராளுமைகள்.

உயிர் பிரிந்தது எனக் கேட்டவுடனேயே அவரது உடலைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் புறப்பட்டுச் சென்றுவிட்டேன். உடலை மருத்துவமனையில் ஒப்படைக்கும்போது அருகில் இருந்தேன். நாடே போற்ற வேண்டிய ஓர் ஆன்மா தனியாக ஆம்புலன்ஸில் இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்பா என்று அழைத்ததனாலோ என்னவோ அவரது உடலை இறக்கி அருகிலேயே அமர்ந்திருந்தேன். அவரது வாழ்க்கை எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல இந்தச் சமூகத்துக்கும் ஒரு பாடம்.

           மின்னஞ்சல்: uma2015scert@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.