மார்ச் 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஆகஸ்ட் 2026
    • கட்டுரை
      சென்னைப் புத்தகக் காட்சி பொன்விழாவை நோக்கிய பயணம்
      வரலாற்றியல் கண்ணோட்டத்தில் யாழ்ப்பாணத்தின் சாதியியல்
      ஒரே நாடு, ஒரே மொழிக்குடும்பம்: பரப்புரையும் யதார்த்தமும்
      நாங்களே எமது மீட்பர்கள் காலனியத் தமிழகத்தில் தலித் கல்வி இயக்கம்
    • கதை
      ‘உ வினு எ- ஃபாத்து!’
      மன்னிப்புக் கேட்பவர்
    • அனுபவம்
      யாருமற்றவள்
    • அஞ்சலி: எஸ்.எஸ். ராஜகோபாலன் (1931&2026)
      மாந்தருக்குள் ஒரு பாடநூல்
    • சச்சிதானந்தன் சுகிர்தராஜா
      கோப்புகள், கோமகன்கள், கோதைகள்: சக்தி, செல்வம், சாசனம்
    • அஞ்சலி: தமிழறிஞர் தெ. ஞானசுந்தரம் (1941 &2026)
      எல்லை விரிந்த தமிழ் உள்ளம்
    • எப்ஸ்டீன் ஆவணங்கள்
      சோம்ஸ்கியின் அறமும் எப்ஸ்டீனுடனான அவரது நட்பும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கற்றனைத்தூறும்- 15
      தண்டனை: அன்பின் அடையாளமா?
    • மதிப்புரை
      குடும்பம் - வேலை - கருணை
    • தலையங்கம்-2
      பகடைக்காயாக்கப்படும் பெண்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
      வே.நி. சூர்யா கவிதைகள்
    • தலையங்கம்
      சிறிய கட்சிகள்: கூட்டணி என்னும் நிர்ப்பந்தம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2026 கட்டுரை சென்னைப் புத்தகக் காட்சி பொன்விழாவை நோக்கிய பயணம்

சென்னைப் புத்தகக் காட்சி பொன்விழாவை நோக்கிய பயணம்

கட்டுரை
செந்தூரன் ஈஸ்வரநாதன்

ஆரவாரம், கொண்டாட்டம், அறிவுத்தேடல் கொண்ட மக்கள் திரள், எழுத்தாளர்களின் சந்திப்பு, மகிழ்ச்சியோடு சேர்ந்து எழும் புழுதி என ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நிகழும் புத்தகத் திருவிழா வெறும் வணிகமல்ல; பண்பாட்டு நிகழ்வு. அடுத்த ஆண்டு பொன்விழாவைத் தொடவிருக்கும் இந்த அறிவுத் திருவிழாவைப் பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் வாசகர்களும் மனமுவந்து கொண்டாடினாலும் இந்த நிகழ்வைப் பற்றிய மனக்குறைகளும் கொண்டாட்டத்திற்கு இடையில் பொங்கி வருகின்றன. உள்கட்டமைப்புப் போதாமைகள், நவீன மாற்றங்களுக்கு முகம் கொடுக்கத் தயங்கும் நிர்வாகம் எனப் பல விதமான விமர்சனங்களும் எழுகின்றன. வெற்றிகரமாக 49 ஆண்டுகளை முடித்திருக்கும் இந்தப் பண்பாட்டு-வணிக நிகழ்வின் தரம் குறித்த விவாதங்கள் தீவிரம் பெற்றுள்ளன.

வாசகர் திரள் எனும் வலிமை

சென்னைப் புத்தகக் கண்காட்சியின் அசைக்க முடியாத பெருமை, ஆண்டுதோறும் திரளும் வாசகர் கூட்டம்தான். டிஜிட்டல் திரைகள் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்திலும், காகித வாசனையைத் தேடி லட்சக்கணக்கான மக்கள் நந்தனம் மைதானத்தில் திரள்வது சமூகவியல் அதிசயம். தாத்தா-பாட்டி முதல் பேரக்குழந்தைகள் வரை குடும்பம் குடும்பமாகத் திரண்டு புத்தகச் சந்தைக்கு வருவது சென்னைக்கே உரிய தனிச்சிறப்பு. இந்த மக்கள் திரள்தான் சென்னை புத்தகக் காட்சியை வெற்றிகரமான சந்தையாகவும் கொண்டாட்டத்திற்குரிய பண்பாட்டு நிகழ்வாகவும் மாற்றியிருக்கிறது. “இந்த வாசகர் கூட்டம்தான் புத்தகத் துறையின் முதுகெலும்பு. வாசகர்களின் இந்த ஆர்வமே பதிப்பாளர்களைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது” என்கிறார் சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தி.

சென்னைவாசிகள் மட்டுமல்லாது தமிழகத்தின் மூலை முடுக்குகளி லிருந்தெல்லாம் வாசகர்கள் திரண்டு வருவது சென்னை புத்தகக் காட்சியின் முக்கியத்துவத்தையும் தமிழகத்தின் வாசிப்பு கலாச்சாரம் எவ்வளவு ஆழமானது என்பதையும் காட்டுகிறது. இந்தக் கூட்டமே புத்தகக் கண்காட்சியின் பொருளாதார வெற்றியைத் தீர்மானிக்கிறது. “ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் மேலான வாசகர்கள் வருகை தருவதால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் சில வாரங்களிலேயே விற்பனையாகின்றன. ஆண்டு முழுவதும் கடைகளில் விற்காத புத்தகங்கள்கூட இந்த வாசகர் திரளினால் கண்காட்சியில் கவனம் பெறுகின்றன” என்று ஏரீஸ் சங்கரும் ஹெர் ஸ்டோரிஸ் நிவேதிதா லூயிஸும் சுட்டிக் காட்டுகிறார்கள். சிறிய, மாற்றுப் பதிப்பகங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள இந்த வாசகர் கூட்டமே பெரும் பலமாக இருக்கிறது. இதுவே பதிப்பாளர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஈட்டும் வருவாய், பல பதிப்பகங்களின் ஓராண்டுக் கால இயக்கத்திற்கும் ஆதாரமாக அமைகிறது. அவ்வகையில் இது பதிப்புத்துறையின் வாழ்வாதாரமாகவும் இருகிறது.

இந்த மக்கள் திரள் வெறும் எண்ணிக்கையல்ல; இது கடந்த அரை நூற்றாண்டில் தமிழக அறிவுச் சூழலில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. தீவிர அரசியல், பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலை மக்களின் குரல்கள் இன்று வெகுமக்களைச் சென்றடைந்திருப்பதற்குப் புத்தகக் கண்காட்சி ஒரு முக்கியக் களம். ஒரு காலத்தில் மேட்டுக்குடி வசமாக இருந்த வாசிப்பு, இன்று அடித்தட்டு மக்களுக்கான ஜனநாயக உரிமையாக மாறியிருப்பது இந்தக் கண்காட்சியின் மிகப்பெரிய வரலாற்று விளைவு. இந்த அறிவுசார் பரிணாமம், சமூக நீதிக்கான உரையாடல்களைத் தமிழ் இலக்கியப் பரப்பில் வலுப்படுத்தியுள்ளது.

வாசகர்களின் வரவேற்பே பபாசி நிர்வாகத்தின் போதாமைகளை மறைக்கும் கேடயமாகவும் மாறிவிடுகிறதோ என்ற அச்சமும் எழுகிறது. மக்கள் எப்படியும் வருவார்கள் என்ற துணிச்சலில்தான் அடிப்படை வசதிகளில் நிர்வாகம் மெத்தனமாக இருக்கிறது என்ற விமர்சனத்தைச் சால்ட் பதிப்பகத்தின் உரிமையாளர் நரனும் எதிர் பதிப்பகத்தின் உரிமையாளர் அனுஷும் முன்வைக்கிறார்கள். மக்கள் திரள் அதிகமாக இருக்கும்போது, கூட்டத்தை முறைப்படுத்துவதிலும், வாசகர்களுக்கு நெருக்கடி இல்லாத சூழலை ஏற்படுத்துவதிலும் நிர்வாகம் இன்னும் பின்தங்கியே இருக்கிறது என்று இவர்கள் சொல்கிறார்கள்.

இங்கே கூடும் மக்கள் திரளை வெறும் விற்பனைக்கான இலக்காக மட்டும் பார்க்காமல், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்குவதே அவர்களை மதிப்பதாக இருக்கும் என்ற கருத்தைப் பல பதிப்பாளர்களும் எதிரொலிக்கிறார்கள்.

உள்கட்டமைப்பு வசதிகள்

சென்னைப் புத்தகக் காட்சியின் பிரம்மாண்டம் என்பது அதன் நுழைவாயில்களிலும், அங்கு விற்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான புத்தகங்களிலும் மட்டுமே பிரதிபலிக்கிறது. ஆனால், அடிப்படை வசதிகள் மிகவும் பலவீனமாகவே உள்ளன. சுத்தமான கழிவறைகள், சுத்தமான குடிநீர், வாசகர்கள் தாங்கள் விரும்பும் பதிப்பகத்தை எளிதாகக் கண்டுபிடித்துக்கொள்ள வழிவகுக்கும் வடிவமைப்பு, நெடுநேரம் நடந்து களைத்தவர்கள் ஓய்வெடுப்பதற்குத் தேவையான வசதி, தேவையற்ற இரைச்சல்களும் கவனச் சிதறல்களுமற்ற சூழல், தடுமாறாமல் நடப்பதற்கேற்ற தரை, மழை, வெயில் தூசி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் கட்டுமானம், நெரிசலைத் தவிர்க்கும் அளவுக்கு அகலமான பாதைகள் என்று உள்கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகள் நீள்கின்றன. 

பெண்களும் குயர் சமூக மக்களும்

கழிவறைகளின் கட்டமைப்பு, பராமரிப்பு, கழிவறைகளுக்குச் செல்லும் பாதையின் தரம் ஆகியவற்றைப் பற்றிப் பல ஆண்டுகளாகப் பலரும் பேசிவருகிறார்கள். இந்த ஆண்டு கழிவறை வசதிகளில் முன்னேற்றம் இருந்தாலும் சுத்தமான கழிவறைகள் இன்றும் கனவாகவே இருக்கிறது. குறிப்பாகப் பெண்களின் பால்புதுமையின மக்களுக்கான கழிவறைகள் மேம்பட வேண்டும். பரந்து விரிந்திருக்கும் கண்காட்சி வளாகத்தின் ஒரு பகுதியில் மட்டும் கழிவறைகளை அமைத்துள்ளார்கள். ஏற்கெனவே நடந்து களைத்திருக்கும் வாசகர் கழிவறைக்குச் செல்வதற்காகவும் நெடுந்தூரம் நடக்க வேண்டியிருக்கிறது.

கழிவறை தொடர்பாகப் பெண்களின் கஷ்டங்களுக்குக் கூடுதல் கவனம் அளிக்க வேண்டும். புத்தகக் கண்காட்சிக்கு வரும் ஒரு வாசகி குறைந்தது 3 முதல் 4 மணிநேரம் அங்கே செலவிடுகிறார்.  பதிப்பாளர்களோ நாள் முழுவதும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல். இந்நிலையில் ஒவ்வொருவரும் கழிவறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால், அதற்கேற்ற எண்ணிக்கையில் கழிவறைகள் இல்லை. கழிப்பறைகளும் போதிய அளவு தூய்மையாகப் பராமரிக்கப்படவில்லை. “தூய்மையான கழிப்பறை என்பது சொகுசு வசதி அல்ல; அது அடிப்படை மனித உரிமை. புத்தகக் கண்காட்சியில் வாசகிகளை அதிக நேரம் செலவிட ஊக்குவிக்க வேண்டுமானால், அவர்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான கழிப்பறைகளை உறுதி செய்ய வேண்டும்” என்கிறார் நிவேதிதா லூயிஸ்.

திருநங்கை பதிப்பகத்தைச் சேர்ந்த கிரேஸ் பானு எழுப்பும் கேள்வி மிக முக்கியமானது. “பெயரளவுக்குப் பன்முகத்தன்மை பேசும் நாம், திருநங்கைகளுக்கென ஒரு பிரத்தியேகக் கழிப்பறையைக்கூட உருவாக்கவில்லை. இதுபோன்ற பொது நிகழ்வுகளில் எங்களைப் போன்றவர்களை இன்னும் எவ்வளவு காலம் கண்ணுக்குத் தெரியாத மனிதர்களாகவே வைத்திருக்கப்போகிறீர்கள்” என அவர் நிர்வாகத்தைச் சாடுகிறார். விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டியதும் அவர் எதிர்பார்ப்பு.

வசதிகளும் வாக்குறுதிகளும்

சுத்தமான குடிநீர், அமர்வதற்கான வசதிகள், வாசகர்களுக்கு அதிகச் சிரமம் தராத வாகன நிறுத்தம் போன்றவை ஒவ்வொரு முறையும் திட்டமிடல் அறிக்கையில் இடம்பெறுகின்றன. ஆனால் நடைமுறையில் இவை கண்துடைப்பாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, குடிநீர் வசதி கண்காட்சியில் இருக்கிறது. ஆனால் தாகத்தில் தவிப்பவர் அதைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. பதிப்பகப் பணியாளர்கள் உண்ணும் இடத்துக்கு அருகே வாகன நிறுத்தத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தைச் சுற்றிலும் மலக்காடாக இருக்கிறது.  

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எழும் புழுதி, புத்தகங்களின் ஆயுளைக் குறைப்பது மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பல உடல்நல உபாதைகளை ஏற்படுத்துகிறது. ஏரீஸ் பதிப்பக சங்கரும் புகழேந்தியும் குறிப்பிடுவதுபோல, “மைதானம் முழுவதும் கார்பெட் விரிப்பது போன்ற தற்காலிகத் தீர்வுகள் போதாது; மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு நிரந்தரமான உள்கட்டமைப்பு குறித்துச் சிந்திக்க வேண்டிய நேரம் இது.” புழுதியும் புகையும் விடுதலை அளிக்கும் நிரந்தர உள்கட்டமைப்பு பொன்விழா ஆண்டிலாவது நிறைவேறுமா என்பது வாசகர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்களின் எதிர்பார்ப்பு.

கண்காட்சியைச் சுற்றிவரும் வாசகர்கள் மேடு பள்ளம் நிரம்பிய தரையில்தான் நடக்க வேண்டியிருக்கிறது. இது குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரைக் கடுமையாகப் பாதிக்கிறது. புத்தக அரங்குகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தபோது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஒரு மாற்றுத்திறனாளி. அவரது இரு கால்களும் முக்கோண வடிவில் மடிந்திருக்க, உடல் சமநிலையைப் பேணுவதே அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஒரு கையில் ஊன்றுகோலைப் பலமாக ஊன்றி, மற்றொரு கையில் தான் ஆசையாய் வாங்கிய புத்தகங்கள் நிறைந்த பையைக் கோர்த்துப் பிடித்தபடி அவர் மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தார். இந்தத் தரையில் விழாமல் நடக்க அவர் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது.

மாற்றுத்திறனாளிகளும் முதியோர்களும் தடையின்றி நடமாடும் வகையில் சாய்வுத்தளங்கள் சக்கர நாற்காலி வசதிகள் இன்னும் சீரான முறையில் அமைக்கப்படவில்லை. மாற்றுத் திறனாளிகள், முதியோரது தேவைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதையே அனைவரையும் உள்ளடக்கும் கட்டமைப்பு என்று சொல்ல முடியும்.

எனினும் இந்த முறை சாதகமான சில மாற்றங்களையும் காண முடிந்தது. கழிவறைகள் குறித்த தொடர்ச்சியான புகார்களுக்குச் செவிசாய்த்துக் கழிவறை வசதிகள் ஓரளவேனும் மேம்படுத்தப்பட்டிருந்தது அதுபோலவே, இம்முறை நுழைவுக் கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பு, வாசகர்கள், பதிப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பத்து ரூபாய் பெரிய தொகையல்ல; ஆனால், கொளுத்தும் வெயிலிலும் புழுதியிலும் நீண்ட வரிசையில் நின்று, பத்து ரூபாய் கொடுத்துச் சீட்டுப் பெற்று உள்ளே நுழைவதற்குள், ஒரு வாசகரின் வாசிப்பு ஆர்வம் பாதியாக வடிந்துவிடுகிறது. இந்த நடைமுறைச் சிக்கலை உணர்ந்து, நுழைவுக் கட்டணத்தை ரத்துசெய்திருப்பது ஆரோக்கியமான முன்னேற்றம். இது வெறும் கட்டண விலக்கு மட்டுமல்ல, அறிவுத் திருவிழாவிற்கு வருபவரை வாசலில் தடுத்து நிறுத்தக் கூடாது என்ற பண்பாட்டு முதிர்ச்சியின் அடையாளம்.

இத்தகைய மாற்றங்களே வணிகச் சந்தையை நோக்கி வரும் கூட்டத்தை, ஒரு கொண்டாட்டத்தை நோக்கி வரும் பெருந்திரளாக மாற்றுகின்றன. இத்தகைய மாற்றங்கள் வாசலோடு முடிந்துவிடாமல் கண்காட்சியின் உட்புற வசதிகளிலும் எதிரொலிக்க வேண்டும்.

இரைச்சலும் கவனச் சிதறலும்

புத்தகக் காட்சியின் முன்புறம் அமைக்கப்படும் மேடைகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், வாசகர்களின் கவனத்தைப் புத்தக விற்பனையிலிருந்து திசைதிருப்புகின்றன. புத்தகக் காட்சி அமைதியான உரையாடல்களுக்கும், தீவிரமான தேடலுக்குமான இடம். வெளியே நிலவும் அதீத இரைச்சல் வாசகர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. “புத்தகங்களை நேசிக்கும் ஒரு வாசகர் அமைதியான சூழலைத்தான் எதிர்பார்க்கிறார்; வெளியே நடக்கும் ஆரவாரம் ஒரு அறிவுத் திருவிழாவை விற்பனைச் சந்தையாக மட்டுமே காட்டுகிறது” என்பது நரனின் புகார்.

இம்முறை எழுத்தாளர் சந்திப்பு, நூல் வெளியீட்டு நிகழ்வுகள் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்ட சிற்றரங்கின் அமைப்பு அதன் நோக்கத்தையே சிதைப்பதாக இருந்தது. பிளாஸ்டிக் மேசைகளாலும் இருக்கைகளாலும் நிரப்பப்பட்ட அந்த இடம், எழுத்தாளர் சந்திப்பிற்கான கண்ணியமான இடமாகத் தெரியவில்லை. அத்துடன், வெளியே மேடைகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளின் சத்தம் இந்தச் சிற்றரங்கிற்குள் ஊடுருவி, எழுத்தாளர் - வாசகர் இடையிலான உரையாடல்களை அடியோடு சிதைக்கின்றன. எழுத்தாளர் சந்திப்புக்கென சத்தமில்லாத, நேர்த்தியான அமர்வு வசதிகளுடன் கூடிய அரங்குகள் பொன்விழா ஆண்டிலாவது அமைக்கப்பட வேண்டும் என்பது பெரும்பாலான எழுத்தாளர்களின் விருப்பம்.

வகைமைப் பிரிப்பு: தில்லி மாடல்

“வாசகர்களின் அலுப்பைக் குறைக்கவும் தேடலை எளிதாக்கவும், தில்லி புத்தகக் கண்காட்சியில் உள்ளதுபோலப் புத்தகங்களை வகைமை வாரியாகப் பிரித்து ஸ்டால்களை அமைக்க வேண்டும். ஆங்கில, தமிழ் நூல்களுக்கான பாதைகள், சிறுவர் இலக்கியப் பகுதி என வகைமை பிரித்துப் பாதைகளை அமைப்பதன் மூலம் வாசகர்கள் திசையறியாது மைதானம் முழுவதும் அலைவதைத் தவிர்க்கலாம். இது மேம்பட்ட தேடுதல் அனுபவத்தைத் தருவதோடு, வாசகர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்” என்கிறார் காலச்சுவடு பதிப்பகத்தின் விற்பனைப் பிரதிநிதி முத்து வைரவன்.

பொன்விழா ஆண்டுக்கான கோரிக்கை

ஒரு கண்காட்சியின் வெற்றி என்பது அங்கு கூடும் தலைகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்து அளவிடப்படுவதில்லை; மாறாக, அந்த நிகழ்வு வாசகருக்கும் பதிப்பாளருக்கும் எத்தகைய அனுபவத்தை வழங்குகிறது என்பதில்தான் இருக்கிறது. 50ஆவது ஆண்டைத் தொடும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு, இன்னும் தற்காலிகக் கூடாரங்களை நம்பியிருப்பது ஆரோக்கியமானதல்ல. தமிழக அரசும் பபாசியும் இணைந்து, சர்வதேசத் தரத்திலான நிரந்தரக் கண்காட்சி மையத்தை உருவாக்க வேண்டும். கூடவே, அங்கு நவீன கழிப்பறை வசதிகள், உணவுக் கூடங்கள், தாய்ப்பாலூட்டும் அறைகள் (அறை அமைக்கப்பட்டிருந்தாலும் வருகையாளர்கள் பயன்கொள்ளும்படி அவ்விடம் ஒதுக்கப்படவில்லை), ஓய்விடங்கள் ஆகியவை இருக்க வேண்டும். “வெறும் அலங்கார வளைவுகளும், மின் விளக்குகளும் புத்தகக் கண்காட்சியை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றிவிடாது. அங்கு வரும் ஒவ்வொருவரும் - அவர் வாசகரோ, பதிப்பாளரோ அல்லது கடைநிலை ஊழியரோ - மதிக்கப்படுவதும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுமே நாகரிகச் சமூகத்தின் அடையாளமாகும்” என்கிறார் கண்காட்சியில் 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் சென்னை வாசகர் பிரகாஷ்.

நரன்

சென்னைப் புத்தகக் கண்காட்சி பொன்விழாவை நெருங்கும் இவ்வேளையில் நிர்வாகம் கண்காட்சிகளை ஏற்பாடுசெய்யும் அமைப்பாக மட்டும் சுருங்கிவிடாமல் பதிப்பாளர்களின் பாதுகாவலராகவும் மாற வேண்டும். பதிப்பாளர்கள் சந்திக்கும் தினசரிப் போராட்டங்களைச் சரி செய்யாமல், உலகத்தரம் வாய்ந்த கண்காட்சியைப் பற்றிப் பேசுவது வெறும் அலங்காரப் பேச்சாகவே அமையும்.

2027ஆம் ஆண்டின் சென்னைப் புத்தகக் கண்காட்சி பபாசியின் 49 ஆண்டுக் கால அனுபவத்தையும், 21ஆம் நூற்றாண்டின் நவீனத்தையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். பபாசி நிர்வாகம், தமிழக அரசு, பதிப்பாளர்கள் இணைந்து செயல்பட்டால் சென்னை புத்தகக் காட்சி உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்டமான பண்பாட்டுத் திருவிழாவாக உருவெடுக்கும்.

கிரேஸ் பானு

2027ஆம் ஆண்டு ஜனவரியில், சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள் நுழையும் வாசகர் வெறும் புத்தகங்களை மட்டும் சுமந்து வரக் கூடாது; மாறாக, சர்வதேசத் தரத்திலான, கண்ணியமான, தொழில்நுட்பம் செறிந்த அறிவுத் திருவிழாவில் பங்கேற்ற பெருமிதத்தோடு வீடு திரும்ப வேண்டும். அந்தப் பெருமிதமே பொன்விழா ஆண்டில் தமிழ் பதிப்புத்துறைக்கும், வாசகர்களுக்கும் நாம் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.