மார்ச் 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஆகஸ்ட் 2026
    • கட்டுரை
      சென்னைப் புத்தகக் காட்சி பொன்விழாவை நோக்கிய பயணம்
      வரலாற்றியல் கண்ணோட்டத்தில் யாழ்ப்பாணத்தின் சாதியியல்
      ஒரே நாடு, ஒரே மொழிக்குடும்பம்: பரப்புரையும் யதார்த்தமும்
      நாங்களே எமது மீட்பர்கள் காலனியத் தமிழகத்தில் தலித் கல்வி இயக்கம்
    • கதை
      ‘உ வினு எ- ஃபாத்து!’
      மன்னிப்புக் கேட்பவர்
    • அனுபவம்
      யாருமற்றவள்
    • அஞ்சலி: எஸ்.எஸ். ராஜகோபாலன் (1931&2026)
      மாந்தருக்குள் ஒரு பாடநூல்
    • சச்சிதானந்தன் சுகிர்தராஜா
      கோப்புகள், கோமகன்கள், கோதைகள்: சக்தி, செல்வம், சாசனம்
    • அஞ்சலி: தமிழறிஞர் தெ. ஞானசுந்தரம் (1941 &2026)
      எல்லை விரிந்த தமிழ் உள்ளம்
    • எப்ஸ்டீன் ஆவணங்கள்
      சோம்ஸ்கியின் அறமும் எப்ஸ்டீனுடனான அவரது நட்பும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கற்றனைத்தூறும்- 15
      தண்டனை: அன்பின் அடையாளமா?
    • மதிப்புரை
      குடும்பம் - வேலை - கருணை
    • தலையங்கம்-2
      பகடைக்காயாக்கப்படும் பெண்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
      வே.நி. சூர்யா கவிதைகள்
    • தலையங்கம்
      சிறிய கட்சிகள்: கூட்டணி என்னும் நிர்ப்பந்தம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2026 மதிப்புரை குடும்பம் - வேலை - கருணை

குடும்பம் - வேலை - கருணை

மதிப்புரை
ப. சகதேவன்

காந்த்ருக்
(நாவல்)
சதீஷ் சப்பரிகே
தமிழில்: கே. நல்லதம்பி
வெளியீடு: 
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு
நாகர்கோவில்-1
பக். 424 
ரூ. 550

சதீஷ் சப்பரிகே என்ற பெயரில் சப்பரிகே தென் கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் குந்தாப்புராவை அடுத்துள்ள ஒரு கிராமம். சப்பரிகேயைப் போலப் பல கிராமங்கள் அங்குண்டு. எல்லாமும் ஒரே மாதிரியான வாழ்வியலைக் கொண்டவை. அப்படிப்பட்ட ஒரு கிராமத்திலிருந்து நேபாளத்திலுள்ள காந்த்ருக் என்னும் ஒரு மலைக் கிராமத்திற்குப் பயணம் போகிறான் சித்தார்த். தலைநகர் காத்மண்டுவிலிருந்து மலையேறி பெசிசஹார், முக்திநாத் வழியாக மேலே காந்த்ருக் போக வேண்டும். மலையேறும் வழியாகவே சித்தார்த்தின் 36 வயது வாழ்க்கையும் விரிந்துபோகிறது. காந்த்ருக்கை அடைந்த பின் பயணம் நிற்கிறது. முன் நிற்கும் பல பாதைகளில் எந்தப் பாதையில் போவது என்னும் தடுமாற்றம்.

வசதியுள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில், அன்பு கொண்ட கூட்டுக் குடும்பச் சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் சிறு வயதிலேயே தாயை இழந்ததனால் தாயன்பு தெரியாமல் வளர்ந்தவன் சித்தார்த். அந்த இழப்பை ஈடுகட்டும் அளவுக்குப் பாசத்தைப் பொழிந்தவர் தகப்பனார் தருமராஜ ஷெட்டி. சித்தார்த்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே ஷெட்டியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘மனிதனாகப் பிறந்த பின் மனிதனாக வாழப் பழகிக்கொள். மனிதனைவிடப் பெரிய கடவுள் இல்லை’ என்னும் நாத்திகர் அவர். ஹொசமனே என்னும் குடும்பப் பாரம்பரியம், ஹொசாடு என்னும் குலக்கோவில் பொறுப்பு என்னும் இரண்டையும் தாங்க வேண்டிய ஷெட்டி தனது நாத்திகத்தில் சமரசமும் செய்துகொள்கிறார். சித்தார்த் சுவீகரித்துக்கொள்ள வேண்டிய குடும்பப் பொறுப்பு இதுதான்.

கணினித் தொழிலில் பல சாகசங்கள் புரிந்து பொருளும் புகழும் சம்பாதித்த சித்தார்த்துக்குத் தொழிலில் பின்னடைவு ஏற்படுகிறது. எல்லாவற்றின் மேலும் வெறுப்பு ஏற்பட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஒரு பையை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறான். அடுத்து வருவது ஒரு நீண்ட மலையேற்றப் பயணம். உண்மையில் இது ஒரு பயண இலக்கியம். அல்லது நாவல் என்னும் வரையறையை மிகவும் அகலப்படுத்தியிருக்கும் முயற்சி. காத்மண்டுவிலிருந்து தொடங்கி காந்த்ருக் போகிற மலையேற்றப் பாதை நெடுகிலுமுள்ள கிராமங்கள், அவற்றுக்கு இடையிலுள்ள தூரம், பாதையின் தன்மை, அதன் அபாயங்கள், குளிர், டீ ஹவுஸ்கள் அதை நடத்தும் அன்பான மனிதர்கள் என்று ஒரு சென்சஸ் கணக்கெடுப்பாளரைப் போல சப்பரிகே விவரங்கள் தந்துபோகிறார். ஆனால் இவையெல்லாவற்றையும் சொல்வது சித்தார்த் அல்லவா? சித்தார்த்துக்கு இது தப்பிக்கும் முயற்சிதானே! டேட்டா இண்டலிஜென்சிலும் ஐடிபி வலையத்திலும் புரட்சிசெய்து சிலிக்கான் வேலியே அறிந்திராத ஒரு புராடக்டை உருவாக்கும் அளவுக்குச் சாதனை செய்த அவனது நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் விழுங்கப்போகும் நிலைமையை அவனால் எவ்வாறு சகித்துக்கொள்ள முடியும்? ஆனால் அது தானே கார்ப்பொரேட் யதார்த்தம்? அதிலிருந்து கொண்டுதானே அவன் எதிர்நீச்சல் போட வேண்டும்? அதற்கிடையிலேயே அவனுக்கு ஒரு பெண் நட்புக் கிடைக்கிறது. விபத்தில் கணவனை இழந்த இளம் விதவை சுசித்ரா! சித்தார்த் முன்னால் புது உலகம் விரிகிறது. திருமணம்கூட நடக்கிறது. ஆனால் அதிலும் தடங்கல். தனது முதல் கணவனை மனதிலிருந்து அகற்ற முடியாத சுசித்ராவுக்குச் சித்தார்த்துடன் கூட முடியவில்லை. திருமணம் விவாகரத்தில் முடிகிறது.

நேபாளத்து மலையேற்றத்தில் லூசியைச் சந்திக்கிறான் சித்தார்த். அமெரிக்கப் பெண்ணான லூசிக்குத் தெரிந்திருக்கும் அளவுக்குக்கூடத் தனது சொந்த சமயமான சமணத்தைப் பற்றியும், பௌத்தத்தைப் பற்றியும் சித்தார்த்துக்குத் தெரிந்திருக்கவில்லை. தனது தேவைகள் என்ன என்பதுபற்றிக்கூட அவனுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. காமமும் ஒரு தேவை தானே! லூசி அதை அவனுக்குப் புரியவைக்கிறாள். சித்தார்த்துக்கு இப்போது இன்னொரு பிரச்சினை. காதலுக்குள் காமமா? காமத்துக்குள் காதலா? அவனைப் போலவே லூசியும் மனமுடைந்து பல கட்டங்களைக் கடந்து வந்தவள்தான். ஆனால் சித்தார்த்தைத் தனக்குப் பிடித்திருக்கிறது என்று உணர்ந்தவுடன் அவனுடன் உடலுறவுகொள்ள வேண்டுமென்ற தனது விருப்பத்தை உடனே நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் அவளுக்கு இருக்கிறது. சுசித்ராவுக்கும் லூசிக்கும் இடையிலிருக்கக்கூடிய பண்பாட்டு இடைவெளியை சித்தார்த்தினால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த இடைவெளியை வெகுவாகக் குறைத்துக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன்தான் என்பதை மெதுவாக உணர்கிறான்.

இத்தனைக்கும் மருத்துவர் நிச்சலாவுடன் அவனுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. அது உடல்ரீதியானதும்கூட. அவனைவிடப் பெரியவளான நிச்சலா ஒரு மருத்துவர். அழகான குடும்பமும், வசதியான வாழ்க்கையும் கொண்டவள். அவளது பாலியல் சுதந்திரத்தைக் கணவனும் மதிக்கிறான். இப்போது லூசியுடன் இந்த அனுபவமும் ஏற்பட்ட பின்னர் இதற்கெல்லாம் என்ன பொருளை எடுத்துக்கொள்வது? லூசி அமெரிக்கப் பெண்ணாகவும், நிச்சலா இந்தியப் பெண்ணாக இருந்தாலும் சப்பரிகே கிராமம், ஹொசமனே கூட்டுக் குடும்பம், ஹொசாடு குலக்கோவில் பொறுப்பு என்று தந்தை வழியாக வந்த வாழ்க்கைத் தரிசனம் ரொம்பவும் மங்கலாகிப் போய்விட்டதா?

எண்ணற்ற மலைக் கிராமங்கள் வழியாக சித்தார்த்தின் பயணம் தொடர்கிறது. அவனது மனமும்தான். அப்போது அவன் பயணத்தில் குறுக்கிடுகிறாள் சோஃபியா மார்க்கரிட்டா பசேரா. கொலம்பியா நாட்டில் வெகு பலமான குற்றப் பின்னணியுடன்கூடிய போதைப் பொருள் சாம்ராஜ்யத்தின் பேரரசன் ஒருவனின் பேத்திதான் சோஃபியா. தாத்தாவைப் பழி வாங்க நினைத்த அவரது தொழில் விரோதிகள் அவளது பெற்றோர்களைக் கொன்றுவிட ஆறு மாதத்திலேயே அனாதையாகிறாள் சோஃபியா. அவளது வளர்ப்புத் தாய் இந்தியர்; வளர்ப்புத் தந்தை ஒரு முஸ்லிம். செல்வச்செழிப்புள்ள சூழலில் வளர்க்கப்படுகிறாள். ஆனால் தாத்தாவின் பழி வாங்கும் படலத்தில் தன் கண் முன்னாலேயே உயிர்க்கொலைகள் நடக்கும்போது செல்வச் செழிப்பின் பின்னணியில் இருக்கும் பாவக் கறைகள் அவள் கண்களை நிலைகுத்திப் போகவைக்கின்றன. “அந்த அரக்கன் முகத்தை நான் உயிரோடு இருக்கும்வரை பார்க்க மாட்டேன். என் முன்னால் வர வேண்டாம் என்று சொல்லிவிடு.” உலகத்தையே நடுங்கவைத்த டிரக் லாட் தன் பேத்தியின் முன்னால் தோற்றுப்போய் நின்றிருந்தார். அவர்மூலம் வரும் செல்வமும் அவளுக்குத் தேவையில்லை. அவளைப் பொறுத்தளவில் அவள் இப்போது யாருமில்லாத அனாதை. உலகெங்கிலுமுள்ள பத்துக் கோடி அனாதைகளைப் போல. அந்தப் பத்துக் கோடியிலுள்ள நான்கு கோடிக் குழந்தைகளைப் போல.

பன்னாட்டியல் துறையில் கவனம் கொண்ட அவள் அதில் மிகச்சிறந்த பயிற்சி பெறுகிறாள். யுஎன்எச்ஆர்சி (அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை ஆணையம்)யில் நல்ல வேலையும் கிடைக்கிறது. அனாதைக் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அவள் முதலில் போக நேர்ந்த நாடு ஆஃப்கானிஸ்தான். ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னதைப் போல யாரும் போகாத பாதையில் பயணிப்பதே அவள் விருப்பம். யாரும் போகாத பாதையில்தானே படுபாதகங்கள் நடக்கும்! ஆஃப்கான் அரசுக்கு எதிராக தாலிபான்கள் போராடிக்கொண்டிருந்த சமயத்தில் அங்கு போன சோஃபியா தன் முன்னாலேயே நடந்த துப்பாக்கிச் சூட்டில் செத்து விழும் பிணங்களைப் பார்க்கிறாள். வன்முறையின் கோரமுகத்துடன் நேரடியான சந்திப்பு. ஆஃப்கானிஸ்தானைவிடக் கொடுமையானது சிரியா. யாருக்கு யார் பகைவர் என்றே தெரியாமல் கோமாளித்தனமான கொலைக்களங்களை அனுதினமும் உருவாக்கிக்கொண்டிருக்கும் நாடு. எப்படிப்பட்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நாடு! டமாஸ்கஸ் (திமிஷ்கு), அலெப்போ போன்ற நகரங்களெல்லாம் உலக நாகரிகத்திற்குச் செய்த பங்களிப்புகள் எத்தனை! என்ன இருந்து என்ன? பச்சிளம் குழந்தைகளை நாதியற்றவர்களாகச் செய்திருக்கும் இந்த ஆயுத வியாபாரிகளின் பேராசை எப்போது முடிவுக்கு வரும்? சமயத்தின் அடிப்படை நோக்கம் சமயம் என்றால் அந்தச் சமயம் ஏன் இதையெல்லாம் கை கட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது? மியான்மரில் (பர்மா) சேவை செய்துகொண்டிருந்தபோது புத்த மதத்தைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லும் அரசு ரோகிங்யா முஸ்லிம்களை நடத்திய விதத்தைப் பார்த்தபோது சோஃபியாவுக்குச் சமயத்தின் மீதான நம்பிக்கை முற்றாகத் தகர்ந்துவிட்டிருந்தது. தருமராஜ ஷெட்டி சொன்னதைப் போல மனிதனைவிடச் சிறந்த மதம் வேறு எதுவும் இல்லை. சித்தார்த் வேறு ஒரு பாதையின் மூலமாக வந்து சேர்ந்த அதே இடத்திற்கு இப்படிப்பட்ட கரடுமுரடான பாதையின் மூலமாக சோஃபியா வந்துசேர்ந்திருந்தாள். இருவர் முன்னாலுமிருந்த கேள்வி ஒன்றுதான். பொருளில்லாத இந்த வாழ்க்கைக்குப் பொருள் காண்பது எப்படி?

சப்பரிகேயில் அவனது தந்தை இறந்துவிட்ட சேதி வந்தது. சமூகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெங்களூரில் அவனது நிறுவனத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சியில் வெற்றிக்கான அறிகுறிகள் தெரிகின்றன; இணைந்துகொள்ளலாம். அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் முக்கியமான பதவி தேடி வருகிறது; பரிசீலிக்கலாம். இப்போது நேபாளத்திலேயே தான் தொடங்கப்போகும் தன்னார்வ நிறுவனத்திற்குத் தன்னுடன் இணைந்து பணியாற்ற சோஃபியா அழைக்கிறாள். எந்தப் பாதையை சித்தார்த் தேர்ந்தெடுக்கப்போகிறான்?

முன்னாலிருக்கிற முதல் படிதான் முக்கியமானது. வானம் நோக்கியிருக்கிற லட்சியமல்ல. ‘முழுமையடைய வேண்டுமென்றால் நம்மை நாம் பிளந்து பார்க்க வேண்டும்.’

குவேம்பு, காரந்த், பைரப்பா ஆகியோர் தாங்கள் சார்ந்திருந்த சமூகத்தைப் பல கோணங்களில் பார்த்து அழகியல் படுத்தினார்கள். யு.ஆர். அனந்தமூர்த்தி அதைக் கூறு போட்டுப்பார்த்தார். இப்போது சப்பரிகே கன்னட நாவலைப் புதிய தளத்திற்கு நகர்த்தியிருக்கிறார். இதைக் கணினி யுக நாவல் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இப்போது ஏற்பட்டிருக்கிற புதிய மனிதச் சிக்கல்களுக்குக் கணினி யுகமும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஏற்கெனவே விவேக் ஷான்பாக், வசுநேந்திரா ஆகியோர் இதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

தான் ஒழுங்கு செய்திருக்கிற, வருடாந்திர புக் பிரம்மா இலக்கியத் திருவிழாவின் மூலமாகத் தென்னிந்திய இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் தெரியவந்திருக்கும் சப்பரிகேயின் இந்த நாவல் சமீபத்தில் வெளிவந்திருக்கும் நாவல்களில் குறிப்பிடத்தக்க நாவல் என்று விமர்சகர் ஓ.எல். நாகபூஷணசாமி குறிப்பிடுகிறார். அது சரியா இல்லையா என்பதைக் காலம் முடிவு செய்யும். ஆனால் மனிதனைப் பற்றிய சப்பரிகேயின் கருத்தில் மாற்றமிருக்காது. ‘பரிபூர்ணமான, பரிசுத்தமான, பரிபக்குவமான மனிதன் என்று யாருமில்லை.’

           மின்னஞ்சல்: krishnaswamip@yahoo.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.