மார்ச் 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மார்ச் 2026
    • கட்டுரை
      சென்னைப் புத்தகக் காட்சி பொன்விழாவை நோக்கிய பயணம்
      வரலாற்றியல் கண்ணோட்டத்தில் யாழ்ப்பாணத்தின் சாதியியல்
      ஒரே நாடு, ஒரே மொழிக்குடும்பம்: பரப்புரையும் யதார்த்தமும்
      நாங்களே எமது மீட்பர்கள் காலனியத் தமிழகத்தில் தலித் கல்வி இயக்கம்
    • கதை
      ‘உ வினு எ- ஃபாத்து!’
      மன்னிப்புக் கேட்பவர்
    • அனுபவம்
      யாருமற்றவள்
    • அஞ்சலி: எஸ்.எஸ். ராஜகோபாலன் (1931&2026)
      மாந்தருக்குள் ஒரு பாடநூல்
    • சச்சிதானந்தன் சுகிர்தராஜா
      கோப்புகள், கோமகன்கள், கோதைகள்: சக்தி, செல்வம், சாசனம்
    • அஞ்சலி: தமிழறிஞர் தெ. ஞானசுந்தரம் (1941 &2026)
      எல்லை விரிந்த தமிழ் உள்ளம்
    • எப்ஸ்டீன் ஆவணங்கள்
      சோம்ஸ்கியின் அறமும் எப்ஸ்டீனுடனான அவரது நட்பும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கற்றனைத்தூறும்- 15
      தண்டனை: அன்பின் அடையாளமா?
    • மதிப்புரை
      குடும்பம் - வேலை - கருணை
    • தலையங்கம்-2
      பகடைக்காயாக்கப்படும் பெண்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
      வே.நி. சூர்யா கவிதைகள்
    • தலையங்கம்
      சிறிய கட்சிகள்: கூட்டணி என்னும் நிர்ப்பந்தம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2026 அனுபவம் யாருமற்றவள்

யாருமற்றவள்

அனுபவம்
விர்ஜினியா ராபர்ட்ஸ் ஜூஃப்ரே

விர்ஜினியா ராபர்ட்ஸ் ஜூஃப்ரே (Virginia Roberts Giuffre) எழுதிய ‘Girl: A Memoir of Surviving Abuse and Fighting for Justice (2025)’ என்ற நூல், தனது குழந்தைப் பருவத்தில் சந்தித்த துஷ்பிரயோகங்கள், பாலியல் கடத்தல், அதிகாரமிக்க மனிதர்களுக்கு எதிராக நீதி வேண்டி அவர் நடத்திய நெடிய போராட்டம் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது. இந்நூல், விர்ஜினியாவின் வாழ்க்கையை மகள் (Daughter), கைதி (Prisoner), மீண்டவள் (Survivor), போராளி (Warrior) என நான்கு முக்கியக் காலகட்டங்களாகப் பிரிக்கிறது. முதல் அத்தியாயம்: குட்டிநூலின் முதல் பகுதியான ‘மகள்’ என்பதில் வரும் ‘குட்டி’ என்ற முதல் அத்தியாயம், விர்ஜினியாவின் பதினைந்தாவது வயதில் தொடங்கும் துயரத்தை விவரிக்கிறது. மாடலிங் என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகிறார். பிற்காலத்தில் தாயாக, தன் கணவர், குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கை நடத்தும் விர்ஜினியா, தனது கடந்த காலத்தின் துயரமான நினைவுகளையும், அதிலிருந்து தப்பிய தருணங்களையும் இதில் ஒப்பிட்டுப் பார்க்கிறார். தான் இழந்த குழந்தைப் பருவத்தையும், தன்னைச் சிதைத்தவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அழுத்தமாகப் பதிவு செய்யும் இந்நூல், பாதிக்கப்பட்டவர்களுக்கான நம்பிக்கைக் குரலாகவும், நீதிக்கான சாட்சியமாகவும் ஒலிக்கிறது. சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய எப்ஸ்டீனின் ஆவணங்கள் பேசுபொருளாகியிருக்கும் இத்தருணத்தில் இந்நூல் கவனிப்புக்குரியதாகிறது.

பகுதி 1: மகள்

அத்தியாயம் ஒன்று: “குட்டி”

நடைபாதை ஓரத்தில், கண்ணீரில் கரைந்த முகத்துடன் தனியாக அமர்ந்திருக்கும் ஒரு சிறுமியைக் கற்பனைசெய்துபாருங்கள். அவளுக்குப் பதினைந்து வயதுதான் இருக்கும், ஆனால் பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து அதைவிடச் சிறியவளாகத் தோன்றுகிறாள். நீல நிறக் கண்களுடனும் நீண்ட பொன்னிறக் கூந்தலுடனும் அவள் அழகாக இருந்திருக்கக்கூடும்; ஆனால் புள்ளிகள் நிறைந்த அவளது முகம் இப்போது வீங்கிப்போயிருக்கிறது, தொண்டையில் காயங்கள் இருக்கின்றன, அவளது வாயில் என்றுமே மறக்க முடியாத ஒரு சுவை இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. துப்பாக்கியின் இரும்புச் சுவை. ரத்தம் வரும் என்று அவள் அறிந்திராத இடங்களிலிருந்தெல்லாம் ரத்தம் கசிந்துகொண்டிருக்கிறது. இந்தச் சிறுமி இதற்கு முன்பும் காயப்படுத்தப்பட்டிருக்கிறாள், ஆனால் இதுபோல அல்ல. ஒரு பலத்த காற்று வீச, அவளுக்கு மேலே இருக்கும் தென்னை மரங்கள் நடுங்குகின்றன. அவள் தனது ரத்தம் தோய்ந்த உதட்டைத் துடைக்கிறாள். ஒருவேளை யாருக்காவது நான் முக்கியமானவளாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறாள்.

அப்போது அந்த நீண்ட லிமோசின் சொகுசுக் காரைப் பார்க்கிறாள். கறுப்பாகவும் பளபளப்பாகவும் அது அவளை நோக்கி மிதந்து வருகையில், அந்தச் சிறுமி சக்கரத்திற்குப் பின்னால் இருக்கும் ஓட்டுநரை ஒரு கணம் பார்க்கிறாள். டிஸ்னியின் ‘101 டால்மேஷன்ஸ்’ படத்தில், நாய்க்குட்டிகளின் தோலை உரிப்பதற்காக லண்டன் முழுவதும் ‘க்ரூயெல்லா டி வில்’ எனும் வில்லி கதாப்பாத்திரம் ஓட்டிச் செல்லும் அந்த லிமோசின் கார் அவளது நினைவில் மின்னுகிறது. அந்தப் படத்தை அவள் எத்தனை முறை பார்த்திருப்பாள்? ஆனால் இது கார்ட்டூன் காட்சி அல்ல. அதெல்லாம் குழந்தைகளுக்கானது. ஆனால் இச்சிறுமி பல ஆண்டுகளாகத் தன்னை ஒரு குழந்தையாகவே உணரவில்லை. இது மியாமி, ஃப்ளோரிடாவில் நடக்கும் நிஜ வாழ்க்கை.

அந்தச் சிறுமி வேறு யாருமல்ல, நான்தான்

நாற்பத்தெட்டு மணிநேரத்திற்கு முன்பு, பாம் பீச் கவுண்டியில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பித்து வெளியேறியபோது, நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். என் சீர்திருத்தப் பள்ளிச் சீருடையை—கடற்படை நீல நிற போலோ சட்டை, காக்கி நிறக் கால்சட்டை—கழற்றி எறிய வேண்டும் என்பது என் அனுபவத்திலிருந்து எனக்குத் தெரிந்திருந்தது; இல்லையென்றால் காவல்துறை என்னை உடனே பிடித்துவிடும். அதனால் நான் முதலில் சென்றது, தள்ளுபடியில் பொருட்களை விற்கும் மார்ஷல்ஸ் எனும்  பல்பொருள் அங்காடி. அங்கே நான் விரைவாக ஒரு புதிய டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்துகொண்டு, சீர்திருத்தப் பள்ளியில் வழங்கிய ஆடையை ஒரு கொக்கியில் மாட்டி நேர்த்தியாகத் திரும்ப வைப்பதுபோல் பாவனைசெய்தேன். பிறகு பணம் செலுத்தாமலேயே கடையை விட்டு வெளியேறி நேராக டெல்ரே கடற்கரையை நோக்கிச் சென்றேன்.

அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதில் நான் எப்போதுமே கெட்டிக்காரி. கடற்கரையில் ஒரு போதை ஆசாமியைச் சந்தித்தேன். அவன் என்னைவிட வயதில் பெரியவன், ஆனால் மிகவும் சாந்தமான மனவீச்சு கொண்டவன். அவன் ஒரு கஞ்சா சுருட்டைப் புகைத்துக்கொண்டிருந்தான். நாங்கள் அட்லாண்டிக் கடலைப் பார்த்துக்கொண்டிருக்கையில் எனக்கும் அதைப் பகிர்ந்தளிக்க முன்வந்தான். “இன்று இரவு வெளியில்தான் உறங்கத் திட்டமிட்டிருக்கிறேன்” என்று சொன்னபோது, அவன் வீட்டில் உள்ள சோபாவில் நான் படுத்துக்கொள்ளலாம் என்றான். ஒரு வேளை, என்னிடம் உறவுகொள்ளும் நோக்கில் அவன் இப்படிச் சொல்கிறானோ என்று முதலில் அஞ்சினேன், ஆனால் என் கணிப்பு தவறானது. நாங்கள் அவனுடைய இடத்திற்குச் சென்றதும் இன்னும் கொஞ்சம் கஞ்சா புகைத்தோம் பிறகு நான் குளிப்பதற்காக அவன் ஒரு சுத்தமான துண்டைக் கொடுத்தான். “தயவுசெய்து விடியவதற்குள் கிளம்பிவிடு, நான் சீக்கிரம் வேலைக்குச் செல்ல வேண்டும். என் வீட்டை நாசப்படுத்திவிடாதே. நியாயமாக நடந்துகொள்.” என்று படுக்கச் செல்லும் முன் கூறினான்.

எல்லா ஆண்களும் அரக்கர்கள் அல்ல

மறுநாள் விடியற்காலைக்கு முன்பே, அவன் சொன்னபடி நியாயமாக முன்கதவைச் சத்தமில்லாமல் மூடிவிட்டு வெளியேறினேன். பிறகு ரயில் நிலையத்திற்குச் சென்றேன். என்னிடம் இருந்த பணத்தில் பெரும் தொகையை — ஒரு பெட்ரோல் பங்க் ஊழியரிடம் யாசகம் கேட்டுப் பெற்று நான் மறைத்து வைத்திருந்த இருபது டாலர் நோட்டை என் தலைமுடி ரப்பர் பேண்டிலிருந்து எடுத்து, மியாமிக்குச் செல்ல ஒருவழிப் பயணச்சீட்டை வாங்கினேன். ஒன்றரை மணிநேரம் கழித்து, பாம் பீச்சிலிருந்து ஐம்பது மைல் தெற்கே உள்ள மியாமி-டேட் ரயில் நிலையத்தை அடைந்தேன். இதற்கு முன் பல முறை வீட்டை விட்டு ஓடிப்போயிருக்கிறேன், ஆனால் இவ்வளவு தூரம் வந்ததே இல்லை.

ரயில் நிலையத்திலிருந்து கடலை அடைவதற்குச் சுமார் ஒரு மணிநேரம் நடக்க வேண்டியிருக்கும் என்று கணக்கிட்டு, கிழக்கு நோக்கி நடந்தேன். வழியில் ஒரு ‘டங்கின் டோனட்ஸ்’ கடையின் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிற ஒளியைப் பார்த்தேன். எனது ஊரான லாக்ஸாஹாட்சியில், உள்ளூர் டங்கின் டோனட்ஸ் கடைக்கு வெளியே சில்லறைக்காக அடிக்கடி கெஞ்சியிருக்கிறேன். எனவே அதன் சின்னத்தை—ஆவி பறக்கும் மகிழ்ச்சியான காபிக் கோப்பையை — பார்ப்பது ஒரு நல்ல சகுனமாகத் தோன்றியது. உள்ளே சென்று எனக்குப் பிடித்த சாக்லேட் டாப்பிங் கொண்ட இரண்டு டோனட்டுகளை வாங்கினேன். பல நாட்களுக்குப் பிறகு வயிறு நிறைந்ததால் தன்னம்பிக்கையுடன் வெளியேறினேன். இப்போது செல்வதற்குப் போக்கிடமில்லை, ஆனால் எப்படியாவது சமாளித்து விடுவேன்.

சுமார் இருபது நிமிடங்கள் நடந்திருப்பேன். அப்போது என் முன்னால் வெள்ளை நிறத்தில் ஒரு வேன் வந்து நின்றது. “லிஃப்ட் வேண்டுமா? நானும் அந்தப் பக்கம்தான் போகிறேன்” என்று ஓட்டுநர் நட்பான குரலில் கேட்டார். அது ஒருவேளை காபியின் சர்க்கரை தந்த மிதப்பாக இருக்கலாம், ஆனால் என் எச்சரிக்கை உணர்வு குறைந்திருந்தது. தவிர, புழுக்கமும் வெப்பமுமாக இருந்தது, கறுப்பு முடி கொண்ட அந்த ஓட்டுநர் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருந்தார்; என்னைவிடப் பெரியவர், ஆனால் ரொம்பவும் பெரியவர் இல்லை. நான் வண்டியில் ஏறி சீட் பெல்ட் போட்டுக்கொண்டேன். ஓட்டுநர் என்னை ஒரு கணம் பார்த்துவிட்டு, மீண்டும் சாலையைப் பார்த்தார். அவருக்கு வயது  முப்பதுகளின் இறுதியில் இருக்கும், கட்டுமானத் துறையில் வேலை செய்பவர்போல உடை அணிந்திருந்தார். “நான் ஒரு சிறிய வேலைக்காக வழியில் நிற்க வேண்டும்” என்றார். ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். தைரியமான ஒன்று என்று நினைத்த குரலில், “பரவாயில்லை,” என்றேன். வண்டி மேற்கு நோக்கி, கடலை விட்டுத் திரும்பியது. பின்னர், பாழடைந்த நிலையில் இருந்த ஒரு உணவு விடுதியின் முன்னால் நின்றது. “என்னுடன் மேலே வா, ஒரு நிமிஷம்தான் ஆகும்” என்றார் அந்தக் கட்டுமானத் தொழிலாளி. அவரைப் பின்தொடர்ந்து மேலே சென்றேன். ஒரு கதவு வழியாக அழுக்கான, பழுதடைந்த அறைக்குள் நுழைந்தோம்.

அவன் உடனடியாக என்மீது பாய்ந்தான், அவனது பலத்தை நான் குறைத்து மதிப்பிட்டது எனக்கு அப்போதுதான் புரிந்தது. அவன் என்னை அடக்கி, படுக்கையில் அழுத்தி, ஒரு கையால் என் கழுத்தை இறுக்கிப் பிடித்தான். பின்னர் ஒரு துப்பாக்கியை எடுத்து அதன் குழலை என் வாய்க்குள் திணித்தான். முதலில் முன்பக்கமிருந்தும், பிறகு பின்பக்கமிருந்தும் அவன் என்னை வன்புணர்வு செய்தான். அவன் தனது உள்ளங்கையில் துப்பிய எச்சில் மட்டுமே உராய்வைக் குறைக்கும் ஒரே திரவமாக இருந்தது. நான் நினைவிழக்கும்வரை அவன் என் கழுத்தை நெரித்தான், பின்னர் மூச்சுவிட அனுமதித்தான், மீண்டும் நெரித்தான். நான் இறந்துவிட்டதாகவும் ஒரு பள்ளத்தில் வீசப்பட்டதாகவும் கற்பனை செய்தேன். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது: அந்த மனிதனின் செல்போன் ஒலித்தது, அதை எடுப்பதற்காக அவன் என்னை விடுவித்தான். “இங்கேயே இரு, வெளியேற முயற்சித்தால், உன்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடுவேன்” என்று கூறினான். பிறகு போனைப் பார்த்துக்கொண்டே வெளியேறினான். எப்படி இருந்தாலும் அவன் என்னைக் கொல்லப்போகிறான் என்று தோன்றியது. அதனால் அவனது குரல் முழுக்க மங்கும்வரை நான் காத்திருந்தேன். பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடினேன்.

இப்படித்தான், ஒரு காலியான கடற்கரையின் வாகன நிறுத்துமிடத்தின் நடைபாதையில் அமர்ந்திருக்கும், கண்ணீர்க் கறை படிந்த சிறுமியாக மாறினேன். எனக்கு முன்னால் அந்த லிமோசின் கார் மெதுவாக வந்து நிற்கும்போது அந்தி சாயும் நேரம். காரின் பின் இருக்கையின் கறுப்பு நிறக் கண்ணாடி மெல்லிய ரீங்காரத்துடன் இறங்கியது, உள்ளே அறுபது வயது மதிக்கத்தக்க அந்நியர் ஒருவரின் வெளிறிய முகம் தெரிந்தது. அவர் பருமனாக, வழுக்கைத் தலையுடன் இருந்தார். என் வீங்கிய, காயம்பட்ட முகத்தின் மீதும் சிதைந்த உடலின் மீதும் அவரது கண்கள் அலைபாய்வதைக் கவனித்தேன் “ஓ, பாவம்மா நீ” என்றார் அந்த முதியவர். அவர் சொன்ன விதத்தில் உண்மையான அக்கறை இருப்பதுபோல் தெரிந்தது. காருக்குள் எட்டிப் பார்க்கையில், அவருக்கு அருகில் குட்டையான சிவப்பு நிற உடையில் ஒரு அழகிய பெண் அமர்ந்திருந்தாள். அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்த முதியவர் கறுப்பு நிறக் கால்சட்டையும், காலர் வைத்த சட்டையும் அணிந்திருந்தார். என் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் ஜீன்ஸ் அல்லது தளர்மேலாடை அணிவார்கள். இந்த அந்நியர் மற்ற விஷயங்களிலும் அவர்களைவிட வித்தியாசமானவராக இருப்பார் என்று நம்பினேன்.

அந்தப் பெண் தலையசைத்து ஊக்குவிக்க, “உள்ளே வா, நாங்கள் உன்னைப் பார்த்துக்கொள்கிறோம்” என்று முதியவர் சொன்னார். வெள்ளை வேனில் துப்பாக்கியை மடியில் வைத்துக்கொண்டு, தப்பி ஓடிய சிறுமியைத் தேடிச் சுற்றிக்கொண்டிருக்கும் என்னைத் தாக்கியவனைப் பற்றி நினைத்தேன். தள்ளாடியபடியே எழுந்தேன். அந்த சொகுசுக் காரின் கதவு திறந்தது, முதியவர் நகர்ந்து எனக்கு இடம் கொடுத்தார்.

முதியவர் கார் ஓட்டுநரிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் பெயர் ரான் எப்பிஞ்சர் என்றும், ‘பெர்ஃபெக்ட் 10’ என்ற மாடலிங் ஏஜென்சியை நடத்துவதாகவும் கூறினார். அவருக்கு அருகில் இருக்கும் யானா என்ற பெண்ணைச் சுட்டிக்காட்டினார்; அவள் செக் குடியரசைச் சேர்ந்தவள். அவளைப் போல மாடலாக எனக்கு விருப்பமா என்றவர், என் வயதைக் கேட்டார். முதலில் பதினாறு என்று சொன்னேன், அது எனக்குச் சற்றுப் பாதுகாப்பாகவும், அதனால் நான் பலவீனமாகத் தெரிய மாட்டேன் என்றும் தோன்றியது. எப்பிஞ்சர் மறுப்பாகத் தலையசைத்தார்; அவர் அதை நம்பவில்லை. எனவே, எனக்குப் பதினைந்து வயது என்று உண்மையைச் சொன்னேன், அது அவருக்குப் பிடித்திருந்தது. “இனிமேல் என்னிடம் நீ பொய் சொல்லாதவரை, நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்,” என்றார் அவர். ‘அதற்கு என்ன அர்த்தம்’ என்று யோசித்தேன், ஆனால் வாய் திறந்து கேட்கவில்லை. அப்போது எப்பிஞ்சரின் சதைப்பிடிப்பான முகம் வாடத் தொடங்கியது. அவருக்கு ஒரு மகள் இருந்ததாகவும், அவள் பெயர் சூசன் மேரி என்றும் கூறினார். அவளுக்குப் பதினைந்து வயதாக இருந்தபோது, அவள் பயணம் செய்த டிரக் வண்டியின் ஓட்டுநர் தூங்கிவிட்டதால், பாம்பானோ பீச்சில் ஒரு மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி அவள் இறந்துவிட்டதாகவும், அதிலிருந்து தன்னால் மீளவே முடியவில்லை என்றும் எப்பிஞ்சர் என்னிடம் கூறினார். ஒரு கணம் நான் அவருக்காக வருந்தினேன்.

அப்போதுதான் அவர் என்னை நோக்கி வந்து என் தலைமுடியைத் தடவினார். “நீ விரும்பினால், நான் உனக்கு இன்னொரு அப்பாவாக இருக்க முடியும்” என்றார்.

தந்தை-மகள் பந்தத்தை, எவ்வளவு விரைவாக அருவருப்பான ஒன்றாகத் திரித்துவிட்டார். ஆனால் அந்தத் தந்திரம் எனக்கு ஏற்கெனவே தெரியும்; எனவே அதெல்லாம் இனி என்னிடம் பலிக்காது என்று நினைக்கிறேன். பெற்றோர்களை — குறிப்பாகத் தந்தையர்களை — நான் நம்புவதில்லை. எனக்கு அப்பா தேவையில்லை, பழையவரோ அல்லது புதியவரோ. என்னைக் காப்பாற்றிக்கொள்ள நான் படும் பாட்டிலிருந்து எனக்குத் தேவை ஒரு இடைவேளை மட்டுமே. நீங்கள் ஒரு பெண்ணாக வளர்ந்தால், உங்களுக்கு ஆபத்து எல்லா இடங்களிலும் இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அதை அறிவேன். சில மணிநேரங்களுக்கு முன்புதான், வெள்ளை வேனில் வந்த அந்தக் கட்டுமானத் தொழிலாளி நரகத்தின் இருண்ட வடிவத்தை எனக்குக் காட்டினான். என்னால் மீண்டும் வீட்டிற்குச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரியும். அங்கே பாதுகாப்பு இல்லை. என் உடல் முழுவதும், உள்ளேயும் வெளியேயும் வலிக்கிறது. இப்போது வேறு வழி எதுவும் எனக்குத் தெரியவில்லை.

முதியவரும் அந்த மாடல் பெண்ணும், நானும் கடற்கரையோரம் உள்ள ஒரு கடையிலிருந்து உணவை வாங்கிக்கொண்டு வெளியேறினோம். நாங்கள் சாப்பிடும்போது — நான் ஒரு விலங்கைப் போல அவசரமாகச் சாப்பிட்டேன் — அலைகளின் ஓசையைக் கேட்க முடிந்தது. பிறகு எப்பிஞ்சர் என்னை ஷாப்பிங் அழைத்துச் செல்ல விரும்புவதாகச் சொன்னார். நாங்கள் அருகிலுள்ள ‘கேப் கிட்ஸ்’ எனும் கடைக்குச் சென்றோம், என் பின்பக்கத்தை மறைக்காத மிகக் குட்டையான கால்சட்டைகளையும், மிகவும் சிறியதாக இருக்கும் மேலாடைகளையும் நோக்கி அவர் என்னைத் திசைதிருப்பினார். விற்பனைப் பெண்ணின் முகபாவனையிலிருந்து, அவள் என்ன நினைக்கிறாள் என்பதை உங்களால் எளிதாகச் சொல்லிவிட முடியும்: ‘பெரும்பாலான தாத்தாக்கள் தங்கள் பேத்திகளுக்கு வாங்கும் உடை இதுவல்ல’.

அடுத்து, நாங்கள் உள்ளாடைக் கடைக்குச் சென்றோம், அங்கு எப்பிஞ்சர் வழக்கமான வாடிக்கையாளர்போலத் தெரிந்தார். சினிமாவில் நான் பார்த்த, வளர்ந்த பெண்கள் மட்டுமே அணிந்திருக்கும் ஜி-ஸ்ட்ரிங்ஸாலும் லேஸ் துணியால் செய்யப்பட்ட உள்ளாடைகளை அவர் தேர்ந்தெடுத்தார். காமப் பார்வையுடன், புதிதாக வளர்ச்சியடைந்த எனது உடலுக்கு நேராக அவற்றை வைத்துப் பார்த்தார். இறுதியாக, எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு ஓட்டுநரிடம் கூறினார்.

கீ பிஸ்கேனில் உள்ள அவரது பிரம்மாண்டமான அடுக்ககத்தில், ரிக்கன்பேக்கர் காஸ்வேயின் பரந்த காட்சிகளோடு, எப்பிஞ்சர் ஒரு கை அசைவில் என்னை மற்ற ஐந்து பெண்களுக்கு அறிமுகப்படுத்தினார்; அவர்களில் பெரும்பாலோர் உள்ளாடை அணிந்திருந்தனர். சிலர் எதுவும் அணியவில்லை. ஒரு சிலர் மட்டுமே ஆங்கிலம் பேசினர். பிறகு, தனது பின்னறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கே ஒரு வட்ட வடிவக் கட்டிலும், கண்ணாடி பதிக்கப்பட்ட கூரையும் இருந்தன. நான் எங்கே தூங்குவது என்று கேட்டேன். “என்னுடன்தான்,” என்றார் அவர்.

முன்பே அறிந்த அந்தப் பயம், என்னுள் ஒரு மூலையில் மீண்டும் எழுந்தது. இன்னும் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறதா? ஆனால் மறுவாழ்வு மையத்திலும், வளர்ப்பு இல்லங்களிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஓடிப்போன காலங்களில் என் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை என்னுள் இன்னொரு—அதிலும் பெரிய — பகுதி நினைவூட்டியது. ஒருவேளை எல்லா ஆண்களும் இப்படித்தான் நடந்துகொள்வார்களோ? நான் களைத்துப்போயிருக்கிறேன். இதற்கு மேலும் எதைப்பற்றியும் சிந்திக்க விரும்பவில்லை. அந்த முதியவர் என்னை “குட்டி” என்று அழைக்கிறார். அங்கிருக்கும் பெண்களிலேயே நான்தான் இளையவள், எனவே அந்த செல்லப்பெயர் எனக்கு ஓரளவுக்குப் பொருந்துகிறது. நான் வேறொருவராக மாற வேண்டும் என்ற ஆசை எனக்குள் இவ்வளவு தீவிரமாக இருந்ததால், அதை நான் ஏற்றுக்கொண்டேன். “குட்டி” என்பது இப்போது நான்தான்.

*

இது காலை உணவுக்கான நேரம், பதினொன்று, பதினான்கு, பதினைந்து வயதுடைய என் குழந்தைகள் பள்ளிக்குத் தாமதமாகிவிடும் அவசரத்தில் வீடு முழுவதும் ஓடிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் சமையலறையின் நடுவில் இருக்கும் நீளமான மேசையின் சூரிய ஒளி அதிகம் படும் ஒரு ஜன்னலின் மூலையில், இந்தக் குழப்பத்தை ரசித்த படியே, கச்சிதமான காபியை அருந்திக்கொண்டிருக்கிறேன். என் கணவர் ராபி, பைகளில் கட்டிய மதிய உணவுகளைக் கொடுக்கிறார்: மூன்று ஆரோக்கியமான தின்பண்டங்கள், ஒரு பெரிய சான்ட்விச். (ராபியின் குடும்பம் சிசிலியைச் சேர்ந்தது, அவருடைய இத்தாலிய சான்ட்விச்களை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது.) எல்லோரிடமும் வீட்டுப்பாடம், அனுமதிச் சீட்டுகள், பள்ளிக்குப் பிந்தைய தற்காப்புக் கலை வகுப்புகளுக்கான கராத்தே சீருடைகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது என் வேலை. ராபி அவர்களை காரை நோக்கி அவசரப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அவர்கள் விடுவித்துக்கொள்ளத் திமிறினாலும், நான் என் மகளையும் இரண்டு மகன்களையும் இறுக்கமாக அணைத்துக்கொள்கிறேன். “சீக்கிரம்! மணி அடிக்கப்போகிறது” என்று ராபி கத்துகிறார். அப்பொழுது, திடீரென்று எந்தத் திட்டமுமில்லாமல், நானும் கூட வர வேண்டும் என்று முடிவு செய்தேன். இன்னும் பைஜாமாவில்தான் இருக்கிறேன் என்றாலும், மின் பாதுகாப்பு வாயிலை ராபி திறக்கும்போது முன் இருக்கையில் தாவிக் குதித்தேன். இப்படி ஒரு வாழ்க்கை அமைந்திருப்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது.

பின்னர், நான் உடற்பயிற்சி வகுப்புக்குச் செல்வேன், இரவு உணவிற்கு ‘கோக் அவ் வின்’ எனும் பிரெஞ்சு உணவைச் சமைப்பேன். இதன்மூலம், இரவில் ராபிக்குப் (எங்கள் குடும்பத்தின் முதன்மைச் சமையல்காரர்) போதுமான ஓய்வு கிடைக்கும். ஆனால் முன்பு என்ன நடந்தது என்பதை ஆராயும் பணிக்கு முதலில் நான் திரும்ப வேண்டும். எனக்கு நானே இட்டுக்கொண்ட இந்தப் பணி ஒன்றும் வேடிக்கையானது அல்ல, ஆனால் இது அவசியமானது. விழித்திருக்கும் நேரத்தை ‘ஜூனோ’ என்ற என் பிரெஞ்சு புல்டாக் நாயுடன் கடற்கரையில் நடந்தோ, என் மகள் எல்பியைத் தோடு வாங்க அழைத்துச் சென்றோ, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக எங்கள் வீட்டை அளவுக்கு அதிகமாக அலங்கரிக்கத் தயாராகியோ கழிப்பது எளிதாக இருக்குமா? (ஒவ்வொரு ஆண்டும் என் கணவர் குறை கூறுவார். ஆனால் கிறிஸ்துமஸில் ஆடம்பரமாக அலங்கரிக்காமல் என்னால் இருக்கவே முடியாது.) ஆம், அது எளிதாகத்தான் இருக்கும். அதனால் நான் அந்த விஷயங்களையும் செய்கிறேன்.

ஆனால் இறுதியாக, என் வாழ்க்கையின் புதிர்களை விடுவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவுசெய்து விட்டேன். குழந்தையாக இருந்தபோது என்னால் அதைச் செய்ய முடியவில்லை, அதுவும் இந்தக் கதையின் ஒரு பகுதிதான். அத்தகைய சிந்தனைக்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. குறிப்பாக மோசமான சூழ்நிலைகளில் என்னைப் போன்ற ஒருவர் இருக்கும்போது, தங்களின் ஆற்றல் முழுவதையும் உயிர் பிழைப்பதில் மட்டுமே அவர்கள் செலவிட வேண்டியிருக்கும். நிகழ்காலத்தில், என் வாழ்க்கை இரண்டு விஷயங்களைச் சுற்றியே அமைந்துள்ளது: என் கணவர், குழந்தைகள் மீதான என் பக்தி, என்னைத் துஷ்பிரயோகம் செய்தவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாடு. சாண்டா கிளாஸ் பொம்மைகளையோ, பளபளப்பான அலங்காரத் தோரணங்களையோ அடுக்கி வைக்கும்போது நான் உணரும் நன்றியுணர்வை விவரித்து, இங்கிருந்தே, இந்த நிகழ்காலத்திலிருந்தே தொடங்க என் மனதின் ஒரு பகுதி விரும்புகிறது. ஆனால் என் கடந்த காலம், இப்போது காதுகொடுத்துக் கேட்கும் ஒரு சாட்சியரைத் தேடுகிறது. அது வெகு நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

எனவே, பதினைந்து வயதில், கையில் காசு இல்லாமல், காயம்பட்டு, தனிமையில் நான் எப்படி மியாமி வந்து சேர்ந்தேன்? அந்தக் கேள்விக்குப் பல பதில்கள் உள்ளன, ஆனால் 1998இல் நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், அவற்றையெல்லாம் விவரிப்பது மிகுந்த வலியைத் தந்திருக்கும். அதற்குப் பதிலாக, மிகச் சுருக்கமான விளக்கத்தையே  அளித்திருப்பேன் “நான் ஓடிப்போனேன்” என்று சொல்லியிருப்பேன். “ஆம். நான் ‘குரோயிங் டுகெதர்’ என்ற காப்பகத்திலிருந்து ஓடி வந்தேன்.”

தமிழில்: ஜி.ஏ. கௌதம்

            மின்னஞ்சல்: goodbadeditor@gmail.com

 

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.