தண்டனை: அன்பின் அடையாளமா?

வரைகலை: மு. மகேஷ்
காலையின் அன்றாடங்களிலிருந்து தப்பித்து, பள்ளி அமைந்திருக்கும் ஊருக்குச் செல்லும் பேருந்தில் அவசர அவசரமாக ஏறி இருக்கையில் அமர்ந்து மூச்சிரைக்கையில் கிடைக்கும் ஆசுவாசத்தை இப்போது நினைத்தாலும் குழந்தையின் உள்ளங்கைபோல் வெதுவெதுப்பான மென்மையுடன் தித்திக்கிறது. என்னளவில் திருவண்ணாமலை எனக்கு இனிப்பானதொரு ஊர். வாழ்வின் வெவ்வேறு அடுக்குகளை, அவஸ்தைகளைக் கற்பித்த பள்ளி. அங்குபோய் இறங்குகையில், பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் நின்றுகொண்டிருப்பார்கள்; அவர்களுக்குப் பிடித்த ஆசிரியர்களின் பைகளை வாங்கிக்கொள்ள; அதற்குப் போட்டியே நடக்கும். சில மாணவர்கள் ஏதாவது மலர்களையும் தருவர். சுடுகாட்டு மல்லியிலிருந்து சூரியகாந்தி வரையிலும் அவர்கள் அன்புடன் தரும் எந்தப் பூவாக இருந்தாலும் என் தல
