பயங்கரவாதத்தின் எளிமை
26/11 என அழைக்கப்படும் மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் பாதிப்புகளிலிருந்து தேசம் மீண்டெழுந்துவிட்டது. இருபதே நாட்களில் புதுப்பொலிவு பெற்று மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன தாக்குதலுக்குள்ளான தாஜ், டிரைடண்ட் ஓட்டல்கள். வாடிக்கையாளர்களை இன்முகம் கொண்டு வரவேற்பதற்காகப் பூங்கொத்துகளுடன் தாஜ் ஓட்டலின் வாசலில் டஜன் கணக்கான அழகுப் பதுமைகள் காத்திருக்கிறார்கள். மோப்ப நாய்களும் ஆயுதமேந்திய பாதுகாவலர்களும் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க நூற்றாண்டுப் பெருமைகொண்ட தாஜ் மீண்டும் திறக்கப்பட்டது மட்டும் தேசம் மீண்டெழுந்ததற்கான ஒரே அடையாளமல்ல. சென்னை கிரிக்கெட் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர் அடித்த சதம்கூட அதன் அடையாளம்தான். அந்த டெஸ்ட்டில் தான் அடித்த 100 ரன்களை மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அர்ப்பணிப்பதாக சச்சின் தன் மட்டையை உயர்த்திக் காண்பித்துச் சொன்னதைக் கேட்டுப் புல்லரித்துப்போயிருக்கிறது தேசம். கடந்த சில ஆட்டங்களில் சரியாக விளையாடாத சச்சின் அன்றைய போட்டியில் சதமடித்துப் பயங்கரவாதிகளுக்கு விடுத்த செய்தி ‘எங்களை யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதுதான்’ என்கிறார் எழுத்தாளர் ஷோபா டே.
கடந்த சில இதழ்களாகப் பயங்கரவாதம் குறித்த செய்திகளைப் பிரசுரித்து அலுத்துப்போன ‘அவுட்லுக்’ இந்த வாரம் நெருக்கடியான சூழலில் மகிழ்ச்சியாக இருப்பது குறித்த ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டுத் தனது வாசகர்களை ஆசுவாசப்படுத்த முற்பட்டிருக்கிறது. ஆனால் மன்மோகன் சிங்குக்கோ சோனியாவுக்கோ புதிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கோ அவ்வளவு சுலபமாகத் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும் எனத் தோன்றவில்லை. ‘நெருக்கடியான தருணங்களில்’ மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவுட்லுக்கில் குஷ்வந்த் சிங் தந்த யோசனைகள் உண்மையிலேயே நெருக்கடியான நிலையில் இருக்கும் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் பயன்படுமா என்ன? கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான சட்டத் திருத்தம், புதிதாக உருவாக்கப்பட்ட தேசியப் புலனாய்வு அமைப்பு போன்ற அரசின் ‘கடுமை’யான நடவடிக்கைகளால் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்பதை யாராவது நம்பிக்கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
தாஜ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தன் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அமைப்பைத் தானே உருவாக்கிக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளதன் மூலம் அரசின் பாதுகாப்பு அமைப்புகளின் மீது தனக்குள்ள நம்பிக்கையின்மையைத் தெளிவுபடுத்தியுள்ளார். டாடா பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தவிர அவர் சொன்ன செய்தியில் சிறப்பான அம்சம் எதுவும் இல்லை. நாட்டின் மிக முக்கியமான கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றுகூட இதுவரை தம் பாதுகாப்புக்கு அரசின் உதவியை நாடியதாகத் தகவல் இல்லை. எல்லா நிறுவனங்களுமே தமக்கான கமாண்டோப் படைகளைத் தாமே சொந்தமாக நிறுவிப் பராமரித்துவருகின்றன என்பது ரகசியம் அல்ல. கார்ப்பரேட் தலைவர்களும் நாட்டின் அதிமுக்கிய மனிதர்களில் பலரும் சிறிதாகவோ பெரிதாகவோ தமது சொந்தப் பாதுகாப்புப் படைகளை வைத்திருப்பவர்கள்தாம். குறைந்தபட்சம் அவர்கள் எல்லோருமே தம் சொந்தப் பாதுகாப்புக்காகத் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமம் பெற்றிருப்பவர்கள்.
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த 60 மணி நேரமும் துப்பாக்கியைத் தலையணைக்கு அடியிலேயே வைத்துக்கொண்டிருந்தாராம் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன். பச்சன் போன்றவர்களின் வீடுகளுக்குள் யாராலும் அவ்வளவு சுலபமாக நுழைந்துவிட முடியாது என்றாலுங்கூட பச்சன் பீதியுற்றிருந்திருக்கிறார். பாதுகாப்பு மிகுந்த தாஜ், ஓபராய் ஓட்டல்களுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கும் செய்திகளைத் தொலைக்காட்சியில் காண நேர்ந்த அவருக்குத் தன் வீட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சந்தேகம் எழுந்திருந்தால் அது இயல்பானதுதான்.
‘மும்பையின் மீதான போர்’ எனவும் ‘இந்தியாவின் மீதான தாக்குதல்’ எனவும் தலைப்பிடப்பட்டுத் தொகுத்து வழங்கப்பட்ட படக் காட்சிகளை நினைவுபடுத்திப் பாருங்கள். தாக்குதலுக்குள்ளானவை மும்பையின் தேர்ந்தெடுத்த சில பகுதிகள். தாஜ், ஓபராய் ஓட்டல்கள், நாரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட ஒன்பது இடங்கள். ஆனால் உங்களுடைய 14 அல்லது 21 அங்குலமுடைய தொலைக் காட்சிப் பெட்டியின் திரைக்குள் பெரும்பாலான தருணங்களில் உங்களுக்குக் காட்டப்பட்டுக்கொண்டிருந்தவை பற்றியெரியும் தாஜ் ஓட்டலின் அழகிய முகடும் அந்த ஓட்டலை ஆயிரக்கணக்கில் சூழ்ந்துநின்ற போலீசாரும் இந்திய ராணுவத்தின் கமாண்டோக்களும் மேஜர்களும் லெப்டினன்ட்களும் கவச வாகனங்களும் மட்டும்தாம். வெகு சில தருணங்களில் மட்டும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் தாக்குதலால் சிதறுண்ட பகுதிகளின் துண்டுப்படங்களும் நாரிமன் இல்லத்தின் வாசலைக் காண்பிக்கும் மங்கலான காட்சிகளும் தோன்றி மறையும். அரசியல்வாதிகளிடமிருந்தும் ஊடகவியலாளர்களிடமிருந்தும் சமூக, அரசியல் விமர்சகர்களிடமிருந்தும் பயங்கரவாதம் தொடர்பாகப் பெற்ற கருத்துகள் ஒளிபரப்பப்பட்டபோதும் பின்னணியில் தாஜ் ஓட்டலின் பற்றியெரியும் அந்த முகடு திரையில் தொடர்ந்து காட்டப்பட்டது. பதற்றத்துடன் காணப்படும் செய்தியாளர்கள் தாஜ் ஓட்டலின் எரியும் அந்த முகட்டைச் சுட்டிக்காட்டி இந்தியா அல்லது மும்பை பற்றி எரிந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ‘இந்தியாவின் மீதான தாக்குதல்’ என்னும் வாக்கியமும் ‘மும்பையின் மீதான தாக்குதல்’ என்னும் வாக்கியமும் அந்தப் படக்காட்சியின்மீது மாறிமாறி ஒளிர்ந்துகொண்டேயிருந்தது. இந்த வாக்கியங்களைக் கவனித்த, இந்தியத் தொலைக்காட்சிச் செய்தி அலை வரிசைகளின் உத்திகளையும் தந்திரங்களையும் பற்றிய விழிப்பு இல்லாத எவரும் முழு இந்தியாவுமே தாக்குதலுக்குள்ளாகிக் கொண்டிருந்ததாகவே கருதியிருப்பர்.
மும்பையிலேயே வசிக்கும் இந்தியரும் முன்னாள் ஆக்ஷன் ஹீரோவுமான அமிதாப் பச்சன் தன் வீடும் தானும் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாகக் கருதிக்கொண்டு, கைத்துப்பாக்கியைத் தலையணைக்கு அடியிலேயே வைத்தபடி (பயங்கரவாதிகளின் வருகைக்காகக்) காத்திருந்த காட்சி வேறொரு தருணமாயிருந்திருந்தால் கேலிச்சித்திரம் வரைவதற்கான ஒரு கருப்பொருளாக நம் கார்ட்டூனிஸ்டுகளுக்குப் பயன்பட்டிருக்கும்.
ஆனால் அது மோசமான தருணம். நாடு முழுவதும் பீதியுற்றிருந்தது. தாக்குதல் பற்றிய செய்தி வெளிவந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே நாட்டின் எல்லா முக்கிய ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லா முக்கிய ஓட்டல்களிலும் பார்களிலும் சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. வெளிநாட்டவர்கள் (குறிப்பாக அமெரிக்கர்கள்) இருக்கும் விடுதிகளும் குடியிருப்புப் பகுதிகளும் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டன. இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள சென்னையில்கூட அந்தப் பதற்றத்தை உணர முடிந்தது. முந்தைய நாள்வரை சாதாரணமாக நடமாடிக்கொண்டிருந்த சென்னை போலீசாரின் உடல்களில் ஒரு அசாதாரண விறைப்புத் தென்படத் தொடங்கியது. மக்கள் அன்றாடம் புழங்கும் திரையரங்குகள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், கோயில்கள், சர்ச்சுகள் முதலானவற்றில் அசாதாரணமான எந்தக் கெடுபிடிகளும் தென்படவில்லை. ஏனென்றால் 26/11 (உண்மையில் 11/26 என்றல்லவா இருந்திருக்க வேண்டும்!) தாக்குதல்கள் மேற்குறிப்பிட்ட எந்தவொரு இடத்திலும் நடைபெற்றிருக்கவில்லை அல்லவா?
என்ன ஒரு சமயோசிதம் பாருங்கள்! பயங்கரவாதம் குறித்த இதற்கு இணையான புரிதல் உலகின் வேறு எந்த மூலையிலாவது உள்ள காவல் துறையினருக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். மும்பைத் தாக்குதலுக்குள்ளான இடங்களின் பட்டியலில் ஒரு கோயிலோ சர்ச்சோ இருந்திருக்குமானால் அந்த 60 மணி நேரத்தில் நாட்டின் எந்த முக்கியமான கோயிலிலும் வழிபாடு நடத்த இந்தியக் காவல் துறை அனுமதித்திருக்காது! இந்த லட்சணத்தில் இருக்கின்றன நம் பாதுகாப்பு அமைப்புகளின் கோட்பாடுகள்.
உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் சொல்லியிருக்காவிட்டால் இந்தியக் கடலோரக் காவல் படையோ கப்பல் படையோ விழித்துக்கொண்டிருக்காது. தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 10 என அஜ்மல் சொன்ன தகவல் இந்திய ராணுவத்துக்கும் மும்பைக் காவல் துறைக்கும் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கும். போர் என மீடியாவின் வர்ணனைக்குள்ளான நவம்பர் 26 தாக்குதலில் அவ்வளவு குறைவான நபர்களே ஈடுபட்டிருக்கிறார்கள் என வெளிவந்துள்ள செய்தியின் நம்பகத்தன்மை குறித்து அருந்ததிராய் எழுப்பியுள்ள கேள்வியை அவர் பெரும்பாலும் பொதுக் கருத்துக்கு எதிரானவராகவே இருந்துவருகிறார் என்னும் காரணத்தைக் காட்டி அலட்சியப்படுத்திவிட முடியாது. அஜ்மலிடம் விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரிகள் குழு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 10 பேர் என ஏறக்குறைய உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களில் வந்த ‘செய்தி’ வேறுவிதமாக இருந்தது.
25க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் பயங்கர ஆயுதங்களுடனும் ஏராளமான வெடிகுண்டுகளுடனும் அவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்துசென்று தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் ‘அவை’ அறிவித்தன. பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா என்னும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் பாகிஸ்தான் அரசின் உளவுத் துறையான ஐஎஸ்ஐயால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்பதையும் அறிவிக்க மீடியாவுக்கு எந்த ஆதாரமும் தேவையாயிருக்கவில்லை.
மீடியா குடிகாரனின் நிலையில் இருந்தது. எடுத்த எடுப்பிலேயே மகாராஷ்டிர அரசின் தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரேயும் அவருடன் வந்த வேறுசில காவல் துறை உயர் அதிகாரிகளும் போலீசாரும் கொல்லப்பட்டதற்குப் பிறகு பயங்கரவாதிகள் குறித்த கட்டுக்கதைகளைப் பரப்புவதற்கு மீடியாவுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்திருந்தது. மும்பையின் ‘அடையாளச் சின்ன’மாக விளங்கும் தாஜ் ஓட்டலின் முகப்பைச் சூழ்ந்திருந்த புகைமண்டலமும் அதனருகே பதற்றத்துடன் பறந்து திரிந்த சாம்பல் வண்ணப் புறாக்களும் செய்திச் சானல்களின் காமிரா மேன்களுக்குப் போதையூட்டும் காட்சிகளாக இருந்திருக்க வேண்டும். ஒரு அற்புதமான வாய்ப்பை நழுவவிட்டுவிடக் கூடாது என்பது போல் அனைத்துச் செய்தியாளர்களும் தாஜ் ஓட்டலைச் சூழ்ந்திருந்தனர். தொகுப்பாளர்களின் குரல்களில் அவசரம் தென்பட்டது. ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த படக்காட்சிகளின் மீது EXCLUSIVE என்று போட்டுக்கொள்ள எந்தச் சானலுமே தவறவில்லை.
பரபரப்பான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. மகாராஷ்டிரத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே, என்கௌண்டர் கொலைகளுக்காகப் புகழ்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜய் சாலஸ்கர், கிழக்கு மும்பையின் காவல் துறை உதவி ஆணையரான அசோக் காம்தே, மேஜர் சந்தீப் உண்ணி கிருஷ்ணன் ஆகியோர் பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானது தாக்குதலுக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை அளித்தது. தாஜ் தவிர ஓபராய் ஓட்டலும் நாரிமன் இல்லமும் பயங்கரவாதிகளின் பிடிக்குள் வந்ததும் மீடியா உச்சகட்டப் பரபரப்படைந்தது. பன்னாட்டு வங்கியான எஸ் பேங்க் தலைவர், அவரது மனைவி, ஐரோப்பிய யூனியனையும் இந்தியாவையும் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர் கள், சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட மும்பையின் அதிமுக்கிய மனிதர்கள் பலரை பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்துக்கொண்டிருப்பதாகவும் ஓட்டல்களின் அறைகளுக்குள் சீரான இடை வெளியில் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் வந்த செய்திகள் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை, அவர்களது ஆயுதபலம் குறித்த மீடியாவின் கற்பனைகளைத் தூண்டிவிடுவதற்கும் பீதியை உருவாக்குவதற்கும் போதுமானவையாயிருந்தன. மும்பையின் மீதான போர் என்று அறிவிப்பதற்கோ இந்தியாவின் மீதான போர் என்று அறிவிப்பதற்கோ மீடியாவுக்கு இப்பொழுது எல்லா நியாயங்களும் உருவாகியிருந்தன.
உடனடியாகப் பல புதிய சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்வை நினைவூட்டும் விதமாக அந்தத் தாக்குதலுக்கு 26/11 என்னும் பெயர் சூட்டப்பட்டது. செப்டம்பர் 11 என்னும் பொருளில் சூட்டப்பட்ட அந்தப் பெயரை இந்திய ஊடகங்கள் தலைகீழாக மாற்றிப் பயன்படுத்தியிருந்தன. ‘நவம்பர் 26’ என்பதோ ‘11/26’ என்பதோ எந்த விதத்திலும் அமெரிக்க நிகழ்வை நினைவூட்டுவதாய் இருக்காது என்பதில் மீடியா தெளிவாக இருந்தது. ‘கறுப்பு வெள்ளி’ என அழைக்கப்படும் மீயூனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேல் விளையாட்டு வீரர்களின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நினைவூட்டும் விதத்தில் இந்த புதன்கிழமையைக் ‘கறுப்பு புதன்’ என்று அழைத்தார்கள். இவை ஓசைநயத்துக்காகச் சூட்டப்பட்ட வெறும் பெயர்கள் அன்று. இந்த நினைவூட்டல்களுக்குப் பின்னால் இந்திய அரசும் அரசியல்வாதிகளும் என்ன செய்ய வேண்டும் என்னும் தெளிவான குறிப்புகள் இருந்தன. லஷ்கர் அமைப்பைத் தாலிபானாகவும் பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானாகவும் இந்தியாவை அமெரிக்காவாகவும் அடையாளப்படுத்திய குறிப்புகள் அவை. இதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இந்திய அரசுக்கு வேறு யாரும் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
போர் குறித்த உரையாடல்களை உடனடியாகத் தொடங்கியது மீடியா. மீட்பு நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும்பொழுதே வெளியுறவு அமைச்சகத்திலிருந்து ‘யாரோ’ தொலைபேசி மூலம் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் குரலில் பாகிஸ்தான் பிரதமர் சர்தாரியிடம் போர் தொடுப்பதாக ‘மிரட்டி’ய செய்தியைத் தொடர்ந்து நிலைமை தீவிரமடைந்தது. இதே போன்ற ஒரு தொலைபேசித் தகவல் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் போனதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாகப் பாகிஸ்தானை எச்சரித்ததாகவும் வந்த தகவல்களின் பின்னால் உள்ள உண்மை இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆக தாக்குதல் நடந்துகொண்டிருக்கும்பொழுதே பாகிஸ்தான் தன்மீது ‘திணிக்க’ப்படும் யுத்தத்தை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது.
பிரதமர் மன்மோகன் சிங்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் பட்டுக்கொள்ளாமலிருந்ததற்கு அவர்களுக்கே உரியதாகச் சொல்லப்படும் இயல்பான மந்தத் தன்மையை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. அவர்கள் ஒருவகையான நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியிருந்திருக்கலாம். 27ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த வாக்குப் பதிவு குறித்த கவலையிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை முற்றாக விடுவித்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. பயங்கரவாதத்தின்பால் மென்மையான அணுகுமுறையைக் கடைபிடிப்பதான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த காங்கிரஸ் கட்சிக்கு மும்பை நிகழ்வுகள் கலக்கத்தை ஏற்படுத்தாமலிருந்திருக்க முடியாது. சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் கிடைத்த தருணத்தை பாஜக சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. பயங்கரவாதம்தான் நம் முன் உள்ள முக்கியப் பிரச்சினை என உடனடியாக அறிவித்தது பாஜக. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயங்கரவாதத்திடம் தோல்வியடைந்துவிட்டது என மத்தியப் பிரதேசத்தில் வாக்குப் பதிவு நடந்துகொண்டிருந்தபோதே மாறிமாறி அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள் அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள்.
ஆனால் அடுத்த வாரத்தில் தில்லி, ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பொழுது காங்கிரசால் நிலைமையை ஓரளவுக்கு எதிர்கொள்ள முடிந்திருந்தது. 485 என்எஸ்ஜி கமாண்டோக்கள், மும்பைக் காவல் துறையைச் சேர்ந்த 400 போலீசார், கடற்படையின் மூன்று யூனிட்டுகள், இந்திய ராணுவத்தின் ஆறு பட்டாலியன்கள் எனக் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு வீரர்களைக் கொண்ட மீட்புப் படை சுமார் 60 மணி நேரம்வரை போராடி 10 பயங்கரவாதிகளில் 9 பேரைச் சுட்டுத் தள்ளவும் ஒரு ஆளை உயிரோடு பிடிப்பதற்கும் முடிந்திருந்ததல்லவா? அந்தச் ‘சாதனை’யை தேசம் கொண்டாடிக்கொண்டிருந்தது.
தாஜ், ஓபராய் ஓட்டல்களிலிருந்தும் நாரிமன் இல்லத்திலிருந்தும் கமாண்டோக்கள் விடைபெற்ற பொழுது அவற்றின் முன்னால் குழுமியிருந்த மக்கள் பூச்செண்டு கொடுத்து அவர்களை வாழ்த்தி வழியனுப்பினர். ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் வெற்றியைக் குறிக்கும் விதமாக இரட்டை விரல்களைக் காண்பித்தனர். வெற்றியின் குதூகலமும் இழப்பின் துயரமும் இணைந்து வெளிப்பட்ட தருணம் அது. மக்கள் உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். பாகிஸ்தான்மீது போர் தொடுக்குமாறு ஆவேசத்துடன் முழங்கிக்கொண்டிருந்தனர். போர் மூளக்கூடுமா என்னும் கேள்வியை எழுப்பி அது தொடர்பான விவாதங்களை நடத்தத் தொடங்கியிருந்தது ஊடகம்.
கொல்லப்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். தேசியக் கொடி போர்த்தப்பட்ட உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் அரசியல் தலைவர்கள் தங்கள் தேசப்பற்றை நிரூபித்துக்கொண்டிருந்தார்கள். செயல்படாத உள்துறை அமைச்சர் நீக்கப்பட்டு அந்தப் பதவியில் ‘திறமை’யான இளம் தலைவர் அமர்த்தப்பட்டார். சமீபத்திய நிதி நெருக்கடிகளும் பணவீக்கமும் விலைவாசி உயர்வும் அவரது முந்தைய துறையின் மீது வைத்திருந்த கடுமையான விமர்சனங்களை இப்பொழுது நினைவுகூர்வதற்குக்கூட ஆளில்லை.
ராஜஸ்தானிலும் தில்லியிலும் பெற்ற தேர்தல் வெற்றிகளால் உற்சாகமடைந்த காங்கிரஸ் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கியது. தாக்குதல்களும் மீட்பு நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில்கூட உணர்ச்சிவசப்படாமல் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதில் ஒத்துழைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு ராஜியரீதியில் வேண்டுகோள் விடுத்த பிரதமரும் அயலுறவுத் துறை அமைச்சரும் பிறகு தம் குரலை உயர்த்திக்கொண்டார்கள். உயிரோடு பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மலைத் துருப்புச் சீட்டாக்கி நடைபெறும் அரசியல் விளையாட்டுகளைக் கண்டு ஒடுங்கிக்கிடக்கும் பாஜக அரசிற்குத் தன் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. தேசபக்தியில் பாஜகவிற்குத் தாங்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட காங்கிரசுக்கு இப்பொழுது சரியான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
ஊடகங்களின் சொல்லாடல்களைத் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டு பாகிஸ்தானுடன் மற்றொரு போருக்கு மன்மோகன் சிங் அரசு ஆயத்தமாகிறதோ என்று தோன்றுகிறது. 9/11க்கு முன்பு ஜார்ஜ் புஷ்ஷுக்கு இருந்த அரசியல் நெருக்கடிகளை விடவும் தீவிரமானவை தற்போதைய காங்கிரஸ் அரசின் நெருக்கடிகள். அப்போது கேலிக்குரிய மனிதராகத் தென்பட்ட அமெரிக்க அதிபரை ஆப்கன் போர் வெற்றி வீரராக்கியது. மன்மோகன் புஷ் அளவுக்குக் கேலிசெய்யப்பட்டவர் அல்ல என்றாலும் அது அவரது நிலையை எந்த விதத்திலும் மேம்படுத்திவிடக்கூடியதல்ல.
மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அரசிடம் மார்தட்டிக் கொள்ள எதுவுமே இல்லை. அவசரமாகச் சாதிப்பதற்கு பாகிஸ்தான்மீது போர் தொடுப்பதைத் தவிர வேறு குறுக்கு வழிகள் எதுவும் மன்மோகனிடம் இருப்பதாகவும் தெரியவில்லை. பாகிஸ்தான் ராணுவத் தளபதி வேண்டுமானால் இந்தியாவை ஒரு கை பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் நடத்திய போர்களில் பெற்ற மிகச் சுலபமான வெற்றி, அந்நாட்டின் மீது இன்னொரு யுத்தத்தை நடத்திப்பார்ப்பதற்கு இந்தியாவைத் தூண்டக்கூடும். யுத்தம் இந்தியப் பொதுச் சமூகத்தின் விருப்பமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. அந்த 60 மணி நேரத்தில் இந்தியச் செய்திச் சேனல்களுக்கு அவற்றின் பார்வையாளர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளில் ஒன்றுகூட யுத்தத்திற்கு எதிரானதாக இல்லை.
பயங்கரவாதப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவும்படி அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் கோரிக்கைகளை முன்வைத்துக்கொண்டிருந்த அரசு, இப்பொழுது நேரடியாகச் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. சர்வதேசச் சமுதாயம் இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானிடம் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்தபோதும் ‘நாங்களே பார்த்துக்கொள்வோம்’ எனச் சவால் விட்டிருக்கிறார் வெளியுறவு அமைச்சர். எல்லையில் இரு நாட்டு ராணுவங்களும் போர்ப் பயிற்சி பெறத் தொடங்கியிருக்கின்றன. மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களைத் தருமாறு அப்பாவித்தனமாக வலியுறுத்திக்கொண்டிருக்கும் சர்தாரிக்கு இந்தியா ஒருபோதும் பதிலளிக்கப் போவதில்லை. பிடிபட்டுள்ள பயங்கரவாதி அஜ்மல் இந்திய விசாரணை அதிகாரிகளிடம் அளித்துள்ளதாகச் சொல்லப்படும் வாக்குமூலம் தவிர வேறு உருப்படியான ஆதாரங்கள் எதுவும் இல்லாதது மட்டும் அதற்குக் காரணமல்ல. சொல்லப்போனால் அஜ்மலின் வாக்கு மூலங்கள் நம்மைக் கேலிசெய்பவை.
தாக்குதல், அதன் பின்னணி குறித்து அஜ்மல் சொன்ன தகவல்களைவைத்து இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் சிருஷ்டித்துள்ளக் கதையாடல் நமது பாதுகாப்பு குறித்தும் நமது புலனாய்வு அமைப்புகள், ராணுவம் குறித்தும் நாம் கொண்டுள்ள கற்பனைகளுக்கு எதிரானவையாக இருப்பதுதான் விநோதமான நகை முரண்.
அஜ்மலின் கூற்றுப்படி அவர்களின் திட்டம் மிக எளிமையானது. பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் அமைப்போ அல்லது வேறு எதாவது ஒரு பயங்கரவாத அமைப்போ வறுமையில் வாடும் சில இளைஞர்களை, சிறுவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. ஐஎஸ்ஐ உதவியோடு அவர்களுக்கு இந்தியாவை வெறுப்பதற்குக் கற்றுத் தருகிறது. ஒரு முகாமில்வைத்து ஆயுதப் பயிற்சி அளிக்கிறார்கள். பிறகு அவர்களிலிருந்து 10 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஆளுக்கொரு நவீனரகத் தானியங்கித் துப்பாக்கியும் சுமக்கத்தக்க அளவுக்குக் கையெறி குண்டுகளையும் துப்பாக்கி ரவைகளையும் வழங்கிக் கராச்சியிலிருந்து கப்பலேற்றி அனுப்புகிறார்கள். வரும்வழியில் தென்பட்ட படகிலிருந்த மீனவர்களைக் கொன்றுவிட்டு அதைக் கடத்திக்கொண்டு எந்தத் தடங்கலுமில்லாமல் சுற்றுலாப் பயணிகளைப் போல மும்பைக்கு வந்துசேர்கிறார்கள். பத்துப் பேர் மூன்று அல்லது நான்கு குழுக்களாகப் பிரிந்துசென்று தாக்குதல் நடத்தி ஓரிரு மணி நேரத்திற்குள் மும்பையை அதாவது ‘இந்தியா’வைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். 200 உயிர்களைப் பழி வாங்கிய, 300க்கும் அதிகமானவர்களைக் காயப்படுத்திய இந்தியாவின் மீதான மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இப்படி ஒரு சராசரித் தமிழ் சினிமாவின் திரைக்கதை அளவுக்கு எளிமையானதாக இருந்திருக்க முடியுமா? அப்படி இருந்திருக்க முடியுமென்றால் நம்மைக் காப்பாற்ற ‘அந்த ஆண்டவனால்கூட முடியாது’.
மும்பை நகரம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகக்கூடும் என மகாராஷ்டிரா அரசை உளவுத் துறை ஏற்கனவே எச்சரித்திருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் அதை ‘வழக்க’மான ஒன்றாக எடுத்துக்கொண்டு விட்டதாம் மகாராஷ்டிரா காவல் துறை. கடலோரக்காவல் படைக்கு இந்த விவரமே தெரியவில்லை. தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்தவுடனேயே சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு விரைந்துசென்று விட்டில்களைப் போலப் பலியான கார்கரேயுக்கும் அவருடன் சென்ற காவல் துறையினருக்கும் சூழலின் பயங்கரம் குறித்த எந்த முன்னெச்சரிக்கையும் தரப்பட்டிருக்கவில்லை. ஒரு பயங்கரவாதி உயிரோடு பிடிபட்டதை ‘நல்லவேளை’ என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் தாஜ், ஓபராய் ஓட்டல்களுக்குள்ளும் நாரிமன் இல்லத்திலும் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை தெரியாமல் மேலும் சில நாட்கள் ‘முற்றுகை’யை நீடித்திருக்க வேண்டிய கட்டாயம் முப்படைக் கமாண்டோக்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அஜ்மல் பிடிபட்டது மற்றொரு வகையில் ‘நல்லவேளை’ அல்ல. நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகளை முழுமையாகக் கண்டறிவதற்கான உழைப்பை மிச்சப்படுத்துவதற்கு நம் காவல், புலனாய்வு அமைப்புகளுக்கு உதவியிருக்கிறது அந்த ‘வாக்குமூலம்’. தாக்குதல் திட்டத்தில் உள்நாட்டில் இயங்கும் வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா, உயிருடனும் பிணமாகவும் பிடிபட்ட பத்துப்பேரைத் தவிர்த்து யாராவது தப்பிச் சென்றிருக்கிறார்களா, அவர்களோடு இந்தியாவுக்கு வந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்களது திட்டம் என்ன, இன்னும் என்னென்ன அபாயங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன என்பன போன்ற இயல்பான சந்தேகங்கள் காவல் துறைக்குத் தோன்றியிருக்கும். அவை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுத் தற்செயலாகவேனும் நமக்குச் சில தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கும்.
ஆனால் அரசு அஜ்மலின் வாக்குமூலத்தை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நம்புகிறது. பயங்கரவாதத்தின் வேறு பரிமாணங்களைப் பற்றி விவாதிப்பது பல சங்கடமான கேள்விகளுக்கான கச்சாப்பொருளாகிவிடக்கூடும் என அரசு தயங்குகிறதோ என்னும் கேள்வி எழுகிறது. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம், அதன் பின்விளைவான தீவிரவாத இயக்கங்கள், கோத்ரா ரயில் எரிப்பு, அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட படுகொலைகள், சரி செய்யப்பட முடியாத அளவுக்குச் சீர்குலைந்து போயிருக்கிற மத நல்லிணக்கம், மலேகான் குண்டு வெடிப்புச் சதியில் பங்குகொண்ட ராணுவ அதிகாரிகள், தவிர தீர்க்கவே முடியாத தாகத் தென்படும் காஷ்மீர்ச் சிக்கல்கள் என நாம் எதிர்கொள்ள, பதிலளிக்கத் தயங்கும் பல சங்கடங்கள் இருக்கின்றன.
இவற்றுக்குத் தீர்வுகாண நாம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். தொலைநோக்குடனும் அர்ப்பணிப்புடனும் கூடிய உழைப்பு. எல்லாத் தரப்பினருமே எதையாவது விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். அது சவாலானது, நடைமுறைப்படுத்துவது கடினமானது. பாஜகவால் இஸ்லாமிய அபாயம் என்னும் ஒரு மந்திரச் சொல் இல்லாமல் காங்கிரசுக்கு மாற்றான பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்க முடியுமா என்னும் கேள்வி புறக்கணிக்கத்தக்கதல்ல. ராமரை அக்கட்சி தன் அரசியல் செயல்திட்டத்திலிருந்து விலக்கிவைக்க முடியும் என யாராவது கனவுகாண முடியுமா? அக்கட்சியின் சமீபத்திய சேதுக் கால்வாய் எதிர்ப்பு அரசியல் இதற்கு நல்ல உதாரணம். காங்கிரசுக்கும் இப்படி விட்டுக்கொடுக்க முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன. எதிரும்புதிருமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளோடு கூட்டுச்சேர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அதற்குப் பல முகங்கள் தேவைப்படுகின்றன. அவற்றில் எந்த ஒன்றையும் அதனால் விட்டுக்கொடுக்க முடியாது. நாட்டின் தேசிய விடுதலை இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய கட்சிக்கென்று இன்று எந்தத் தனித்துவமும் இல்லை. பாஜகவிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கும் கட்சிக்கு அஜ்மலின் வாக்குமூலம் ஒரு வரப்பிரசாதம்தான்.
பயங்கரவாதத்திற்கெதிரான தொலைநோக்குடன் கூடிய நீண்டகாலத் திட்டத்திற்குப் பதிலாக, காங்கிரஸின் முன்னால் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது பாகிஸ்தான் மீதான ஒரு அதிரடி நடவடிக்கை, சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு தாக்குதல், பயங்கரவாத முகாம்களை அழிப்பது என்னும் பெயரால் மேற் கொள்ளப்படும் ஒரு குறுகியகால யுத்தம். அது மன்மோகனுக்கோ சோனியாவுக்கோ 9/11க்குப் பிறகான ஜார்ஜ் புஷ்ஷின் தோற்றத்தை அளித்துவிடும். நான்கே மாதத்தில் பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் ஒரு கட்சிக்குச் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு துருப்புச் சீட்டாக அது இருக்கும். தவிர அந்த யுத்தத்தை, பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சியாலும் விமர்சிக்க முடியாது. அத்வானி எதை வலியுறுத்திவருகிறாரோ அதைச் செய்வதற்கான வாய்ப்பு மன்மோகனுக்குக் கிடைத்திருக்கிறது. பின்விளைவுகள் மோசமாக இருக்கலாம்.
பாகிஸ்தானில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் ஜனநாயக சக்திகளுக்கு இந்த யுத்தம் சாவுமணி அடித்துவிடும். அது தொலைநோக்கில் இந்தியாவின் நலனுக்கு எதிராக இருக்குமா என்பதைப் பற்றி இப்போது யாரும் விவாதிக்கப்போவதில்லை. ஈராக்கைப் போலவோ ஆப்கானிஸ்தானைப் போலவோ பாகிஸ்தானைச் சிதறடிப்பது இந்தியாவின் ராணுவத்துக்குப் பெரிய சவால் அல்ல. ஆனால் அதன் பின்விளைவுகள் அபாயகரமானவை. அணுஆயுதங்களை வைத்துள்ள இருநாடுகளுக்கிடையே நடைபெறக்கூடிய எந்தவொரு யுத்தமும் விரும்பத்தக்கதல்ல. வேறு வழியில்லாமல் போகும்போது ஏதாவது ஒரு நாட்டின் ராணுவத்துக்கு அவற்றைச் சோதித்துப் பார்க்கும் முட்டாள்தனமான யோசனை உதிக்கக்கூடும். தவிர, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட பழி நிறைந்த ஓர் அண்டை நாடு இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதத்தையும் தரமுடியாது. ஓர் அதிபராக ஈராக்கில் தன் கடைசிச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கிடைத்த வரவேற்பு நினைவிருக்கிற தல்லவா? அவர்மீது தன் ஷுக்களைக் கழற்றி வீசியவர் ஒரு பயங்கரவாதியோ ராணுவ வீரரோ அல்ல. அந்தப் பத்திரிகையாளர் இன்று ஈராக்கின் கதாநாயகன் ஆகிவிட்டார். அவரது ஷு 32 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது ஜார்ஜ் புஷ்ஷின் மீதான அபிமானத்தினால் அல்ல. அமெரிக்க அதிபர்களின் பாதுகாப்புக்கு அதன் ராணுவம் மட்டும் போதாது என்பதைத்தான் அந்தப் பத்திரிகையாளர் உணர்த்தியிருக்கிறார்.
தன்மீதான தாக்குதலை புஷ் புன்சிரிப்புடன் எதிர்கொண்டாராம். ஏதோ ஒருவகையான ஜோக் அடிக்கவுங்கூட புஷ்ஷுக்கு முடிந்திருக்கிறது. புன்னகைக்கத் தெரியாதவர் எனப் பெயரெடுத்திருக்கும் நம் பிரதமருக்கு அவரைப் போல் ஜோக் அடித்துக்கொண்டிருக்க முடியாது. யுத்தம் கிரிக்கெட் விளையாட்டைப் போன்றதல்ல. ஒரு சதத்தின் மூலம் பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கப் பிரதமர் கிரிக்கெட் வீரரும் அல்ல. தற்போதைய சூழலை அவர் பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும். பொதுவாகவே உணர்ச்சிவசப்படாதவரான மன்மோகன் நெருக்கடியான இந்தத் தருணத்தில் விவேகத்துடன் நடந்துகொள்வது மிக முக்கியம்.
ஐநா பாதுகாப்புச் சபை ஏற்கனவே பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் சிலவற்றைத் தடைசெய்திருக்கிறது. சர்வதேசச் சமுதாயத்தின் கண்டனங்களுக்குள்ளாகியிருக்கிற பாகிஸ்தானை நிர்ப்பந்திப்பதற்கான வாய்ப்புகளை இந்தியா முற்றாக இழந்துவிடவில்லை. தனது நட்பு நாடான பாகிஸ்தான் மீது இந்தியா தன்னிச்சையாகப் போர் தொடுப்பதை அமெரிக்கா நிச்சயமாக அனுமதிக்காது. பயங்கரவாத முகாம்களை அழிக்குமாறும் இந்தியா அளித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதிகளின்மீது நடவடிக்கை எடுக்குமாறும் பாகிஸ்தானை வற்புறுத்தும் அமெரிக்காவின் நோக்கம் நிச்சயமாக சமாதானமாக இருக்க முடியாது. நவம்பர் 26ஐ 26/11 என்று அழைத்துக்கொள்வதை அமெரிக்கா ஆட்சேபிக்காமலிருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் மன்மோகன் புஷ்ஷாக மாறுவதை அனுமதிக்காது. அப்படி அனுமதிப்பது தன் அரசியல் பொருளாதார நலன்களுக்கு எதிரானது என்பதை அமெரிக்கா நிச்சயம் உணர்ந்திருக்கும்.
இருநாடுகளுக்குமிடையே மத்தியஸ்த்தனாகச் செயல்படுவதற்கு அமெரிக்கா எப்பொழுதுமே தயாராக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானைக் கண்டிப்பதற்கு அது வழக்கத்தைவிடக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். தானே இந்தியாவின் பட்டியலில் உள்ள தீவிரவாதிகளில் சிலரைக் கைதுசெய்து விசாரிக்கலாம். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவும் செய்யலாம். தண்டனை வழங்கலாம். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ள பயங்கரவாத அபாயத்திற்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பது பேதமை. ஏற்கனவே இஸ்லாமியச் சமூகத்தின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் அமெரிக்காவின் யோசனைகளை ஆதரிப்பது இந்தியாவின் நலன்களுக்கு ஒருபோதும் பயனளிக்கக் கூடியதல்ல.
பயங்கரவாதத்தை இந்தியா தன் சொந்த வழியில் எதிர்கொள்ள வேண்டும். உள்நாட்டில் நிலவும் பயங்கரவாதப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் விவேகம்தான் சரியான தீர்வு. ஆங்கிலச் செய்தி சானல்கள் சொல்வது போல இந்தியா, தாஜ் அல்ல. ஒருசில கமாண்டோக்களையும் மோப்ப நாய்களையும் கொண்டு இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. ஒரு ஓட்டலின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வெவ்வேறானவை.
பயங்கரவாதத் தடைச் சட்டங்களை இயற்றுவதை விடவும், பயங்கரவாதக் குற்றங்களை விசாரிப்பதற்கான தனி அமைப்பை உருவாக்குவதைவிடவும் முக்கியமான பல பணிகள் அரசுக்கு இருக்கின்றன. 90களுக்குப் பிறகு அச்சுறுத்தலுக்குள்ளாகித் தனிமைப்பட்டுக்கிடக்கும் இஸ்லாமியச் சமூகத்தின் காயங்களை ஆற்றுவதற்கும் அவர்களை மையநீரோட்டத்தில் இணைப்பதற்கும் முயல வேண்டும். தேசப் பிரிவினையின்போது இதைத் தம் தாய்நாடாகக் கருதி நம்பிக்கைவைத்து இந்த நாட்டிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் 15 கோடி இஸ்லாமியர்களுக்கு இது அவர்களுடைய நாடு என்னும் உத்தரவாதத்தை அளிப்பதும் பயங்கரவாதத்தின் புகலிடமாக மாற்றப்பட்டிருக்கும் காஷ்மீர்ச் சிக்கல்களுக்கு நிரந்தரமான தீர்வைத் தேடுவதும் எல்லா வற்றையும்விட முக்கியமானது.