சில தேதிகளும் சில பயங்கரங்களும்
மும்பாய்த் தாக்குதல் பற்றி இங்கிலாந்து ஊடகங்கள் செய்த பதிவுகளை வைத்துச் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இப்பொழுது எந்தப் பயங்கரவாதத் தாக்குதல் ஏற்பட்டாலும் அது எங்களின் 9/11 என்று சொல்வது பழக்கமாகிவிட்டது. மும்பாய்த் தாக்குதலும் இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்காவின் 9/11 தேசிய வேதனைகளின் திருவுருவாக (icon) மாற்றப்பட்டிருக்கிறது. இரட்டைக் கோபுரங்கள் முதன்முதலாகத் தாக்கப்பட்டபோது அமெரிக்காமீதும் அந்தநாட்டு மக்கள்மீதும் அனுதாபமும் பரிவும் இருந்தன. ஆனால் இன்று 9/11இன் புலப்பதிவு (perception) மாறிப்போய் இருக்கிறது. அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பும் பிற நாடுகளின் அரசியலில் அமெரிக்க இராணுவத்தின் குறுக்கீடுகளும் குந்தனமே காம்பும் ஆபூ கிராப் சித்திரவதைகளும் ஆரம்பத்தில் அமெரிக்காமீது இருந்த ஆதரவும் இரக்கமும் படிப்படியாகக் குறையக் காரணமாய் இருந்தன. துயரடைந்தவர்களின் அடையாளமாகவிருந்த 9/11 இன்று பழிவாங்குதலின் சின்னமாகவும் அமெரிக்க இறையாண்மையின் குறியீடாகவும் மாறிப்போயிருக்கிறது. இன்றைய மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் 9/11 காயப்பட்டவர்களின் கௌரவச் சின்னமல்ல. இந்தக் கறை படிந்த முத்திரை இந்தியாவிற்குத் தேவையில்லை.
மும்பாய்த் தாக்குதலை வர்ணிப்பதற்கு உகந்த உவமை Hurricane Katrina என்றுதான் எனக்குப்படுகிறது. இந்தப் புயல் நியூ ஒலியன்சைத் தாக்கியபோது எப்படி அமெரிக்க உள்கட்டமைப்புகள் தயாராகவில்லையோ அதே மாதிரி மாகாண, மத்திய அரசுகள் இரண்டுமே இந்த எதிர்பாராத தாக்குதலுக்குத் தயாராக இல்லை. காவல் துறை, உளவுச் சேவை இந்தத் தாக்குதல் பற்றிய அறிகுறிகளைப் பரிசீலனைக்கு எடுத்ததாகத் தெரியவில்லை.
மும்பாய் இதற்கு முன்பு பலதடவைகள் தாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத்தடவை அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நகர்ப்புற, சரளமாக ஆங்கிலம் பேசும் மத்தியதர வர்க்கத்தினர், பங்குச்சந்தை, கூட்டுநிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள். இதுவரை அரசியல் அருவருப்பான காரியம் என்று ஒதுங்கி இருந்தவர்களிடையே ஒரு விரைப்பான அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் அரசிடம் கேட்கும் பலத்த பாதுகாப்பு நியாயமானதாகத் தோன்றினாலும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள் உணர்ச்சிவசப்பட்டுக் குறுகியகால அரசியல் ஆதாரங்களுக்காக எடுத்த நடவடிக்கைகள், இயக்கிய சடங்குகளையும் கூர்ந்து கவனிப்பது நல்லது. அமெரிக்கா பிரகடனப்படுத்திய Patriot Act மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஏற்படுத்திய Homeland security, பிரித்தானிய அரசின் 28 நாள் விசாரணையில் தடுப்புக் காவல் சட்டங்களினால் அமெரிக்கருக்கும் ஆங்கிலேயருக்கும் சில மனித உரிமைகள் மறுக்கப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. ஆங்கிலத் தொழில் கட்சி ஆண்டு மாநாட்டில் தலைமைப் பீடத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய ஒரு வயோதிகரைப் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ்தான் கைதுசெய்தார்கள். அரசு அமலாக்கும் பாதுகாப்புச் சட்டங்கள் தீவிரவாதிகளைப் பாதிக்கப் போவதில்லை. சாதாரண மக்களுக்குத்தான் அவை சிரமத்தையும் தொந்தரவையும் தரும். எல்லைக் கட்டுப்பாடுகள் இன்னும் கூர்மையாக்கப்பட வேண்டும் எனச் சொல்லுகிறவர்கள் பாதுகாப்பு என்ற பெயரால் விமான நிலையங்களில் முதியவர்கள் படும் இடைஞ்சல்களைச் சற்றுக் கவனிக்க வேண்டும். சட்டங்கள் அரசுக்கு அதிகப்படியான அதிகாரத்தைத் தருமே தவிர, தீவிரவாதிகளின் மூர்க்கத்தனத்தைப் பலவீனப்படுத்தப்போவதில்லை. தனிமனித உரிமைகள் மிகக் கஷ்டப்பட்டுக் கிடைத்தவை. அரசு அதைப் பறித்துவிட்டால் மீண்டும் பெற்றுக்கொள்வது இலேசான காரியமல்ல.
கடைசியாகப் பயங்கரவாதத்தின் மீது போர் என்ற சொற்றொடரை அரசியல் சொல்லாடலிலிருந்து நீக்கிவிடுவதுதான் நல்லது என்று நினைக்கிறேன். பண்புப் பெயருக்கு எதிராகப் போர் தொடுத்து வென்றதாகச் சரித்திரத்தில் உதாரணங்கள் இல்லை. தீவிரவாதப் பிரச்சினைக்கு விடை எல்லோருக்கும் தெரியும். நிரந்தரத் தீர்வுக்கு மானிடவியலில் பாண்டித்தியம் தேவையில்லை. தீவிரவாதம் நீடித்தலைத் தூண்டிவிடும் அரசியல், பொருளாதார, மத, கலாச்சாரக் காரணங்களைக் கண்டறிய வேண்டும். இது நீண்ட நாள் வேலை. இதில் ஈடுபட அரசியல்வாதிகளுக்குப் பொறுமையும் இல்லை, அதைவிட அரசியல் மனத்திட்பமும் இல்லை.