சேதுக் கால்வாய்: பரிதவிக்கும் மீனவர்கள்
கடலின் துயரங்கள் கரையை எட்டுவதில்லை. மன்னார் வளைகுடாப் பகுதி மீனவர்களைப் பொறுத்தவரை இது பருண்மை. தீவுகளாகிப்போன இந்தியக் கடலோரச் சமூகம் அன்றிலிருந்து இன்றுவரை முகத்தைக் கடலுக்கும் முதுகை நிலத்துக்கும் காட்டி நிற்கிறது. கடற்கரையின் அவலக்குரல் நிலம் சார்ந்த மக்களுக்குக் கேளாத் தொலைவு. நிலத்தோடு உரையாடுவது கடலோர சமூகங்களுக்குக் கைகூடாக் கனவு.
காற்றில் தவழும் நீலக் கம்பளமாய்ப் புன்னகைத்து நிற்கிறது கடல். ஆழ்கடலின் ஓயாத நீரோட்டங்களும் அலைக்கழிப்புகளும் போராட்டங்களும் கண் மறைந்து கிடக்கின்றன. கடலின் மொழியை மீனவன் அறிந்திருக்கிறான். மோதல்கள் எழுந்தாலும் சிறுபொழுதில் அன்னையுடன் பிள்ளைபோல் சமரசமாகிவிடுகிறான். ஆனால் நிலமும் நிலம் சார்ந்த மாற்றங்களும் ஏற்படுத்தும் தாக்கங்களை அவனால் தாங்கி நிற்க முடியவில்லை. முதுகில் அடிப்பதற்கும் வ