இரண்டு தலைகளுடன் ஒரு பயணம்
நாட்டின் அரசியல், பண்பாடு, வளர்ச்சி போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் குழப்பவாதிகள் ஒரு சீரான நிலையில் இயங்கிக்கொண்டு வருகிறார்கள். அரசு நிர்வாக முறைகளிலும் விழிப்புணர்வு மங்கிவருகின்றது; கடந்த சில வாரங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற சம்பவங்களைப் பெரிய பட்டியலாகத் தயாரிக்க முடியும்.
-
2013 டிசம்பர் மாதம் புதுடெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவத்தில்
ஈடுபட்ட குற்றவாளி மகேஷ்சிங்கின் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள்
· முகேஷ்சிங்கின் பேட்டி அடங்கியுள்ள ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்திற்கு இந்திய அரசு விதித்துள்ள தடை
· மகாராஷ்டிரா, ஹரியானா அரசுகள் மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள தடைகள்.
· இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே என்கிற முழக்கம்.
· பள்ளிவாசல்கள் வெறும் கட்டிடங்களே, அவை இடிக்கப்படலாம் என்ற சுப்ரமணிய சுவாமியின் கூற்று
· கான்கள் நடித்த திரைப்படங்களைப் புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பு
· பள்ளிப்பாடப் புத்தகத்தில் பகவத் கீதையைப் பாடமாகவைக்க முயற்சி எடுத்துள்ள ஹரியானா அரசின் முடிவு
· தேவாலயங்கள்மீதான தொடர் தாக்குதல்கள்
· மே. வங்கத்தில் எழுபதுவயது கன்னியாஸ்திரியின்மீது மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்காரம்
· கோட்சேவுக்கு சிலை அமைக்கவேண்டும் என்கிற இந்து மகாசபையின் கோரிக்கை
· ஜனவரி மாதம் நிகழ்ந்த வகுப்புமோதல்கள் 77 என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்.
· அன்னை தெரசாவின் சேவைகுறித்து எழுப்பப்பட்ட புகார்கள்.
இவை அனைத்தும் தனித்தனிப் பிரச்சனைகள்; மேலோட்டமான பார்வைக்குத் தொடர்பில்லாதவை; ஆனால் ஒரே இலட்சியத்தின் பல கூறுகள் அவை. பிரதமர் மோடி அவற்றை இயக்காமல் இருக்கலாம். ஆனால் அவரின் இருப்பைப் பற்றுக்கோடாகக் கொண்டுதான் பலமுனைத் தாக்குதல்களும் வெறுப்புப் பிரச்சாரங்களும் நடந்துவருகின்றன.
நிர்பயா பாலியல் பலாத்காரக் குற்றவாளி முகேஷ்சிங் நேர்காணலை லெஷ்லீ உட்வின் எடுத்தபோது தில்லி காவல்துறை அனுமதியளித்ததில் குறையில்லை; ஆனால் அந்த ஆவணப் படம் உருவாக்கும் பிரச்சினைகள்பற்றி கவனத்தில் கொண்டிருக்கலாம். அது காப்பகத்தில் வெற்று ஆவணமாகப் பாதுகாக்கப்படவென்று தயாரிக்கப்படவில்லை. படம் வெளியிடப்படும்போது உருவாகும் நெருக்கடிகள்பற்றி ஒரு புரிதலுணர்வு தில்லி காவல்துறைக்கு இருந்திருக்க வேண்டும். அதன் இயக்குநர் அதற்கு ஒரு கவன ஈர்ப்பை உண்டுபண்ணியதும் இந்தியா குறித்த மோசமான புரிதல்களை இந்த ஆவணப் படம் உண்டாக்கும் என்று பலரும் குற்றம்சாட்டினர். உடனே மத்திய அரசு அதைத் தடை செய்தது; பிற சானல்களிலும் வெளிநாடுகளிலும் ஒளிபரப்பக் கூடாது என்று அதன் இயக்குநரைக் கேட்டுக்கொண்டது. ஆனால் அதற்கும் முன்னதாகவே பி.பி.சி. நிறுவனம் படத்தை ஒளிபரப்பியது. இங்கிலாந்து அரசு அப்படியொரு கோரிக்கையை எழுப்பினாலுமே அந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்த இயலாத அளவில் அங்குள்ள சட்டங்கள் ஊடகங்களுக்குத் துணையாக உள்ளன. ஆனால் இந்திய அரசு அதைத் தெரிந்துகொள்ளாமல் செயல்பட்டது.
இந்தியர்களின் மனப்பான்மையில் பெண்கள் குறித்து உள்ள ஆதிக்கச் சிந்தனைகள் முகேஷ்சிங் மூலமும் அவரது வழக்கறிஞர் சர்மா மூலமும் தீவிரமாக வெளிப்பட்டன. அவை இன்று கடும் விவாதப் பொருள்களாகி யிருக்கின்றன. இது இந்தியாவை அவமதிப்பதாகத் தங்களைத் தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்வோர் முகம் சிவக்கின்றனர்.
இந்தப் படத்தையும் அதன் நிகழ்ச்சிப்போக்குகளையும் ஒதுக்கிவிட்டு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்தாலும் நமக்குத்தோன்றுவது அதே எண்ணம்தானே! இந்தப் பேச்சுகளும் சம்பவங்களும் நடைமுறைகளும் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்திற்கு மாற்றான தோற்றத்தை வழங்கிடாது. இந்நிலையில் இந்தியப் பண்பாட்டை அந்நியர்கள் போற்றவேண்டும் என்று மிரட்டுவது நியாயமானதாக இருக்காது.
உண்மையான தேச பக்தர்கள் நம் நாட்டுக்குச் சர்வதேச ரீதியிலான கௌரவமிக்க தோற்றத்தை உருவாக்க விரும்புகிறார்களா? அப்படியானால் அதற்கான மனப்பக்குவத்தையும் மனித உரிமைகளை மதிக்கும் பண்பையும் முதலில் பெற்றாக வேண்டும். கௌரவத்தைத் தேடுதலும், நாட்டின் பலவீனமான பிரிவினர்மீது ஆத்திரமிக்க தாக்குதல்களைத் தொடுப்பதும் நேர்க்கோட்டுச் செயல்பாடுகளாக இருக்காது. பலவீனர்களின் வாழ்வியல் இருப்பு குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும்போது முதலில் அவர்கள் பாதிப்படைகிறார்கள்; பின்னர் நாடு பலவீனப்படுகிறது. வகுப்புவாதம் சார்ந்து சிந்திக்கிறவர்கள் இந்த உண்மையைப் புரிந்துகொள்வதில்லை. எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் இருப்புக்கு ஆபத்தாக இருக்க வாய்ப்பில்லை; ஆனால் எல்லா இனவாத, மதவாதப் போக்கின் பற்றாளர்களும் இதனை முக்காலமும் ஏற்க மறுக்கிறார்கள். நாட்டின் வளங்கள் பங்கிடப்படும் முறையிலும், அதிகாரங்கள் பரவலாக்கப்படும் தன்மையிலும் ஒருவரின் அல்லது ஒரு பிரிவின் இருப்பு பிறிதொன்றின் அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்புகளை அறவே தடுத்துவிடும்.
நவீன உலகின் சிந்தனைகளில் பெரும்பான்மையினர் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கருத்தாக்கங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதனும் சம உரிமை படைத்தவர்கள் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயமாகும். இதில் வேறு கருத்துகளுக்கோ மறுப்புகளுக்கோ இடமில்லை. ஒருவரின் பிறப்புரிமையை எப்படி உணர்ந்துகொள்வது? அவர் இதற்கெனத் தனியே பாடம் பயில வேண்டியதில்லை. தன்னை முன்னிலைப்படுத்தித் தனக்கும் உலகத்துக்கும் அல்லது தனக்கும் சமூகத்துக்குமான உறவை ஒரு நிமிடம் பரிசீலனை செய்தால் போதும்; உடனே அறவுணர்வுமிக்க விடை கிடைத்துவிடும். இந்த விடை கிடைக்கும் நிலையில் ஒருவர் தன் நாடு, இனம், மொழி, சமயம், கலாச்சாரம் என்கிற அனைத்து நிலைகளிலுமுள்ள குறுகிய மனப்பான்மைகளைக் கடந்து வெளியேறி வந்துவிடலாம். தன் வாழ்வுக்குச் சம்பந்தமில்லாத ஒரு தனிநபர் அல்லது இயக்கம் எப்படித் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஒருவர் கருதுகிறாரோ, அதே கருத்துதான் தனக்கு எதிரே நிற்கும் பிறிதொரு மனிதருக்கும் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் என்ன? தற்காலத்தின் அனைத்துப் பிரிவினை மற்றும் வெறுப்பு முழக்கங்களும் அரசியல் ஆதிக்கத்தை உறுதிசெய்துகொள்வதற்கான ஏற்பாடுகள் தான். இதனை உணர்ந்து தெளிவடைவதன்மூலமே நாட்டின் வலிமையை உறுதி செய்ய வழியுண்டு.
இந்தப் பக்குவ நிலையிலிருந்து பார்க்கும்போது இந்தியாவின் மூலைமுடுக்குகளில் எல்லாம் சமீப நாட்களாக நிகழும் சம்பவங்கள் எந்த அளவிற்கு மானுடப் பண்புகளுக்கு எதிரானவை எனத் தெரியவரும். குடியரசு தின விழாவின் அரசு விருந்தினராக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டிலிருந்து விடைபெறும் தருணத்திலும், தன் நாடு சென்றடைந்தபின்னும் இந்தியாவின் சகிப்பற்ற தன்மையைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. ஒபாமாவுக்கு அல்லது அமெரிக்காவுக்கு அதற்கான தகுதிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அவர் சிந்திய வார்த்தைகள் உலகம் முழுவதும் பரவிவிட்டன. அவருக்கு அந்தத் தகுதி இல்லையென்பதாலேயே இந்தியாவில் அத்தகையப் போக்குகள் இல்லை என்று நாம் வாதிட முடியாது.
இந்தியா தன்னேரில்லாத சக்தியாக வளர முயற்சி செய்கிறது என்று அமைச்சர்கள் சொல்லிவருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை அரசியல், பொருளாதார ரீதியாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எண்ணும் வெளிச்சக்திகளுக்கு ஏன் தகுதியற்ற பிடிமானங்களை வலிந்துகொடுக்க வேண்டும்? ஒருவர் உண்பதையும் ஆடை புனைவதையும் நாம் எப்படி சீர்செய்ய முடியும்? மாட்டிறைச்சியைப் பொருத்தவரையில் அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரால் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை; அன்றும் இன்றும் அது ஒரு பொது உணவு. ஆனால் அதைத் தடைசெய்யும் நோக்கில் முஸ்லிம் சமுதாயத்தின்மீதான அடக்குமுறைதான் முன்நிற்கிறது. பொருளாதார ரீதியாக அந்தச் சமுதாயத்தை ஒடுக்கும் திட்டமும் இதிலுண்டு. மாட்டிறைச்சியைத் தடைசெய்யக் கோரும் வகுப்புவாத சக்திகள் தங்களின் புராணங்களின் மூலத்தில் அதற்கான சான்றினைப் பெற இயலாது. யாகங்களில் பசுக்கள் பலியிடப்பட்டுள்ளதற்கு ஏராளமான இலக்கிய ஆதாரங்களும் உள்ளன. தங்களின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு ஏற்ப ஓர் இயக்கம் புதிய அணுகுமுறைகளை உருவாக்கிக்கொள்ளலாம். தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டதும் தங்கள் இயக்கம், சமயம் சாராத பகுதியினருக்குத் தங்களின் கோட்பாடுகளை அதிகார ரீதியில் கொண்டுசெலுத்தும் உரிமைகள் கிடையாது.
இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுப்பதாகப் பேசிக்கொண்டு அதற்கு எதிரான மனித ஆற்றலைப் பிளவுபடுத்தும் வன்முறைச் சித்தாந்தத்தை எய்வது முரண்நகையாகும். தேவாலயங்களை உடைத்தல், கன்னியாஸ்திரிகளை வல்லுறவு செய்தல், ஒருவரின் அரசியல், சமயக் கொண்டாட்டங்களுக்கான வாய்ப்புகளை மறுத்தல், எல்லோரும் இந்துக்கள்தான் என்று முழங்கிக்கொண்டே ‘லவ் ஜிகாத்’ என கூச்சலிடுவது, பின் ‘இந்தியர்கள்’ என்ற பிம்பத்தை மங்கவைத்து முஸ்லிம்கள் என்ற அடையாளத்தை வலுப்படுத்தி தங்களின் முழக்கங்களில் ஊனம் ஏற்படுத்திக்கொள்வது....! சொல்லும் செயலும் வெவ்வேறாக இருக்கின்றன. முறைப்பாடு இல்லாத இப்படியான வெறுப்புப் பேச்சுகளுக்கும் அருவருப்பான நடவடிக்கைகளுக்கும் நாடு உடன்படுவது பெரும் தீங்காகும்; மொத்த அமைதியையும் குலைப்பதாகும். வளர்ச்சி மந்திரத்துக்கு எதிரான சூனியம் வைப்பது என்று இதனை நம்மால் சொல்லமுடியும். மேற்படி விபரீதங்களை இயக்கம் சார்ந்த கடைமட்டத் தொண்டர்கள் எடுப்பதில்லை; பெரும் தலைவர்களும் தேச பக்தர்கள் எனத் தங்களை முத்திரை இட்டுக்கொண்டோரும் இந்த இழிசெயல்களைத் தொடங்குகிறார்கள். சமூகப் பொறுப்புணர்வு அவர்களிடமிருந்து அறுபட்டதும் தகாத காரியங்கள் பரவலாகிவிடுகின்றன. முன்னோடிகள் தகுதியற்ற பேச்சாளர்களாக இருக்கும்பட்சத்தில் கடைநிலைத் தொண்டர்களின் மனங்களில் பூநாகங்கள் பலப்பல அடைகாக்கும். இவர்களால் சமயம்சார்ந்த எல்லைகளைவிட்டு நொடிப்பொழுதும் வெளியேற முடியவில்லையென்றால் நாடும் தன் இடுக்கண்களிலிருந்து வெளியேற வழியில்லை.
இந்தியப் பண்பாட்டுக்குப் பலநிற(முக)ங்கள் இருந்தாலும் அவை வண்ணம் பூசிக்கொண்ட நிலங்களின் விளைபொருள்களாகும். நம் பண்பாட்டுக்கு நீண்ட பாரம்பரியமும் அகன்ற மனமும் உண்டு என்று இதுவரை யார்யாரெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்களோ, அவர்களே இன்று குறுகிய நோக்குடைய பூதாகரமான வியூகங்களை வகுத்துக்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் தானாக முன்முயற்சி எடுத்து தன் கட்சியினரைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். எதிர்க்கட்சிகளும் சமூகத்தின் பெரும்பகுதியினரும் வற்புறுத்திய நிலையில் பிரதமர் “இந்தியாதான் என் மதம்” என்று பிரகடனம் செய்தார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே தனது வேதப்புத்தகம் என்று கூறியதுடன் நில்லாமல், அனைவரின் நலமும்தான் தனது ஒரே பிரார்த்தனை என்றும் வெளிப்படையாக அறிவித்தார். மோடிமீது நம்பிக்கை வைத்தவர்கள், சகிப்பின்மையின் உச்சம்தொட்ட விபரீதங்களும் பேச்சுக்களும் இனி இருக்காது என்று நம்பினார்கள். அப்படியான ஒரு நன்னிலை வாய்க்கவில்லை. மோடியின் அதிகாரமும் அவரது அரசியல் மரியாதையும் கேலிக்கிடமாகி விட்டன. மோடியின் பிரகடனத்தின் பின்னரே சுப்பிர மணியசுவாமியின் வன்முறைப் பேச்சுகளும் கன்னியாஸ் திரிகளின்மீதான வல்லுறவுகளும் தொடர்கின்றன.
வாகன ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் விசை செயலிழந்துவிட்டால் நடக்கும் விளைவுகள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை அல்ல. அந்த நிலைக்கு நாடு வந்துவிட்டது. மோடியை துச்சமாக்கி இன்னொரு அதிகாரமையம் உருவாகிவருகிறது. இரண்டு தலைகளோடு இந்தியப் பயணம் எப்படி நடக்கப்போகிறது?
இந்நிலையைக் கட்டுப்படுத்தவும் நாட்டின் வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் மெருகேற்றவும் கருதுபவர்கள் தான் இனி ஒரு பெரும் சக்தியாக இணைந்தாக வேண்டும். காலம்தோறும் வர்ணாசிரமத்தைப் புதுப்பிப்பது அவர்களின் பணி என்றால், அதனைக் களம் காண்பதும் வென்று முடிப்பதும் ஜனநாயக சக்திகளின் கடமையாகவும் இருக்கின்றது.
ஊடகங்களை அடக்கியாளுதல்
மேற்கு வங்கத்தில் கணசக்தி நாளிதழுக்கு அரசு விளம்பரம் வழங்குதலை 2011, மே மாதம் திரணமூல் காங்கிரஸ் அரசாங்கம் நிறுத்தியது. அதற்குச் சொல்லப்பட்ட காரணம் அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி (சிபிஎம்) நாளிதழ், அதற்கு விளம்பரம் தருவது என்பது அரசு ஒரு கட்சிக்கு நிதி வழங்குவதுபோல் ஆகும் என்பதே.
தமிழகத்தில் கடந்த பல ஆட்சிகள் நாளிதழ்களுக்கு விளம்பரங்களைத் தடைசெய்யும் நட வடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமக்கு வேண்டிய நாளிதழ்களுக்கு விளம்பரத்தை அள்ளி வழங்குவதும் மாற்றுப் பார்வையுடைய நாளிதழ்களைக் காயடிப்பதும் வழமை. கடந்த திமுக ஆட்சி தனது குடும்ப நாளிதழுக்கு விளம்பரங்களை முதலில் அள்ளி வழங்கியது. பின்னர் குடும்பப் பிளவு ஏற்பட்டபோது விளம்பரங்களை நிறுத்தியது. பின்னர் ‘நெஞ்சம் இனித்து கண்கள் பனித்த’தும் மீண்டும் விளம்பரநிதி அரசு கஜானாவிலிருந்து குடும்ப கஜானாவிற்குப் பாயத் தொடங்கியது. இது ஒரு பச்சையான உதாரணம் என்றாலும் 1970களிலிருந்தே பக்கச் சார்பான அணுகுமுறையே திமுக, அதிமுக கட்சி வேறுபாடின்றி இங்கு ஏற்கப்பட்ட நடைமுறையாக உள்ளது. எல்லா காலங்களிலும் அரசுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு எல்லா காலங்களிலும் விளம்பரநிதிக்கு வழிசெய்யும் நாளிதழ்களும் உண்டு. காயடிக்கப்படும்போது ஆட்சி மாறுவதற்காக காத்திருக்கும் நாளிதழ்களும் உண்டு. ஆனால் தமிழகத்தில் எந்த நாளிதழும் நீதிமன்றத்தை அணுகி விமோசனம் கோரியது இல்லை. ‘தினகரன்’ திமுக ஆட்சியின் ஒரு கட்டத்தில் இத்தகைய வழக்கைத் தொடர்ந்து, பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டது மட்டுமே ஒரு அரைவேக்காட்டு விதிவிலக்கு.
கணசக்தி நாளிதழ் 2012ஆம் ஆண்டு அரசின் விளம்பரத் தடைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியது. பிப்ரவரி 2015இல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கணசக்திக்கு விளம்பரம் வழங்கப்படுவதை நிறுத்திவைத்த அரசு ஆணையை ரத்துசெய்து கணசக்திக்கு உரிய விளம்பரங்களை வழங்க ஆணையிட்டது.
இத்தீர்ப்பும் அதற்குக் கூறப்பட்ட காரணங்களும் ஆக முக்கியமானவை. ஊடகச் சுதந்திரத்தில் மைல்கற்களாகக் கருதத்தக்கவை. இத்தீர்ப்பில் பல முக்கியமான முன்தீர்ப்புகளின் வாசகங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. 1960இல் ஸகால் பேப்பர்ஸ் வழக்கின் தீர்ப்பு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
“கருத்துச் சுதந்திரமும் வெளிப்பாட்டுச் சுதந்திரமும் எல்லா ஜனநாயக நிறுவனங்களுக்கும் அடித்தளமாகும். ஜனநாயகம் சீராகச் செயல்பட இவை அத்தியாவசியமானவை. கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது கருத்துப் பிரச்சாரத்தையும் உள்ளடக்கியது. இச்சுதந்திரம் உறுதிப்பட விநியோகச் சுதந்திரம் அவசியம். கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது ஒருவருடைய சிந்தனையை, கருத்தை, பார்வையை முழுச் சுதந்திரத்துடன் சாத்தியமான எல்லாத் தளங்களிலும் பிரசுரித்து விநியோகிக்கும் சுதந்திரமாகும். ஷரத்து 19(2)இல் கூறப்பட்டுள்ள நியாயமான வரையறைகள் மட்டுமே இதில் கருதத்தக்கவை. இச்சுதந்திரம் ஒரு நாளிதழ் எந்தவொரு கருத்தையும் வெளியிடும் சுதந்திரம் மட்டுமல்ல, அதன் விநியோக அளவீட்டையும் உள்ளடக்கியதுதான். அரசு ஒரு நாளிதழின் வணிகத் தளத்தைச் சீரமைப்பதற்காக அதன் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தலாகாது.”
இத்தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பென்னட் கோல்மன் தீர்ப்பு இவ்வாறு மொழிகிறது:
“விளம்பரத்தைத் தடைசெய்வது என்பது ஒரு நாளிதழ் மூடப்படுவதற்கும் அதன் விற்பனை குறைவதற்கும் வழிவகுக்கும். எனவே இது கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது.”
அதாவது ஒரு அரசு தனக்குச் சாதகமான செய்திகளை வெளியிடாத ஊடக நிறுவனத்தின் வணிகத்தைப் பாதிக்கும்விதமாக நடந்துகொள்வதை அதன் கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவே பார்க்கவேண்டும் என்பதே இத்தீர்ப்புகளின் சாரம்.
தற்போதைய கணசக்தி தீர்ப்பின் முக்கியமான பகுதியைப் பார்க்கலாம்.
“ஒரு நாளிதழின் கடமை மக்கள் நலனிற்காக உண்மைச் செய்திகளையும் கருத்துகளையும் வெளியிடு வதுதான். இவையின்றி மக்கள் சரியான ஜனநாயக முடிவுகளை எடுக்க முடியாது. அவை பிரசுரிக்கும் பல செய்திகள் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் உவப்பானதாக இராது. நாளிதழ்களில் வெளியாகும் கட்டுரைகளின் ஆசிரியர்கள் அரசை விமர்சிப்பதும் அதன் பலவீனங்களை அம்பலப்படுத்துவதும் தவிர்க்க முடியாதது. இவை அதிகாரத்திற்கு எரிச்சலாகவோ ஆபத்தாகவோ இருக்கலாம். இத்தகைய நாளிதழ்களை அரசு பலவகைகளில் அடக்க முயலும். உலகெங்கும் அரசுகள் ஊடகங்களைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளைக் கையாள்கின்றன. ரகசியப் பணப் பரிமாற்றம், வெளிப்படையான நல்கைகள், நில ஒதுக்கீடு, தபால் சலுகைகள், அரசு விளம்பரம், ஊடக ஆசிரியர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் பட்டம் வழங்குதல், ஊடக அதிபர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குதல் ஆகியன அவற்றுள் சில. மற்றொரு வழிமுறை என்பது நேரடி அடக்குமுறை. தணிக்கைச் சட்டங்கள், அச்சகத்தைக் கைப்பற்றுதல், விநியோகத்தில் இடையூறு ஏற்படுத்துதல், பாதுகாப்பு வைப்புநிதி கோருதல், விலைநிர்ணயம் செய்தல், பக்கவரையறை செய்தல், அரசு விளம்பரத்தை நிறுத்திவைத்தல், தபால் கட்டணத்தை அதிகரித்தல், வரி விதித்தல் ஆகியன ஊடக சுதந்திரத்தில் அரசு இடையூறு செய்யும் வழிமுறைகளாகும். இத்தகைய துஷ்பிரயோகங்களைத் தடுக்கும்முகமாகவும் தகவல் தடையின்றி பரிமாறப்படுவதை உறுதிசெய்யும் விதமாகவும் ஊடக சுதந்திரத்தைத் தாங்கிப் பிடிக்கவும் அரசு ஏற்படுத்தும் இடையூறுகளைத் தடுக்கும் முகமாகவும் உலகெங்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
எனவே ஊடக சுதந்திரத்தைக் காப்பதும் அதில் இடையூறுசெய்ய எண்ணும் அரச நடவடிக்கைகளைத் தடுப்பதும் தேசத்தின் நீதிமன்றங்களின் முக்கிய கடமையாகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது அரசையும் அரசு குடும்பத்தினரையும் விமர்சித்ததற்காக காலச்சுவடு இதழுக்கு வழங்கப்பட்டுவந்த நூலக ஆணைக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். முதலில் நீதிபதி சந்துரு அரசு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை வழங்கினார். இத்தடையை நீக்க அரசு அரிதிலும் முயன்றது. அரசின் தலைமை வழக்கறிஞர் ஒவ்வொருமுறையும் சென்னையிலிருந்து மதுரைக்குப் பறந்துவந்தார். இருப்பினும் இத்தடையை முறியடிக்க முடியவில்லை. பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது திமுக அரசு பதவி இழந்தது. புதிய அரசு காலச்சுவடுக்கு நூலக ஆணை வழங்கி பிரச்சனையை முடித்தது. ஆனால் முன்னோடியான ஒரு தீர்ப்பைப் பெறும் வாய்ப்பு தவறிப்போனது. இதுவரை தமிழக ஊடக நிறுவனங்கள் எதுவும் அரசை எதிர்த்து ஊடக சுதந்திரத்திற்காக நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெற்றதில்லை என்பதால் அத்தீர்ப்பு முக்கியமானதாக இருந்திருக்கும்.
இன்று ஊடக சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கும் பல அறிஞர்களும் அமைப்புகளும் அன்று காலச்சுவடுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தயங்கினர். திமுக அரசின் அச்செயலைக் கருத்துச் சுதந்திரம் சார்ந்த பிரச்சனையாக, அரசின் அடக்குமுறையாகவும் காணாமல் பல சால்ஜாப்புகளை மொழிந்தனர். விநியோகம், வணிகம், கருத்துச் சுதந்திரம் இவற்றுக்கிடையேயுள்ள ஊடுபாவுகளைக் காண மறுத்தனர். அரசின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திய காலச்சுவடைக் கட்டுப்படுத்தவும் நஷ்டத்தை ஏற்படுத்தி பிரசுரத்தை நிறுத்திடவுமே திமுக அரசு முயன்றது. நாளிதழ்களுக்கு விளம்பரத்தடைபோல காலச்சுவடை ஒடுக்க நூலக ஆணைத்தடையைப் பயன்படுத்தியது. நூலக வாசகர்கள் காலச்சுவடை வாசிப்பதைத் தடுத்ததன் வழி காலச்சுவடின் விநியோகத்தை மட்டுப்படுத்தி அதன் கருத்துச் சுதந்திரத்தை திமுக அரசு கட்டுப்படுத்த முயன்றது.
கணசக்தி வழக்கில் கல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இவற்றைத் துலக்கமாக முன்வைத்து கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு அணியம் சேர்த்துள்ளது.
அத்தோடு ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் வழிமுறைகளையும் அது பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. பல வெகுமக்கள், இதழ்களின் ஆசிரியர்களும் ஊடக அதிபர்களும் மட்டுமல்ல பல மாற்று இதழ்களும் அறிஞர்களும் இதே வழிமுறைகளில் விலைபேசப்படுவதை நாம் கண்கூடாகக் கண்டுள்ளோம். விலைபோகும் ஊடகர்களும் அறிவாளிகளும் கருத்துச் சுதந்திரத்தின், ஊடக சுதந்திரத்தின் விரோதிகள் என்பதும் இத்தீர்ப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
தமிழக நாளிதழ்கள், இனி அரசு விளம்பரத் தடை பற்றிய கவலையின்றி துணிச்சலாக செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிடலாம். கணசக்தி நாளிதழ் பெற்றிருக்கும் தீர்ப்பு அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்து சுதந்திரமாகச் செயல்பட வழிவகுக்கும் என நம்புவோம்.