புண்படும் மனங்களின் காலம் இது
எழுத்தாளர் புலியூர் முருகேசன் பிப்ரவரி 25, 2015இல் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள், கொங்கு வெள்ளாளர் சமூகத்தை அவர் புண்படுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்கள். ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்ற முருகேசனின் சிறுகதைத் தொகுப்பில் ‘நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன்’ என்ற மூன்றாம் பாலினம் பற்றிய சிறுகதையே பிரச்சனையின் மையம். கரூரில் இக்கதைக்கு எதிராகப் போராடியவர்கள் கரூர் திருச்சி ரோட்டில் மறியல் செய்தார்கள். நகரில் ஆங்காங்கே கல்வீச்சும் நடத்தப்பட்டதாகச் செய்தி.
முருகேசனின் கூற்றுப்படி “நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன்’ என்கிற
தலைப்பில், ஒரு திருநங்கை எப்படி தொடர்ந்து பாலியல் சுரண்டல் வன்முறைகளுக்கு
ஆளாகிறார் என்பதையும், எப்படி குடும்பத்தாரால் புறக் கணிக்கப்படுகிறார் என்பதையும்
முழுக்க முழுக்க கற்பனையுடன் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன். அந்தக் கதையில்
நாலைந்து வரிகள் மட்டும் தங்கள் சமூகத்தைக் குறிப்பதாக புலியூரைச் சேர்ந்த ஊர்
முக்கியஸ்தரான கே.பி. ராமலிங்கம் என்பவர் கேட்டார். ‘நான் கற்பனையா எழுதிய கதைங்க.
திருநங்கைகள் படும்வேதனையை அவர்கள் மொழியிலேயே எழுதணும் என்கிற எண்ணத்தில் எழுதினேன்.
யாருடைய மனதையும் புண்படுத்துகிற எண்ணம் எனக்கு இல்லை. உங்க சமூகத்தை
இழிவுபடுத்துவதாக சொல்றீங்க. அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்’ என்றேன். உடனே
அவர், “அடுத்த புத்தகத்தில் எங்க சமூகத்தின் பெயரை நீக்கி புத்தகம் வெளியிடு.
காளியம்மன் கோயில் முன்பு கூட்டம் போடுறோம். நேரில் வந்து மன்னிப்பு கேளு” என்றார்.
சம்மதித்தேன். இந்தநிலையில் நான் கரூருக்கு பஸ்ல போயிட்டு வீட்டுக்கு வந்துக்கிட்டு
இருந்தேன். அப்போது தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த மகேஷ், கனகராஜ்
தலைமையில் வந்த ஒரு கும்பல், சகட்டுமேனிக்கு அடிச்சாங்க.”
(ஜூனியர் விகடன் 08.03.2015)
முருகேசனுக்கு எதிராகப் பல பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கரூர் மாவட்டக் கண்காணிப்பாளர் இந்நூலைப் படித்துப் பார்த்து இது வக்கிரமானது என்று முடிவு செய்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முருகேசன் ஜாமீனுக்கு விண்ணப்பித்ததும் ஒரு சாதிய அமைப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. நீதிமன்றம், அவர் தூத்துக்குடியில் தங்கி தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கியுள்ளது. முருகேசனைத் தாக்கியவர்கள் இன்றும் சுதந்திரப் பறவைகளே. கல்வீசியவர்கள், நெடுஞ்சாலையை மறித்தவர்கள்மீது நடவடிக்கை எதுவுமில்லை. அவர்கள் செயல்பாடு மாவட்டக் கண்காணிப்பாளரைப் புண்படுத்தவில்லை போலும். பெருமாள்முருகன் விஷயத்திலும் அவரை மிரட்டியவர்கள், அனுமதி பெறாமல் வன்முறை ததும்பும் கூட்டங்கள் நடத்தியவர்கள், ஊர்வலம் சென்றவர்கள், கடையடைப்பைக் கட்டாயமாக அமல்படுத்தியவர்கள் என எவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பெருமாள்முருகன் பிரச்சனையின்போது சில கருத்துகளை ஊடகங்களில் பதிவு செய்தேன்.
1. மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி பெருமாள் முருகனிடம் ஒப்பம்பெற்ற அமைதி உடன்படிக்கை பிரச்சனையின் முடிவாக இராது. அது புதிய போக்கின் தொடக்கமாகவே அமையும்.
2. பிறர் எதைப் படிக்க / பார்க்க / உண்ண வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தமக்கு வேண்டும் என பல பாசிசப் பண்புடைய குழுக்கள் நினைக்கின்றன. நரேந்திர மோடி பிரதமராகியிருப்பது அவர்களுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
3. திருச்செங்கோடு என்ற கோயில் நகரம், குஜராத் போல ஒரு படிமமாக மாறும். இந்நகரம் ஒரு சோதனைச் சாலையாகியுள்ளது. இங்கு நடப்பது இனி பிறரால் நகல் செய்யப்படும்.
எனவே கரூரில் நடந்தவை என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால் இத்தகைய செயல்பாடுகள் நம்முடைய ஆழ்ந்த அக்கறையையும் கவனத்தையும் கோருபவை.
கொங்கு வெள்ளாளர் சமூகத்தின் தலைமைக்குக் கடும் அதிகாரப் போட்டி நிலவுகிறது. பல சாதிய அமைப்புகளும் தலைவர்களும் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். பெருமாள்முருகன் விஷயத்தில் கொங்கு தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் முன்கை எடுத்து செயல்பட்டார். இக்கட்சி பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சி. பெருமாள்முருகனுக்கு எதிராக சாதி இந்துக்களைத் திரட்டிக் கோயிலை மையப்படுத்திக் கருத்துப் பரப்புரை செய்யும் செயலூக்கிகளாக இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டன. ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வமாகத் தனது பங்கேற்பை மறுத்தபோதிலும் மறை முகமான ஆதரவு தொடரவே செய்தது.
பெருமாள்முருகன் பிரச்சனையில் ஓரங்கட்டப்பட்டுவிட்ட கொங்கு வெள்ளாளர் பேரவையின் தலைவர் தனியரசு தற்போது இரட்டை இலைச் சின்னத்தில் வென்ற பரமத்தி வேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். இவர் கையில் உறுமீன் போலச் சிக்கியவர் முருகேசன். இவருடைய தூண்டுதலிலேயே முருகேசன் தாக்கப்பட்டதாகச் செய்தி வந்தாலும் முருகேசன் இவரை இதுவரை குற்றஞ்சாட்டவில்லை.
முருகேசன் இடதுசாரி எழுத்தாளராக அறியப்படுகிறார். தமிழகத்தின் பெரும்பான்மைச் சாதிகளில் ஒன்றான நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் கொங்கு நாட்டில் நாடார்கள் ஆகச் சிறுபான்மை. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நாடார் சங்கப் பிரமுகர்கள் முருகேசனை அணுகியபோது அவர் ஆதரவை மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்பகுதியில் கொங்கு வெள்ளாளர்களுக்கு மாற்றுத் தரப்பாக இருக்கும் பள்ளர்களுடன் முருகேசன் நெருங்கிப் பழகிவந்ததாகவும் அறியமுடிகிறது.
பெருமாள்முருகனும் சரி, முருகேசனும் சரி எதிர்த் தரப்புடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. உரையாடவும் வருத்தம் தெரிவிக்கவும் ஆயத்தமாக இருக்கையிலேயே பிரச்சனையின் முடிச்சை இறுக்கிட எதிர் அமைப்புகள் தீவிரம் காட்டுகின்றன. இதே போக்கில் தொடர்ச்சியாக தாலி தொடர்பான விவாதத்தைப் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பாத நிலையிலும் அதன்மீது இந்து அமைப்பொன்று ‘குண்டு’ வீசியதையும் அவதானிக்க வேண்டும்.
இவர்தம் எழுத்தால் அவமதிக்கப்பட்டதாகக் கோரியவர்கள் அதை நகல் எடுத்துக் கொடுத்து மேலும் பலர் ‘மனம் புண்பட’ வழிகோலுகிறார்கள். அத்தோடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இயல்பான வாசகர் வட்டத்தைத் தாண்டி மேற்படி பிரதிகள் உலகெங்கும் படிக்கப்பட வழி செய்கிறார்கள். மேற்படி குழுக்களின் நோக்கம் சமூகத்தின் மானம் காப்பதாக இல்லை. தமது சமூகமும் ஊரும் மண்ணும் உலகின் பார்வையில் தூற்றப்பட்டாலும் சரி, தாம் அதிகாரம் பெற இவர்கள் மூர்க்கமாக முந்துகின்றனர். உணர்ச்சிகரமான விஷயங்களைக் கையிலெடுத்து கடைசிச் சொட்டு வரைக் கறந்துவிடும் முனைப்பே இவர்தம் செயல்பாட்டில் தெரிகிறது.
பெருமாள்முருகன் பிரச்சனையைப் போலல்லாது முருகேசன் விஷயத்தில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டதற்கான சான்றுகள் எதுவுமே இல்லை. இரண்டு பெரும்பான்மை சாதிகளுக்கு இடையிலான பிரச்சனையாக வளரக்கூடிய சிக்கலில் அவர்கள் ஈடுபட விரும்பாதது இயல்பு. நாடார்கள் தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய அடித்தளமாக உள்ளார்கள், கட்சியிலும் அரசியலிலும் உயர்நிலைகளில் பதவி வகிக்கிறார்கள் என்பதும் முக்கியம். இருப்பினும் சில சாதிய அறிவுஜீவிகள் கற்பனையாக இவ்விஷயத்தில் இந்துத்துவ சக்திகளைக் கண்டித்துக் கருத்து தெரிவிக்கிறார்கள். பிரச்சனையின் மையத்தை சாதியிலிருந்து மதத்திற்கும் பெரும்பான்மை சாதிகளிலிருந்து பிராமணியத்திற்கும் நகர்த்தும் எத்தனம் இவர்களிடம் எப்போதும் உண்டு. பொருத்தமான இடங்களில் இந்துத்துவத்தையும் பிராமணியத்தையும் கண்டிப்பது உகந்தது. அதே நேரம் பொருந்தாப் புள்ளிகளிலும் இதைச் செய்வது சாதிப் பெரும்பான்மையின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் முயற்சி. இவற்றை இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு சலாம் அடித்துக்கொண்டே செய்கிறார்கள். தாக்கப்படுபவர்களை விமர்சிப்பதும், தாக்கியவர்களின் செயல்பாட்டை இயல்பான எதிர்வினையாகச் சித்திரிப்பதும், அரசின் கடப்பாடு பற்றி மௌனம் சாதிப்பதும் இவர்கள் செயல்முறையாக உள்ளது. இவர்களில் சிலர் எழுத்தாளர்களின் பிரதி பிரச்சனைக்குரியது என்பதை மையப்படுத்தி எழுத்தாளர்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்த முனைகிறார்கள்.
எந்த ஒரு புனைவும் அரசியல் வாசிப்பிற்கு அப்பாற்பட்டது அல்ல. தமது வாசிப்பின் அடிப்டையில் எவரும் ஒரு புனைவைக் கண்டிக்கலாம், எதிர்ப்பு தெரிவிக்கலாம். நீதிமன்றத்தை நாடலாம். ஆத்திரத்தை வெளிப்படுத்த அந்நூலின் பிரதியை அடையாள பூர்வமாக எரிக்கவும் செய்யலாம். ஆனால் தமது வாசிப்பில் கண்ட ‘புண்படுத்த’லின் அடிப்படையில் எழுத்தாளரை மிரட்டுவது, கைது செய்ய முனைவது, நூலின் தடையை வேண்டுவது, எழுத்தாளரைத் தாக்குவது, சமூகப் புறக்கணிப்பை அமல்படுத்துவது எல்லாம் கண்டிக்கப்பட வேண்டியவை.
புனைவு பற்றிய விமர்சனமும் கருத்துச் சுதந்திரம் பற்றிய விவாதமும் தனித்தனியாக நடக்க வேண்டியவை. தனிப்பட்ட வெறுப்பை, சமூகக் கசப்பை, சாதி, மத வெறியை வெளிப்படுத்த ஒரு எழுத்தாளர் புனைவைப் பயன்படுத்தக் கூடும். அவற்றை நாம் அம்பலப்படுத்தவும் கண்டிக்கவும் முனையும்போதே அவற்றை எழுதுவதற்கும் பிரசுரிப்பதற்கும் எழுத்தாளருக்கு இருக்கும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் பிரதானமானது, புண்படுத்தும் உரிமையையும் உள்ளடக்கியது.
எழுத்தாளன் எழுதுவதைச் சீர்தூக்கிப் பார்த்து வழக்குப் பதியும் உரிமை போலீசாரிடம் இருக்குமானால் எதார்த்த இலக்கியத்திற்கு அது சாவுமணியடிக்கும், அசல் எழுத்தாளர்கள் இந்நாட்டிலிருந்து புலம்பெயர வேண்டிவரும். எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரின் சுதந்திரத்திற்கு எதிராக குடிமைச் சமூகம் முன்வைக்கும் கோரிக்கைகள் ஒருபுறம். இவற்றை உடன் அங்கீகரித்து சமூகத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட விரும்பும் அதிகார வர்க்கம் இன்னொருபுறம். எதையும் உடன் தடைசெய்து சாதி மத சக்திகளின் ஆதரவைப் பெற முனையும் அரசாங்கங்கள் மறுபுறம். இச்சக்திகளின் கூட்டுச் செயல்பாடு, சிந்தனைக்கும் கலைக்கும் பெரும் ஊறுவிளைவிக்கக் கூடியது. நமது மதச்சார்பற்ற, சமதர்ம அரச அமைப்பிற்கே பெரும் ஆபத்து. தாக்குதல், தடை, ஊர் விலக்கு போன்ற நடவடிக்கைகளால் மனம் புண்படுமளவு விவேகம் கொண்டவர்கள் இணைந்து கருத்து மற்றும் பண்பாட்டுப் பன்மைத்துவத்திற்காக போராட வேண்டிய காலகட்டம் இது.