வன்மமும் குரோதமும் குறையட்டும்
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணியின் கூற்று நீண்டகாலம் கடந்து கூறப்பட்டாலும் உண்மையானதுதான்.
அரசியல்ரீதியாக தெளிவான கருத்துவேறுபாடுகள் இருக்கக்கூடிய இயக்கங்களின் தலைவர்கள்
அரசியல் கருத்துவேறுபாடுகளை உறுதியாகப் பற்றிக்கொண்டே நட்பு பாராட்டியும்
வந்துள்ளார்கள் என்பதை வரலாறுமுழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் -
ராஜாஜி நட்புறவின் மூலமாக அறிகிறோம். தேசிய விடுதலை இயக்கத்தில் அதேபோல,
எதிரும்புதிருமான அரசியல் கருத்துமுரண்பாடுகள் நிலவிய சூழலில்கூட, காந்தியும் முகமது
அலி ஜின்னாவும், காந்தியும் அம்பேத்கரும்கூட கடுமையான கருத்துமோதல்கள் இருப்பினும்
பேசிக்கொள்ளும் அளவில், நேரில் பார்த்துக்கொள்ளும்போது நலம் விசாரித்துக்
கொள்ளும்அளவில் நட்புறவு இருந்தது என்றே அறிகிறோம். அதேபோல, இந்தியாவெங்கும்
இப்படிப்பட்ட பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.