மாறும் புத்தகப் பண்பாடு
தென் இந்தியப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சங்கம் நடத்தும் சென்னைப் புத்தகக் காட்சியின் 42ஆம் ஆண்டு நிகழ்வு முடிவுற்றது. பபாசியின் வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்ற புத்தகக் காட்சி இது. அதிக எண்ணிக்கையில் அரங்குகள் இடம் பெற்றதும் இம்முறையே. கூடவே மிகுந்த அதிருப்திக்கு இலக்கான கண்காட்சியும் இதுதான்.
ஒவ்வோராண்டும் புத்தகக் கண்காட்சி முடிந்ததும் குறைபாடுகளின் பட்டியல் சொல்லப்படும். “கண்காட்சிக்குப் போதுமான விளம்பரம் செய்யப்படவில்லை; கழிப்பறை வசதிகள் போதாது; உணவுப் பொருட்கள் அதீத விலைக்கு விற்கப்படுகின்றன; பதிப்பகங்களுக்கிடையில் பபாசி வேற்றுமை காட்டுகிறது; உள்கட்டமைப்புகள் பொருத்தமாக இல்லை; வாகன நிறுத்தம் ஒழுங்குபடுத்தப்படவில்லை.” குறைகள் ஒவ்வோராண்டும் எழுப்பப்படுகின்றன. புத்தகக் காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அவற்றுக்கு அவ்வப்போதான தற்காலிகத் தீர்வுகளைக் கண்டடைகிறார்கள்; அத்துடன் விட்டுவிடுகிறார்கள்.
புத்தகக் காட்சி ஒரு வருடாந்திரச் சந்தை என்ற மனப்போக்கே அமைப்பாளர்களிடம் செயல்படுகிறது. ஒவ்வோராண்டும் அமைப்புக் குழு மாறி வருகிறது என்றபோதும் இந்த மனப்பாங்கே நிலைபெற்றுக் கெட்டித்தட்டிப் போயிருப்பதை உணர முடிகிறது. புத்தகக் காட்சி, பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் தங்கள் சரக்கை விற்றுத் தீர்ப்பதற்கான சந்தை என்ற கருத்தே பபாசியிடம் நிலவுகிறது. எண்ணூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், இலட்சக்கணக்கான புத்தகங்கள், இத்தனை கோடி ரூபாய் விற்பனை என்று உரிமை பாராட்டுவது இந்தக் கருத்தின் அடிப்படையில்தான்.
புத்தகக் காட்சி, நூல்களை விற்பனை செய்வதற்கான ஓர் ஏற்பாடு என்பது ஓரளவு சரியானது. பதிப்பாளர்கள், முகவர்கள் இல்லாமல் நேரடியாக வாசகர்களிடம் விற்பனை செய்வது ஆதாயகரமானது. புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு செல்லக்கூடிய அரசு நூலகத் துறை செயலற்றுக் கிடக்கும் சூழலில் இது வாசகர்களுக்கும் பயனளிப்பதுதான். ஆனால் புத்தகக் காட்சி வெறும் சந்தைப் படுத்தும் செயல் அல்ல. அது ஒரு பண்பாட்டு நடவடிக்கை. பபாசி இந்த நிலைபாட்டைக் கைக்கொள்ளாததுதான் முதன்மையான குறைபாடு. பட்டிமன்றப் பேச்சாளர்களை முழங்கச் செய்வதும் அரசியல், திரைப் பிரபலங்களை நற்செய்தி வழங்க விடுவதுமே பண்பாட்டுச் செயல்பாடாகக் கருதப்படுகிறது. இது மாறாமல் புத்தகக் கண்காட்சி சிறப்படையாது. பபாசி இந்தப் பழைமை மனோபாவத்திலேயே நிறைவு காண்கிறது.
பதிப்பாளர் (விற்பனையாளர்), எழுத்தாளர், வாசகர் ஆகிய மூன்று தரப்பினரே புத்தகக் காட்சியின் முதன்மைப் பங்கேற்பாளர்கள். சென்னைப் புத்தகக்காட்சி பதிப்பாளர்களுக்கு மட்டுமேயான ஒன்றாகச் சுருங்கி வருகிறது. இங்கே எழுத்தாளர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படுவதில்லை. வாசகர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய எழுத்தாளர்களுடன் கலத்துரையாடும் வாய்ப்பு பொதுவாக்கப் படுவதில்லை. இந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவரான எஸ். ராமகிருஷ்ணன் தனது வாசகர்களைச் சந்தித்தது சொந்தப் பதிப்பக அரங்கில்தான் என்பது ஓர் எடுத்துக்காட்டு. இன்று நாடு முழுவதும் நடைபெறும் வெவ்வேறு இலக்கிய விழாக்கள் எழுத்தாளரையும் வாசகரையுமே முதன்மையானவர்களாக ஏற்று நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்கால நடைமுறைமை பின்பற்றப்பட வேண்டும். ஏனெனில் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர் வெறுமனே புத்தகம் வாங்கிச் செல்பவரல்லர். ஒரு புத்தகப் பண்பாட்டின் பங்காளர்; அதற்கான வாய்ப்பு அவருக்கு உருவாக்கப்பட வேண்டும்.
புத்தகம் ஒரு நுகர்பொருள், வாசிப்பு ஒரு பொழுதுபோக்கு, பதிப்பு ஒரு தொழில் என்ற பழைய வரையறைகள் இன்று மாறியுள்ளன. இன்று புத்தகம் ஓர் அறிவுக் கருவி. வாசிப்பு அதன் அறிவார்ந்த செயல். பதிப்புச் செயல் பண்பாட்டுக் கடமை என்ற புதிய அர்த்தங்கள் உருவாகியுள்ளன. புதிய போக்குகள் களமிறங்கியுள்ளன. நீலம் பண்பாட்டு மையம் ஓர் உதாரணம். புதிய சிந்தனைத் தளங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. பெரியாரிய நூல்களுக்கான ஏற்பு எடுத்துக்காட்டு. இவற்றையெல்லாம் பபாசியின் மரபான மனப்போக்கு ஏற்பதில்லை என்பதை சென்னைப் புத்தகக் காட்சி தெரிவிக்கிறது. இந்த மனப்பான்மை மாறினால் மட்டுமே புத்தகக் காட்சி பண்பாட்டின் பகுதியாக மாறும். புதியன தேடும் வாசகரும் எழுத்தாளரும் பதிப்பாளரும் எதிர்நோக்குவது இதையே.