சுவாசத்தின் விலை
காற்று மாசுபாடு பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது; இதற்குத் திறன்மிக்க நீடித்த தீர்வுகள் காணப்பட வேண்டும்.
லேன்செட் பிளானட்டரி ஹெல்த் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படிக் காற்று மாசுபாட்டின் காரணமாக மிக அதிகமான இந்தியர்கள் உயிரிழக்கிறார்கள், நோய்வாய்ப்படுகிறார்கள். இந்த முடிவுகள் மிகுந்த கவலையளிப்பவை. காற்று மாசுபாட்டின் அளவு உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மிக அதிகம். இதனால் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்து; இதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் குவிப்பது அவசியமாகிறது. காற்று மாசுபாட்டினால் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் ஏற்படும் ஆபத்தின் அளவுபற்றி இதுவரை முழுமையாக உணரப்படவில்லை.
இந்தியாவிலுள்ள பல நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வு, காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்பை மதிப்பிட்டுள்ளது. 2017இல் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த இந்த ஆய்வு காற்று மாசுபாட்டால் ஏற்படும் மரணங்கள், நோய்கள், சராசரி ஆயுள் என மூன்று தளங்களில் நடந்தது. 2017இல் ஒரு மனிதர் சராசரியாக இந்தியாவில் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் துகள்மப் பொருள், பி.எம்.2.5இன் அளவு 89.9 µg/m3 யாகக் கண்டறியப்பட்டது. உலகில் ஒருசில நாடுகளிலேயே இந்த அளவிற்கு இருக்கிறது. இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்தாலும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள சுற்றுச்சூழல் துகள்மப் பொருளின் அளவான 10 µg/m3 இருக்க வேண்டுமென்பதைப் பின்பற்ற முடியவில்லை. சுமார் 77% மக்கள் தேசிய சுற்றுச்சூழல் காற்று தரக் கட்டுப்பாடு பரிந்துரைத்துள்ள 40 µg/m3 க்கும் அதிகமான அளவில்தான் சுவாசிக்கிறார்கள்.
இந்தியாவில் புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் நோய்கள், சுவாச நோய்கள், இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளைவிடக் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்க்கேடுகள் அதிகம். 2017இல் 12.4 லட்சம் பேரின் மரணத்திற்குக் காற்று மாசுபாடே காரணம் என இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இவர்களில் 51.1% பேர் எழுபது வயதிற்கும் கீழிருப்பவர்கள். காற்று மாசுபாட்டு அளவு இருக்க வேண்டிய குறைந்தபட்ச அளவிற்கும் கீழாக இது இருக்குமென்றால் சராசரி ஆயுள் 1.7 ஆண்டுகள் அதிகரித்திருக்கும். ஆனால் சுற்றுச்சூழல் துகள்மப் பொருள் மாசுபாட்டில் மாநிலங்களுக்கிடையே பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன, இதனால் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளிலும் வேறுபாடுகள் இருக்கின்றன; ஆரோக்கியக் கேடுகள், மரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை உத்திரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுச்சூழல் துகள்மப் பொருள் மாசுபாடு அதிகமாக உள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் வீடுகளில் நடக்கும் சமையல் போன்றவற்றால் ஏற்படும் மாசுபாடு உச்சபட்ச அளவிலுள்ளது. ஆக, காற்று மாசுபாடு என்பது நகர்ப்புறங்கள், மாநகரங்களில் மட்டும் இருக்கிற விஷயமல்ல, அது கிராமப்புறங்களையும் பாதித்திருக்கிறது. திட எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் அவர்களது விகிதாச்சாரத்திற்கும் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பொருளாதாரம் வளரவளரத் தொழிற்சாலைகள், வாகனங்கள், அறுவடைக்குப் பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களின் வேர்களை எரித்தல், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றால் ஏற்படும் மாசு தொடர்ந்து அதிகரிக்கும். டெல்லியில் ஒவ்வோர் ஆண்டும், குறிப்பாகக் குளிர்காலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் நச்சுப் புகைமூட்டத்தின் காரணமாக டெல்லி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறது. மாசுபடுதலைப் புறக்கணிக்க முடியாத அளவிற்கு அதனால் ஏற்படும் பொருளாதாரச் செலவினம் அதிகமாக இருக்கிறது. காற்று மாசுபடுதலின் காரணமாக ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள் பெரும் பொருளாதாரச் செலவினத்தை ஏற்படுத்துகின்றன. உலக வங்கியும் வாஷிங்டன் பல்கலைக்கழகமும் 2016இல் வெளியிட்ட ஆய்வு, இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 2013இல் ஏற்பட்ட இழப்பின் அளவு 505.1 பில்லியன் டாலர் ஆகும் (2011ஆம் ஆண்டின் வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில்) என மதிப்பிட்டுள்ளது. உலகளவில் காற்று மாசுபாட்டால் உழைப்புச் சக்தி வீணாகும் அளவு எவ்வளவென 2013இல் ஆய்வு நடத்தப்பட்டது. இது மிக அதிகமாக இருந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் இது 55.39 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. நல்வாழ்வு இழப்புகள், உழைப்புச் சக்தி வீணாவது என ஒட்டுமொத்தமாக 2013இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பின் அளவு 8.5%க்கும் அதிகம். ஆக, காற்று மாசுபாடு பொருளாதார வளர்ச்சியைப் பெரிதும் பலவீனப்படுத்துகிறது.
ஆனால் மத்திய அரசு நிலைமை மோசமடைந்த பிறகே, சமீபத்தில்தான் காற்று மாசுபாட்டின் ஆபத்துகளை உணர்ந்தது. தேசிய தூய காற்றுத் திட்டம் குறித்த வரைவு ஒன்றை உருவாக்கியதன் மூலம் காற்று மாசுபாடு ஒரு தேசியப் பிரச்சினை என்பதை அங்கீகரித்தது. இதன்மூலம் இந்தியா முழுவதிலும் காற்று மாசுபாட்டின் அளவைக் கண்காணிப்பதற்காக நிறுவனரீதியான ஆற்றலை உருவாக்கவும் பலப்படுத்தவும் காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் திட்டத்தில் மாசுபடுதலைக் குறைப்பதற்கான இலக்குகள் இல்லையென்பதாலும், குறிப்பிட்ட காலக்கெடுவில் இவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்படாததாலும் சுற்றுச்சூழலியலாளர்களால் இது விமர்சிக்கப்பட்டிருக்கிறது. 2017 டிசம்பருக்குள் மாசு உமிழ்வு செந்தரத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலக்கரி அனல் மின்உற்பத்தி நிலையங்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள நிலையில் இந்த விமர்சனம் முக்கியமானது. சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாடுகளிலிருந்து புதிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் பெரிய கட்டுமானத் திட்டங்களுக்குச் செய்யப்பட வேண்டிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டிருப்பது மோசமடைந்துவரும் காற்று மாசுபாடு பிரச்சினையில் அரசின் அக்கறைமீது சந்தேகங்களை எழுப்புகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்களுக்கிடையே ஒருங்கிணைப்பும் அரசியல் ரீதியிலான பொதுமக்களின் உறுதியும், அத்துடன் கள அளவில் நடவடிக்கையும் தேவை.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, டிசம்பர் 15, 2018
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com