ஆர்.கே. ஆழ்வார் - சென்னை நகரத்தின் எழுத்து ஒளி
எழுத்தாளர்களை விடவும் சிறந்த புத்தகத்தை விரும்புபவர்கள் வாசகர்கள். கருத்தும் விரிவுமுள்ள நூல்களைத் தேடி அலைபவர்கள் அவர்கள்தாம். அது போன்றவர்களின் உற்ற நண்பராக இருந்தார், சென்னை மயிலாப்பூரில் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு முன்னால் நடைபாதைப் புத்தகக் கடை நடத்திவந்த ஆழ்வார். தொண்ணூறாவது வயதில் ஆழ்வார் காலமானார். அந்தப் புத்தகக் கடைக்குச் சென்றிருக்கும் புத்தக விரும்பிகளால் ஒதுங்கி உட்கார்ந்திருக்கும் ஆர்.கே. ஆழ்வாரை மறக்க இயலாது. மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் மதிப்புமிக்க புத்தகங்களைப் பாதுகாத்துக்கொண்டு வாசகர்களுக்காகக் காத்திருந்த ஆழ்வார், சென்னை நகரத்தின் எழுத்தொளியாக இருந்தார்.
இந்தத் துறையில் அறுபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக நிலைத்திருந்தார் ஆழ்வார். ஆரம்பத்தில் வீடுவீடாக ஏறியிறங்கிப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமிருந்து பழைய புத்தகங்களை வாங்கித் தன் சேகரிப்பைத் தொடங்கினார். இலக்கியம், சினிமா, அறிவியல், அரசியல், புராணம் தொடர்பான நூல்களுக்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். எழுத்தறிவு பெற்றவரல்லர்; எனினும் உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் பெயர்கள் ஆழ்வாருக்கு மனப்பாடமாக இருந்தன. ராஜாஜி, அண்ணா, சோ. ராமசாமி போன்ற பிரபலங்கள் ஒரு காலத்தில் இந்த இடத்தின் அன்றாட வருகையாளர்களாக இருந்தனர். அயல் மாநிலங்களிலிருந்தும் பழைய நூல்கள் தேடிப் புத்தகக் காதலர்கள் இந்த நடைபாதைக் கடைக்கு வந்ததுண்டு.
விழுப்புரத்திலிருந்து தனது பதினைந்தாம் வயதில் வேலை தேடிச் சென்னைக்கு வந்து சேர்ந்தார் ஆழ்வார். பல வேலைகள் செய்தார். இறுதியில் தனது கடமை பழைய நூல்களைச் சேகரித்து விற்பனை செய்வதே என்பதைப் புரிந்துகொண்டார். 1960களில் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலைக்குப் பழைய புத்தகங்களுடன் வந்து சேர்ந்தார். எழுத்தின் மதிப்புத் தெரியாத மாநகராட்சி அலுவலர்கள் பழைய புத்தகங்களைக் குப்பை லாரியில் ஏற்றிச் சாலையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்கப் பலமுறை முயன்றனர். ஆனால் எழுத்து விரும்பிகளான அதிகாரிகள் சிலர் ஆழ்வார் மீது நல்லெண்ணம் கொண்டிருந்தனர். எனவே குப்பை லாரியில் சென்ற புத்தகங்கள் பத்திரமாகத் திரும்பி வந்தன. ஆழ்வார் நீண்ட தாடியை உருவியபடி புன்னகை செய்தார்.
மலையாளத்தின் பிரபல எழுத்தாளரான எம்.டி. வாசுதேவன் நாயர் ஒருமுறை சென்னை வந்தபோது ஆழ்வாரின் கடைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். அழைத்துச் சென்றேன். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள சில புத்தகக்கடைகள் ஏற்கெனவே அவருக்குப் பழக்கமானவை. இன்று அங்கே அதுமாதிரியான கடைகள் அதிகம் இல்லை. ஆனால் காலங்களைக் கடந்த ஆழ்வாரின் நடைபாதைக் கடை ஓர் அற்புதம் என்று எம்.டி. குறிப்பிட்டார். நாங்கள் அங்கே நீண்ட நேரத்தைச் செலவழித்தோம். இறுதியில் சில அரிய நூல்களை எம்.டி. தேடிக் கண்டுபிடித்திருந்தார்.
ஆழ்வார் மறைவோடு புத்தகக் காதலர்களின் சொர்க்கம் இல்லாமல் போய்விடுமா? அவர் பிள்ளைகள் பொறுப்பேற்றுத் தொடர்வார்களா? பழைய புத்தகங்களின் நற்செய்தியாளரான ஆழ்வார் தொண்ணூறாவது வயதிலும் இருபத்து நான்கு மணிநேரமும் எழுத்துக்களைத் தழுவியபடியே இருந்தார்; எழுத்துக்கள் அவரை அணைத்தபடியே இருந்தன.
தமிழில்: என்னெஸ், மின்னஞ்சல்: pksreenivasan@gmail.com