இரு சகோதரர்கள இரு பாதைகள்
முண்டா மக்களின் உரிமைகளுக்காகப் பலகாலம் களப்பணியாற்றி வரும் சமார் போஸ் மாலிக் ராஞ்சியிலுள்ள Xavier Institute of Social Service இல் விரிவுரையாளராக இருந்தவர். அவரது களஅனுபவங்களைக் கதை வடிவில் தரும் ‘Sylvan Tales, Stories from the Munda Country’ (adivaani, kolkatta, 2015) நூலிலிருந்து இந்தக் கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ராஞ்சியிலுள்ள காவல்துறைத் தலைமை யகத்தில் டிரம்பெட்டுகள் உச்சஸ்தாயியில் ஒலியெழுப்பின. ஆனாலும் அவற்றில் சுரத்தில்லை. ஜார்க்கண்ட் காவல்படையைச் சேர்ந்த நான்கு படைவீரர்களின் உடல்களைக் கொண்ட சவப்பெட்டிகள் தேசியக் கொடி போர்த்தி திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்தன.
ஆயுதப்படையின் தலைவர் சைகை காட்டியதும் ஒன்பது துப்பாக்கிகள் வானத்தை நோக்கிக் குண்டுகளை உமிழ்ந்தன, மரண மடைந்தவர்களின் ஆன்மாக்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக.
“தீரமிக்க நமது ஜவான்கள் மாவோயிஸ்டுகளோடு இறுதி மூச்சுவரை போராடி, நமது நாட்டிற்காக வீரமரணம் எய்தியிருக்கிறார்கள். அவர்களை இந்திய மக்கள் என்றும் உயர்ந்த பெருமையுடன் நினைவுகூர்வார்கள்; அவர்களின் பெயர்கள் நமது இதயங்களில் பொன் எழுத்துகளால் பதிக்கப்பட்டிருக்கும்.” மாநில முதல்வர் ஒரே மூச்சில் சொல்லிமுடித்தார். பின்னர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.
“இந்தத் தியாகிகளின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர்களின் பிஞ்சுக் குழந்தைகள் தந்தையரை இழந்து அநாதைகளாகிவிட்டார்கள்; அவர்களின் மனைவியர் இளம்வயதிலேயே விதவையராகிவிட்டார்கள். என்ன ஓர் இழப்பு!” அவர் குரலிலிருந்த தழுதழுப்பு அந்தச் சூழலைத் துயரமிக்கதாக மாற்றியது.
“இந்தப் படுபாதகச் செயலைப் புரிந்தவர்களை நாம் விடப்போவதில்லை. துணை ராணுவப் படை இதற்குப் பழிக்குப் பழி வாங்கியே தீரும்.” துக்கத்துடன் தணிவாக ஒலித்துவந்த அவரது குரல் இப்போது உணர்ச்சிபொங்கி உச்சத்தில் ஒலித்தது.
கூட்டத்திலிருந்த அவரது துதிபாடிகள் சிலர் கைதட்டினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் கைதட்டுவதின் பொருத்தமின்மையை உணர்ந்த அவர் கையை உயர்த்தித் தனது மறுப்பைத் தெரிவிக்கும் முகமாகக் கரத்தை அசைத்தார்.
“இறந்து போனவர்களின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு அரசு விரைவிலேயே வேலை வழங்கும்.” மனித உயிரிழப்பு நேரும் இதுபோன்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் - ரயில் விபத்து, சுரங்கச் சரிவு, யானை - மனிதர் மோதல், இனக்கலவரங்கள் - சொல்வதுபோல அவர் வழக்கமான வாக்குறுதியை அளித்தார்.
“மரணமடைந்தோருக்கு நமது அஞ்சலியைச் செலுத்து வோம்” என்று சொல்லிவிட்டு அவர் அந்த நான்கு சவப்பெட்டிகளுக்கும் மாலையிட்டார். அவரைத் தொடர்ந்து பிற பிரமுகர்களும் ரோஜா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த அஞ்சலிக்கூட்டம் முடிவுற்ற பிறகு இறந்துபோனவர் களில் ஒருவரான ஜார்க்கண்ட் ஜாக்குவார் படையைச் சேர்ந்த சாதோ முண்டாவின் குடும்பத்தினரை நான் சந்தித்தேன். பிஜாய்தான் என்னை அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்தான். பிஜாய் வனஉரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவன். சாதோ முண்டாவின் ஒன்றுவிட்ட சகோதரன். இப்போதெல்லாம் கிராமங்களுக்குச் செல்வதற்குச் சாலைகள் இருக்கின்றனவோ இல்லையோ எல்லா ஊர்களிலும் செல்கோபுரங்கள் உள்ளன. முந்திய நாள் மாலை என்னை அழைத்த பிஜாய், சாதோ முண்டாவின் குடும்பத்தினரை இறுதிச் சடங்குகளுக்காக ராஞ்சியிலிருந்து மீண்டும் அவனது ஊருக்குக் கூட்டிச் செல்ல என் வண்டியைக் கேட்டான். அவனது கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள மற்றொரு கிராமத்துக்குச் சென்று, ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே வந்துசெல்லும் பஸ்ஸைப் பிடித்து அந்தக் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு ராஞ்சிக்கு அவன் வந்திருந்தான். எனது டிரைவர் விடுப்பிலிருந்ததால் அவர்களை நானே காரில் கூட்டிச்செல்வதாக முடிவு செய்தேன்.
“ஜோகர் (வந்தனம்)” ஜவானின் மனைவியையும் அவளருகில் நின்றிருந்த இரண்டு சிறுமிகளையும் பார்த்து நான் வணக்கம் சொன்னேன். அவர்களும் பதிலுக்கு அவர்களின் மரபுப்படி இரு கைகளையும் கூப்பி ‘ஜோகர்’ என்றார்கள்.
“சஞ்ஞய்ஜி நம்மை அவரது காரில் அழைத்துச் செல்வார். உடல் போலீஸாரின் ஜீப்பில் வரட்டும்,” பிஜாய் சாதோவின் மனைவி கர்மியிடம் சொன்னான்.
“குழந்தே, உன் பெயர் என்ன?” நான் அங்கு நிலவிய அமைதியைக் கலைத்தேன். கார் கண்ணாடிகளில் எனக்கு நேர்ப்பின்னால் உட்கார்ந்திருக்கும் சிறுமியைப் பார்த்தேன். அங்கு யாரும் பேச்சுகொடுக்கும் நிலை யிலில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்களின் நேசத்துக்குரியவரின் உடல் முன்னால் சென்று கொண்டிருக்கும் ஜீப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. எல்லோரது கண்களும் அந்த போலீஸ் ஜீப்பின் மீதே பதிந்திருந்தன. ஒரு டிரக் வண்டி எங்களைக் கடந்து செல்வதற்காக நான் காரைச் சற்று வேகம் குறைத்தேன். அது கடந்துசென்று எனது காருக்கும் போலீஸ்ஜீப்பிற்கும் நடுவில் நகர்ந்துகொண்டிருந்தது.
“என்னை ஹிசீர் என்றழைப்பார்கள்,” கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து அந்தச் சிறுமி பதிலளித்தாள். அவள் நீலநிற அரைப்பாவாடையும் வெள்ளைநிற மேல்ச்சட்டையும் அணிந்திருப்பதைக் கவனித்தேன். அஞ்சலிக் கூட்டத்தின்போது அவள் மற்ற சிறுமியுடன் தோளோடு தோள் சேர்த்துக்கொண்டு, அந்தச் சிறுமி அந்தத் துக்கத்தைத் தாங்கிக்கொள்ளத் தைரியம் கொடுப்பதுபோல் அவளது கைகளை இறுகப் பற்றியபடி நின்றிருந்தாள். அவள் அணிந்திருந்த உடை கிராமத்துப் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படும் சீருடை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகள் பொதுநிகழ்ச்சிகளுக்குச் சாதாரணமாக அதையே அணிந்து வருவார்கள்.
“உன்னுடைய பெயர்?” கண்ணாடி வழியாக நான் அடுத்த சிறுமியின் முகத்தைப் பார்க்க முயன்றேன். கீழே பார்த்தபடியிருந்த அவள் ஏறிட்டு என்னைப் பார்க்கவில்லை.
“அவள் முக்தா” என்றாள் ஹிசீர்.
“சகோதரர் சாதோவின் மகள் அவள், ஒரே மகள்.” என்னருகிலிருந்த பிஜாய் என்னைக் கிள்ளினான்.
“உங்களிருவருக்கும் அழகான பெயர்கள். ஒருத்தி ‘நெக்லஸ்’, இன்னொருத்தி ‘முத்து’. நீங்களிருவரும் சிநேகிதிகளா?” முதல் பெயர் முண்டாரிப் பெயராகவும் மற்றது இந்திப் பெயராகவும் இருந்ததை உணர்ந்தேன்.
“அவர்கள் ஒன்றுவிட்ட சகோதரிகள். ரொம்ப நெருக்கம்.” நான் எதற்காக அவர்களிடம் பேச்சுக்கொடுக்கிறேன் என்பதை உணராமல் பிஜாய் பதிலளித்தான். அந்தச் சிறுமிகளே பேசட்டும் என்று அவனிடம் நான் சாடைக் காட்டினேன்.
“முக்தா, நீ பள்ளிக்குப் போகிறாயா?” கண்ணாடியைப் பார்த்தபடியே கேட்டேன். என்னால் அவளது முகத்தைப் பார்க்க முடியவில்லை. பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் அவளைப் பார்ப்பதற்காகத் தலையைத் திருப்பினேன். அவள் ஹிசீரின் தோளில் தலைசாய்த்துச் சத்தமில்லாமல் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவளது மனதைத் திசைத்திருப்புவதற்காகப் பேச்சு கொடுத்த எனது முட்டாள்தனத்தை நானே நொந்து கொண்டேன்.
எந்தப் பதிலும் வராததால் பிஜாயே அவளுக்காகப் பதில் சொன்னான். “அவள் பத்தாவது படிக்கிறாள். அடுத்த வருடம் மெட்ரிக் தேர்வு எழுதுவாள்.”
“இப்போ அப்பா இல்லை. நீதான் இனி அம்மாவைப் பாத்துக்கணும். செய்வாயா?” அவள் மனத்தை மாற்றும் முயற்சியில் பிஜாய் நான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.
“தயவுசெய்து பேச்சை நிறுத்துங்கள்,” அவளது அம்மா சற்றுக் கோபமாகச் சொன்னாள். அவள் சன்னல் வழியே வெளியே பார்த்தபடி இருந்தாள். பின்னர் வண்டிக்குள் பார்வையைத் திருப்பி, கண்ணாடியில் என்னைப் பார்த்தாள். காற்றில் அலைந்து கொண்டிருந்த அவளது முடி வறண்ட அவளின் முகத்தில் தாக்கிக் கொண்டிருந்தது. அவள் தன் விரல்களால் அதை விலக்க முயன்றபோது அவளது நகங்களில் நகப்பூச்சுப் புத்தம்புதிதாகப் பளிச்சென்றிருந்ததைக் கவனித்தேன்.
“வலது பக்கம் முதல் திருப்பம்” பிஜாய் எனக்கு வழி சொன்னான். டிரக்கைத் தொடர்ந்துவந்துகொண்டிருந்த நான் வேகத்தை மட்டுப்படுத்தினேன். சாலையின் இருமருங்கும் அடர்ந்திருந்த சாலமரங்கள் மேற்கொண்டு செல்லச்செல்லக் குறைந்து பலாச மரங்கள் மிகுதியாகத் தென்படலாயின. ஒரு குறுகிய கப்பிச் சாலையில் நான் வலப்பக்கமாகத் திரும்பியபோது போலிஸ் ஜீப் எங்களுக்கு முன்பாகச் செல்வதைப் பார்க்க முடிந்தது. சூரியன் இறங்கிக்கொண்டிருந்தது. கோடைக்கால ஆரம்பத்தின் வெம்மையை முன்பக்கக் கண்ணாடி உணர்த்தியது. கண் கூசாமலிருப்பதற்காக மறைப்பை இறக்கினேன்.
பலாசமரங்கள் பூக்கும் பருவமிது. அவற்றின் அடர்ந்த இலைகளிலிருந்தும் கிளைகளிலிருந்தும் தீக்கொழுந்துகள் மேலெழுவதுபோல பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ‘மாநிலப்பூ’ என்ற அந்தஸ்தை இந்த மலர்கள் பெற்றிருக்கின்றன. பின்பனிக்காலம் இந்த வருடம் முண்டா பிரதேசத்தில் குளிராக இருந்தபோதிலும் மார்ச் மாதத் துவக்கத்திலேயே ஆரம்பித்துவிட்ட கோடையில் அது சீக்கிரமாகவே மறைந்துவிட்டது. ‘காட்டுத் தீ’ என்று அறியப்படும் இந்த மரம் தகிக்கும் வெயிலில் உண்மையாகவே அப்படி காட்சியளித்தது.
நெடுஞ்சாலையிலிருந்து ஐந்து கிலோமீட்டரில் இந்தக் கப்பிச் சாலை முடிந்தது. அதன்பிறகு நாங்கள் மலைச்சரள் பாதையில் ஏறினோம். முன்னால் செல்லும் போலிஸ் வாகனம் கிளப்பும் புழுதியிலிருந்து தப்பிப்பதற்காக நான் நல்ல இடைவெளிவிட்டே வந்துகொண்டிருந்தேன். காரில் முழு அமைதி. பேசும் மனோநிலையில் யாருமில்லை. நான் நேர்க்குத்தாக ஏறி இடதுபுறம் திரும்பியபோது என் கண்முன்னே ஒரு பயங்கரக் காட்சி விரிந்தது. எரிக்கப்பட்ட ஒரு காடு!
“அடக்கடவுளே, என்ன இது!” என்னால் அதிர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நிலத்திலிருந்த செடி செத்தைகள் முற்றிலுமாக எரிக்கப்பட்டிருந்தன. நிலம் கருநிறச் சாம்பலால் மூடப்பட்டிருந்தது. மரங்கள் அதிகமும் இலைகளின்றியோ அல்லது காய்ந்துபோன கொஞ்சம் இலைகளுடனோ பாதி எரிந்துபோய்ச் சாம்பிராணிக் குச்சிகளைப் போல நின்று கொண்டிருந்தன.
“வேறு என்னதான் செய்ய முடியும்? மாவோயிஸ்ட்கள் காட்டைத் தங்களின் புகலிடமாக்கிக் கொண்டு விட்டார்கள்.” கொல்லப்பட்ட படைவீரரின் மனைவி கர்மி கோபம் கொப்பளிக்கச் சொன்னாள்.
“பாதுகாப்புப் படைதான் காட்டை எரித்தது,” என்றான் பிஜாய் வருத்தமாக.
“மாவோயிஸ்ட்டுகள் எங்கள் வாழ்க்கையை எரித்து விட்டார்களே! அதை ஏன் நீ சொல்லமாட்டேன் என்கிறாய்?” அவளது குரல் தீர்க்கமாகக் கீரீச்சிட்டு ஒலித்தது.
பிஜாய் எதுவும் பேசவில்லை. ஓடிக்கொண்டிருக்கும் காரின் சக்கர ஓசை மட்டுமே எனக்குக் கேட்டது. காரில் நிலவிய மௌனம் தந்த வலி எரிக்கப்பட்ட காடு தந்த வலியிலும் குறைந்ததல்ல.
நாங்கள் கிராமத்தைச் சென்று சேர்ந்தபோது சூரியன் அடையும் பொழுதாகியிருந்தது. சிதறிக்கிடந்த மெல்லிய மேகங்களினூடாகக் கசிந்த சூரிய ஒளியில் வானம் செக்கச்செவேலென்றிருந்தது.
வண்டியை ஜீப்பிற்குச் சற்றுத் தொலைவில் நிறுத்தினேன். ஜீப்பின் பின்புறத்திலிருந்து சவப்பெட்டி போலீஸாரால் இறக்கப்படுவதைப் பார்ப்பதற்காகக் கொஞ்சம்பேர் வந்தார்கள். குழந்தைகள் சிலர் தொலைவில் நின்றபடி நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சவப்பெட்டியைப் பெற்றுக்கொள்வதற்காக இளைஞர்கள் சிலர் முன்னால் வந்தார்கள். யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. மரணமடைந்த ஜவானின் மனைவியை வீட்டுக்குக் கூட்டிச் செல்வதற்காக இரண்டே இரண்டு மூதாட்டிகள் மட்டுமே வந்தது விந்தையாக இருந்தது. இதுபோன்ற துக்க நிகழ்ச்சிகளில் பெண்கள் குரலெடுத்து அழும் அழுகை அங்கு கேட்கவில்லை. துக்கப்படுவதற்கு அங்கு எவருமில்லாதது அந்தச் சூழலை மேலும் கனக்கச் செய்து இறுக்கத்தை உண்டாக்கியது.
காவல்படை உடலைக் கையளித்துவிட்டு உடனே சென்றது. சிறிது நேரத்திற்குப் பிறகு சாதோ முண்டாவின் தாயாரின் கிராமத்தைச் சேர்ந்த சிலர் அருகிலுள்ள கிராமத்திலிருந்து ஒரு ஏழை பிராமணனையும் அழைத்துக்கொண்டு வந்துசேர்ந்தார்கள். முண்டாக்களால் பாம்ரே என்று அழைக்கப்பட்ட அவர் புரோகிதப் பணியைச் செய்யத் தொடங்கினார். அவர் சொன்ன மந்திரங்கள் முண்டா மக்களுக்கு மட்டுமல்ல, எனக்கும்கூட விளங்கவில்லை. சமஸ்கிருதத்தில் எனக்கிருந்த கொஞ்சம் ஞானமும் சமஸ்கிருதச் சார்புகொண்ட வங்கமொழியிலும் இந்தியிலும் எனக்கிருந்த நல்ல அறிவும் அந்த மனிதர் ஒரு விநோத ஸ்வரத்தில் முணுமுணுத்த மந்திரங்களுக்குள் நுழைய போதுமானதாக இருக்கவில்லை.
அவர்கள் பாசனக்கால்வாயின் அருகே உடலைச் சிதையிட்டார்கள். மற்றச் சடங்குகள் பின்னர் செய்யப்படுமென்று பிஜாய் என்னிடம் சொன்னான். இறந்தோரை எரிப்பது என்பது இந்துக்களின் வழக்கம். இந்து மதத்தைத் தழுவிய கீழ் முண்டா பிரதேசத்தைச் சேர்ந்த முண்டாக்கள் சமீபகாலமாக இந்த வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். மற்றபடி அவர்கள் தங்களின் மரபுவழிச் சடங்குகளை முழுமையாகக் கைவிட்டுவிடவு மில்லை. உதாரணமாக ‘உம்பல் அதேர்’ (நிழல் பிரவேசம்) என்ற சடங்கு.
இறந்தோரைப் புதைப்பது முண்டாக் களின் மரபு. உடல் சவக்குழிக்குள் இறக்கப்படுவதற்கு முன்பாக திருமணச் சடங்கையொத்த ஒரு சடங்கு செய்யப்படும். ஒரு கற்பாளம் கொண்டு சவக்குழி மூடப்படும். மற்றொரு கற்பாளம் உடலின் தலைப்பாகமிருக்கும் பக்கமாக நடப்படும். ‘இறந்தவரின் தற்காலிக வீடு’ என்று இது கருதப்படுகிறது. முண்டாக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை கிடையாது. அவர்கள் நம்பிக்கை மரபில் சொர்க்கம் நரகம் இரண்டிற்கும் இடமில்லை. அவர்கள் இறந்தவரின் ‘நிழலை’ச் சவக்குழியிலிருந்து வீட்டிற்குத் திரும்பக் கூட்டி வந்து வீட்டின் ஒரு மூலையில் ‘நிழல் பிரவேசம்’ என்றொரு சடங்கைச் செய்து அதற்கு ஒரு ‘நிரந்த வீட்டை’ அளிப்பார்கள். அது நன்மை பயக்கும் ஆவியாக அங்கேயே இருந்து அந்தக் குடும்பத்தைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றி வரும்.
மயானத்திலிருந்து மற்றவர்கள் வந்து சேர்ந்தபோது இருட்டிவிட்டிருந்தது. வானத்தில் நிலவு இல்லை. பிஜாய் என்னை அவனது வீட்டிற்கு இரவில் தங்குவதற்காக அழைத்துச் சென்றபோது அவன் உருவத்தைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை.
“தாதா, மண்ணெண்ணெய் விளக்கின் மினுக்மினுக் வெளிச்சத்தில் இரவை இங்கு கழிப்பது உங்களுக்குக் கஷ்டம்தான் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இரவு நேரத்தில் நீங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் பயணம் செய்வது உகந்ததல்ல,” என்று பிஜாய் என்னிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தான்.
“சாவுக்கு ஏன் இவ்வளவு குறைவான மக்கள் வந்தார்கள்?” என்று அவனிடம் கேட்டேன்.
“எங்கள் கிராமம் இரு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டிற்கிடையே மாட்டிக்கொண்டிருக்கிறது,” அவன் தயக்கத்துடன் சொன்னான்.
“அதாவது ஒரு பக்கம் மாவோயிஸ்டுகள், மறுபக்கம் பாதுகாப்புப் படையினர் அப்படித்தானே?” எனது கேள்விக்குப் பதில் கிடைக்கிறதா என்று பார்த்தேன்.
“ஆமாம், பகல் நேரத்தில் போலிஸார்கள் வந்து போராளி களுக்கு இடமோ உணவோ கொடுத்தால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டிவிட்டுப் போகிறார்கள்; இரவில் போராளிகள் வந்து போலிஸாருக்கு எந்த உதவியும் கொடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள்” என்று பிஜாய் விளக்கினான்.
“அதாவது பாதுகாப்புப் படையினரோடு சேர நேர்ந்த அவர்களின் சொந்தக்காரப் பையனின் சாவுக்குக்கூட மக்கள் வரப் பயப்படுகிறார்கள், அப்படித்தானே?” பதிலைக் கண்டுபிடித்துவிட்டதாக நான் எண்ணினேன்.
“இல்லை. அவர்கள் பயப்படவில்லை. யார் பக்கம் நிற்பது என்பதை அவர்கள் ஏற்கெனவே முடிவெடுத்து விட்டார் கள்,” பிஜாய் என்னைத் திருத்தினான்.
பிஜாயின் மனைவி ஓர் அரிக்கேன் விளக்கைப் பொருத்தி அந்த மண் வீட்டின் முன்புறத்தில் கட்டப் பட்டிருந்த இரும்புக் கம்பியில் தொங்க விட்டிருந்தாள். நாங்கள் நுழைந்தபோது அவள் ஒரு குடம் நீருடன் வந்து எங்கள் கால்களைக் கழுவி ஈரம்போக ஒரு துண்டால் துடைத்துவிட்டாள். முதலில் நான் நாசூக்காக மறுத்தேன். அவள் வற்புறுத்தவே எனது ஷுவைக் கழற்றிவிட்டு அவள் விருப்பப்படி செய்ய அனுமதித்தேன்.
“இது ஆணாதிக்கப் போக்கு. பிஜாய் நீ இதை நிறுத்த வேண்டும்,” பாயில் அமர்ந்ததும் அவனிடம் மெதுவாகச் சொன்னேன்.
“ஆனால் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் எங்கள் வழக்கம் இது. எப்படி விடுவது, தாதா?” அவன் மறுப்பாகச் சொன்னான்.
“போகட்டும். பெண் விருந்தாளிகள் வீட்டிற்கு வரும்போது அவர்களின் கால்களைத் துடைத்துவிடுவோம் என்று உனக்கு எப்போவாவது தோன்றியிருக்கிறதா?”
“தாதா, உங்களுக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டது.” எனது கேள்விக்குப் பதிலளிக்காமல் சிரித்தான் பிஜாய்.
பிஜாயின் மனைவியும் ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். பிஜாய் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம். ஆணாதிக்கத்தை எதிர்க்காமல் ஆண் மையச் சமூகத்தின் சட்டதிட்டங்களை எப்படி உடைக்க முடியும்?
முண்டா சமூகம் ‘சகோதரத்துவம்’ என்ற ஒற்றைக் கண்ணியில் பிணைக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து வரும் அழுத்தங்களால் அது சிதைந்துகொண்டிருக்கிறதா? விரிசல் தெளிவாகத் தெரிகிறது. கோழிக்கறியும் சோறும் ஊறுகாயும் பொரித்த பப்படமுமாக நல்ல இரவு உணவை உண்டுவிட்டுப் பாயில் படுத்தபடி யோசித்துக் கொண்டிருந்தேன். இரவு குளிர்ச்சியுடன் அமைதியாக இருந்தது. வழக்கமாகக் கேட்கும் சுவர்கோழியின் ஓசைகூட எனக்குக் கேட்கவில்லை. காட்டுத்தீயில் அவையும் கொல்லப்பட்டிருக்கலாம். நித்திரை எனது மனத்தின் இமைகளை எப்போது மூடியதோ, எனக்குத் தெரியாது.
பிஜாய்தான் என்னை எழுப்பினான். அரிக்கேன் விளக்கின் தணிந்த வெளிச்சத்தைத் தவிர, எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. அந்த வெளிச்சத்திலும் அறைக்குள் சிலர் இருப்பதை என்னால் காண முடிந்தது. நான் எழுந்து நின்றதும் அந்த நிழல் மனிதர்கள் நகரத் தொடங்கினார்கள்.
“என்னாச்சு?” என்று கேட்டேன்.
“நாம் போகவேண்டும்,” என்று பதிலளித்தான் பிஜாய்.
“எங்கே?” எனக்குக் குழப்பமாக இருந்தது.
“சொல்கிறேன், வாருங்கள்; உங்கள் ஷுவைப் போட்டுக் கொள்ளுங்கள்.” பிஜாய் என் கரத்தைப் பற்றி லேசாக அழுத்தினான். அவன் சொல்ல வந்தது எனக்குப் புரிந்தது. நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. இருட்டில் அவனைத் தொடர்ந்தேன்.
சிறிது நேரத்தில் நாங்கள் அந்தக் கிராமத்தின் ஒரு மூலையிலிருந்த ஒரு முதிர்ந்த மாமரத்தின் கீழ் குழுமியிருந்த கிராம மக்களோடு சேர்ந்து கொண்டோம். பனம்பாயில் சிலர் அமர்ந்திருந்தார்கள்; சிலர் வெறும் தரையில் குத்திட்டிருந்தார்கள். உயர்ந்த மரங்களின் இலைகள் வானத்தைத் திரையிட்டிருந்தன. அங்கு விளக்குகள் இல்லை; யாரும் பேசவுமில்லை. ஆண் பெண்களின் நிழலுருவங்கள் மட்டும் அந்த அமாவாசைக் கும்மிருட்டில் அங்குமிங்கும் நகர்வதைப் பார்க்க முடிந்தது.
“உலிகட்டுவின் சகோதரர்களே சகோதரிகளே குழந்தைகளே, உங்களுக்குச் செவ்வணக்கம்.”
அமைதியின் ஆழத்திலிருந்து ஓர் ஆண்குரல் எழுந்தது. ‘மாம்பழக் கிராமமான’ உலிகட்டு அவன் சொல்வதைக் கவனமாகச் செவிமடுத்தது.
“ஒரு துக்ககரமான விஷயத்திற்காக உங்களை இங்கு வரச் சொன்னோம்,” அவர் நிறுத்தினார்.
என் கண்கள் இப்போது இருட்டிற்குப் பழக்கமாகி விட்டிருந்தன. என்னால் அந்த மனிதரைப் பார்க்க முடிந்தது. மாமரத்தின் பருத்தத் தண்டின் முன்னால் தோளில் துப்பாக்கியுடன் அவர் நின்றுகொண்டிருந்தார். கால் சராயும் சட்டையும் தலையில் தொப்பியுமாக அவர் இருந்ததைப் பார்க்க முடிந்தது.
“நேற்று முன்தினம் காம்காரியாவில் பாதுகாப்புப் படையோடு நடந்த சண்டையில் நாங்கள் ஒரு தோழரை இழந்தோம்.” நீண்ட ஓர் இடைவெளி.
“அவர் உங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்,” அங்கிருப் போரெல்லாம் அது யாராக இருக்கும் என்று ஊகிப் பதற்காகச் சிறிதுநேரம் அவர் மௌனம் காத்தார். கூட்டத்தினரிடையே கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது.
“எங்கள் தோழர்கள் அவரது உடலை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். சீக்கிரம் வந்துவிடுவார்கள். அனைவரும் அமைதி காக்கவும்,” என அறிவித்தார் அவர்.
“சாதோ முண்டாவின் உடல் நேற்று அடக்கத்திற்காக இந்தக் கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்பதை அறிந்தோம். அதுவும் துக்கரமான செய்திதான். ஆனால் அவன் நம்மை ஒடுக்குபவர்களும் முண்டா இனத்தவரின் எதிரிகளுமான ஆட்களுக்குச் சேவை செய்ததால் இறந்தான்.” அவர் அமைதியான, உரக்கவுமில்லாத தணிந்துமில்லாத குரலில் சொன்னார்.
“அவனது உடலை இங்கு வந்து எரியூட்டுவதற்கு உங்களில் சிலர் உதவியிருக்கிறீர்கள். வேற்றாள் ஒருவரைக்கூட இந்தக் கிராமத்துக்குக் கூட்டிவந்து அவருக்குத் தங்க இடம் கொடுத்திருக்கிறீர்கள். அவர் காரை நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். அவர் கைது செய்யப்பட்டிருக்கிறான்.”
இது என்னைத் திடுக்கிட வைத்தது. நான் கைதாகி இருக்கிறேன் என்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது! பிஜாய் என் கரத்தை இறுக்கினான். அந்த இறுக்கத்தில் நான் பாதுகாப்பை உணர்ந்தேன்.
சிலர் நடந்துவரும் ஓசை கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன்.
“நம் தோழர்கள் அந்தத் தியாகியின் உடலைக் கொண்டு வரட்டும். வழி விடுங்கள்.” அந்தத் தலைவர் கூட்டத்தைப் பார்த்து மெதுவாகச் சொன்னார்.
நான்கு பேர் அந்த உடலை ஒரு கட்டிலில் சுமந்து வந்து, வட்டமாக அமர்ந்திருந்த கிராமத்தவர்களின் நடுவில் வைத்தார்கள். இறந்தவரின் முகத்தைப் பார்க்க முடியாதபடி இன்னும் இருட்டாக இருந்தது.
“தோழர் சாரோ முண்டா, ஜிந்தாபாத்!” தலைவர் கோஷமெழுப்பினார்.
“ஜிந்தாபாத், ஜிந்தாபாத்” மற்றவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.
கூட்டத்தின் அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு பெண்ணின் அலறல் ஒலித்தது. பெண்களின் அதிகரித்துக் கொண்டே போன தேம்பலில் இருள் முன்பிலும் அடர்ந்தது.
“ஆனால் அவன் வேலை தேடி தில்லிக்கு அல்லவா போனான்?” என் பக்கத்திலிருந்த ஒருவர் கிசுகிசுத்தார்.
“ராஞ்சியில் நாம் போடும் வனஉரிமைக்கான கூட்டங் களில் கலந்துகொள்ளும் அதே சாரோவா?” பொறுமை யில்லாமல் நான் பிஜாயிடம் கேட்டேன்.
“ஆமாம், அவனாகத்தான் இருக்க வேண்டும். எங்கள் ஊரில் அந்தப் பெயரில் அவன் ஒருவன்தான் உண்டு. ஆனால், எப்படி அவன்... அவன் தில்லிக்குப் போயிருக்கிறான் என்றுதான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.” பிஜாய் நம்பமுடியாமல் பதிலளித்தான்.
“அவரை இந்த நிலையில் பார்ப்பதற்கு நீங்கள் வருந்துவது எனக்குத் தெரியும். ஆனால் நாம் அனைவரும் அவருக்காகப் பெருமைப்படவேண்டும். அவர் இந்த நாட்டிற்காக, ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்ட சகோதர சகோதரிகள், முதியவர்கள், குழந்தைகளுக்காக உயிர் நீத்திருக்கிறார். நாம் ஏங்கிக்கொண்டிருக்கும், முண்டாக்களான நமது விடுதலைக்காக அவர் உயிர் நீத்திருக்கிறார்,” தலைவர் சற்று நிறுத்தினார்.
“அவரது மரணம் சுகன் மலையை விட உயர்ந்தது. ஏனென்றால் அவர் ஏழைகளை விடுவிப்பதற்காக மரணம் எய்தியிருக்கிறார். இந்திய மக்கள் அவரை எந்நாளும் நினைத்திருப்பார்கள். உங்கள் கிராமத்தைச் சேர்ந்த சாதோவும் இறந்திருக்கிறான். ஆனால் அவன் மரணம் வாத்தின் இறகைப்போல. யாரும் அவனை நினைவுகூரப் போவதில்லை. ஏனென்றால், அவன் வசதிபடைத்தோர், ஒடுக்குவோர் இவர்களின் நலனைக்காக்கும் முயற்சியில் இறந்துபோனான்.”
பொழுது புலரும் நேரம். அந்தக் கிராமத்தின் மீதான இரவிருட்டின் பிடி தளர்ந்துகொண்டிருந்தது. புரட்சியைக் குறிக்கும் செங்கொடி சாரோ முண்டாவின் உடல்மேல் போர்த்தப்பட்டிருந்தது. தோளில் துப்பாக்கியுடன் ராணுவ உடையில் ஆண்களும் பெண்களுமாகச் சிலர் அவரது தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார்கள்.
“இனி நீங்கள் நமது அன்புத்தோழர் சகோதரர் சாரோவுக்கு உங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தலாம்,” என்று அறிவிப்பு விடுத்தார் தலைவர். அந்தத் தலைவரும் முண்டா இனத்தவர்தான். ஏனென்றால் அவர் முழுவதும் முண்டா மொழியில்தான் பேசினார். சாரோவைப் பற்றிச் சொல்லும்போது தோழர் என்றும் சகோதரர் என்றும் குறிப்பிட்டதைக் கேட்டு நான் மகிழ்ந்தேன். முண்டா நாட்டில் புரட்சிகரத் தோழமையும் பழங்குடிச் சகோதரத்துவமும் சேர்ந்துதான் இருக்கின்றன!
குட்டைப்பாவாடையும் கைச்சட்டையும் அணிந்த ஒரு சிறுமிதான் முதலில் எழுந்தாள். அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அவள் இறந்தவரின் காலை நோக்கிக் குனிந்து தனது தலையால் காலைத்தொட்டு வணங்கினாள். பெண்கள் மீண்டும் சத்தமாக விம்மலாயினர்.
பிஜாய் இன்னமும் என் கையைப் பிடித்துக்கொண்டு தானிருந்தான். திடீரென்று அவன் தேம்புவது எனக்குக் கேட்டது. சூழலே துக்கமயமாகிவிட்டது. யார் இந்தப் பெண்?
“சின்ன வயசிலேயே அவள் அம்மா போய்விட்டாள். இப்போது அப்பாவையும் இழந்துவிட்டாள். பாவம் அந்தப் பெண்!” என்னருகிலிருந்த யாரோ மெதுவாகச் சொன்னார்கள்.
“நீங்கள் எல்லோரும் சம்மதித்தால், ஹிசீரை நாங்கள் எங்கள் கட்சியின் மகளாகத் தத்தெடுத்துக் கொள்கிறோம்,” தலைவர் கூட்டத்தின் சம்மதத்தைக் கேட்டார்.
“யார்? ஹிசீரா! சாதோ முண்டாவின் மனைவி மகளுடன் வந்தாளே அந்தப் பெண்ணா?” என்னால் என் காதையே நம்பமுடியவில்லை.
“ஆமாம். அவளேதான்” பிஜாய் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு பதிலளித்தான்.
கூட்டம் மௌனமாக இருந்தது. ஹிசீர் எழுந்து அவளது தந்தையின் தலைமாட்டில் ராணுவ உடையணிந்து நின்றுகொண்டிருந்தவர்கள் பக்கமாக நகர்ந்து, அங்குபோய் நின்றுகொண்டாள். ஒரு பெண் தோழர் அவளது கையைப் பற்றிக்கொண்டார்.
விடிந்துவிட்டிருந்தது. ஆனாலும் சூரியன் இன்னும் மேலே எழவில்லை. கிராமத்தார்கள் எழுந்து, சகோதரர் சாரோவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வரிசையில் நின்றார்கள். போராளிக் குழு ஒரு முண்டாரிப் பாடலைப் பாடியது:
நாங்களும் கிளம்பிவிட்டோம் ஓ பிர்ஸா முண்டா
கைகளில் ஆயுதங்களுடன்.
பாட்டு முடிந்ததும் பிஜாய் என்னிடம் வரிசையில் போய் நிற்கச் சொன்னான். நானும் சென்று நின்றேன். எங்கள் முறை வந்ததும் தலைவர் என்னிடம் “ஹிசீர் கேட்டுக் கொண்டதற்காக நாங்கள் உங்களை விடுவிக்கிறோம். மதியத்துக்கு மேல் நீங்கள் கிளம்பிவிட வேண்டும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு முன்னால் கிளம்பக்கூடாது,” என்றார். அந்தத் தலைவர் என்னிடம் அழுத்தமாகச் சொன்னார். அவர் என்னை நம்பத் தயாராக இல்லை, அது சரிதான். மாலைக்குள்ளாக அந்தக் கூட்டம் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிடும் என்று எண்ணிக்கொண்டேன்.
நான் ஹிசீரைப் பார்த்தேன். வறண்ட அவளது முகத்திலும் ஈரமான அவளது கண்களிலும் ஒரு சோகப்புன்னகை தெரிந்தது.
பிஜாயின் மனைவி என்னை நன்கு உபசரித்தாள். சாரோவை மரபு வழியிலான அடக்கம் செய்துவிட்டு நாங்கள் வீடு திரும்பியதும், நான் குளிப்பதற்காக ஒரு வாளி குளிர்ந்த நீரை எடுத்து வைத்தாள். சோறும் பருப்பும் பலாக்காய் உருளைக்கிழங்கு சேர்த்த கறியும் செய்துதந்தாள். ஹிசீரும் முக்தாவும் மாலையில் என்னைப் பார்க்க வந்தார்கள்.
“ஜோகர், மாமா!” இருவரும் கைகோத்தபடி என்முன்வந்து நின்று வணக்கம் சொன்னார்கள்.
இந்தச் சூழ்நிலையிலும் அவர்களிருவரும் சேர்ந்துகொண்டிருப்பது என் மனதை என்னவோ செய்தது. அவர்களின் பாதைகள் வேறுவேறாகிவிட்டன. இன்றைய யதார்த்த நிலை அவர்களைச் சகோதரிகளாகத் தொடர அனுமதிக்கவில்லை.
அவர்கள் இருவரும் தமது தந்தையரை இழந்துவிட்டார்கள். இறந்தவர்களின் ‘நிழல்கள்’ அந்தக் குடும்பங்களையும் அந்தக் கிராமத்தையும் தீயசக்திகளிடமிருந்தும் துர்வினைகளிலிருந்தும் காக்கும் நற்சக்திகளாக வீட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளன. இந்த எண்ணம் என்னைக் கொஞ்சம் யோசிக்கச் செய்தது. இப்போதைக்குத் தீயசக்தி யார் - அரசா அல்லது மாவோயிஸ்டுகளா? இன்றைய யதார்த்தம் அவர்களின் பண்டைய நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாது.
கிராமத்தவர்களின் எண்ணத்திற்கு மாறாக சாதோ காவல்படையில் சேர்ந்த தினமே சகோதரத்துவம் அற்றுப்போய்விட்டது.
“குடும்பத்தைக் காப்பாற்ற ஏதாவது கிடைக்குமே என்றுதான் அவன் அதில் சேர்ந்தான். விவசாயத்திலிருந்து கிடைத்தது போதுமானதாக இல்லை,” என்ற பிஜாய் என்னிடம் விளக்கியிருந்தான்.
அந்தச் சிறுமிகள் இருவரும் என்னை வழியனுப்ப வந்தார்கள். அவர்களைக் கடந்துசென்று, அந்தக் கிராமம் கண்ணில் படாத ஒரு வலது சாலையில் நான் வண்டியைத் திருப்பியபோது, ஓர் ஆள் திடீரென்று என் வண்டியை நிறுத்தினார். வேட்டியும் குர்தாவும் அணிந்திருந்த அவர் காதிகுல்லா போட்டிருந்தார். அவரது தோளில் ஒரு பிளாஸ்டிக் பை தொங்கிக்கொண்டிருந்தது. அவர் அருகில் வந்து, “என்னை ராஞ்சி வரைக் கூட்டிக்கொண்டு போக முடியுமா?” என்று இந்தியில் கேட்டார்.
“அதற்கென்ன, ஏறிக்கொள்ளுங்கள்.” நான் முன் கதவைத் திறந்தேன். அவர் பிடிவாதமாகப் பின்னிருக்கையில் சென்று அமர்ந்துகொண்டார்.
நெடுஞ்சாலைக்கு வந்ததும் நான் சற்று ஆசுவாசமானேன். வண்டியில் உடன்வரும் மனிதர் யார் என்று கண்ணாடியைப் பார்த்தேன். அவரும் கண்ணாடியில் என்னைப் பார்த்துச் சிரித்தார்.
“உங்களை நம்பலாம் என்று நினைக்கிறேன்,” என்றார் அவர்.
என் இதயம் ஒருமுறை நின்றுவிட்டுப் பின் துடித்தது.
“ஆமாம், நிச்சயமாக,” நான் அந்தத் தலைவருக்கு உறுதியளித்தேன்.
தமிழில். தி.அ. ஸ்ரீனிவாஸன்