பின் ஏர் உழுபவர்
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சிறுவாணி வாசகர் மையம் கடந்த ஆண்டு முதல் ‘நாஞ்சில் நாடன்’ பெயரில் விருது வழங்கி வருகிறது. கலை, இலக்கியம், சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும், செம்மையாகவும் முனைப்புடன் பங்காற்றி வரும் ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் இந்த விருது 50,000 ரொக்கப்பணமும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. கடந்த ஆண்டுக்கான விருது ஓவியர் ஜீவாவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான விருது தமிழியல் ஆய்வாளர் ப. சரவணனுக்கு அளிக்கப்பட்டது.
தலைமையுரை ஆற்றிய தொழிலதிபர் டி. பாலசுந்தரம் “உ.வே.சா.வுக்கு யாரும் ஊக்கமளிக்கவில்லை. தமிழ்ச் சமூகம் மறந்தே விட்ட உ.வே.சா. படைப்புக்களைத் தன்னலம் கருதாது உழைத்துப் பதிப்பித்த ப. சரவணன் பாராட்டுக்குரியவர். இந்த விருது அவர் எழுதிய நூல்களின் மீதும், பதிப்பித்த நூல்களின் மீதும் ஒரு கவனத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.
“1855-இல் தமிழன்னைக்கு ஒரு மகன் பிறந்தான். தன்னலமில்லாமல் தாயின் அணிகலன்களை மீட்டு அணி செய்வதில் ஆத்மதிருப்தி அடைந்தான் அந்த மகன். அவர்தான் உ.வே.சா. 1973இல் தமிழன்னைக்கு மற்றொரு மகன் பிறந்தான். பெரும் காதலுடனும் பேரன்புப் பக்தியுடனும் உ.வே.சா.வின் நூல்களை மீட்டெடுத்து அழகுற மறுபதிப்புச் செய்தான். அவ்வகையில் ப. சரவணன் ‘தமிழின் மகன்’ ” என்றார் எழுத்தாளர் சொல்வனம் வ. ஸ்ரீநிவாசன்.
“அக்காலத்தில் சைவ மடங்களுக்குள் ஒற்றுமையில்லை. ஓலைச்சுவடிகளைத் திரட்டுவதற்கு உ.வே.சா. படாதபாடு பட்டார். குறிஞ்சிப்பாட்டை பெரும் சிரத்தைக்குப் பின் பதிப்பிக்கையில் அதன் கடைசி ஓலை மட்டும் செல்லரித்துப் போயிருந்தது. அந்தக் கடைசியோலையில் என்ன அரிய மலர் இருக்குமோ எனும் ஐயத்தில் ஐயர் தன் தேடலைத் தொடர்ந்தார். அவரது தூயபெரும் சேவையினால் தமிழின் செழுமைமிகு ஆக்கங்கள் தமிழர்களுக்குக் கிடைத்தது. சரவணன் ஒரு ஆய்வாளர் மட்டுமல்ல. சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்களுக்கு உரையும் எழுதியுள்ளார். அவர் என் மாணவர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்” என வாழ்த்தினார் தமிழறிஞர் இருகூர். கி. சுப்பிரமணியன்.
சைவ அறிஞரான கந்தசாமி தனது வாழ்த்துரையில் “ஐயரின் பிறநூல்களை வாசிக்காதவர்கள் அவரது ‘சாமிநாதம்’ எனும் முன்னுரைகளின் தொகுப்பையாவது வாசிக்க வேண்டும். ஒவ்வொரு நூல்களைப் பற்றிய சிறப்பான அறிமுகம், அதனைப் பதிப்பிக்க மேற்கொண்ட முயற்சிகள், உதவிய புரவலர்கள் என மிகச்சிறப்பான முன்னுரைகள். அழகுறத் தொகுத்த சரவணனுக்கு நாஞ்சில் நாடன் விருது வழங்கப்பட்டது சிறப்பான தேர்வு” என்றார்.
கல்வித்துறை இணை இயக்குனர் நா.அருள் முருகன் பேசுகையில், “நானும் சரவணனும் ஒரே காலகட்டத்தில் ஆசிரியப்பணிக்குத் தேர்வெழுதி வென்றவர்கள். மரபிலக்கியத்தை வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஆளற்ற ஒரு சூழலில் தான் தேர்ந்தெடுத்த ஆய்வுத்துறையில் தீவிரமாக உழைத்தவர் ப. சரவணன். தமிழக பாடத்திட்ட உருவாக்கத்திலும் அவரது பங்களிப்பு உள்ளது" என்றார்.
நாஞ்சில் நாடன் பேசுகையில் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டார். உ.வே.சா. ஒரு முறை திருவண்ணாமலையில் ரமணரைச் சந்தித்தார். சிறிது நேர உரையாடலுக்குப் பின் “எனக்கு ஈஸ்வர பக்தியை விட தமிழ் மீதுதான் பக்தி அதிகம்” என்றாராம் உ.வே.சா. அதற்கு ரமணர் “இரண்டும் வெவ்வெறானதல்ல” என்றாராம்.
உ.வே.சா.வின் தமிழ்ப்பணிக்கு உதவ விரும்பிய எட்டயபுரம் மன்னர் அவருக்கு இரண்டு கிராமங்களை அளிக்க விரும்பினார். உ.வே.சா. அதை அன்புடன் மறுத்து “ஓலைச்சுவடிகளைச் சுமந்து செல்ல ஒரு மாட்டு வண்டி மட்டும் கொடுங்கள்” எனக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். இப்படிப்பட்டவர்களின் தியாகத்தால் இன்று தமிழின் மகத்தான இலக்கியங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இத்தகையவர்கள் உரிய காலத்தில் உரிய வகையில் கௌரவிக்கப்பட வேண்டும். அவ்வகையில் ப. சரவணனுக்கு விருதளிக்கும் சிறுவாணி வாசகர் மையத்தைப் பாராட்டுகிறேன்” என்றார்.
ஏற்புரை வழங்கிய ப. சரவணன் “கோவை எப்போதும் என்னைக் கொண்டாடி வந்திருக்கிறது. எங்களூர் பக்கத்தில் தொட்டது துலங்கும் விட்டது விலகும் எனும் சொலவடை உண்டு. நான் உ.வே.சா.வைத் தொட்டேன். துலங்கினேன்.
மிஷனரி பணிகளை முடித்துவிட்டு ஊர் திரும்பிய ஜி.யூ.போப் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராகப் பணியாற்றினார். அவர் பணியாற்றிய துறையின் பிரின்ஸிபாலுடன் அவர் திருவாசகம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வதுண்டு. ஆச்சரியப்பட்ட பிரின்ஸிபால் “நீங்கள் இவற்றையெல்லாம் பற்றி எழுத வேண்டும்” என வலியுறுத்தினார். இந்த 72-வயதில் இதெல்லாம் ஆகிற காரியமா என போப் தயங்கினார்.
பிரின்ஸிபால் பெஞ்சமின் ஜோவெட் தொடர்ந்து வலியுறுத்தவே போப் திருவாசகத்திற்கு உரை எழுதலானார். அவரது 88-வது வயதில் நூலை எழுதி முடித்தபோது அதைப் பார்க்க அந்த பிரின்ஸிபால் உயிரோடு இல்லை.
தமிழைச் சிக்கெனப் பிடித்தால் மரணத்தைக்கூட ஒத்தி வைக்கலாம். நம் நோக்கம் சரியாக இருந்தால் உழைப்பு ஒழுங்காக இருந்தால் கவனச்சிதைவுகள் இன்றி காரியம் ஆற்றலாம். நம் முன்னோர்கள் மொழியின் முன்னத்தி ஏர்கள். நாம் பின்னேரு உழுபவர்கள். பின்னேரு உழுபவர்கள் இளைப்பாறக் கூடாது என்பது விதி. சிறுவாணி வாசகர் மையம் அளித்த விருதுக்கு நன்றி’ என்றார்.
மின்னஞ்சல்: arthamandapam@gmail.com