வாராணசியும் வாராணசிக்கு முன்னும்
தேசங்கள், அதன் சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களின் அடிப்படையில் கிழக்கு மேற்காகப் பிரிக்கப்படுகின்றன. இவ்விருவேறு நில அமைப்புகள் அவற்றிக்கெனப் பிரத்தியேகமான பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளையும் சிந்தனை முறைகளையும் சமூகப் பார்வைகளையும் கொண்டிருக்கின்றன. ஒரே நிகழ்வு அவ்விருவேறு நிலங்களால் வெவ்வேறாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. வணிகம், காலனியாதிக்கம், உலகமயமாக்கம் ஆகியன அந்நில அமைப்புகளில் கலாச்சார மாற்றங்களை நிகழ்த்தின. இதில் வணிகம் விருப்புசார் தேர்வின் அடிப்படையிலான கலாச்சார பகிர்தல்களையும்-காலனியாதிக்கம் சுய தேர்வற்ற கலாச்சாரத் திணிப்புகளையும் ஏற்படுத்திய
நிலையில், காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட மூன்றாம் நாடுகள், தங்கள் நிலத்தின் பிரத்தியேகச் சிந்தனை முறைமைகளை இழந்து, காலனிய தேசங்கள் விட்டுச்சென்ற சிந்தனை எச்சங்களின் அடிப்படையில் தமது பண்பா