கடிதங்கள்
‘வரும்முன் காக்க’ தலையங்கம் சிறப்பு. ‘விளக்கு’ அமைப்பின் 22ஆவது (2017) புதுமைப்பித்தன் நினைவு விருதுகள்
ஆ. இரா. வேங்கடாசலபதி, பா. வெங்கடேசன் ஆகியோர்க்கு வழங்கப்பட்டுள்ள சேதி தேனாய் இனித்தது. கனடா தமிழ் இலக்கியத் தோட்ட வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது இவ்வாண்டு எழுத்தாளர் இமையத்திற்கு வழங்கப்பட்டது பொருத்தமானது.
பிரபஞ்சன், ஐராவதம் மகாதேவன் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டுக் காலச்சுவடு செலுத்திய அஞ்சலி நெஞ்சை நெகிழ வைத்தது. ‘கண்ணாடிச் சொற்கள்’ ஜி. குப்புசாமியின் கட்டுரை அருமையிலும் அருமை. பெருமாள்முருகன் கட்டுரை உள்ளத்தை வெகுவாகக் கொள்ளை கொண்டது. சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் கட்டுரையை உண்மையில் புகழ்ந்துரைக்க வார்த்தைகள் இல்லை. ஜனவரி- மதிப்பீடுகளைத் தாங்கும் ரூபா ரதன் கட்டுரை நன்றாக இருந்தது. ‘மண்ணும் மனிதர்களும்’ கே. என். செந்திலின் கட்டுரை தரமான படைப்பாக விளங்கியது. மற்றபடி கதைகளும் கவிதைகளும் ரசிக்கத் தகுந்ததாய் இருந்தன. மொத்தத்தில் ‘காலச்சுவடு’ கருத்துக் கருவூலமாக விளங்கியது.
தங்க. சங்கர பாண்டியன்,சென்னை – 88
2018 டிசம்பர் இதழில் ‘ஆண்மைச் சொல்லாடல்களும் ஆதிக்கச் சாதியுடனான உரையாடலும்’ என்ற தலைப்பில் வெளியான பெருந்தேவியின் கட்டுரையில், பக்.81இன் மூன்றாவது பத்தியில் பிரசுரமான முதல் வாக்கியம் “தமிழ் அறிவுச்சூழலில் பெரிதாக விவாதிக்கப்படாத, முதல் கட்டுரையில், அது எதிர் பாலின ஈர்ப்பு என்பதை, இரு சாதி (அதாவது உயர்சாதி, _ தலித்) ‘ஆண்மை’களுக்கு இடையிலான போட்டிச் சொல்லாடலில் அமிழ்த்திப் புதைத்துவிடுகிறது என்பதைத்தான்” என்று இருக்கிறது. அது கீழ்க்காணுமாறு அமைந்திருக்க வேண்டும்:
“மேலே குறிப்பிட்டிருக்கும், இதுவரை தமிழ் அறிவுச்சூழலில் பெரிதாக விவாதிக்கப்படாத, முதல் கட்டுரையில், திரைப்படம் வைக்கும் வாதத்துக்கான தொடர்புடைய கண்ணிகள் இருப்பதால், கொஞ்சம் அதைக் குறித்து எழுத விரும்புகிறேன். அந்தக் கட்டுரையின் பெரிய பிரச்சினையாக நான் கருதுவது, அது எதிர்ப் பாலின ஈர்ப்பு என்பதை, இரு சாதி (அதாவது “உயர் சாதி,” மற்றும் தலித்) ‘ஆண்மைகளுக்கு’ இடையிலான போட்டிச் சொல்லாடலில் அமிழ்த்திப் புதைத்துவிடுகிறது என்பதுதான்.”
நான்கு அஞ்சலிக் கட்டுரைகளும் வாசகர்களை உள்ளார்ந்து அசைபோடவைத்துள்ளன. தொடர் பேசுபொருள்களாகத் தங்களை நிலைநாட்டிக்கொள்ளும் படைப்பாளர்களது மரணத்திற்குப்பின், அவர்களை உச்சத்தில் வைத்துப் பெருமைப்படுத்தும் சீரிய நற்பணியை, இணையற்ற இதழியல் தர்மத்தை ‘காலச்சுவடு’ தொடர்ந்து மெய்ப்பித்து வருவது என்றும் போற்றுதலுக்குரியது.
பரந்தமனமும் விரிந்த பார்வையும் பெரும் எழுத்து ஆளுமைகளின் இலக்கணமாகும். முதலமைச்சரே ஆனாலும் பிரபல இதழ்களே ஆனாலும் தமது நேரிய பார்வையை அவர்களிடம் எதற்காகவும் சமரசப்படுத்திக்கொள்ளாத பிரபஞ்சனின் செம்மாந்த மனஉறுதியைக் கட்டுரையாளர்கள் இதயசுத்தியுடன் விவரித்துள்ளனர். எழுத்துலகில் வாசகர்களின் மனங்களை அலங்கரித்த அவர், தனது மகன் படிப்பிற்காக தமது அனைத்துப் படைப்புகளையும் மூன்று லட்ச ரூபாய்க்குப் பேரம் பேசவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதையும், வாழ்நாளில் தனக்குக் கிடைத்த பணப்பயன்கள் தமது அன்றாட உப்புப்புளி மிளகாய்ச் செலவினங்களைத்தான் தாக்குப் பிடிக்கின்றன என்று அங்கலாய்த்து வருந்தியதையும் படிக்கும்போது நமது கண்களில் ஈரம் கசிந்துருகுவதைத் தவிர்க்க முடியவில்லை. திரைப்படக் கலைஞர் சிவகுமாரும் ஒருசில பேருள்ளம் படைத்த எழுத்தாளர்களும் பிரபஞ்சன் என்ற எழுத்துலகச் சிற்பியின் துயரத்தைத் தக்க சமயங்களில் துடைத்தனர் என்று கட்டுரைகள் வாயிலாக அறியும்போது ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு....’ என்ற பழந்தமிழ்ச் செய்யுளே நினைவிற்கு வருகிறது.
நாட்டின் மதிப்புமிகு ஆட்சிப்பணியைத் துறந்து தமது தாய்மொழியாகிய தமிழின் மூலத்தையும் காலத்தையும் ஆய்ந்து மறுக்க இயலாத பல வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார் ஐராவதம் மகாதேவன். இவரைப் பற்றிய இரு அஞ்சலிக் கட்டுரைகளும் வாசகர்களின் மனங்களை அந்தப் பெருமகனாரின் வாழ்வோடு இணைந்து சஞ்சரித்துப் பார்க்கத் தூண்டுகின்றன.
சிந்துவெளி எழுத்துகள், பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றிய இவரது அர்ப்பணிப்புமிக்க ஆய்வுகள், பழந்தமிழ் நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைத்துப் பெருமை சேர்த்திருப்பதைக் கட்டுரைகள் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றன. இவரது பதவிக்காலத்தில் நிறைவேற்றிய அரும்பணிகளும் மாபெரும் தமிழ்வித்வானைப் போன்று தமிழ் எழுத்து, சொல், வாக்கிய பிரயோகங்களைப் பயன்படுத்துவதில் கவனிக்க வேண்டிய இவரது மதிநுட்பங்களும் பிரமிக்க வைக்கின்றன. தினமணியையே பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்திற்குட்படுத்தி இதழியல் நிர்வாகத்திலும் படைப்புலகிலும் இவர் நடைமுறைப்படுத்திய சீரிய யுக்திகள் என்றென்றும் இவரை நினைவுகூரும்.
சி. பாலையா,புதுக்கோட்டை
‘இதழியலில் புதுமை கண்டவர்’ ஐராவதம் மகாதேவனைப் பற்றிப் பொன். தனசேகரன் கட்டுரை இன்று இதழ்களில் பணியாற்றுவோர்க்கும் வாசகர்களுக்கும் பயன் தரக்கூடிய பல செய்திகளை உள்ளடக்கியது. அவர் காலத்துத் ‘தினமணி’ இணைப்புப் பகுதியான ‘தமிழ் மணி’’, ‘சுடர்’ ஆகியவற்றை நூல் வடிவில் கொண்டுவருவது அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
‘அதிசயம், ஆனால் உண்மை!’ என்னும் தலைப்பில் திரிபுரா முதல்வர் நிருபேந்(திர) சக்கரவர்த்திபற்றி ‘தினமணி’யில் அவர் எழுதிய ஆசிரியர் உரையை ஆயிரம் பிரதிகள் அச்சிட்டுப் பொதுமக்களிடையே அச்சமயம் வழங்கினோம். இப்போது அதன் தேவை மிக அதிகமாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு அவ்வாசிரியர் உரையை இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து வழங்கினால் இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரிடையே புத்தெழுச்சியை உருவாக்கலாம்.
பிரபஞ்சன் குறித்து தேவிபாரதி எழுதியுள்ள ‘முன்னோடி; ஆசான்’ கட்டுரை அவர் தம் வாழ்நாள் முழுவதும் சமரசமற்ற எழுத்தாளராக ஆயிரம் இடர்ப்பாடுகளிடையே திகழ்ந்ததைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. நக்கீரன் இதழில் பெண் சிசுக் கொலை நிகழ்வதற்கான காரணத்தை அவர் புதிய கோணத்தில் எழுதியது அவருடைய பெரியாரிய ஈடுபாட்டுக்குத் தக்க சான்றாகும். எழுத்தாளன் வாழ்கின்ற காலத்தில் அவனுக்கு நிதியுதவி கிட்டுவதில்லை என்னும் பழிச்சொல்லை நீக்கிய வேடியப்பன், பவா செல்லதுரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எழுத்துலகம் நன்றி கூறக் கடமைப்பட்டது.
மாநில அரசு பாராட்டு விழா நடத்திப் பணமுடிப்பும் வழங்கியது அருமையான செயல்! அனைத்திலும் சிறப்பாக ஓர் எழுத்தாளருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்த புதுவை முதல்வர் நாராயணசாமியைத் தமிழ்கூறு நல்லுலகம் போற்றிப் புகழ வேண்டும். திரைக் கலைஞர் சிவகுமார் வெளியே தெரியாமல் உதவி செய்திருக்கிறார். இயல்பில் ஓவியரான அவர் எழுத்தாளரை நேசித்தது பொருத்தமானது.
தெ. சுந்தரமகாலிங்கம்,வத்திராயிருப்பு
‘வருமுன் காக்க’ தலையங்கம் சமீபத்திய கஜா புயலின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துபோன சூழலை அப்படியே அவதானித்து எழுதப்பெற்றிருந்தது சிறப்பு. இயற்கைப் பேரிடர் நிகழும்போதெல்லாம் அரசு அனைத்து உதவிகளையும் உரிய நிவாரணங்களையும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது எனும் அறிவிப்பு வந்தவண்ணம் இருக்கிறதே தவிர, உரியவர்களுக்கு அவை முழுமையாகச் சென்று சேர்வதைக் கண்டுகொள்வதில்லை. உள்ளபடியே பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் ஏதும் பெறமுடியாமல் தெருவுக்கு வந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது யதார்த்தம்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மனமுவந்து தரும் நிவாரணப் பொருள்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேரவிடாமல் தடுத்து, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கி நல்ல பெயர் எடுக்க முனையும் இடைத்தரகர்களும் பெருகிவிட்டார்கள். அரசு ‘வருமுன்னும் காக்கவில்லை, வந்தபின்னும் பார்க்கவில்லை’ என்ற பதிவு பொருள் பொதிந்தது.
நவீன்குமார்,நடுவிக்கோட்டை
ஒழுங்கமைந்த சிந்தனையுடன் தொலைநோக்குப் பார்வையுள்ள ஓர் எழுத்தாளருக்கு ஆழ்மனத்தின் அடுக்குகளில் தேங்கிக் கிடக்கும் சுய வாழ்க்கை அனுபவங்கள், திறப்புக்காகக் காத்திருக்கும் அணைநீர் போன்றது; வாய்ப்பு கிடைத்ததும் பிரவாகமாகிவிடும். அத்தகைய நிலையில் அவரை (எழுத்தாளரை) தேர்ந்த வராக இனம் காட்டுவது எது? தேர்ந்த இலக்கியவாதியாக வலம் வர ஆழ்ந்த வாசிப்பனுபவம் முக்கியம்; மிகவும் அடிப்படையானதும் கூட. வாசிப்புலகத்தில் முழுமையாக அர்ப்பணிப்புடன் சஞ்சரித்த ஒருவரால்தான் விரிவடைந்த கருத்துகள், சுயசிந்தனைகள், அனுபவங்கள் எனப் பலவேறு அடுக்கடுக்கான வெளிகளில் சுயமாகப் பயணிக்க ஏதுவாகும். வாசிப்பனுபவம் முதிர்ச்சியடைந்த நிலையில் எழுத்துலகம் தானாக அவரை (எழுத்தாளராக) ஆலிங்கனம் செய்து கொள்ளத் தொடங்கிவிடும். இவ்வகையில்
பிரபஞ்சனும் நா. முத்துசாமியும் Freelance படைப்பாளிகளாகி தமிழ் இலக்கிய உலகை வென்றவர்கள் - உண்மை.
பா. செல்வ விநாயகம்,சென்னை-82