மிரினாள் சென் (1923-2018)
என் வயது இருபது.
ஓராயிரம் வருடங்களுக்கு இருபது வயதுடன் வாழ்ந்துகொண்டிருப்பேன்.
ஓராயிரம் வருடங்களுக்குக் கழிவினூடும் சாவினூடும் நடந்துகொண்டிருப்பேன்.
ஓராயிரம் வருடங்களுக்கு விரக்தியுடன் கூடிய நம்பிக்கையின்மைதான் என் மூச்சு.
ஓராயிரம் வருடங்களுக்குத் தீராத வறுமையை வரலாறாகக் காண்கிறேன்.
அது வஞ்சிக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின், தவறிழைக்கப் பட்டவர்களின் வரலாறு.
- மிரினாள் சென்னின் Calcutta-71 ஆரம்பக் காட்சியில் காட்டப்படும், பேசப்படும் வரிகள்.
அரசியலைத் தீவிரமாக முன்னெடுத்து மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைச் சமரசமின்றித் தனது படைப்புகளில் வெளிப்படுத்தியவர் மிரினாள் சென். அவ்வகையில் அவர் இந்திய சினிமாவின் முன்னோடி. வங்காளப் பெரும் பஞ்சம், இந்தியப் பிரிவினைக்குப்பின் உருவான புதிய வங்காளம் எதிர்கொண்ட பிரச்சினைகள், அங்கு மார்க்சிய ஆட்சியின் தோற்றம், அதைத் தொடர்ந்த ஏமாற்றங்கள் என்று அனைத்தையும் படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கல்கத்தா கண்ட கொந்தளிப்பான காலங்கள் அவருடைய படைப்புகள் வழியாகத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
மிரினாள் சென் பிறந்த ஊர் தற்போது பங்களாதேஷில் இருக்கும் ஃபரீத்பூர். வசதியான குடும்பம். தந்தை தினேஸ் சந்தரா சென் பிரபல வக்கீல். சுதந்திரப் போராட்டங்களில் பங்குபெற்றவர். சென் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஃபரீத்பூர் முதற்கொண்டு நாடெங்கிலும் இந்திய விடுதலைக்கான எழுச்சியும் போராட்டங்களும் நடந்துகொண்டிருந்தன. 1940 இல் கல்லூரியில் சேர்வதற் காகக் கல்கத்தா வந்தபோது சென்னுக்குப் பதினேழு வயது. ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அணியில் உறுப்பினராக இணைந்தார். அரசியல் ஈடுபாட்டால் கல்லூரியில் படித்துக் கொண்டி ருந்தபோது ஒருமுறை கைதாக நேர்ந்தது.
1941இல் கவி ரபீந்திரநாத் தாகூரின் மரணம், 1943இல் இலட்சக்கணக்கான உயிர்களைக் குடித்த வங்காளப் பெரும் பஞ்சம், பாசிசத்தின் எழுச்சியும் தோல்வியும், ஹிரோஷிமா - நாகசாகி மீதான அணு ஆயுதத் தாக்குதல்கள் என வங்காளத்திலும் உலகளவிலும் தொடர்ந்த நிகழ்வுகள் அவரை மிகவும் பாதித்தன. 1946இல் வன்முறை நிறைந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் கல்கத்தா மீது மிகுந்த பிடிப்பை உருவாக்கின. வங்காளத்தைப் பஞ்சம் பாதித்த 1943ஆம் ஆண்டு சினிமாவின்மீது கவனம் திரும்பியது. அது ஒரு தற்செயல் நிகழ்வு. சென்னுக்கு சினிமா மீது அதுவரை எவ்வித ஆர்வமும் இருந்ததில்லை. சினிமா அதிகம் பார்த்ததும் இல்லை. நாட்டமெல்லாம் புத்தகங்கள்மீது இருந்தது; படித்துக்கொண்டே இருந்தார்.
தற்செயலாகக் கல்கத்தா தேசிய நூலகத்தில் சினிமாவையும் அதன் அழகியலையும் பற்றி ருடால்ஃப் ஆர்ன்ஹெய்ம் எழுதிய திவீறீனீ என்ற நூல் கண்களில் பட்டது. அதுதான் ஆரம்பம். மூன்று மாதங்களில் நூலகத்திலிருந்த சினிமா பற்றிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்தார். வெளிநாட்டுத் தூதரகத் திரையிடல்கள், கல்கத்தா திரைப்படச் சங்கத் திரையிடல்கள் போன்றவை மூலம் பல நாடுகளின் சிறந்த திரைப்படங்களைக் காணமுடிந்தது. சினிமா அழகியல் பற்றியும் சமூகத்தில் சினிமாவின் இடம் பற்றியும் எழுதத்தொடங்கினார்.
வங்காளத் திரைப்படச் சரித்திரத்தில் ஐம்பதுகள் ஒரு முக்கியமான காலம். 1950இல் புகழ்பெற்ற ரஷ்யத் திரைப்பட இயக்குநர் புதோவ்கின் ரஷ்ய நடிகர் நிகோலாய் செர்க்கசோவுடன் கல்கத்தாவிற்கு வந்தார். 1951ஆம் வருடம் பிரெஞ்சுத் திரைப்பட மேதை ழான் ரென்வார் ஒளிப்பதிவாளர் க்ளாட் ரெவாருடன் The River படத்தை எடுப்பதற்காகக் கல்கத்தா வந்திருந்தார். ஐம்பதுகளில் முதன்முதலாக இந்தியாவில் சர்வதேசத் திரைப்பட விழா பெரிய அளவில் தொடங்கியது. 1955இல் சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சாலி’ வெளியாகி இந்திய சினிமா உலகக் கவனம் பெற்றது..
சென் வாழ்விலும் ஐம்பதுகளை முக்கியமான காலமாகச் சொல்லலாம். அவரின் ‘சாப்ளின்’ வங்காள மொழி நூல் 1951இல் வெளியானது. ஏழு வருடங்களாகக் காதலித்த கீதாவை 1953இல் திருமணம் செய்துகொண்டார். அவர் தந்தை 1954இல் மரணமடைந்தார். அந்த வருடம் சென்னின் மகன் குனாள் சென் பிறந்தார். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான நிகழ்வு, சென்னின் முதல் படம் Raat Bhorey 1955இல் வெளிவந்தது. துரதிர்ஷ்டவசமாக அது தோல்விப் படமானது. இரண்டாவது படைப்பு Neel Akasher Neechey (1958) பரவலாகச் சிலாகிக்கப்பட்டது.
அறுபதுகளிலிருந்து சென்னின் படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெறத் தொடங்கின. 1960இல் வெளிவந்த அவருடைய Baishey Shravan 1943 வங்காளப் பெரும் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கணவன், அவனுடைய இளம் மனைவி, அவர்கள் உறவில் உருவாகும் விரிசல்கள் என அவர்களின் குடும்ப வாழ்க்கையைச் சொல்லிகொண்டுபோகும் படம். பஞ்சத்தின் பாதிப்பு அந்தக் குடும்பத்தை உடைக்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் இறந்துகொண்டிருந்ததை ஒரு காட்சியில் கூடக் காட்டாது பஞ்சத்தின் கோரத்தை உணரச் செய்த படம். வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்குப் படத்தில் துணைவரிகள் சேர்க்கப் பணமில்லாது ஆங்கிலத்தில் காட்சிவாரியாகத் திரைக்கதையை அச்சிட்டுப் படத்துடன் அனுப்பினார். ஒருவாறு போட்டியற்ற பிரிவில் திரையிடப்பட்டு விமர்சகர்களின் பாராட்டுதலைப் பெற்றது. இலண்டன் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. மிரினாள் சென் 2002 வரை முப்பத்து நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் முக்கியமான சிலபற்றி இங்கு பார்க்கலாம்.
அடுத்து வந்த படங்களில் சென்னின் Akash Kusum (1965) வெற்றிப் படமாக அமைந்தது. பிரெஞ்சு புதிய அலை படங்களின் பாதிப்பில் ஜம்ப் கட், Freeze frame போன்ற நுட்பங்களைப் படத்தில் தாராளமாகப் பயன்படுத்தியிருந்தார். The Statesman பத்திரிகையின் விமர்சனத்தைத் தொடர்ந்து அந்தப் பத்திரிகையில் சத்யஜித் ராய்க்கும் சென்னுக்குமான விவாதங்கள் கடிதங்களாகச் சிறிதுகாலம் தொடர்ந்தன. 1969இல் என்.எப்.டி.சி தயாரிப்பில் உருவான Bhuvan Shome சென்னின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. கண்டிப்பான ரயில் இலாகா அதிகாரி புவன் ஷோமின் கதை. கிராமப்புறக் காட்டுப்பகுதிக்கு வாத்து வேட்டைக்குச் செல்பவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் அவர் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிடுகின்றன.
அறுபதுகளில் வங்காளத்தில் உருவான பிரச்சினைகளை அரசு மெத்தனமாகக் கையாண்டதால் நாளுக்கு நாள் பிரச்சினைகள் பெருகிக்கொண்டிருந்தன. அரசின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து ஆட்சிக்கெதிரான அதிருப்தியாளர்கள் அதிகரித்தனர். மாற்று ஆட்சியை விரும்பிய வங்காள இளைஞர்களைக் கீழைய மாவோயிச சித்தாந்தங்கள் கவர்ந்தன. நக்சல்பாரி இயக்கம் உருவானது. வேலை நிறுத்தங்களும் அரசு எதிர்ப்பு ஊர்வலங்களும் தினமும் தொடர்ந்தன. ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் அரசு தேர்தலில் தோல்வியுற்றுக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
மாற்றங்களை வலியுறுத்திய நக்சலைட் இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய ஆட்சி, கிழக்கு பாகிஸ்தான் மீதான 1971 போர், பங்களாதேஷ் உருவாக்கம், அகதிகள் என எழுபதுகளில் கொந்தளிப்புகள் மிக்க மாநிலமாக வங்காளம் இருந்தது. அடிப்படை வேலைகள்கூடக் கிடைக்க வழியற்ற இளைஞர்கள் படிப்படியாக வன்முறையைக் கையிலெடுக்கும் தீவிரவாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அந்த நாட்களின் பதிவாக சென்னின் ‘கல்கத்தா முப்படத்தொகுப்பு’ (Calcutta Trilogy) உருவானது. முதல் படமான Interview (1970) கல்கத்தாவிலுள்ள ஆங்கிலேய நிறுவனம் ஒன்றில் வேலைக்கான தேர்வுக்குத் தேவைப்படும் கோட்டும் சூட்டும் வேண்டி அல்லலுறும் இளைஞனின் கதை.
இக் கட்டுரையின் தொடக்கத்தில் எழுதப்பட்டுள்ள ‘வறுமை’ பிரகடனத்துடன் இரண்டாவது படமான Calcutta-71 (1972) ஆரம்பிக்கிறது. நான்கு சிறுகதைகளின் தொகுப்பு. நான்கும் இணைந்து கீழ்மட்ட மக்களின் மேல் காலம்காலமாகத் தொடரும் அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் எதிரான சக்திமிக்க வாக்குமூலமாக வெளிப்படுகிறது. ஐந்து வருடங்களாகப் படமாக்கப்பட்டது. விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுடன் வெற்றிப்படமாகப் பல மாதங்கள் ஓடிய படம். மூன்றாவதான Padatik (1973) கைதாகித் தப்பித்துவிடும் தீவிரவாதி இளைஞனையும் அவன் அடைக்கலம் புகுந்திருக்கும் வீட்டின் உரிமையாளரான இளம் பெண்ணையும் பற்றிய கதை.
Mrigayaa (1976) 1920களில் நிகழும் கதை. வேட்டையாடு வதில் வல்லவனான ஆதிவாசி இளைஞன் தன் மனைவியைக் கடத்திச் செல்பவனைக் கொன்றதற்காகத் தூக்கிலிடப்படுகிறான். அவனுடைய மரணம் ஆங்கிலே யருக்கும் நிலச்சுவான்தார்களுக்கும் எதிராக ஆதிவாசி களைக் கிளர்ந்தெழச் செய்கிறது. 1979இல் அவருடைய படைப்புகளில் அதிகம் சிலாகிக்கப்படும் படங்களில் ஒன்றான Ek Din Pratidin வெளிவந்தது. வேலை செய்து பணம் ஈட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் மூத்த பெண் மாலை நேரம் வீடு திரும்பாவிட்டால் என்ன
நடக்கும் என்பதை அற்புதமாகக் காட்டியிருக்கும் படம்.
Khandahar (1984), Antareen (1993) இரண்டும் வித்தியாசமான படங்கள். Khandahar படத்தின் கதாநாயகி, சிதிலமடைந்த பெரிய மாளிகையின் ஒருபகுதியில் பார்வையற்ற தாயுடன் வாழும் ஓர் இளம்பெண். மகளைத் திருமணம் செய்ய வரும் உறவினருக்காகத் தாய் காத்துக்கொண்டிருக்கிறாள். அப்படி ஒருவரும் வரப்போவதில்லை. தற்செயலாக அப்பக்கம் வரும் மூன்று நண்பர்களுடன் கதை தொடர்கிறது. Antareen இல் புத்தகம் எழுதுவதற்காக நண்பரின் மாளிகையில் தங்கியிருக்கும் எழுத்தாளனுக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு பெண் பேசுகிறாள். தவறான எண்ணாக ஆகிவிட பேச்சை முடித்துவிடுகிறான். தொடர்ந்து அதே எண்ணிலிருந்து அழைப்புகள். பேசத் தொடங்குகிறான். தினமும் தொலைபேசி அழைப்புக்குக் காத்திருக்கிறான். ஒருவரையொருவர் நேரில் காணாமலே இருவரும் அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். இறுதியில் ரயிலில் யாரென்று அறியாமல் ஒருவரையொருவர் கடந்துசெல்லும்போது அவனுடைய குரல் அவளுக்குத் தெரிந்துவிடுகிறது. அவன் கடந்து சென்றுவிடுகிறான். மிக அழகாகாகப் படமாக்கப்பட்டிருக்கும். சதத் ஹாசன் மாண்ட்டோவின் கதை கெய்ரோ திரைப்பட விழாவில் பரிசு பெற்ற Aamaar Bhuvan (2002) அவரின் இறுதிப்படம். சென்னின் படங்கள் உலகளவில் முக்கியமான திரைப்பட விழாக்களில் பங்குபெற்று விருதுகளும் பாராட்டுகளும் பெற்றிருக்கின்றன. பல சர்வதேசத் திரைப்பட விழாக்களின் தேர்வுக்குழுக்களில் சென் ஜூரியாக இருந்திருக்கிறார். சர்வதேச சினிமா கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகளுக்குப் பலமுறை அழைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உலகமுழுவதும் திரைப்படத்துறை சார்ந்த நல்ல நண்பர்கள் உண்டு. இந்தியத் திரைப்பட விழாக்களிலும் பலமுறைகள் விருதுகளும் பாராட்டுகளும் அளிக்கப்பட்டுக் கவுரவிக்கப் பட்டிருக்கிறார்.
சென்னுடைய வாழ்க்கையில் அவர் மனைவி கீதா சென்னின் பங்கு முக்கியமானது. அவருடைய பல படங்களில் நடித்திருக்கிறார்; அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். சென் எழுதும் திரைக் கதைக்கு முதல் விமர்சகர் அவர்தான்; ஆரம்ப நாட்களிலிருந்து சென்னுக்குப் பக்கபலமாகவும் அவரை ஊக்கு விப்பவராகவும் இருந்தவர். சென்னைப் பொறுத்தவரை அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் அவர் மனைவியைக் கலந்து எடுப்பதே வழக்கம். கீதா சென் 2017இல் மரணமடைந்தார்.
சென்னின் படங்களைக் கொண்டு அவர் கடுமையானவர், கோபக்காரர் என்று அவரை அறியாதவர்களுக்குள் ஒருவிதப் பிம்பம் உருவாகியிருப்பது தவிர்க்கமுடியாதது. படமெடுக்கும்போது அவர் கடுமையாக வேலை வாங்குபவர் என்று பெயர் பெற்றிருப்பவர். மற்றபடி சென் எப்போதும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருப்பவர்; நகைச்சுவை மிக்கவர்; ஏராளமான நீண்டநாள் நண்பர்களைக் கொண்டவர். ஒவ்வொரு மாலையும் அவர் வீடு நண்பர்களால் நிறைந்திருக்கும் என்பார்கள்.
எதை எப்படி சொல்ல வேண்டும் என நினைப்பாரோ அதை அப்படியே எவ்விதச் சமரசமுன்றித் தனது படங்களில் வெளிப்படுத்தியவர் மிரினாள் சென். வங்காளம் எதிர்கொண்ட புறக்கணிப்புகள், அதன் மக்கள் எதிர்கொண்ட கடுந்துயரங்கள், வலிகள் அனைத்தையும் எடுத்துச் சொல்ல - ஆளும் வர்க்கத்தைக் கேள்விகேட்க தனது கலையைப் பயன்படுத்தியவர். தான் உருவாக்கும் படைப்புகள் சமகால இந்தியச் சமுதாயத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் கடுமையான விமர்சனங்களாகத் தொடர வேண்டும் என்பதில் தெளிவுடன் இருந்தவர்.
சமுதாய அக்கறையுடன் மனிதத்தை முதன்மையாகக் கொண்ட படைப்புகளை வங்காளத்தில் உருவாக்கிய சத்யஜித் ராய், ரிட்விக் கட்டக், மிரினாள் சென் மூவரும் இந்தியப் புதிய அலை சினிமாவின் மும்மூர்த்திகள். புதிய அலையின் பாதிப்பில் மேலும் சில நல்ல இயக்குநர்களையும் படைப்புகளையும் வங்காளம் இந்திய சினிமாவிற்கு அளித்திருக்கிறது. சென்ற 2018ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று மறைந்த மிரினாள் சென்னுடன் வங்காள சினிமாவின் அந்த சகாப்தம் முற்றுப்பெறுகிறது.
மின்னஞ்சல்: anandsiga@gmail.com