நேர்மையற்ற இடஒதுக்கீடு
உயர்சாதிகளில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு, சமூக நீதியின் அற அடிப்படைக் கொள்கைக்கே களங்கம் ஏற்படுத்துகிறது.
பத்து விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அவசர நடவடிக்கைக்கான காரணம், வரவிருக்கும் 2019 மக்களவைப் பொதுத் தேர்தலே. இதன் காரணமாகவே பெரும்பாலான கட்சிகள் இதை எதிர்க்க முடியாத சங்கடத்திற்கு ஆளாகியுள்ளன. ஆனாலும் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட விதத்தைப் பற்றிச் சில கட்சிகள் தம் விமர்சனத்தை முன்வைத்துள்ளன. சட்டமாக நிறைவேற்றப்படும் முன்னர் அதிகாரத்திலுள்ள மத்திய அரசு இதை விவாதிக்கப் போதுமான கால அவகாசம் தரவில்லை என்ற அடிப்படையில் சில கட்சிகள் எதிர்த்துள்ளன. கல்வி, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருத்தல் குறித்த அளவுகோல்களை நிர்ணயிக்க அரசு பின்பற்றிய நடைமுறையைப் பற்றியும் ஆட்சேபணை எழுப்பப்பட்டுள்ளது. முறையாக அமைக்கப்பட்ட குழு ஒன்றின் முழுமையான ஆய்வும் ஆவணங்களுமின்றி எப்படி இந்தப் பத்து
விழுக்காடு என்ற அளவை அரசு வந்தடைந்தது? இந்தச் சட்டத்தில் இத்தகைய பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இசைவிற்காக அது காத்திருக்கின்ற நிலையில் இச் சட்டத்தால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களைச் சிந்திக்கவேண்டியுமுள்ளது.
உச்சநீதிமன்றம் இசைவு தெரிவித்து, சட்டம் அமலாக்கப்படுமெனில் உயர்சாதிகளிலுள்ள ஏழைகளுக்கு இது உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் (எஸ்.சி.)க்கும் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினருக்குமான (எஸ்.டி.) இடஒதுக்கீட்டில் உயர்கல்வியில் இடம்பெற உயர்சாதியினரில் சிலர் எஸ்/எஸ்.டி சான்றிதழ்களைப் பெற செய்த முயற்சிகளை இந்த இடஒதுக்கீடு இனி இல்லாதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உயர்சாதியினர் எஸ்.சி/எஸ்.டி சான்றிதழ்களுக்காகத் தங்கள் குழந்தைகளை எஸ்/எஸ்.டி குடும்பங்களில் தத்து கொடுக்கச்செய்து இடஒதுக்கீடு பெறுவதையும் இந்தச் சட்டம் தடுக்கும் என்று கருதப்படுகிறது. உயர்சாதியினர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் விதமாகத் தங்களைச் சித்திரித்துக்கொள்ளும் உத்திகளில் ஈடுபடுவதையும் இது தடுக்கும். முரண் நகைக்குரிய வகையில் இனி உயர் சாதியினர் தங்களது உண்மையான, ஆதாரப்பூர்வமான சாதி அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த வகையில் போலிச் சாதிச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் என்பதற்காக நீதிமன்றங்களில் அவமானத்தைச் சந்திப்பதை உயர்சாதியினர் தவிர்க்க முடியும். எஸ்.சி, எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) ஆகியோருக்கு இடஒதுக்கீடு இருப்பதைப்போல் தங்களுக்கும் இடஒதுக்கீடு இருக்கவேண்டுமென்ற உயர் சாதியினரின் உந்துதலை இச்சட்டம் வலுவாக்குகிறது.
இறுதியாக மிக முக்கியமாக, நாட்டின் ஒற்றுமையின்மைக்கும் சாதியம் தொடர்வதற்கும் காரணம் இடஒதுக்கீடுதான் என்று உயர்சாதியினர் மிகப் பரவலாகக் கொண்டுள்ள நம்பிக்கையிலிருந்து அவர்களை இந்த இடஒதுக்கீடு வெளியே கொண்டுவரும். வழக்கமாக உயர்சாதியினர் இடஒதுக்கீட்டை விமர்சனம் செய்வது தொடர்ந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே அறரீதியாகக் காயப்படுத்திக்கொள்வதாகிவிடும்.
இவ்வகையில் இந்த இடஒதுக்கீட்டை நாம் ஏற்பது என்பது இச் சட்டம் தொடர்பான பெரிய பிரச்னையை நம்மைப் பத்து விழுக்காடு புறக்கணிக்கவைத்துவிடும். இடஒதுக்கீடு கொள்கைக்கான நெறிசார்ந்த அடிப்படையுடன் இந்த இடஒதுக்கீடு முரண்படுகிறது. அந்த நெறிசார்ந்த அடிப்படையில்தான் எஸ்.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு தரப்பட்டது. முழுக்கமுழுக்கப் பொருளாதார அளவுகோலை மட்டும் அடிப்படையாகக்கொண்ட இந்த இடஒதுக்கீட்டால் பலனடையப்போகிறவர்கள் எந்த வகையிலும் தீண்டாமைக்கு ஆளாகாதவர்கள். இந்தத் தீண்டாமையே எஸ்.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு தரப்படுவதற்கான அடிப்படை. சமூகப் புறக்கணிப்புப் போன்ற பண்பாட்டு வன்முறைக்கு ஆளாகாமலே உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. உயர்சாதியினரும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பொருளாதார வறுமையை மட்டும் இடஒதுக்கீட்டிற்கான அளவுகோலாகக் கொள்வது எஸ்.சி. பிரிவினருக்கு எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு தரப்பட்டதோ அந்த அடிப்படையையே நீர்த்துப்போகச்செய்கிறது. தீண்டாமையும் அவர்கள்மீது திணிக்கப்பட்ட தகுதிக்குறைவுகளுமே எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு நியாயங்களுக்கான அளவுகோல். அரசமைப்புச் சட்டரீதியாகத் தீண்டாமை ஒழிக்கப்பட்டாலும் யதார்த்தத்தில் இன்னமும் தீண்டாமை தொடர்ந்து நிலவிவருவதன் அடிப்படையிலேயே எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்வது நியாயப்படுத்தப்படுகிறது.
சாதிய முற்சார்புக் கருத்துகளின் நாசகரமான செல்வாக்கைத் தடுக்கவே எஸ்.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு தேவைப்படுவதைக் கவனத்தில்கொள்வது மிக முக்கியம். இந்த முற்சார்பே இடஒதுக்கீடு முழுமையாக அமலாக்கம் செய்யப்படுவதைத் தடுக்கவும் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவு என்று ஒதுக்கீடு செய்யப்படுவதன் முதன்மையான நோக்கமே சாதிய முற்சார்பின் விளைவாக ஏற்படும் தவறுகளைத் தடுப்பதும் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் பலனடைவதை உறுதிப்படுத்துவதும்தான். சாதிய முற்சார்பு எண்ணங்கள் இருப்பதன் காரணமாகவே சாதக நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல என்று கருதப்படுகிறது. சாதக நடவடிக்கை சம வாய்ப்பை மட்டுமே நல்குகிறது, அதன் விளைவாகச் சமத்துவம் ஏற்படுவதில்லை. ஆகவே சாதக நடவடிக்கை என்பதற்கப்பால் சென்று அரசமைப்புச் சட்டமானது குறிப்பிட்ட அளவு இடஒதுக்கீடு என்பதைக் கைக்கொண்டது.
இந்தப் பரந்த நெறிசார்ந்த பின்னணியில், பத்து விழுக்காடு இடஒதுக்கீட்டை அரசு கொண்டுவருவதற்கான, மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்ற, நெறிசார்ந்த கட்டாயம் என்னவென்று கேட்பது மிகவும் அவசியம். எது இந்த அரசை இதைக் கட்டாயமாக அமல்படுத்த வைக்கிறது? சாதிய முற்சார்பு எண்ணங்கள் இதற்கான காரணம் அல்ல என்பது நிச்சயம்.
தீண்டாமை விஷயத்தில் நியாயமின்மை, அநீதி வேர்கொண்டுள்ளது. ஆனால் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியிருப்பதென்பது உயர்சாதியினருக்கு வேலை தர முடியாத நிலை அமைப்புரீதியான இயலாமையில் வேர்கொண்டுள்ளது. அவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாதிருப்பது தீண்டாமையால் அல்ல, மாறாக தகுதி பெற்றவர்களுக்கும் தேவை இருப்பவர்களுக்கும் போதுமான வேலைகளை உருவாக்க முடியாத அரசு, சந்தை ஆகியவற்றின் இயலாமையால். எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு அவர்கள் எல்லா வகைகளிலும் பின்தங்கியிருப்பதால் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளும் உட்பிரிவுகளும் காட்டுகின்றன. உயர்சாதியினர் இடஒதுக்கீட்டில் வருவதைப்போல் அது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் பின்தங்கியிருப்பதற்காக அல்ல.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஜனவரி 19, 2019
தமிழில்: க. திருநாவுக்கரசு