மறு நினைவுகளில் பௌத்தம்-தமிழகத்தில் அதிகரிக்கும் பௌத்த ஓர்மை
பரியேறும் பெருமாள் படம் வெளியாகவிருந்த தருணத்தில் தொலைக்காட்சி நேர்காணலொன்றில் படப்பெயருக்கான காரணம் கூறும்போது, “அப்பெயருக்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் புத்தர் என்ற அர்த்தமும் இருக்கிறது,” என்றார் இயக்குநர் மாரி செல்வராஜ். இக்கூற்று ‘வரலாற்றோடு’ எந்த அளவிற்குப் பொருந்துகிறது என்று ஆராய்வது ஒருபுறமிருந்தாலும் புத்தரின்பெயர் எவ்வாறு இக்காலத்தில் மீட்டெடுக்கப்படுகிறது? இதையொட்டி யோசிக்கும்போது தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகச் செல்வாக்குப் பெற்றுவரும் பௌத்தச் செயல்பாடுகள் கவனத்திற்கு வந்தன. அதேவேளையில் தமிழில் பெருகியிருக்கும் அச்சு, வலைதள ஊடகங்களில் ஒரு பதிவுகூட இதைப்பற்றி இல்லை. சமகாலத்தில் நிகழ்ந்துவரும் குறிப்பிடத்தக்க இப்போக்கை ஊடகங்களும் ஆய்வாளர்களும் இனங்காணவோ மதிப்பிடவோ இல்லை.