காலச்சுவடு 25
காலச்சுவடு 25
1994 அக்டோபரில் என் பொறுப்பிலான காலச்சுவடின் முதல் இதழ் வெளியானது. இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட உணர்வு இல்லை. நேற்று தொடங்கியதுபோலவும் இல்லை. நீண்ட பயணம் மேற்கொண்ட உணர்வு இருக்கிறது, ஆனால் சோர்வு இல்லை. மன நிறைவு உண்டு, ஆனால் பெருமிதம் இல்லை. நட்சத்திர விடுதிகள், விமானமுனையங்கள்வழி நடந்த பயணம் அல்ல இது. பண்பாட்டு அரசியல் போர்க்களத்தின் வழியே நடந்த பயணம். ஏனெனில் காலச்சுவடு ஓர் இதழ், அதனுடன் உருவான பதிப்பகம் ஆகியன மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டு இயக்கம்; ஊக்கமான ஒரு செயல்பாட்டுக் களம்.
விவாதங்கள், சர்ச்சைகள், அவதூறுகள், தாக்குதல்கள், சாபங்கள், சூழ்ச்சிகள், புறக்கணிப்புகள், துரோகங்கள். இவற்றில் காணாதது எதுவும் இல்லை. எதிர்கொள்ளாத அனுபவங்கள் இல்லை. பாதிப்புகள் ஏற்பட்டதுண்டு. விலை கொடுத்ததும் உண்டு. இருப்பினும் கசப்புகளுக்கு இடமில்லை. காரணம் இவற்றை விஞ்சிய ஆதரவும் நட்பும் நேசமும் எங்களுக்குக் கிடைத்துள்ளமை வெளிப்படை. இல்லையேல் காலச்சுவடு இன்று இருக்காது. இருப்பது மட்டுமல்ல வலுவாகவும் உள்ளது. பல சாத்தியங்களை உள்ளடக்கி நிற்கிறது. பழைமையின் களிம்பு படராவிடினும் காலத்தின் தழும்புகள் ஏறியுள்ளன. அதே நேரம் கிடைப்பதற்கரிய பயணங்களும் உறவுகளும் நட்புகளும் அனுபவங்களும் கல்வியும் காலச்சுவடின் வழி கிடைத்துள்ளது.
ஒரு தீவிர இதழைத் தொடர்ந்து நடத்தமுடியாது என்று உறுதியாக நம்பிய காலத்தை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருபத்தைந்து ஆண்டுகாலம் என்பது நீண்ட பயணம். வெகுஜன இதழ்களே தடுமாறும் காலகட்டத்தில் காலச்சுவடு உறுதியுடன் பயணிக்கிறது. இதனால் 1990கள்வரை தமிழின் தீவிர இதழியலை உதாசீனம் செய்தும் கேலிபேசியும் வந்த வெகுஜன இதழியலாளர்களை, அரசியல் தலைவர்களை இன்று பதற்றமடைய வைக்கும் இதழாகக் காலச்சுவடு தொடர்ந்து வெளிவருகிறது. இத்தகைய நீண்ட பயணம் தமிழில் இதற்கு முன்னர் சாத்தியப்படவில்லை. இந்திய அளவிலும் குறைவான முன்னுதாரணங்களே உள்ளன.
இதழ் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து கடைப்பிடித்துவரும் நம்பிக்கைகள் சில உண்டு. கருத்துரிமைக்கும் படைப்புரிமைக்கும் முழு ஆதரவு. வாசகருக்கு முன்னுரிமை. படைப்பாளர்களுக்கு மதிப்பு. படைப்புக்கு மதிப்பூதியம். இளைய தலைமுறைமீது கவனம். படைப்பின் தேர்வில் பிரதிக்கு முக்கியத்துவம். ஆசிரியர் குழுவுக்குத் தேர்வில் முழுச் சுதந்திரம். பிரதியை மேம்படுத்துவதில் நம்பிக்கை. பயன்பாட்டு மொழியில் கவனம். உலகளாவிய பார்வை.
பயணத்தின் போக்கில் இணைத்துக்கொண்ட பார்வைகளும் உண்டு. அரச அதிகாரத்திடமும் பண்பாட்டு அதிகாரத்திடமும் உண்மை பேசுதல். பெரும்பான்மைகளுக்கு மாற்றான பார்வைக்கு உரிய இடம். சாதி மத மொழிச் சிறுபான்மையினருக்கு ஆதரவு. பெண்கள், அடித்தள மக்களின் கருத்துகளுக்கும் படைப்புகளுக்கும் முக்கியத்துவம். உலகளாவிய தமிழ்ச் சமூகத்துடன் இணைந்த செயல்பாடு.
இப்பயணத்தில் தொடர்ந்து உடன்நின்றவர்களும் இடையில் விடைபெற்றவர்களும் கசப்புடன் விலக்கியவர்களும் உண்டு. அனைவரின் பங்களிப்பையும் மனநிறைவுடன் நினைக்கும் தருணம் இது. பிரிவுகளுக்கு முதல் காரணம் அடிப்படையான பார்வை வேறுபாடுகளே அன்றித் தனிநபர் மோதல் அல்ல. கருத்து வேறுபாடுகளுடன் இணைந்து செயல்படமுடியும். பார்வை வேறுபடும்போது பாதைகளும் மாறிவிடும். கால இடைவெளிக்குப் பின்னர் இன்று பார்க்கையில் இது தெளிவு பெறுகிறது.
இப்பயணத்தில் போராட்டத்தில் உடன்நின்றவர் பெயர்களை அடுக்கப்போவதில்லை. ஒரு பெயரைக் குறிப்பிட்டதும் விடுபட்ட பல பெயர்கள் உருப்பெறும் சாத்தியம்கொண்ட மிக நீண்ட விரிந்த பட்டியல் அது. ஆகவே அனைவருக்கும் மனமார்ந்த நன்றி அறிவிப்பதுடன் அமைதிகொள்கிறேன்.