பீடிகை
புத்தகப் பகுதி
பீடிகை
2020 சென்னை புத்தகக் காட்சியையொட்டி காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் ஸான்ட்ரா கால்னியடேவின் ‘ஸைபீரிய பனியில் நடனக் காலணியுடன்...’ (தமிழில்: அம்பை) நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி.
ஆகஸ்டு 1939இல் சூரியன் பால்டிக் கடலில் மூழ்கியது ரத்தம் தோய்ந்த விரிப்புகளுக்குள் மூழ்குவது போல் இருந்தது என்கிறார்கள். வயதான கிழவிகள் ஏதோ பயங்கரமாக நடக்கப்போகிறது என்ற முன்னுணர்வுடன் இந்தச் செக்கச்சிவந்த சூரிய அஸ்தமனங்களைப் பார்த்தார்கள். இதில் எத்தனை உண்மை, எத்தனை கற்பனை என்பதை இப்போது கூற முடியாது. அது அவ்வளவு முக்கியமும் அல்ல. ஏனென்றால் ஒரு நாட்டின் நினைவாற்றல் என்பது நிகழ்வுகளையும், முக்கிய நிகழ்ச்சிகளையும் சலித்தெடுத்து, கூட்டிக்குறைத்து, அவைகளைக் காரண காரிய ரீதியில் அமைப்பதாகும். ஐரோப்பா யுத்தத்தின் விளிம்பில் இருந்தது. பின் வந்த நாட்களில், சரித்திரத்தைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, இதையே உலகச் சரித்திரத்தில் நடந்த அதீதக் குருதி தோய்ந்த யுத்தத்தின் ஓர் அச்சுறுத்தும் சூசகமாக மக்கள் நினைவுகூர்ந்தார்கள்.
1939 ஆகஸ்டு 23 அன்று நடந்த சூரிய அஸ்தமனமும் ரத்தம் தோய்ந்த ஒன்று என்றுதான் நான் நினைக்கிறேன். அன்றைய தினத்தை மக்கள் அமைதியான முறையில் கழித்திருந்தார்கள். ஆகஸ்டு மாதத்தின் கடைசி நாட்களாக இருந்தாலும் வழக்கத்தைவிடப் புழுக்கம் அதிகமாக இருந்தது. சூரியனும், தென் திசை காற்று வீச்சும் 23 டிகிரி சென்டிக்ரேட் அளவுக்குக் காற்றுமண்டலத்தில் வெப்பத்தை ஏற்றியிருந்தது. வசந்த காலத்தின் அறுவடை முடிந்து பயிர்களைக் கட்டிமுடித்துவிட்டு நல்ல அறுவடை நடந்ததென்ற திருப்தியில் இருந்தனர் விவசாயிகள். வெய்யில் காலம் திடீரென்று உடலை உறைப்பதும் பால்டிக் கடலின் நீர் பாலைப்போல வெதுவெதுப்பாக இருந்ததும் எல்லோருக்கும் அனுகூலமாகவே இருந்தது. சிலர் கடலில் நீந்தப் போனார்கள்; இன்னும் சிலர் அவரவர் வயல்களைச் சீர்ப்படுத்தினர்கள்; சிலர் காடுகளில் நாய்க்குடைகளைப் பொறுக்கப் போனார்கள். அதற்கு முன்தினம்தான் தினசரிகள் ரஷ்யாவும் ஜெர்மனியும் தாக்குதல் நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தன. இந்த நிகழ்வு எத்தனை பயங்கரமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சாதாரண மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பத்திரிகைகள் இது குறித்து விவாதித்தன. இந்த உடன்படிக்கை ஐரோப்பாவின் அதிகார சமன் நிலையை மாற்றும் என்றும் பால்டிக் நாடுகளின் பாதுகாப்பு குலையலாம் என்றும் கூறின. இவற்றுடன் உடனுக்குடன் சோவியத் சோஷியலிஸக் குடியரசு மற்றும் ஜெர்மனியின் அமைதிப்படுத்தும் விமர்சனங்கள் வந்தன. “தாக்குதல் நிறுத்த உடன்படிக்கை பால்டிக் நாடுகளின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் நன்மையைத்தான் தரும்” என்றன அவை.
வெளிநாட்டுத் தூதரகங்கள் மூலம் ரிப்பன்ட்ராப் - மோலடவ் உடன்படுக்கையில் சில குறிப்புகள் ரகசியமாகச் சேர்க்கப்பட்டுள்ளன போன்ற வதந்திகள் ரீகாவை எட்டத்தான் செய்தன. ஆனால் இவை முறையாக உறுதி செய்யப்படவில்லை. யுத்தத்துக்குப்பின் அமெரிக்கா, ஜெர்மனியின் வெளிநாட்டுத் துறையின் ஆவணக்காப்பகத்தில் இக் குறிப்புகளைக் கண்டெடுத்து அவற்றை ந்யூரெம்பர்க் வழக்கு விசாரணையின் போது சான்றாகப் படித்தபோதுதான் உலகத்துக்குப் புரிந்தது. இரு வல்லரசுகள் ஐரோப்பாவை இரண்டாகப் பிரித்து அவரவர்களுக்கான இரு வேறு அதிகாரப் பரப்புகளாகப் பகிர்ந்துகொண்டன என்பது. லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா ரஷ்ய சோஷியலிஸக் குடியரசின் கீழே விடப்பட்டன. இது தவிர, சில நாட்களுக்குப் பிறகு ஜெர்மனி போலந்து நாட்டைப் படையெடுத்தது. நேச நாடுகள், நாஸி ஜெர்மனியை ஆதரித்து ஜெர்மனி போலந்தைத் தாக்கினால் அதை எதிர்க்க வேண்டியதில்லை என்று கூறிய பிரெஞ்சு அரசியல்வாதி மார்ஸெல் டேயா எழுதிய “டான்ஸிக் நகரத்துக்காக நாம் ஏன் மடிய வேண்டும்?” என்ற கட்டுரையின் தலைப்பை நினைவுகூர்ந்து தம் குற்ற உணர்வைத் தணித்துக்கொண்டன. சோவியத் ஐக்கியம் லாட்வியா, லிதுவேனியா, எஸ்டோனியா மற்றும் கிழக்குப் போலந்து, பெஸரபியா மற்றும் ஃபின்லாந்து நாடுகளை நோக்கித் தன் படைபலம் கொண்ட கையை நீட்டியது.
என் அம்மா மற்றும் என் அப்பாவின் தெள்ளிய நினைவில் ஆகஸ்டு 23ஆம் தேதி எந்த முக்கியத்துவமும் பெறவில்லை. என் அம்மாவுக்கு அப்போது பனிரெண்டு வயது முடிந்து ஒன்பது மாதங்களாகியிருந்தன. என் அப்பாவுக்கு எட்டு வயது. என் இரு தரப்பு பாட்டி தாத்தாக்களும் என்ன நினைத்தனர்? யுத்தம் தவிர்க்க முடியாதது என்று அவர்கள் உணர்ந்தார்களா இல்லை அரசியலுடன் சம்பந்தப்படாத பலரைப்போல, எல்லாம் சரியாகிவிடும், முதல் உலகப் போரின் பயங்கரங்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையில் நேராது என்ற நம்பிக்கையில் அமைதிகொள்ளத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டார்களா?
லாட்விய நாட்டினர் முற்றிலும் நம்பிக்கை எல்லாமே சிதையும் அளவுக்கு இந்தப் பயங்கரத்தை அனுபவித்திருந்தார்கள். ரஷ்ய ஜார் மன்னர் ஜெர்மன் கைஸருடன் போரிட்டபோது நான்காண்டுகள் போர்க்களமாக இருந்தது லாட்வியா. மக்களும், நிலங்களும், வீட்டு மிருகங்களும் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான லாட்விய மக்கள் அகதிகளாகி ரஷ்யாவின் உள் பகுதிகளுக்கும், அதைத் தாண்டி ஸைபீரியாவுக்கும், ஆல்ட்டை பகுதிக்கும் ஓடினர். என் அப்பாவின் தாயார் மில்டாவின் குடும்பம் முதல் மகா யுத்தத்தின்போது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இருந்தது. ஏனென்றால் என் தாத்தா பேட்டரிஸ் கைமின்யாஷ் நல்ல ஆகிருதியும் கம்பீரத் தோற்றமும் உள்ளவராக இருந்ததால், ஜாரின் குடும்பத்தைப் பாதுகாக்கும் ஸெம்யனாவ்ஸ்க் பாதுகாப்புப் படையில் வேலை செய்யும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருந்தது. ஜப்பான் - ரஷ்யப் போரில் அவர் ஏற்கனவே பங்கு பெற்றிருந்தார். இப்போது இரண்டாம் முறையாக ரஷ்ய ஜார் நிகோலஸ்
சார்பாகப் போரிட, தன் ஆறு வயது மகள் மில்டாவையும், பத்து வயது மகன் வால்டெமார்ஸையும் தன் மனைவி பெர்டா மடீல்டேயின் பொறுப்பில் விட்டுவிட்டு அவர் போக நேர்ந்தது. யுத்தத்தின் ஆரம்ப நாட்களிலேயே பேட்டரிஸ் கைமின்யாஷ் ஆஸ்திரிய - ஹங்கேரிய எல்லைக்கு அனுப்பட்டார். குடும்ப ஆவணக்காப்பகத்தில் நெகிழவைக்கும் அவர் புகைப்படம் ஒன்று பத்திரமாக இருக்கிறது. அது தன் சின்னப் பெண் மில்டாவுக்கு - என் பாட்டி - அவர் அனுப்பியது. “இதைப் பேணி வை நீ பெரிய பெண்ணாகும் வரை. அப்போதுதான் உன் தந்தை ஒரு கோரமான எதிரியை எதிர்த்துச் சண்டையிட்ட ஒரு சிப்பாய் என்று உனக்கு நினைவிருக்கும். உனக்கு என் நூறு முத்தங்கள்.” ஐரோப்பாவின் ஆயிரக்கணக்கான மற்றக் குழந்தைகளைப்போல் அல்லாமல் தன் அப்பாவின் ஒரே ஒரு ஞாபகார்த்தமாய் மட்டுமே இந்தப் புகைப்படம் இருக்கவில்லை என் பாட்டி மில்டாவுக்கு. பேட்டரிஸ் அதிர்ஷ்டவசமாக இந்தப் போரிலிருந்தும் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் திரும்பி வந்தார் தன் குடும்பத்துடன் இருக்க. என் அப்பாவின் தந்தை பற்றித் தெரிந்த ஒரே ஒரு விவரம் அவர் அனாதை என்பதுதான். தன் பெற்றோர்களை அவர் யுத்தத்தின்போது இழந்திருக்கலாம். 1912இல் திருமணம் செய்துகொண்ட நாட்களிலிருந்து என் அம்மாவின் பெற்றோர் எமீலியா மற்றும் யானிஸ், ரஷ்யாவில் வாழ்ந்துகொண்டிருந்தனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலிருந்து அதிக தூரமில்லை அவர்கள் வாழ்ந்த இடம். என் தாத்தா ஒரு கடை வைத்திருந்தார் அங்கு. இவ்வாறு என் குடும்பத்தின் இரு கிளைகளும், ஒருவரையொருவர் அறியாமல், முதல் உலகப் போரின் போது வெகு தூரத்தே ரஷ்யாவின் ஒரு மூலையில் இருந்தன. 1917இல் நடந்த பால்ஷெவிக் திடீர்ப்புரட்சிக்குப் பிறகு சொத்துகள் எல்லாம் நாட்டுரிமையாக்கப்பட்டபோது ட்ரெய்ஃபெல்ட்ஸ் குடும்பம் 1919ல் லாட்வியாவுக்குத் திரும்பியது. கைமின்யாஷ் குடும்பம், போரினால் சிதைந்துபோன ரீகா நகரத்துக்குப் பத்திரமாகத் திரும்பி அங்கே வாழ ஆரம்பித்தது.
என் அம்மாவின் பெற்றோர் பழைய சரித்திரம் மறுபடியும் ஒரு முறை நிகழும் என்பதைச் சுட்டிய இந்தப் பயம் தரும் சூசகங்களையும் அறிகுறிகளையும் யூகித்திருக்க முடியாது. அவர்கள் பிரக்ஞையில் முதல் உலகப் போரின் கசப்பான அனுபவங்களும், பித்து கொள்ளவைக்கும், மனத்தைக் குழப்பும் பிம்பங்களும் கட்டாயம் மேலே எழும்பி வரவே செய்தன. ஆனால் அவர்கள் இந்தத் தொல்லை தரும் எண்ணங்களை ஒதுக்கிவைத்தனர். 1939ஆம் ஆண்டின் இந்திய வேனிற்காலம் என்று கூறப்படும் வேனிற்காலம் அருமையான ஒன்றாக இருந்தது. இருள் கவிந்த எண்ணங்களை அப்போது நினைப்பது கடினமாக இருந்தது. மாலைகளில் தன் கணவன் யானிஸுடன் கைகோர்த்தபடி எமீலியா கடற்கரையில் அமைதியாக உலாவப்போனாள். அவர்கள் பிள்ளைகள் வால்டேமார்ஸ், ஆர்னால்ட்ஸ் மற்றும் விக்டோர்ஸ் எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். எப்போதாவது அவர்கள் மகள் லிகிடா அவர்களுடன் உலாவ வந்தாள். பருவ அழகு அவள் முகத்திலும் உடலிலும் தன் அடையாளங்களைப் பதிக்க ஆரம்பித்திருந்தது. அவர்கள் மகள் - என் அம்மா - மனத்தில் பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கையும், அவள் மனத்தைக் கொள்ளைகொள்ள அது தரக்கூடிய போதையும், குதூகலமும் நிரம்பியிருந்தன. மகள் மாறிவருவதைக் கண்ட அவள் பெற்றோர் பக்கத்து நாடான போலந்தில் அப்போதுதான் துவங்கியிருந்த போர் பற்றி நினைப்பதைத் தவிர்த்தனர். ஓ, அது லாட்வியாவை எட்டாது, எங்கள் பெண்ணைப் பாதிக்காது, என்று கூறி ஒருவரையொருவர் சமாதானம் செய்துகொண்டனர்.
1939இல் என் அப்பா ஐவர்ஸ் துடிதுடிப்பான எட்டு வயதுப் பையன். அந்தக் கோடைகாலத்தை வழக்கம் போலத் தன் பாட்டி பெர்டா மடில்டே கைமின்யாவின் பண்ணையில் கழித்தான். அவள் கணவன் இறந்த பிறகு, ரீகா அருகிலிருந்த யம்ப்ரவா பண்ணை நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தைக் குத்தகை எடுத்து, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்து வந்தாள் மடில்டெ. பக்கத்துப் பண்ணை வீட்டின் தொல்லை தந்த வாத்துகளைச் சமாளித்தபடியும், தோழர்களுடன் யுத்த விளையாட்டுகள் விளையாடியபடியும் பொழுதைக் கழித்தான் ஐவர்ஸ். வயதில் பெரிய யார் துணையாவது எப்போதாவது கிடைத்தால் டௌகவா ஆற்றில் ஒரு முழுக்குப்போடச் சென்றான். ஆனால் அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம் புத்தகம் படிப்பது. அப்போதுதான் வெளிவந்த அடிதடி செய்யும் திருட்டுக் கும்பல் பற்றிய நாவல் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு களஞ்சியத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு சாகசங்களின் கற்பனைகளில் மூழ்கியிருந்தான். பாட்டி மடில்டே எவ்வளவு கூப்பிட்டாலும், உரக்கக் குறைபட்டுக்கொண்டாலும் அது அவன் காதில் விழவே விழாது.
என் அம்மா லிகிடாவைப்போல் அல்லாது என் அப்பாவின் குழந்தைப் பருவம் வறுமையில் கழிந்தது. அந்தச் சிறுவனின் தந்தை நிமோனியா ஜுரத்தில் மகன் பிறக்கும் முன்பே இறந்துவிட்டார். தாய் மில்டா தனியாக மகனை வளர்த்துவந்தாள். அவள் சுதந்திரமான, நவீனச் சிந்தனை கொண்டவள். அவள் தலைமுறையினருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவள் நல்ல கல்வி கற்றிருந்தாள் என்றே கூற வேண்டும். அவள் பள்ளியில் மதம் சார்ந்த பாடங்களை அவள் படிக்க வேண்டாம், அதிலிருந்து அவளுக்கு விலக்கு வேண்டும் என்று பள்ளியிடம் ஒரு மாணவிக்காக அவள் பெற்றோர் கோரிக்கொண்ட ஒரே மாணவி தான்தான் என்று பெருமையுடன் பாட்டி பின்னாட்களில் கூறுவாள். இந்தப் பாட்டியின் தந்தை பேட்டரிஸ் கைமின்யாஷின் பொது நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லும் முறை என்னை மிகவும் களிப்பூட்டிய ஒன்று. அவர் அப்படிப்பட்ட ஒரு நிலையைத் தேர்வு செய்தது மிகவும் அதிசயமானதுதான். காரணம் அவர் செருப்புத் தைத்து வாழ்க்கையை ஓட்டியவர். ஆனால் அவர் மிகவும் புத்திசாலி. வாழ்க்கை திணித்த பல்வேறு கட்டுப்பாடுகளில் வீழாமல், செருப்புத் தைக்கும் ஒருவனின் நிலையிலிருந்து ஆன்மிகமாக மேலெழுந்தவர். மானுடத்தைக் கல்விதான் காப்பாற்றும் என்று நம்பியதால் பேட்டரிஸ் தானே கல்வி பயின்றுவந்தார். தன் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று விரும்பினார். மில்டா உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது, குடும்பத்தின் செல்வ நிலை வெகுவாகத் தாழ்ந்திருந்தது. பெற்றோர் கடினமாக உழைத்தபோதும் மில்டாவை மகனை அனுப்பியதுபோல பல்கலைக்கழகப் படிப்புக்கு அனுப்ப முடியவில்லை. இது தன் விதி என்று ஏற்றுக்கொண்ட மகளும், குறை கூறாமல் நர்ஸானாள். இது பற்றி அவளுக்கு எந்தவித மனக்குறையும் இருக்கவில்லை. அவளுக்கு முழுத்திருப்தி அளித்த அவளுக்கேற்ற வேலையாகவே அது அமைந்தது. ஆஸ்பத்திரியில்தான் என் பாட்டி தன் இரண்டாவது கணவன் அலெக்ஸான்டர்ஸைச் சந்தித்தாள்.
நோயால் ஒன்றும் செய்ய முடியாமல், ஆஸ்பத்திரி வாழ்க்கையில் சலித்துப்போன நோயாளி ஒருவன் நர்ஸைக் காதலிக்கும் வழக்கமான காதல் கதைதான். இள நீல வண்ணச் சீருடையுடன், கன்யாஸ்திரீகள்போல வெள்ளைக் கைக்குட்டையைத் தலையில் கட்டிக்கொண்டிருந்த என் பாட்டி மில்டாவை அலெக்ஸான்டர்ஸ் எப்படிக் காதலித்தார் என்பது இன்னும் எனக்குப் புதிராகவே இருக்கிறது. ஏனென்றால் தன் சீருடையில் மெலிந்த தோற்றமுடைய அவள் முப்பது வயதுப் பெண்மணியாக அல்ல, ஓர் இளம் பருவப் பெண்ணாகவே தோற்றமளித்திருப்பாள். எந்த வளைவுகளும் இல்லாத அந்த நர்ஸ்களுக்கான சீருடையின் கீழே என்ன இருந்தது என்று கண்டறிய அவருக்கு நல்ல கற்பனை தேவைப்பட்டிருக்கும். அந்தச் சீருடை மில்டாவின் பருத்து உருண்ட பின்பாகத்தையும் அவளிடமிருந்த இன்னொரு பெரும் தகுதியையும் மறைத்தது: அவள் கவர்ச்சிகரமான கால்கள். தன் கால்களை எப்படிக் காட்டவேண்டும் என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. தலையைச் சற்றுப் பின்னால் சாய்த்து, கால் மேல் கால் போட்டபடி மெல்லத் தன் ஸ்கர்ட்டை யார் கவனத்தையும் ஈர்க்காதபடி முட்டிகளில் விழும் அழகுக் குழிகள் தெரியும்படி உயர்த்துவாள். பிறகு அழகுக் காலணி அணிந்த காலை மெல்ல மாற்றிப்போட்டு அந்த யுக்திகள் மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது என்று ரசிப்பதுதான் பாக்கி. மற்றவர்கள் இதனால் ஈர்க்கப்பட அதிகக் காலமெடுக்கவில்லை. என் பாட்டி அழகில்லையென்றாலும் அவள் கவர்ச்சிகரமான தோற்றத்தால் ஆண்கள் வெகுவாகக் கவரப்பட்டார்கள். ஆஸ்பத்திரி காதல் விளையாட்டுகளைக் காட்டும் இடமில்லைதான். இது அவளுக்கும் தெரிந்திருந்தது. அங்கு அவள் அடிப்படையில் முக்கியமாக ஒரு நர்ஸாகவே மட்டுமே இருந்தாள். இரக்கமுடைய, அன்பாகப் பேசிய, மென் கரங்களுடைய நர்ஸ். ஒரு வேளை நர்ஸுகள் அணியும் தொப்பியால் மறைக்க முடியாத என் பாட்டியின் விழிகளால் அலெக்ஸான்டர்ஸ் கவரப்பட்டிருக்கலாம். அவை அகன்ற, விசேஷமான பளபளப்புக் கூடிய, நீல விழிகள். அவளருகே இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தவை. என் பாட்டியின் விழிகளின் பளபளப்பு துன்பம் நிறைந்த அவள் வாழ்க்கையின் கடைசி வினாடிகள் வரை இருந்தது..