நான் ஒரு பாஸ்வேர்ட்
கவிதை
இசை
Courtesy: Warli Painting
நான் ஒரு பாஸ்வேர்ட்
ஒரு பாஸ்வேர்ட்டைக் கண்டுபிடித்து விட்டால்
என்னைக் கண்டுபிடித்து விடலாம்
ஐந்து வருடங்களுக்குள் என்னிடம்
பதின்மூன்று பாஸ்வேர்ட்கள் சேர்ந்துவிட்டன.
நான்தான் உருவாக்குகிறேன்.
ஆனால்
அவைதான் என்னை மேய்க்கின்றன.
பதின்மூன்று பாஸ்வேர்ட்களையும் மூளைக்குள் ஒளித்து வைத்தேன்
வழுக்கி வழுக்கி விழுந்தன.
பதின்மூன்றையும் ஓரிடத்தில் ஒளித்துவைத்து
அதை ஒரு பாஸ்வேர்டால் ஒளித்தேன்
ஒன்றைத் திருடி விட்டால் பதின்மூன்றையும் திறந்துவிடலாம்.
பதின்மூன்று பாஸ்வேர்டையும் பறிகொடுத்துவிடுவதென்பது
ஒரு ஜட்டி கூட இல்லாமல் நிற்பது.
எனவே
பதின்மூன்றையும் பதின்மூன்று இடங்களில் ஒளித்தேன்.
அந்தப் பதின்மூன்று இடங்களையும்
ஓரிடத்தில் ஒளித்துவைத்தேன்.
எவனோ ஒரு கில்லாடி
அதையும் துப்பறிந்து தூக்கிவிட்டால்?
நான் எவ்வளவு பெரிய கில்லாடி?
பதின்மூன்று இடங்களின் முதல் எழுத்தை மூளைக்குள்தான் ஒளித்துவைத்திருக்கிறேன்
அவை குழம்பிவிடக்கூடாதென்று
ஒரு காகிதத்தில் ஒளித்திருக்கிறேன்.
அந்தக் காகிதத்தை
ஒரு தனியிடத்தில் ஒளித்திருக்கிறேன்.
இப்போது
நான் முழுவதுமாக மூடப்பட்டவன்.
என்னை ஆட்டவோ அசைக்கவோ இயலாது.
மின்னஞ்சல்: isaikarukkal@gmail.com