தமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் - மோதலின் கதை
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
தமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் - மோதலின் கதை
கி. நாச்சிமுத்து
வரலாற்று முற்றம்
வடமொழி என்கிற சமஸ்கிருதம் தன் பெயருக்கேற்றாற்போல இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தொடங்கி இந்திய நிலப்பரப்பை ஆண்ட ஆட்சியாளர்களும் சமய அறிஞர்களும் பிற அறிஞர் பெருமக்களும் வணிகப் பெருமக்களும் இந்தியா முழுமையும் ஆளவும் அரசியல் தொடர்பு கொள்ளவும் சமயம் பரப்பவும் வணிகம் செய்யவும் அயலகப்பணிகளில் அமரவும் பண்படுத்தி உருவாக்கிக்கொண்ட மொழி. அது இந்தியாவை ஒன்றாக இணைத்து இந்தியப் பெருநில (Pan Indian) மொழியாக உயர்ந்தது. அது இந்தியாவிலுள்ள பல்வேறு மொழியாளர்களுடைய இரண்டாவது மொழியாகி உயர் கல்வி, தத்துவம், சமயம், இலக்கியம், இலக்கணம், அறிவியல், ஆட்சியியல் முதலிய துறைகளில் கோலோச்சி இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பங்களிப்புகளால் பல்துறை அறிவுத்துறைகளில் வளர்ந்து நின்றது. இது இவ்வாறு அனைத்திந்தியப் பண்பாட்டின் அடையாளமாக உயிர்ப்பாகக் கொண்டாடப்பட்டது.