காலச்சுவடு புதிய வெளியீடுகள்
சென்னைப் புத்தகக் கண்காட்சி 2020
காலச்சுவடு புதிய வெளியீடுகள்
உலக கிளாசிக் நாவல்
கருப்புப் புத்தகம்
ஓரான் பாமுக்
தமிழில்: எத்திராஜ் அகிலன்
ஒரு துப்பறியும் நவீனத்தின் கருவை எடுத்துக் கொண்டு பாமுக் தனது மேதைமையை, கலைநயத்தை, ஆற்றலை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் முடிவில் புதிர் தெள்ளென அவிழ்ந்துவிடுவதில்லை. புரிந்ததைப் போலவும் இருக்கிறது, புரியாததைப் போலவும் இருக்கிறது. இந்தத் திகைப்புத்தான் இந்த நாவலின் மிகப் பெரிய பலம். உண்மையில் என்னதான் ஆனது?
எதிரெதிராய் நிலைபெற்றிருக்கும் முகம்பார்க்கும் கண்ணாடி களுக்குள் சிறைப்பட்ட பிம்பங்கள் ஏற்படுத்தும் களங்கமற்ற, குழந்தைத்தனமான குதூகலத்தை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.
மொழிபெயர்ப்புகள்
இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு
(வரலாறு)
ஜெய்ராம் ரமேஷ்
தமிழில்: முடவன் குட்டி முகம்மது முகம்மது அலி
பதினாறாண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி வாழ்வுமுழுவதும் இயற்கையுடன் கொண்டிருந்த நெருங்கிய தோழமையுணர்வை, இந்நூல் அரிய சான்றுகளுடன் பதிவு செய்கிறது.
அரசியல்வாதியும் கற்றறிந்த அறிஞருமான ஜெய்ராம் ரமேஷ், இந்திராவின் தனிப்பட்டவாழ்வு, அரசியல்வாழ்வு, சுற்றுச்சூழல்மீதான ஈடுபாடு ஆகியவற்றை ஊடுபாவாகப் பின்னி இந்திரா காந்தியின் வரலாற்றை இயற்கையியலாளரின் வரலாறாகச் சுவையாகச் சித்திரிக்கிறார்.
சிரியாவில் தலைமறைவு நூலகம்
(கட்டுரை நூல்)
தெல்ஃபின் மினூய்
தமிழில்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
ரூ. 175
2012-2016: பஷார் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக டமாஸ்கஸின் புறநகர் தராயா கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அது கடும் முற்றுகைக்கு ஆளானது. முற்றுகை நீடித்த நான்கு ஆண்டுகள், அங்கு நரக வாழ்க்கைதான். பீப்பாய்ச் குண்டு வெடிப்புகள், இரசாயன வாயுத் தாக்குதல்கள் போன்ற கொடுமைகளைத் தராயா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வறுமை, பசி, பட்டினி ஆகியவை தலைவிரித் தாடின. பஷார் அல்-ஆசாத்தின் அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் போது, சுமார் நாற்பது இளம் புரட்சியாளர்கள் விசித்திரமான சபதமொன்றை எடுத்துக்கொண்டனர். தகர்க்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கும் கீழ் ஆயிரக்கணக்கான நூல்கள் சிதறிக் கிடப்பதை அறிந்து, அவற்றைத் தோண்டியெடுத்து ஊரின் நிலத்தடிக்குக் கீழ் ஒரு நூலகம் அமைக்கத் தீர்மானித்தனர். புத்தகங்களை ஆயுதங்களாகக் கொண்டு எதிர்ப்ப தென்பது ஓர் உருவகம்தான். எந்த ஓர் அரசியல் ஆதிக்கத் திற்கும் அல்லது மத ஆதிக்கத்திற்கும் அதனை ஓர் எதிர்ப்புக் குரலாகத்தான் கருதவேண்டும். ஒரு பக்கம் பஷார் அல்-ஆசாத்தும், இன்னொரு பக்கம் டாட்ச் எனும் தீவிரவாத இயக்கமும் தங்கள் ஆதிக்கத்தை வலுவடைய முயற்சி மேற்கொண்டிருக்கும்போது, ஒரு மூன்றாவது சக்தியாக அந்தக் குரல் ஒலித்தது. 2011ஆம் ஆண்டு ஆசாத்துக்கு எதிர்ப்பாக வெடித்த அமைதி ஆர்ப்பாட்டங்களை அரசு அடக்கி ஒடுக்கியது. அதுபற்றிய இக்கதை பிரெஞ்சு பத்திரிகை நிருபர் ஒருவருக்கும் போராளிகளுக்குமிடையே ‘ஸ்கைப்’ வழியே நடைபெற்ற உரையாடல்களின் அடிப்படையில் சொல்லப்படுகின்றது. தன்னுரிமை, சகிப்புத்தன்மை, இலக்கியத்தின் மேலாண்மை ஆகியவற்றிற்கு இது ஒரு துதிப்பாடலாகும்.
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
(தைவான் நாவல்)
வு மிங் - -யி
தமிழில்: யுவன் சந்திரசேகர்
ரூ. 395
தீவிர அக்கறைகள்கொண்ட படைப்பு சுவாரசியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான சான்று இந்த நாவல். துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல் வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை; மலையேற்ற சாகசம் முதல் நவீன உளவியல் மருத்துவம் வரை; சுற்றுலா வணிகம் முதல் பழங்குடி ஐதீகங்கள் வரை எனப் பல்வேறு தளங்களைச் சரளமான மொழியில் வசீகரமாக விவரிக்கிறது.
உலக கிளாசிக் வாழ்க்கை வரலாறு
ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன் . . .
(அனுபவப் பதிவு)
ஸான்ட்ரா கால்னியடே;
தமிழில்: அம்பை
ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணிப்பில் எடுத்துக்கொள்ளப்படாத ஒன்று. லாட்வியாவைப் பொருத்தவரை நாஸிகளுடன் உடன்போன நாடு என்றே அது அறியப்படுகிறது. ஸான்ட்ரா கால்னியடேயின் ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன் நூல் ரஷ்யக் கம்யூனிஸ அரசு லாட்வியாவை ஆக்கிரமித்து ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்று, ஆயிரக்கணக்கானவர்களை ஸைபீரியாவுக்கு நாடுகடத்திய லாட்விய வரலாற்றுடன் ஸ்டாலின் என்ற கொடுங்கோலனின் ஆட்சி முறையையும் அதில் சிக்குண்டு அலைக்கழிக்கப்பட்டக் குடும்பம் ஒன்றின் வரலாற்றையும் நினைவுகளையும் கூறுவது. கால்நடைகளுக்கான சரக்கு வண்டிப் பெட்டிகளில் ஏற்றப்பட்டு ஸைபீரியாவின் கடும் பனியில் வாழ்ந்தும் இறந்தும் போன குடும்பத்தின் உண்மை வரலாறு. பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டக் குழந்தைகள், பிரிக்கப்பட்டக் காதலர்கள், தந்தை ஒரு புறமும் தாயும் குழந்தைகளும் ஒரு புறமும் மீண்டும் சந்திக்கவே முடியாதபடி பிரிக்கப்பட்ட அவலமும் சிறை முகாம்களில் நோயால் பீடிக்கப்பட்டு ரத்தம் கக்கி உயிர்விட்டவர்களின் சோகமும் பட்டினியிலிருந்து மீள எலிகளையும் இறந்த மிருகங்களையும் புல்லையும் மரப்பட்டைகளையும் புசித்து வாழ்ந்த குலாக் என்னும் கொடுமையைக் கூறும் நூல் இது.
இந்திய கிளாசிக் நாவல்
காலம்
எம்.டி. வாசுதேவன் நாயர்
தமிழில்: குளச்சல் யூசுஃப்
ரூ. 425
“சேதுவுக்கு எப்பவும் ஒரே ஒரு ஆள் மேல மட்டும்தான் ஆசை. அது சேது மேல மட்டும்தான்! . . .” நாவலின் இறுதிப்பக்கத்தில் நாயகன் சேதுவின் பால்யகால காதலி சுமித்ரா அவனிடமே கூறும் சொற்கள் இவை. இதுவே சேதுவை முன்னிருத்தி நாவல் மேற்கொள்ளும் நீள, அகல, ஆழ காலப்பிராயணத்தை அறிந்து கொள்ள பேரளவு துணைபுரியக்கூடியதாகும். எதிலும் மனம் ஊன்றாத மானுடர்கள் ’தப்பித்து’, ‘தப்பித்து’ கடைசியில் சென்று நிற்கும் புள்ளி எதுவென அறியத்தரும் நாவலும் கூட. ‘மூக்குபொடி’ வாங்க சொற்பக் காசு இல்லாமல் அறைக்குள் சென்று முடங்குபவனே ‘ சேது முதலாளி’ ஆகும் கதை. வேலை கேட்டு தந்தையோடு குறுகி நின்று அவமானப்பட்டுத் திரும்பிய சேதுவின் வாசலில் பின்னொரு காலத்தில் ஊர்மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பணி வேண்டி காத்திருப்பதன் கதை. பெண்களை தற்காலிக இளைப்பாறுதலுக்கும் இயலாமைகளின் சமன்படுத்தலுக்கும் உபயோகிப்பவனின் கதை.
தமிழ் கிளாசிக் நாவல்
கடலுக்கு அப்பால்
ப. சிங்காரம்
ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ நாவல் வெளியாகிச் சுமார் அறுபதாண்டுக் காலம் ஓடிவிட்டது. திரும்பிப்பார்த்தால் இந்த நீண்ட நெடுங்காலத்தில் ‘கடலுக்கு அப்பால்’ மூன்று கட்டங்களாகத் தன் வாசகர்களை எதிர்கொண்டு வந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது.
வெறுமையான எளிமையாக அல்லாமல் மேதைமையால் விளைந்த எளிமையாகக் ‘கடலுக்கு அப்பால்’ இருப்பதை உணர்வுபூர்வமான, முன்முடிவற்ற வாசிப்பின் வழியாகவும் சரி, ஆய்வுத்தேடல்கள் மூலமாகவும் சரி நிச்சயம் ஓர் இலக்கிய வாசகர் கண்டடையமுடியும்.
- சிவானந்தம் நீலகண்டன்
நேர்காணல்
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
ப-ர்: திவாகர் ரங்கநாதன்
ரூ. 125
ஞானக்கூத்தன் வெவ்வேறு காலகட்டங்களில் அளித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. இந்த உரையாடல்களில் அவர் தமது கவிதையியல், அரசியல் பார்வை, சொந்த வாழ்க்கை ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறார். தமிழ்-வடமொழிப் புலமை, கலைத் தூய்மைவாதம், திராவிட இயக்க எதிர்ப்பு, இலக்கியவாதிகளின் அரசியல், கலையின் கோட்பாடுகள் முதலியவை பற்றிய நேரடியான கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார் ஞானக்கூத்தன். தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஒருவரின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன இந்தப் பேட்டிகள்.
நாவல்
வேதாளம் சொன்ன கதை
யுவன் சந்திரசேகர்
ரூ. 450
இவரது நாவல்களுக்கு பொது இலக்கணம் உண்டு. அவை சுவாரஸ்யமானவை; எனினும் நேர்கோட்டில் நிகழாதவை. நாவலின் களம் அனேகமாக ஒன்றுதான். ஆனால் கதைக்கேற்ப மாறும் வண்ணம் கொண்டது. கதை மாந்தரில் பெரும்பாலோர் முன்பே அறிமுகமானவர்கள்; எனினும் நிகழ்வுகளுக்கேற்ற விசித்திரப் போக்குகளை மேற்கொள்பவர்கள். கூறுமுறை யதார்த்தவாதமானதாகத் தென்படும்போதே அதைக் கடந்து முன்னகரும் இயல்பு கொண்டது. இயல்பானது என்று உணரும்போதே அதீதமாகும் மொழி. ஒரு கதை என்று உள்ளே புகும்போதே ஆயிரம் கதவுகளாகத் திறந்து பல கதைவெளிகளுக்கு இட்டுச்செல்லும் எழுத்து வன்மை.
மேற்சொன்ன எல்லா இலக்கணங்களும் பொருந்தியிருக்கும் நிலையிலேயே புதிதான ஒன்றை, புதிரான ஒன்றை உள்ளடக்கியிருக்கிறது இந்நாவல். அது என்ன என்ற கேள்விக்குப் பதிலே ‘வேதாளம் சொல்லும் கதை’.
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
சுரேஷ்குமார இந்திரஜித்
ரூ. 125
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் நாவல் ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’. இந்த நாவலில் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் மனம், சிந்தனை, பால்யகால வாழ்க்கை, மண வாழ்க்கை ஆகியன சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்தாளரின் ஐந்து குறுநாவல்களின் பகுதிகள் இந்த நாவலில் உள்ளன. அக்குறுநாவல்களின் மீதப் பகுதிகளை ஒவ்வொரு வாசகரின் மனமும் அவரவர்க்கு ஏற்றவாறு கற்பனை செய்துகொள்ளும் சுதந்திரத்தை இந்த நாவல் வழங்குகிறது. புனைவும் யதார்த்தமும் நுட்பமும் கலந்த நாவல் இது. இந்த நாவலின் பின்னணியில் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன.
துறைமுகம்
தோப்பில் முஹம்மது மீரான்
ரூ. 325
நாவலுக்குரிய, இன்னுஞ்சொல்லப்போனால் தொடர் கதைக்குரிய எந்த வாய்பாடு அம்சமும் இதில் இல்லை. மாறாகக் கலை நயமும் கட்டுக் கோப்பும் மிகுந்துள்ளன. ஆசிரியரின் கதை எடுத்துரைத்தலில் சுவை இருப்பினும், தலை நீட்டல் ஏதுமில்லை. கதை நிகழும் சூழல் - காலமும் இடமும் - மிக அழுத்தமுற வெளிப்பட்டிருப்பது, இதன் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும். அதனை இன்னும் வலிமையாக ஆக்கியுள்ளது, வட்டாரக் கிளைமொழி நடை.
- சு. வேங்கடராமன்
சுற்றுவழிப்பாதை
ஆனந்த்
ரூ. 795
அலைந்து திரிந்து சுற்றுவழிப்பாதையில் முனைந்து பயணித்தாலும், இறுதியில் தடம் அழியும் பெருவெளியில் ஆகப்பெரும் விவேகத்துடனும் மேலதிக விசாரத்துடனும் எல்லையின்மை காட்டும் துலாக்கோலாய் வழிமறிக்கிறார் ஆனந்த்.
- கல்யாணராமன்
நட்சத்திரவாசிகள்
கார்த்திக் பாலசுப்ரமணியன்
ரூ. 290
புத்தாயிரத்தில் ஆரம்பித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறைமீது அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், கலாச்சாரம், பொருளாதாரம் எனப் பல்வேறு வகையில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும்.
எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங் களுடன் சிக்கல்களையும் சிடுக்குகளையும் சேர்த்தே கொண்டு வந்திருக்கிறது. அவற்றில் முதன்மையானதாக வேலை, குடும்பம், சமூகம் எனச் சகல இடங்களிலும் வியாபித்திருக்கும் நிச்சயமற்ற தன்மையையும், அதன் உபவிளைவாகக் கிளர்ந்தெழும் தனிமையையும் குறிப்பிடலாம்.
இக்கண்ணாடித் தீவுகளுக்குள் குடிபெயர்ந்த நம்மவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நம் நிலம் சார்ந்தவை. அவ்வகையில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வெளியே இருப்பவர்கள் தங்கள் ஜன்னல்கள் வழியே வேடிக்கை பார்த்து உலவவிட்ட கதைகளை இந்த ‘நட்சத்திரவாசிகள்’ மறுக்கிறார்கள்.
தாண்டவராயன் கதை
பா. வெங்கடேசன்
தீவிர சுயகலப்பினை வாசக மனதில் பற்றிக்கொள்ளச் செய்வதன்மூலம் அடையாள உருவாக்கத்திற்கு ஆதாரமான கதையாடல்களின் பண்பினை தியானிக்கச் செய்வதே இந்நாவலின் அபூர்வ சாதனை. பிற மொழி நாவல்களைப் பார்த்து தமிழன் ஏங்கும் காலம் முடிந்துவிட்டது. தராசில் வைக்க தாண்டவராயன் கதை இருக்கும்போது எந்த மொழியிடமும் சென்று மார்தட்டலாம். அது மொழியைக் கடந்த கதையும் எழுத்தும் என்ற புரிதலை உள்ளடக்கிய பெருமிதமாகவே இருக்கும்.
- ராஜன் குறை (குமுதம் தீராநதி)
தமிழ் கிளாசிக் குறுநாவல்
அறுவடை
ஆர். ஷண்முகசுந்தரம்
ரூ. 90
பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த சண்முகசுந்தரம் ‘அறுவடை’யை எழுதினார். புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று. வட்டார மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது. அவரது எழுத்துக்களில் துலங்கும் ‘பெண் நோக்கு’ இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்துக்குள்ளிருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது. இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும்.
- பெருமாள்முருகன்
தமிழ் கிளாசிக் சிறுகதைகள்
கருப்பு அம்பா கதை
ஆதவன்
தொ-ர்: சுரேஷ் வேங்கடாத்ரி
ரூ. 250
நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைகளங்கள். மத்தியதர வர்க்க மனிதர்களை அவரது கதை மாந்தர்கள். இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதே சமயம் பரிவுடனும் வெளிப்படுத்துபவை அவரது கதைகள். உண்மைகளுக்குள் மறைக்கப்படும் போலித்தனங்களையும் பொய்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் நிஜங்களையும் பகிரங்கப்படுத்தும் கலைப்பார்வை அவருடையது.
ஆதவனின் கதைகளிலிருந்து அவருடைய ஆளுமையை எடுத்துக்காட்டுபவையான பதினாறு சிறுகதைகள் கொண்டது இந்தத் தொகுப்பு.
- அம்பை
சிறுகதைகள்
விபரீத ராஜ யோகம்
கல்யாணராமன்
ரூ. 200
கதையில்லாத கதைக்கும் கதையை வெளியேற்றும் கதைக்குமான யுகத்தில் கல்யாணராமன் செவ்வியல் பாங்கான சிறுகதைகளை முன்வைக்கிறார். இது ஓர் அறைகூவல். ஒரு மரபின் தொடர்ச்சியாகும்போதே அதிலிருந்து வெளியேறியும் கச்சிதமான வடிவத்துக்குள் இயங்கும்போதே அதைக் கலைத்துப்போட்டும், விழுமியங்களைச் சொல்லும் தோரணையிலேயே அவற்றை விமர்சித்தும் இந்த அறைகூவலை வெற்றிகொள்கிறார்.
கருப்பட்டி
மலர்வதி
ரூ. 175
எப்போதும் தான் தானாக மட்டுமே இல்லாமல் பிறரோடும் தன்னை இணைத்துக்கொள்கிற மனங்களின் கதை. சமூகக் கட்டுப்பாடும் உணர்ச்சிக் கட்டுப்பாடுமாய் வாழ்கிறபோது பிறர் உடலோடு தன்னுடலையும் பிணைத்துக்கொள்கிற அவலங்களையும் இக்கதைகள் பேசுகின்றன. நம் இருப்பு மதிப்பில்லாமல் முடிந்துபோவதைக் காட்டிலும் அந்த இருப்பைக் கட்டுக்குள் வைக்கும் மாயக் கயிறுகளை அறுப்பதே இப்படைப்புகளின் நோக்கம். இவ்வகையில் ஆன்மிக உணர்வில் சஞ்சரித்து அதன் விளைவுகளை நேர்நின்று கலையுணர்வாய்ப் பிரதிபலிக்கிறார் மலர்வதி.
- களந்தை பீர்முகம்மது
கச்சேரி
தி. ஜானகிராமன்
தொகுக்கப்படாத கதைகள்
தி. ஜானகிராமன் எழுதி இதழ்களில் வெளிவந்தும் அவரது தொகுப்புகள் எவற்றிலும் இடம்பெறாதவையுமான 28 கதைகள் அரிதின் முயன்று கண்டுபிடிக்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. ஜானகிராமனின் விடுபட்ட உலகில் நாம் காண மறந்த காட்சிகளை வாசிப்புக்கு விருந்தாக்குகிறது ‘கச்சேரி’.
- சுகுமாரன்
வனம் திரும்புதல்
பொ. கருணாகரமூர்த்தி
புலம்பெயர் தேசங்களில் அலையும் மனிதர்களையும் பொருளாதார, சமூக பாதுகாப்பைக் கோரி நிற்கிற கதாபாத்திரங்களையும் பொ. கருணாகரமூர்த்தி தன் கதைகளில் உருவாக்கிப் பார்க்கிறார். அவரது கதாபாத்திரங்கள் மூக்கைச் சிந்தியபடி நிற்பதில்லை. மாறாகப் பொதுமனத்திற்கு அச்சத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கும் பாத்திரங்களாக உருமாறுகின்றன. குடிவரவாளர்கள், கேட்பாரற்று அநாதரவானவர்கள், மரண நிழலில் இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருப்போர், மனப்பிறழ்வடைந்தவர்கள், விதியே என அலக்கழிபவர்கள்பாலே கருணாகரமூர்த்தியின் அக்கறையும் கரிசனமும்! தொகுப்பிலுள்ள பதினான்கு கதைகள் ஒற்றுமைகளும் முரண்களும் நிறைந்தவை. மனிதர்களிடம், - அரசியலிடம்,- சில நேரங்களில் மரணத்திடம்கூட அங்கதம் இழைந்த தொனியில் இணக்கத்தை வேண்டுகின்றன இக்கதைகள்.
தேசம்மா
க. அரவிந்த் குமார்
ரூ. 180
எங்கிருந்தாலும் மனிதர்களின் தேட்டமும் ஆர்வமும் என்னென்னவாய் இருக்கின்றன வென்பதை இக்கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கை முயற்சியிலும் கண்டடைகின்ற உண்மைகளுக்கு விசுவாசமாய் இருக்க முனைகிற பாத்திரங்கள் இங்கே நிறைய! அன்பையும் உறவையும் மாத்திரமல்ல, வக்கிரங் களையும் கைமாற்றிக் கொடுக்கின்றவர்களோடும் நாம் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கிறோம்; அத்தகைய நிர்ப்பந்தங் களைக் கதைகளாக்கியிருக்கிறார் ஆசிரியர். மீற முயலாமலே மீறிச் செல்வதும் மீறிச் செல்ல முயன்றாலும் மடங்கி விழுவதுமென நம்மிடையே நிகழ்கிற ரசவாதங்களே ‘தேசம்மா’.
மகிழம்பூ மணம்
(கன்னடச் சிறுகதைகள்)
ஜயந்த் காய்கிணி
தமிழில்: கே. நல்லதம்பி
ரூ. 150
மனித முரண்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் ஜயந்த் காய்க்கிணியின் பார்வை மாறுபட்டது. சிறிய ஊரிலிருந்து வந்தவரானாலும், ஜயந்த் நகர வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை கன்னடத்திற்குப் புதியது. கதைகளில் அவருடைய ஈடுபாடு, ஓட்டத்தின் லயம், எழும் துடிப்புகளெல்லாம் அவருக்கே உரித்தானவை. படிக்கவேண்டும் என்று தூண்டும் அதிசய ஈர்ப்புள்ள எழுத்தாளர் ஜயந்த்.
- கிரீஷ் கார்னாட்
இதிகாசம்
(கன்னடச் சிறுகதைகள்)
திவாகர்
தமிழில்: கே. நல்லதம்பி
ரூ. 150
கதைகளின் மீது கனவுத்தன்மையைப் படிய வைப்பதன் வழியாக அவற்றை ஒளிகொள்ளச் செய்யும் திவாகரின் கலை மிகமுக்கியமானது. இது கதைகூறலில் அவர் கண்டடைந்த வெற்றிகரமான வழிமுறை. எழுபதுகளிலேயே அந்த வழிமுறையைக் கண்டடைந்து செயல்படுத்திய முன்னோடிப் படைப்பாளியென்றே அவரைக் குறிப்பிடவேண்டும். ஒன்றைப்போல பிறிதொன்றை உருவாக்காமல் ஒவ்வொன்றையும் புதிது புதிதாக உருவாக்கும் புதுமைநாட்டம் அவரை முக்கியமான சிறுகதையாளராக உருவாக்கியுள்ளது.
- பாவண்ணன்
மருத்துவம்
சிக்மண்ட் ஃபிராய்டு
ஓர் அறிமுகம்
டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா
ரூ. 350
சிக்மண்ட் ஃபிராயிட்: உளவியலுக்கு முகம் கொடுத்தவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறியவர்; பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான்; தனிமனித உளவியலையும் தாண்டி, மதம், மனித நாகரிகம், கலை இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதியவர்.
அவரைப் பற்றி அவ்வளவாக அறியப்படாத செய்திகள் பல: இரண்டாம் உலகப் போரின்போது போர் பற்றி அல்பட் ஐன்ஸ்டைனும் அவரும் கடிதங்கள் பரிமாறிக்கொண்டார்கள்; அவர் ஓர் இறைமறுப்பாளர், மதங்களைக் கடுமையாகச் சாடி எழுதியவர்; அவர் பெயர் இரண்டுமுறை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது, ஆனாலும் அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்படவில்லை.
இந்த நூல் அவர் முன்வைத்த கருத்துகளையும் கோட்பாடுகளையும் விளக்கிக் கூற முற்படுகிறது; இன்றைய அறிவியல் தளத்தில் நின்று மதிப்பீடு செய்கிறது; மனித குலத்துக்கு அவர் வழங்கிய மகத்தான பங்களிப்பைக் கோடிட்டுக் காட்டுகிறது.
குறுநாவல்கள்
சுகவாசிகள்
கரிச்சான்குஞ்சு
ரூ. 150
காமம், சுயநலம் என்ற இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறு நாவல்கள் இவை. தனிமனித காமம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை, அவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சீரழிக்கிறது என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தனக்கென ஒன்று கிடைக்கும்போது, ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறாரென்றும் கூறுகிறது இன்னொரு குறுநாவலான, ‘ஒரு மாதிரியான கூட்டம்’. இரண்டு குறுநாவல்களுக்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு; அது சுயநலத்திற்காக அழிதல்.
- ராணிதிலக்
வாழ்க்கை வரலாறு / தன்வரலாறு
மகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி
நிர்மால்யா
ரூ. 350
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண் டின் தொடக்கத்திலும் நிலவிய சமூகக் கொடுமைகளால் ‘உள நோயாளர் விடுதி’ என்று அழைக்கப்பட்ட கேரளத்தில் மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முதன்மையான போராளிகளில் ஒருவர் அய்யன்காளி. தாம் பிறந்த புலையர் இனத்தைத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப் போராடியதுடன் பேதமற்ற பொதுவான சமூக நீதிக்காகவும் அயராது சமர் புரிந்தவர். கல்வியினாலேயே பாரில் மேன்மைகள் எய்தலாகும் என்று உணர்ந்தவர்; உணர்த்தியவர். தீண்டத் தகாதவர்களுக்கு முதல் கல்விக் கூடத்தை உருவாக்கினார் .பொது வெளிகள் எல்லாருக்குமானவை என்று அறிவித்தவர்; அதைச் செயல்படுத்தியவர். ‘வில் வண்டிச் சமரம்’ மூலம் சாதிய ஒடுக்குமுறைக்கு அறைகூவல் விடுத்தார். இன்று அவர் நவீன கேரளத்தின் ‘மகாத்மா’.
அய்யன்காளியின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றை விரிவான ஆய்வுக் குறிப்புகளுடனும் திருத்திச் சரிபார்க்கப்பட்ட தரவுகளுடனும் அரிய புகைப்படங்களுடனும் முன்வைக்கிறது இந்த நூல்.
மொழியியல்
நோம் சோம்ஸ்கி
சு. இராசாராம்
நோம் சோம்ஸ்கி என்னும் உலகம் போற்றும் அமெரிக்க அறிஞர் தத்துவம், புலனுணர்வியல் உளவியல், சமூகவியல், மொழியியல், கணினியியல், அரசியல் விஞ்ஞானம் என எந்தவொரு தளத்திலும் அறிமுகத்திற்கு அப்பாற்பட்டவரல்லர். அவரைப் பற்றியும், ஒரு மாமனிதராக உருவான பின்புலம் பற்றியும் இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள ஆர்வப்படுவோருக்கு இந்நூல் அறிமுகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகள் அடங்கியது.
தம் சமகாலச் சமூக, அரசியல் பிரச்சனைகளுக்குக் கூருணர்ச்சிமிக்க அரசியல் விஞ்ஞானியாய்க் கொள்கை மறுப்பாளராகவும், அறப்போராளியாகவும் சோம்ஸ்கி விஸ்வரூபம் எடுக்கும் தளங்கள் இந்நூலின் இறுதிப்பகுதி.
மொழியியல் அறிஞராக ஒற்றைப் பரிமாணத்தில் அறியப்படும் சோம்ஸ்கியின் பன்முகத்தை இந்நூல் முழுமையாகக் காட்டுகிறது.
ஒரு சொல் கேளீர்
அரவிந்தன்
ரூ. 225
இது உரைநடைக் காலம். அதற்கேற்பத் தமிழ் அன்றாடம் தன்னை புதுப்பித்துக் கொண்டு நவீனமாகி வருகிறது. எழுத்து வடிவம், சொற்கள், தொடரமைப்பு என அனைத்திலும் பல மாற்றங்கள். இன்றைய வெளிப்பாடு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களும்தான். இவற்றைக் கருத்தில்கொண்டு மொழிப் பயன்பாட்டு நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார் அரவிந்தன். எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் செம்மையராகவும் ஒருசேரச் செயல்பட்டு ஊடகத்துறையில் பல்லாண்டுகளாக அவர் பெற்ற அனுபவத் தொகுப்பு இது. ஊடகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பெரிதும் உதவும் அரிய கையேடு இந்நூல்.
- பெருமாள்முருகன்
முழுத்தொகுப்பு
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
தொ-ர்: களந்தை பீர்முகம்மது
ஆகப்பெரிய வாழ்க்கைக்கு முயலாதவர்களை வாழத் தகுதியற்றவர்களென ஒதுக்க முயல்கிறது சமூகம். அத்தகையவர்களுக்கு மதத்தின் கோட்பாடுகளை உயிர் மூச்சாக்கிக் கொடுத்து மெல்லமெல்ல அவர்தம் உழைப்பையும் ரத்தத்தையும் தமக்கென ஆக்கிக் கொள்கிறவர்களைக் கண்சிவக்க நோக்குகிறார் தோப்பில். மடித்துப் போடப்பட்டிருக்கிற வாழ்க்கையை நிமிர்த்துவதற்குள் தாம் எவற்றையெல்லாம் இழக்கிறோமென அறிந்துகொள்ள விரும்பாத மனிதர்களிடமிருந்தே சமூகத்திற்கான ஊட்டச் சத்து கிடைக்கின்றது.
இத்தகைய வரம்புகளுக்குள்ளேயே நின்று இம்மக்கள் மேற்கொள்கின்ற யத்தனங்களுக்குள் நம் குருதியோட்டமும் கலந்துவிடுகிற மாதிரி தோப்பில் முஹம்மது மீரானின் கலையாற்றல் மேம்பட்டிருக்கிறது. அதனால்தான் நாம் இம்மனிதர்களைப் பிரிந்துவிடாமல் அவர்களின் பக்கமாய் நிற்க விரும்புகிறோம்.
- களந்தை பீர்முகம்மது
கவிதைகள்
சுகுமாரன் கவிதைகள்
(1974 - 2019)
நவீன தமிழ் கவிதையில் குறிப்பிடத்தகுந்த கவி ஆளுமையான சுகுமாரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பு. 1974 முதல் 2019 வரையான நாற்பத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் மொழியிலும் கூறுமுறையிலும் காலத்திலும் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நிற்பவை. மாற்றம் என்ற மாறாத இயல்பை உயிர்க் குணமாக கொண்டவை.
வாப்பாவின் மூச்சு
எம்.எம். பைசல்
ரூ. 100
முடிச்சுகளை அவிழ்த்துச் சில புதிர்களை விளங்கவைப்பது மட்டுமன்று கவிதை, போகிறபோக்கில் புதிய முடிச்சுகளைப் போட்டுவிடுவதும்தான் கவிதை. இவை நமக்குப் பிடிபடாத அவஸ்தைகளை மனத்தில் ஏற்றிவிடுகின்றன.
வாப்பாவின் மூச்சு நம்மீது படரவிடும் வெம்மை இச் சமூகத்தின் மீதான விமர்சனமாகின்றது. ஒரு கவிஞன் தன்னிலையில் உணரும் தனிமையைச் சமூகத்தின் தனிமை யாகவும் மாற்ற அவனுக்கு உரிமையுண்டு. அந்த உரிமையை முழுதாக எடுத்துக்கொண்டிருக்கின்றன இக்கவிதைகள்.
- களந்தை பீர்முகம்மது
நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்
இசை
ரூ. 90
உற்றறிந்த புலங்களைத் தாண்டி ஒரு புதிய வெளிக்குள் இசையின் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆயினும், அவருடைய கவியுலகின் என்பும் தசையுமான எளிமையும் பகடியும் இந்தக் கவிதைகளிலும் உண்டு. வழக்கமாகத் தகிக்கும் குருதியிலிருந்து தன் கவித்துவத்தை அடையும் இசை இம்முறை கண்ணீரின் விலா எலும்பிலிருந்தும் அதைப் பெற்றிருக்கிறார்.
- குணா கந்தசாமி
ப்ளக் ப்ளக் ப்ளக்
ராணிதிலக்
ரூ. 90
ஒரு கவிதை சட்டென்று பிறக்கிறது ஒரு செடியைப் போல. காற்றில் எந்தப் பக்கமும் அசைவதுபோல், கவிதை நகர்கிறது. கற்பனையாக, காட்சியாக, மன சாட்சியாக, தனித்து அலையும் பைத்தியத்தின் காலடியாக, குற்ற உணர்வாக! உருவகமாகவும் படிமமாகவும் அமையும் இக்கவிதைகள், எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தெளிவாகச் சொல்கின்றன, எளிமையாகவும் பூடகமாகவும். கூழாங்கல்லாக மாற விரும்பும் ஒரு பைத்தியத்தின் சின்னஞ்சிறு புன்னகையே இக்கவிதைகள்.
நினைவோடை
கவிமணி
சுந்தர ராமசாமி
ரூ. 100
நாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ஆளுமையாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திகழ்ந்தவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் நவீனப் பேராளுமையாக விளங்கியவர் சுந்தர ராமசாமி. நிறைவாழ்வு வாழ்ந்த கவிமணிக்கு உரிய அங்கீகாரம் அவருடைய வாழ்வின் இறுதிப் பகுதியிலேயே கிடைத்தது. கவிமணியின் மறைவுக்கு முந்தைய சில ஆண்டுகளில் சுந்தர ராமசாமிஅவரோடு பழகினார். அந்த அனுபவங்கள் சுவாரசியமான ‘நினைவோடை’ப் பதிவாக ஆகியுள்ளன. இலக்கியம், அரசியல் ஆகியவை பற்றி முற்றிலும் வேறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தாலும் நேர்மையாகவும் மிகுந்த மரியாதையுடனும் கவிமணியின் ஆளுமையைத் தேர்ந்த மொழியில் சித்தரித்துள்ளார் சுந்தர ராமசாமி.
- ஆ.இரா. வேங்கடாசலபதி
மௌனி, என்.எஸ். கிருஷ்ணன், வெ. சாமிநாத சர்மா
சுந்தர ராமசாமி
தான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதை பகிர்ந்துகொள்வதே சு.ரா.வின் நினைவோடை நூல் வரிசையின் முதன்மை நோக்கமும் பயனும். இந்நூலில் எழுத்தாளர் மௌனி, சிந்தனையாளர் வெ. சாமிநாத சர்மா, திரைக்கலைஞர் என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்துகொள்கிறார். ஒன்றுக்கொன்று வேறுபட்டவர்களான இந்த ஆளுமைகளை தோழமையுடனும் சமரசமற்றப் பார்வையுடனுமே அறிமுகப் படுத்துகிறார். சு.ராவைத் தவிர வேறு எவரால் “இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அதிர்ச்சிகளைக் குறைக்கவும் அவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்” என்ற அனுபவ வாசகத்தைச் சொல்ல முடியும்.
ஆய்வு நூல்
சிங்கைத் தமிழ்ச் சமூகம்: வரலாறும் புனைவும்
சிவானந்தம் நீலகண்டன்
ரூ. 130
சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையை ஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’.
சிங்கப்பூர் என்றதும் தமிழ்நாட்டார் மனத்தில் எழும்பும் ‘பழைய இலக்கிய மகாத்மியங்களும் வியாக்கியானங்களும்’ என்ற பழஞ்சித்திரத்தைக் கலைக்கிறது இக்கட்டுரை நூல். பொருளில் நவீனம், பார்வையில் நவீனம், நடையில் நவீனம் என நூல் முற்றிலும் நவீனப் படைப்பு. ஆய்வுத் திறத்தால் க. கைலாசபதியின் ‘அடியும் முடியும்’ நூலை நினைவூட்டும் ஆய்வுலகின் புதிய வெளிச்சம் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’.
- பழ. அதியமான்
காவேரிப் பெருவெள்ளம் (1924)
படிநிலைச் சாதிகளில் பேரழிவின் படிநிலை
கோ. ரகுபதி
ரூ. 275
பெருவெள்ளம் கேரளத்தில் (2018) விளைவித்த பேரழிவால் மலையாளிகள் 1924ஆம் ஆண்டு வெள்ளத்தை நினைவுகூர்ந்தனர். அது உண்மையென்னவென்றால், அவ்வெள்ளம் கேரளத்தைவிட தமிழகத்தையே திக்குமுக்காடச் செய்தது. மேற்குமலையில் பெய்த மாமழை அங்கு தங்காமல் பொலபொலவெனத் தரையிறங்கி பவானி, காவேரி, கொள்ளிட நதிகளில் புலியாய்ப் பாய்ந்து ஆறுகளைப் பிளந்து, பாலங்களைப் பெயர்த்து, புவியைக் கீறி, சாலையைச் சல்லி சல்லியாக்கிக் குழியையும் குவியையும் மேற்குமலையடிவாரம் தொடங்கி கிழக்குக் கடற்கரைவரை பேரழிவை விளைவித்தது. சாதிப்படிநிலைக்கேற்ப வாழிடம் கட்டப்பட்டிருந்தாலும் பெருவெள்ளம் அக்ரஹாரம் முதல் சேரிவரை வாரிச் சென்றது. இருப்பினும், படிநிலைச் சாதியம் மீண்டும் புனரமைக்கப்பட்டதை இந்நூல் விவாதிக்கிறது. சாமி சிலைகளைச் சாலைக்கு இழுத்து தமிழகத்தில் பத்தாயிரம்பேரைக் கொன்று பலரை அநாதைகளாக்கிய பெருவெள்ளத்தைப் பற்றி பிராமணர், செட்டியார், முதலியார், நாயுடு, நாயகர், சாயுபு எனப் பலரும் சிந்து பாடினர். இப்பெருவெள்ளச் சிந்துகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
பெயரழிந்த வரலாறு
அயோத்திதாசரும் அவர் கால ஆளுமைகளும்
ஸ்டாலின் ராஜாங்கம்
பாரதி, உவேசா, இரட்டைமலை சீனிவாசன், சிங்காரவேலர், ம.மாசிலாமணி, ஜி .அப்பாதுரை, மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோரோடும் அவர்தம் சிந்தனைகளோடும் அயோத்திதாசருக்கிருந்த உறவும் முரணும் முதன்முறையாக கண்டறியப்பட்டு, கண்டுகொள்ளப்படாதிருந்தவர் அயோத்திதாசர் என்ற வழமையான பார்வையை எதிர்கொண்டிருக்கிறது இத்தொகுப்பு. தற்செயலான சுவாரஸ்யம் போல பெயர் சுட்டாமல் மறைபொருளாக பயின்றிருக்கும் இந்த உறவையும் முரணையும் ஒப்பீடுகள், குறியீடுகள், மௌனங்கள் வழியாக புனைவின் நுட்பத்தோடு அலசுகிறது ஸ்டாலின் ஆய்வு நோக்கு. இந்நூல் அயோத்திதாசரை அவர் கால வரலாற்றில் வைத்து புரிந்து கொள்ள வழிகாட்டுகிறது.
பதிக மரபும் சிலப்பதிகாரமும்
கே. பழனிவேலு
ரூ. 100
கட்டமைப்பினாலும் எடுத்துரைப்பு முறையாலும் உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்றாகத் திகழும் சிலப்பதிகாரத்தின் ஆளுமை வெளிப்படாத அளவுக்கு, முன்னுரையாக எழுதப்பட்ட பதிகம் கவிந்துகொண்டு தடுக்கின்றது. பதிகம் நீண்ட காலமாகச் சிலப்பதிகாரத்துடன் இணைத்தே அறியப்பட்டுவிட்டது. ஆனால், பதிகம் ஒரு வகையான முன்னுரைதானே தவிர இலக்கியமன்று; இன்னும் சொல்லப்போனால் சிலப்பதிகாரத்தின் கருத்துக்கு எதிர்நிலையில் அது இருப்பதையும் சுட்டவேண்டியுள்ளது. இந்நூல் தமிழ்ப் பதிக மரபினையும் சிலப்பதிகாரப் பதிகத்தையும் நவீனத் திறனாய்வு நோக்கில் அணுகிப் பதிகத்தின் இயக்கத்தை வெளிப்படுத்த முயன்றுள்ளது. இன்று சிலப்பதிகாரத்துடன் இணைந்து காணப்படும் பதிகம், வெண்பா, உரைபெறு கட்டுரை முதலியவற்றைச் சிலப்பதிகாரப் பனுவலிலிருந்து பிரித்துப் புரிந்துகொள்வதற்கு இந்நூல் துணைபுரியும்.
பூதமடம் நம்பூதிரி
அ.கா. பெருமாள்
தமிழக நாட்டார் வழக்காற்றியல் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஆய்வாளரின் அனுபவப் பதிவுகளும் ஆய்வுமாக அடங்கியது இந்நூல். பண்பாட்டில் மேல் கீழ் என்பதில்லை; இப்படிப் பகுப்பதற்கான விதிமுறைகள் பிறப்பு, பணம், செல்வாக்குக் காரணமாக உருவாயின. மரபில் தொடரும் விழுமம் சாதி தாண்டி இருப்பதுண்டு. இன்றைய புரட்சிகரமான எண்ணங்கள் பழைய பண்பாட்டிலும் உண்டு. எழுத்துவடிவ வரலாற்றுச் சான்றுகளுக்கு மாறான வாய்மொழிச் சான்றுகள் பெருமளவில் தொகுக்கப்படவில்லை. இப்படிப் பல செய்திகள் அடங்கியது இந்த நூல். அ.கா. பெருமாள் எழுதிய ‘வயல்காட்டு இசக்கி’ நூலின் தொடர்ச்சி.
- பேரா. தெ.வே. ஜெகதீசன்
கவிதை நயம்
க. கைலாசபதி, இ. முருகையன்
ரூ. 125
கவிதை மிகப் பழைய இலக்கிய வடிவம்; காலந்தோறும் மெருகேறி வருவது; எதனையும் பொருளாகக் கொள்வது; வகைவகையாக அமைவது; சொற்களால் உருப்பெறுவது; கவிஞனின் தனித்திறனையும் கோருவது; வெளிப்படையாகவோ உள்ளார்ந்த நிலையிலோ ஓசை நயம் உடையது.
கவிதையை இயல்பாகச் சுவைக்கலாம். ஆனால் அதன் நுட்பத்தைக் காணவும் திறனாய்வு செய்யவும் பயிற்சி வேண்டும். பயில்வதெனில் கவிதைக்கூறுகளை அறிய வேண்டும்; அக்கூறுகள் இயைந்து நின்று கவிதையாவதை இனங்காண வேண்டும்; உண்மைக் கவிதையைப் போலியிலிருந்து பிரித்தறிய வேண்டும்.
கோட்பாட்டு மேற்கோள்களால் அச்சுறுத்தாமல், இவ்வாறெல்லாம் பேராசிரியர் கைலாசபதியும் கவிஞர் முருகையனும் கைப்பிடித்து அழைத்துச்சென்று கவிதை நயம் காட்டுகிறார்கள்.
- பா. மதிவாணன்
தமிழரின் உருவ வழிபாடு
எஸ்.ஏ.வி. இளஞ்செழியன்
ரூ. 125
கந்து எனும் மரத்தறியே ஆதியில் வழிபடப்பட்ட அரூபம். கடம்பமரக்கந்துவில் உறைந்த இறைவன் கந்தனும் கடம்பனுமானான். கந்துவழிபாடு காலப்போக்கில் மேற்கூரையுடனான அறையுடன் ‘கந்துடைப்பொதியில்’ எனப் பரிணாமம் காண, அதன் கடைசி எச்சத்தைக் கரிகால்சோழனின் காலத்தில் அறிவியலும். கந்துவின் அடுத்தப் பரிணாமமான கந்திற்பாவை; அரையரூபம் காட்டி பூதத்தாழ்வாரை உசுப்பேற்ற; “தொன்மத்தில் வெவ்வேறு வடிவம் காட்டுகிற உன்னை, அவற்றிற்கான சிற்ப வடிவங்களின் மூலம் காணப் பேராவல் மிகுத்துள்ளேன் - ஆவணசெய்” எனத் திருமாலிடம் முறையிடுகிறார். பொய்கையாழ்வாரோ “உலகளந்தமூர்த்தி உருவேமுதல்” எனத் தமிழகத்தில் முதன்முதலாக உருவத்திற்குள் நுழைந்த வடிவத்தினை ஆவணப்படுத்தியுள்ளார். இவ்வாறு ஏராளமான அரிய சிறப்புத்தரவுகளுடன் இந்நூல் தமிழரின் உருவவழிபாட்டு மரபினை விரிவாக வரலாற்றின் கோணத்தில் பேசுகிறது.
அனுபவம்
காக்கா கொத்திய காயம்
உமாஜி
ரூ. 350
‘காக்கா கொத்திய காயம்’ ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை அழைத்துச் செல்கிறது இந் நூல்.
- எஸ்.கே. விக்கினேஸ்வரன்
ஓர் ஆட்டக்கலைஞனின் பயணவழிக் குறிப்புகள்
பெ. சென்றாய பெருமாள்
சென்றாய பெருமாளின் வாழ்க்கை யதார்த்தமானது. ஏனென்றால் இந்தச் சமுதாய அமைப்பு விளிம்புநிலையில் வாழ வழியில்லாமல், வாய்ப்பில்லாமல் வாழ்வைத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாய மரபில் பிறந்தவராகப் பிறப்பு அவதாரம் எடுத்துள்ளார். அவ்வாழ்வில் வளர்ந்து தன் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்று பல்வேறு திசைகளில் பறவைகளைப்போல பறந்துகொண்டு தன் முனைவர் பட்டம் வரை வரலாற்று பாடத்தில் பறந்திருப்பது, பிற்காலத்தில் வரும் சமுதாயத்தினர் எதிர்கொள்ள தன் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்குத்தானோ என்று இப்பொழுது தான் புரிகின்றது. இந்தப் படைப்பு படிப்பவர்களை ஊக்கப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் ஒரு கூத்துக் கலைஞனின் குரலாகவும் ஒலிக்கும்.
- கி. பாஸ்கர்
சொல்லப்படாத கதை
ஆனந்தப்ரசாத்
ரூ. 350
இலங்கை, திருகோணமலையில் பிறந்த இவர் ஊரை விட்டுப் புறப்பட்டு 35 ஆண்டுகளாயிற்று. இத்தலைமுறையின் பெரும்பாலான தமிழ் இளைஞர்களைப் போல திரும்பமுடியா ஒற்றையடிப் பாதையாகி மொன்றியாலில் நிலைகொண்டு விட்டது. தன் வாழ்வின் துயரங்களையும், கேள்விகளையும், இனிமைகளையும் மிருதங்கமாக, சங்கீதமாக வீசியவர் இப்போது உரைநடையில்.
- செல்வம் அருளானந்தம், காலம் ஆசிரியர்
சொற்களில் சுழலும் உலகம்
செல்வம் அருளானந்தம்
கரித்து நிற்க காலடி மண் இல்லாமல் போன துயரை, புலம்பெயர்ந்து திசைதேடிய அலைச்சலை புகலிட வாழ்வின் திணறலை, அந்நியப் பண்பாடு ஏற்படுத்தும் அதிர்வுகளை பகடிப் புன்னகையுடனும் சமயங்களில் அங்கதப் பெரும் சிரிப்புடனும் பகிர்ந்துகொள்கிறார். அவரது சொற்களின் சுழற்சியில் நாம் காண்பது மென்னகையில் உறைந்திருக்கும் கண்ணீரின் கதைகள். குருதி பிசுபிசுக்கும் அனுபவங்கள்.
கட்டுரைகள்
திராவிட இயக்கமும் வேளாளரும்
ஆ. இரா. வேங்கடாசலபதி
திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற குற்றசாட்டை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது. திராவிட இயக்கத்தின் சமூக அடித்தளம், கருத்தியல் உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் வழிசெய்கின்றது. கிடைப்பதற்கரியஅக்கால நூல்கள், இதழ்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் முதலான ஆதாரங்களோடு வாதிடும் இந்நூல், தமிழகச் சமூக வரலாற்றுக்கும் சிந்தனை வரலாற்றுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும்.
இருபத்தைந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மறுவெளியீடு காணும் வெள்ளிவிழாப் பதிப்பு.
கி.ரா.வின் கரிசல் பயணம்
பக்தவத்சல பாரதி
கி.ரா.வின் படைப்புகளைப் பண்பாட்டுப் பனுவல்களாக எடுத்துக்கொண்டு அதில் கூறப்படும் இனத்தின் தாவரங்கள், விலங்குகள், வாழ்க்கை வட்டச் சடங்குகள், குடும்ப உறவு, விவசாயம், புழங்கு பொருட்களென எல்லாவற்றையும் மீட்டுருவாக்கியிருக்கிறார் பக்தவத்சல பாரதி.
- அ.கா. பெருமாள்
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
படைப்புகள், படைப்பாளிகள், போக்குகள்
அரவிந்தன்
ரூ. 225
சமகாலத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சலனங்களைக் கூர்மையான பார்வையோடு அணுகும் கட்டுரைகள் இவை. நூல்கள், படைப்பாளிகள், இலக்கியப் போக்குகள் ஆகியவற்றினூடே பயணிக்கும் அரவிந்தனின் அணுகுமுறை படைப்பின் ஆதார சுருதியையும் படைப்பாளுமைகளின் ஜீவனையும் ஸ்பரிசிக்க முயல்கிறது. லா.ச.ரா., அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, இமையம், ஆ.இரா. வேங்கடாசலபதி உள்ளிட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பற்றிய விரிவான அலசல்கள் இந்நூலில் உள்ளன. 1990களுக்குப் பிந்தைய நவீன இலக்கியப் போக்குகளின் முக்கியக் கூறுகளை அவற்றின் பின்புலத்தோடும் தாக்கங்களோடும் அணுகும் கட்டுரைகளும் தொகுப்பில் உள்ளன.
உடல் - பால் – பொருள்
பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு
பெருந்தேவி
ரூ. 200
# MeToo இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கும் இந்தக் கட்டுரைகள், அந்த இயக்கத்தின் சமகாலச் சிக்கல்களுடன் நிற்காமல் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு வெளிப்பாடுகள், பாலுறவில் பெண்ணின் சம்மதம், பால் அடையாளங்களின் உருவாக்கம் எனப் பல புள்ளிகளையும் தொட்டு விரிந்து செல்கின்றன. சுய சிந்தனை கொண்ட அசலான பெண்ணியப் பிரதி என்று இக்கட்டுரைகளைச் சொல்லலாம்.
கோட்பாட்டுப் புரிதலுடனும் சமூக யதார்த்தங்கள் குறித்த பிரக்ஞையுடனும் எழுதப்பட்ட காத்திரமான பெண்ணியக் கட்டுரைகளைத் தமிழில் மிக மிக அரிதாகவே காண முடிகிறது. அத்தகைய கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு தமிழுக்கு மிக அவசியமான வரவு.
- அரவிந்தன்
எது கருத்து சுதந்திரம்
கண்ணன்
இன்று உலகளவில் பொதுத்தளத்தில் விவாதத்திற்குரிய முக்கியமான விஷயமாகக் கருத்துரிமை முன்னிற்கிறது. நூல்களைத் தடை செய்வது, எரிப்பது, நூலாசிரியர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, கொலை செய்வது பரவலாக நடக்கிறது. அது மட்டுமல்ல, ஊடக வெளியில் தெரிவிக்கப்படும் எந்தக் கருத்தின்மீதும் உடனடியாக வன்மத்தையும் வக்கிரத்தையும் பிரயோகித்து வன்முறைக்கு இட்டுச்செல்லும் நடைமுறைகள் மிகுந்துள்ளன. இச்சூழலில் கருத்துரிமை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. அத்தேவையை உணர்த்தும் நூல் இது.
- பெருமாள்முருகன்
ஒரு கலைநோக்கு
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி, தன்னை பாதித்த, செயலுக்கு ஊக்கமளித்த, சிந்தனைக்கு உரமூட்டிய படைப்புகளையும் ஆளுமைகளையும் முன்னோடிகளையும் குறித்து எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒரு கலைஞனின் சமரசமற்ற நோக்கிலேயே தான் பெற்ற அனுபவத்தையும் அறிவையும் கண்டடைந்த முடிவுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
அனுபவசாரத்திலிருந்து உயிர்கொண்ட கருத்துகள். உண்மையின் சார்பில் நிற்கும் முனைப்பு. கலையில் தார்மீக மதிப்பிட்டை வலியுறுத்தும் பிடிவாதம், படைப்பின் பெருவெளிச்சத்தின் முன் அடையும் குதூகலம், மானுடக் கரிசனையின்பால் நெகிழ்வு - இவை அவரது கலைநோக்கின் அடிப்படைகள். மிகைவியப்போ, பொருந்தா உதாசீனமோ தென்படமுடியாத அந்த கலைநோக்கில் பார்க்கப்படும் ஆளுமைகளும் படைப்புகளும் மேலும் பெருமை பெறுகின்றன. நோக்குபவரும் பெருமதிப்பைப் பெறுகிறார்.
தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்
தொ - ர்: சுப்பிரமணி இரமேஷ்
ரூ. 275
சிறுகதை தொடர்பான பல ஆவணங்களையும் கட்டுரைகளையும் வாசித்துச் சுப்பிரமணி இரமேஷ் இந்நூலை உருவாக்கியுள்ளார். சிறுகதை வரலாற்றை அறிவதற்கோர் கருவியாக விளங்கும் தன்மை பெற்றுள்ளதோடு, அதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் உந்துதலையும் இந்நூல் வழங்குமென நம்புகிறேன்.
- பெருமாள்முருகன்
சக்கரவாளம்
பௌத்தம் பற்றிய குறிப்புகள்
கணேஷ் வெங்கட்ராமன்
ரூ. 325
பௌத்தம் ஒரு பெருங்கடல். தமிழ் பாலி பிராகிருதம் சமஸ்கிருதம் சீனம் ஜப்பான் திபெத் கொரியன் சிங்களம் ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. எனவே, பௌத்த நூல்களில் சேகரமாகியிருக்கும் அறிவுச் செல்வத்தைத் தொகுத்தளிக்கும் நூல்களுக்கு எப்போதும் இருக்கவே செய்கிறது. இத்தேவையையும் நியாயத்தையும் ஆழ்ந்துணர்ந்து, பௌத்த ஞானப் பிழிவாகத் தம் நூலைத் தத்துவ எளிமையுடன் கூடிய நவீன மொழியில் படைத்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.