நவம்பர் 2021
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      தவறான தகவல்களால் உருவாகும் நெருக்கடி: பாஜக வாட்ஸ்அப் குழுக்களின் பங்கு என்ன?
      மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளா?
      அறிப்படாத ஆஃப்கானிஸ்தான்
      சொர்க்க பூமி
      குர்னா என்றதும்
    • கதை
      கடைநிலை ஊழியன்
      கனா
    • சிறப்புப் பகுதி
      கரையாத உருவங்கள்
    • அஞ்சலி: நெடுமுடி வேணு (1948-2021)
      அற்புதம்
    • திரை
      ஹரிச்சந்தராவும் மகரிஷியும்
      செந்நாய்: காட்சியில் தெளிதல்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • அஞ்சலி: காயல்பட்டினம் கே.எஸ். முகம்மது ஷுஐப்
      வாசகர் எப்போதும் வாசகர் மட்டும் அல்லர்
    • புத்தகப் பகுதி
      இலை கொண்டு மரம் வரைதல்
    • மதிப்புரை
      கள்ளினும் இனிது காமம்
      தகவல்களும் உண்மைகளும்
    • கவிதைகள்
      கவிதைகள்
      ​திணறுவது
      கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      எல்லைக்கோடுகளின் முக்கியத்துவம்
    • காலச்சுவடு பதிப்பகம் 25 ஆண்டுகள் (1996-2021)
      காலச்சுவடு பதிப்பகம் 25 ஆண்டுகள் (1996-2021)
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் 2021 தலையங்கம் எல்லைக்கோடுகளின் முக்கியத்துவம்

எல்லைக்கோடுகளின் முக்கியத்துவம்

தலையங்கம்

 

எல்லைக்கோடுகளின் முக்கியத்துவம்

நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் கேரி படுகொலைகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள்மீது ஒன்றிய அமைச்சரின் மகனுடைய கார் மோதியதில் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை ஆகியவை குறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்த தகவல்களில் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், உ.பி. அரசிடம் விரிவான அறிக்கை கோரியது.

இந்த வழக்கு காவல்துறை சார்பிலோ அல்லது பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலோ தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல. உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுவருகிறது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தப் படுகொலைகள் தொடர்பான காவல்துறை விசாரணை, அரசின் நடவடிக்கை ஆகியவை போதிய வேகத்தில் நடைபெறாத நிலையில் இது குறித்து ஊடகங்கள் தீவிரமாகக் கவனம் செலுத்தின. பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. இந்தச் சூழ்நிலையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரிக்கத் தொடங்கியது. படுகொலைகளுக்கான நீதி வேண்டும் என்று குமுறியவர்களுக்கு ஓரளவேனும் ஆறுதலாக இந்த நடவடிக்கை அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனினும் விதிவிலக்கான தருணங்களில் கைக்கொள்ள வேண்டிய இத்தகைய நடவடிக்கையை நீதிமன்றங்கள் இப்போதெல்லாம் வழக்கமான செயல்முறையாக ஆக்கிவருகின்றனவோ என்னும் எண்ணமும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கடந்த ஜூலை மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நீதிபதியை டெம்போ வேன் ஒன்று பின்னாலிருந்து மோதிக் கொன்றது. இது தொடர்பாகக் காவல்துறை நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தை அணுகுவதற்கும் முன்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தையும், முன்னாள் தலைமை நீதிபதிகளையும் விமர்சித்து ட்வீட் செய்ததையடுத்து, அவருக்கு எதிராகத் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவுசெய்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீஸ் தாக்குதலில் காயமடைந்து கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரித்தது.

லக்கிம்பூர், கோவில்பட்டி முதலான வழக்குகளில் காவல்துறையும் அரசும் போதிய வேகத்துடன் நடவடிக்கை எடுக்காதபோது நீதிமன்றங்கள் தாமாகவே விசாரிக்க முன்வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பிரசாந்த் பூஷணின் விமர்சனத்தைக்கூட அந்த வகையில் வைத்து உச்ச நீதிமன்றம் அணுகுவதை எப்படிப் புரிந்துகொள்வது? நீதிபதியின்மீது வேன் ஏற்றிக் கொலைசெய்தது தீவிரமான பிரச்சினைதான். ஆனால் வேறொருவரை இதேபோலக் கொலை செய்திருந்தால் நீதிமன்றம் இதேபோன்ற நடவடிக்கை எடுத்திருக்குமா? இதுபோன்ற கொடூரமான கொலைகள் நாட்டில் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

Suo Motu எனக் குறிப்பிடப்படும் இத்தகைய வழக்குகளைத் தொடுக்க அரசியல் சட்டம் நீதிமன்றங்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறது. ஆனால் சட்டத்தைப் பொறுத்தவரை Letter and Spirit என்று சொல்லப்படும் சொல்லும் அதன் மெய்ப்பொருளும் அல்லது ஆழ்ந்த நோக்கமும் மிகவும் முக்கியம். தாமாக முன்வந்து வழக்குத் தொடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை இருக்கிறது. ஆனால் விதிவிலக்காகப் பயன்படுத்த வேண்டிய உரிமை இது.

சட்டம் இயற்றும் மன்றங்கள், காவல்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகம், நீதிமன்றங்கள் ஆகியவை ஜனநாயக அமைப்பில் மிக முக்கியமான மையங்கள். இவற்றின் உரிமைகளும் வரையெல்லைகளும் அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. குழப்பம் நேரும்போது நீதிமன்றங்களில் நடக்கும் விவாதங்களில் தெளிவுபெறுவதும் புதிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதும் விவாதங்களின் அடிப்படையில் புதிய மரபுகள் உருவாவதும் உயிரோட்டமுள்ள ஜனநாயகத்தின் செயல்முறைகள். மூன்று தரப்பினருமே இந்த எல்லைகளை மதித்து நடந்துகொள்வதே ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீதிமன்றத்தில் அரசு சார்பில் வாதிடும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட சில பிரச்சினைகள் அரசின் கொள்கை சார்ந்தவை என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் பணிவுடன் தெரிவித்திருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் நீதிமன்றம், எந்தக் கொள்கையும் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று நினைவுபடுத்தியிருக்கிறது. அப்படி மீறினால் அதில் தலையிட்டு அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை நீதித்துறைக்கு இருப்பதையும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

காவல்துறையும் அரசு நிர்வாகமும் மெத்தனம் காட்டுவது பல்வேறு வழக்குகளில் நாம் பார்த்துவரும் யதார்த்தம். இத்தகைய மெத்தனங்கள் அரங்கேறும்போதெல்லாம் நீதிமன்றம் தானாகவே முன்வந்து தலையிடத் தொடங்கினால் நீதிமன்றங்கள் காவல் நிலையங்களின் நீட்சியாகவே அமையும். லக்கிம்பூர் கேரியில் நடந்த கொலை பொதுப்புத்தியில் ஏற்படுத்திய அதிர்வுக்கும் நீதிமன்றத் தலையீட்டிற்கும் இடையில் நிரூபிக்கப்பட முடியாத, ஆனால் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய தொடர்பு இருக்கிறது. இதுபோன்ற தருணங்களில் இத்தகைய தலையீடுகள் பாதிக்கப்பட்டோரின் புண்பட்ட மனங்களுக்கும் பொதுமக்களின் அதிர்ச்சிக்கும் ஆறுதலாக அமையும் என்னும் விதத்தில் இவை தேவைதாம். ஆனால் இதேபோன்ற வேறொரு நிகழ்வில் நீதிமன்றம் மக்களின் அதிர்ச்சியை உள்வாங்காமல் இருக்கலாம்; அந்த நிகழ்வு அலட்சியத்தின் நிழலில் மறைந்துபோகலாம். இதன் மறுபக்கமாக, பொதுமக்களுக்கோ பொதுச் சூழலுக்கோ தொடர்பற்ற சில நிகழ்வுகளில் – எடுத்துக்காட்டாக பிரசாந்த் பூஷணின் விமர்சனம் – நீதிமன்றத்துக்குக் கோபம் வரலாம். இவையெல்லாம் குறிப்பிட்ட நீதிபதிகளின் விருப்பு வெறுப்பு, அவர்களுடைய கண்ணோட்டம் ஆகியவை தொடர்பானதாக இருப்பதால் இவற்றில் சீர்மையான அணுகுமுறை இருக்க வாய்ப்பில்லை. இதுதான் இதுபோன்ற தலையீடுகள் குறித்த எச்சரிக்கை மணியை ஒலிக்கச்செய்கிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கிடையே நீதிமன்றம் தானாக முன்வந்து தலையிட மறுத்த வழக்கொன்று முக்கியத்துவம் பெறுகிறது. மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஒட்டி நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்காக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்த சூர்யாமீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

சூர்யாமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே. சந்துரு, கே.எம். பாஷா, டி. சுதந்திரம், டி. ஹரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பினார்கள். சூர்யாவின் கருத்து எந்தப் பின்னணியில் வந்தது என்பதையும் சூர்யாவின் பொதுநலப் பணிகளையும் கருத்தில் கொண்டு பெருந்தன்மையாக இதை விட்டுவிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தார்கள்.

இது குறித்துத் தமிழக அட்வகேட் ஜெனரலிடம் நீதிமன்றம் கருத்து கோரியது. நடவடிக்கை தேவையில்லையென அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவமதிப்பு வழக்கு யோசனையை நீதிமன்றம் கைவிட்டது. “தன்னளவில் சரியாக நடந்துகொள்வதாகக் கூறும் சூர்யா போன்றவர்கள் நீதித்துறைமீது விமர்சனங்களை வைப்பதற்கும் முன்பாக அது நியாயமானதா, இல்லையா என்று யோசித்துப்பார்க்க வேண்டும்” என்று தெரிவித்ததோடு நிறுத்திக்கொண்டது. நீதிமன்றத்தின் பெருந்தன்மையையும் மாண்பையும் பாராட்டி, தன்னுடைய அறிக்கைக்கு விளக்கம் அளித்து சூர்யா ட்விட்டரில் பதிவிட்டதோடு இந்த விவகாரம் முடிந்தது.

லக்கிம்பூர் கொலை போன்ற சிக்கல்களுக்கு இதேபோன்ற நடைமுறை பொருந்தாமல் போகலாம். ஆனால் எத்தகைய தருணத்திலும் இத்தகைய நடவடிக்கை ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு எடுக்கும் விதிவிலக்கான நடவடிக்கையாகவே இருக்க வேண்டும். சட்டம் இயற்றும் மன்றங்கள், அரசு நிர்வாகம், நீதிமன்றம் ஆகிய ஜனநாயகத்தின் மூன்று முக்கியக் கூறுகளும் தத்தமது எல்லைகளை மீறாதிருப்பது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்னும் அளவில் இந்தக் கோடுகளை மதிக்க வேண்டும்.

நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் போன்றோரை நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்துவது சிலருக்கு உவப்பை அளிக்கலாம்; சிலருக்கு அதுவே வெறுப்பையும் அளிக்கும். இத்தகைய எதிர்வினைகளின் அடிப்படையில் அரசியல் சட்டச் சிக்கல்களை அணுக முடியாது. அரசை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் தங்களுக்கு உள்ள உரிமையை நீதிமன்றங்கள் கவனமாகவும் விவேகமாகவும் பயன்படுத்தும்வரைதான் அவற்றுக்கு மதிப்பு இருக்கும்.

பிரசாந்த் பூஷண் விவகாரத்தில் நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை பரவலான விமர்சனத்தைப் பெற்றது. லக்கிம்பூர் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கை பாராட்டைப் பெற்றது. இதில் இரண்டாவது இயல்பானதும் நியாயமானதும் என்பதில் ஐயமில்லை. ஆனால் லக்கிம்பூர், சாத்தான்குளம் போன்ற விவகாரங்களிலும் நீதிமன்றங்கள் மேலும் நிதானமாகவும் விவேகமாகவும் நடந்துகொள்வதே அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைக் காப்பாற்றுவதற்கு உதவிபுரியும்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.