தவறான தகவல்களால் உருவாகும் நெருக்கடி: பாஜக வாட்ஸ்அப் குழுக்களின் பங்கு என்ன?
தவறான தகவல்களால் உருவாகும் நெருக்கடி
பாஜக வாட்ஸ்அப் குழுக்களின் பங்கு என்ன?
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே சமூக ஊடகங்களில் ஏற்கெனவே கவலைக்குரியதாக இருக்கும் ஒரு போக்கினைத் தவறான தகவல் தரும் போக்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது. வைரஸ் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது அல்லது வைரஸ் பரவலை அதிகரிக்கச்செய்ய சிறுபான்மைக் குழுக்கள் சதி செய்கின்றன என்பதுபோன்ற கூற்றுகள் பரவலாகக் காணப்படுகின்றன. உடனடி நிவாரணம் அளிக்கும் அற்புதச் சிகிச்சை முறைகள் குறித்த பரிந்துரைகளும் இணையவெளியில் கொட்டிக் கிடந்தன. செய்திகளின் உண்மைத்தன்மையைப் பரிசோதித்து உறுதிப்படுத்துவோர் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையிலான போலி நிவாரணங்கள் தொடர்பான செய்திகளைப் பொய்யானவை என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.
தவறான தகவல்களால் இதர நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து இந்திய நெருக்கடி மாறுபட்டது. பின்புலம் சார்ந்த காரணிகள் இதற்கு ஒரு காரணம். இந்தியாவில் கல்வியறிவும் இணைய அறிவும் ஒப்பீட்டளவில் குறைவு. ஆனால் தொழில்நுட்ப ரீதியாகவும் ஒருதலைப்பட்சமாகவும் எழும் வேறுபாடுகளால் இது நடந்திருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் தவறான தகவல்கள் பெரும்பாலும் - கோவிட்19 குறித்த தவறான தகவல்கள் உள்பட - இணைய உலகில் அமைப்புரீதியாகக் கூடுதலான வலிமை பெற்றிருக்கும் ஆளும் பாஜக கட்சியினர் நிர்வகிக்கும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பரப்பப்படுகின்றன.
செய்தியைப் பரப்பும் இந்த முறை கூடுதல் கேள்விகளை எழுப்புகிறது. முதலாவதாக இந்திய வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பரவும் தவறான தகவல்களில் பெரும்பாலானவை ஒருதலைப்பட்சமான குழுக்கள் மூலம்தான் பரவுகின்றனவா? இரண்டாவதாக இந்தக் குழுக்களில் பகிரப்படும் உள்ளடக்கத்தில் தவறான தகவல்களின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இதன் மூலகாரணமாக இருக்கக்கூடிய, மேலும் பொருள் பொதிந்த கேள்விக்கு நம்மை இட்டுச்செல்கின்றன. இந்தக் குழுக்களின் செய்தித் திரிகள் மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களைப் பெறுவதன் அரசியல் ரீதியான விளைவுகள் என்ன? வாட்ஸ்அப் மூலம் பரவும் தவறான அரசியல் தகவல்கள் கூட்டுவன்முறையுடனும் வாக்காளர்களிடம் ஏற்படும் மாற்றங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. கோவிட்19 குறித்த தவறான தகவல்கள் இணையத்துக்கு வெளியிலும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. நாட்டில் சில குழுக்கள் வைரஸை வேண்டுமென்றே பரப்புகின்றன என்னும் வதந்திகள் கூட்டு வன்முறையைத் தூண்டக்கூடும். அற்புத சிகிச்சை முறைகள் குறித்த உரிமை கோரல்கள் முறையான அறிவியல் வழிகாட்டுதல்களைச் சிலர் புறக்கணிக்க வழிவகுக்கக் கூடும்.
இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் முறையான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட பதில்களை வழங்கச் சமூக விஞ்ஞானிகளுக்குப் போதுமான தரவுகள் இல்லை. எனவே இந்தக் குழுக்களின் உத்தேசமான தாக்கத்தைப் பற்றிய மிகையான சொல்லாடல்களிலிருந்து யதார்த்தத்தைப் பிரித்துப் பார்க்கப் பல கோட்பாட்டு ரீதியான அனுமானங்களை முன்வைக்கலாம்.
முதலாவதாக இந்தியாவில் தவறான தகவல்களை உருவாக்குவதிலும் பரப்புவதிலும் (குறிப்பாக கோவிட் தொடர்பான தகவல்கள்) பாஜக குழுவினரின் ஒப்பீட்டளவிலான முக்கியத்துவம் என்ன? இந்தக் கேள்விக்கு முறையான விடைகாண வேண்டுமென்றால் இந்தியர்கள் தங்கள் தொலைபேசிகள் மூலம் தொடர்பில் இருக்கும் குழுக்களின் (ஒருதலைப்பட்சமானவையும் அவ்வாறு இல்லாதவையும்) பன்முகத்தன்மை குறித்த விரிவான அலசலை மேற்கொள்ள வேண்டும். குழுக்கள் தனிப்பட்ட முறையிலானவை ஆனதால் இந்த அலசலை மேற்கொள்வது மிகவும் கடினம் என்றாலும் தற்போது கிடைக்கும் தகவல்களை வைத்துக் காத்திரமான சில யூகங்களைச் செய்யலாம். ஒருதலைப்பட்சமான குழுக்களின் திரிகளில் தவறான தகவல்கள் உள்ளன. எனவே இவை மெய்யான அபாயத்தைக் கொண்டவை.
ஆனால் இந்தியர்கள் வாட்ஸ்அப் மூலம் பெறும் (பெரும்பாலான) தவறான தகவல்கள் பாஜக குழுக்களிடமிருந்து - அல்லது அக்குழுக்களின் வாயிலாக வருகின்றன என்று சொல்லிவிடுவது சாத்தியமல்ல. நம்மில் பெரும்பாலோர் குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள் போன்ற இதர குழுக்கள் வழியாகவும் பெருமளவில் தவறான தகவல்களைப் பெறுகிறோம். இவற்றில் சில பாஜக சார்பிலான நம்பிக்கைகளைக் கொண்டவையாகத் தோன்றினாலும் பெரும்பாலானவை அப்படியல்ல. உலகின் பிற இடங்களைப் போலவே இந்தியாவிலும் மக்கள் தவறான தகவல்களை நம்புவதற்கோ பகிர்ந்துகொள்வதற்கோ கட்சிகளின் தலையீடு எதுவும் தேவையில்லை. தன்னளவிலேயே தவறான தகவல்களை நம்பவைப்பதற்கான ஆற்றலைக் கொண்டது சமயம். எடுத்துக்காட்டாக, கோவிட் 19 தொடர்பான தகவல்களை நம்புவதில் பாஜக ஆதரவைக் காட்டிலும் சமயப் பற்று கூடுதலான பங்காற்றுவதை சுமித்ரா பத்மநாபனும் நானும் மேற்கொண்டுவரும் ஆய்வு காட்டுகிறது. இந்நிலையில் கோவிட் தொடர்பான தகவல்களைப் பரப்புவதில் பாஜகவினர் அவ்வப்போது பங்களித்தாலும் இவை பரவுவதற்குக் கட்சி சார்ந்த தகவல் திரிகளை மட்டுமே குறைசொல்ல முடியாது.
இந்தக் குழுக்களின் செய்தித் திரிகளில் தவறான தகவல்கள் எந்த அளவுக்குப் பொதுவான அம்சமாக இருக்கின்றன? இந்தத் திரிகள் பற்றி முன்வைக்கப்படும் மிகையான சில கூற்றுகளுக்கு எதிராகவே இவ்விஷயத்திலும் என் அனுமானம் இருக்கிறது. இவற்றில் சில தகவல்கள் இருக்கின்றன; கோவிட் தொடர்பான தவறான தகவல்களும் நிச்சயமாக அதில் இருக்கின்றன. ஆனால் பாஜக வாட்ஸ்அப் குழுக்கள் இத்தகைய உள்ளடக்கத்தால் ‘நிரம்பியிருக்கின்றன’ என்று சொல்வது தவறாக இருக்கக்கூடும். உண்மையில் பாஜக குழுக்களில் ஒப்பீட்டளவில் குறைவான அளவிலேயே தவறான தகவல்கள் இடம்பெறுகின்றன. விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் ஒட்டுமொத்த அளவில் இது சிறிய பகுதிதான். இந்தக் குழுக்கள் பிறவகையான உள்ளடக்கத்தையும் அதிக அளவில் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம். பல்வேறு பிரச்சினைகள் குறித்த ‘சட்டபூர்வமான’ கட்சிப் பிரச்சாரங்கள், பிற வகையிலான கட்சி சார்ந்த செய்திகள் (கட்சித் தொண்டர்களின் தற்படங்கள், அரசியல் தலைவர்களுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்கள்) ஆகியவை இவற்றில் உள்ளன. ஏற்கெனவே ஆதரவாளர்களாக அல்லது உறுப்பினர்களாக இருப்பவர்களை ஒருங்கிணைப்பதற்காக இவை உருவாக்கப்படுகின்றன.
கட்சிசார்ந்த இந்தக் குழுக்களின் உள்ளடக்கம் முற்றிலும் அரசியல் சாராத வகையிலும் அமைகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மதத் தலைவர்கள் தொடர்பானவையாக உள்ளன. இந்த உள்ளடக்கத்தின் பெரும்பகுதி கட்சி அல்லது மதம் சாராததாகவும் உள்ளது. இவற்றைப் பொழுதுபோக்கு என்று எளிதாக வகைப்படுத்தலாம். பாஜக குழுக்களில் நகைச்சுவைத் துணுக்குகள், பாடல்கள், உள்ளூர்ச் செய்திகள், ஏன் விளம்பரங்களும் கூடக் காணக் கிடைக்கின்றன. வாட்ஸ்அப் ஒப்பீட்டளவில் கிடைமட்ட அமைப்பைக் கொண்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை . வாட்ஸ்அப் குழுக்களின் நிர்வாகிகளால் தமது குழுக்களில் பதிவிடப்படும் உள்ளடக்கத்தை எளிதாகத் தடுத்துவிட முடியாது. எனவே இந்தக் குழுக்களில் காணப்படும் தவறான தகவல்களில் (இதர பல்வேறு செய்திகளுக்கு நடுவில்) பெரும்பாலானவை தவறான தகவல்களே அல்ல என வாதிடலாம்.
இந்தக் குழுக்கள் வழியாகப் பரப்பப்படும் உள்ளடக்கத்தின் குழப்பமான தன்மை மேலே குறிப்பிடப்பட்ட மூல காரணம் சார்ந்த கேள்விக்கு - இந்தத் தவறான தகவல்களின் விளைவுகள் என்ன என்னும் கேள்விக்கு - விடையளிக்கிறது. பாஜக குழுக்களாலும் பொதுவாக வாட்ஸ்அப் குழுக்களாலும் பரப்பப்படும் தவறான தகவல்கள் ஆபத்தானவைதானா என்னும் கேள்வியை இது நமக்குள் எழுப்பும். பயனர்கள்மீது தவறான தகவல்களை மழையாகப் பொழிவதால் அல்ல, இந்தத் தகவல்கள் சாதாரணமானவையாகத் தோற்றமளிக்கும் உள்ளடக்கங்களுக்கு நடுவே தூவப்படுவதுதான் இதற்குக் காரணம். இந்த இதர உள்ளடக்கம் பயனர்களிடம் குழுசார்ந்த உணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த உதவினால் இவற்றினூடே பகிரப்படும் தவறான தகவல்களின் விளைவு அதிகமாக இருக்கும். பொறுமையாகக் கட்டி எழுப்பப்பட்ட, நம்பிக்கை வாய்ந்த இணையக் குழுவினரிடம் தேர்ந்தெடுத்த தவறான தகவல்களைப் பரப்பும் திறமையைக் காட்டிலும் மிகக் குறைவான செலவில் பெருமளவிலான தவறான தகவல்களைப் பரப்புவதில் அவர்களுக்கு இருக்கும் திறமையைப் பொறுத்தே அனுமதி கட்டுப்படுத்தப்பட்ட விவாதக் குழுக்களின் தாக்கமும் ஆற்றலும் இருக்கின்றன.
தவறான தகவல்கள் அடிக்கடி வந்து அவை மிகவும் இயல்பாகிவிட்டால் பயனர்களின் நடத்தையில் அவை எந்த விளைவையும் ஏற்படுத்தாது; அவை அரிதாகவும் நம்பிக்கையை உருவாக்கக்கூடிய விதத்திலும் முன்வைக்கப்படும் போது விளைவுகளை ஏற்படுத்துவதையே இவை குறிப்புணர்த்துகின்றன. ஆனால் அப்படி அனுப்பப்படும் தவறான தகவல்கள் பயனரின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்கத்தான் வேண்டுமா? கோவிட்19க்கான அதிசய சிகிச்சையைப் பரிந்துரைக்கும் செய்தியைப் படிப்பவர்களில் எத்தனைபேர் அதைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள் அல்லது அதைப் பயன்படுத்தி இதர மருத்துவ வழிமுறைகளைப் புறக்கணிப்பார்கள்?
இந்தத் தகவல்கள் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடியவை என்று நிரூபிப்பதற்கான நம்பகமான தடயம் எதுவும் எம்மிடம் தற்போது இல்லை என வாசகர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய தடயம் கிடைக்காதவரை கூடுதல் ஆய்வு தேவைப்படும் விடையற்ற கேள்வியாகவே இது இருக்கும். உடல்நலம் தொடர்பான தவறான தகவல்களின் விளைவுகளை அறிவியல்ரீதியாக அளவிட நம்மால் முடிந்தாலும் இத்தகைய விளைவுகளை நம்மால் கண்டுபிடிக்க இயலுமா என்ற தெளிவு இல்லை. பொதுவாகச் சொல்வதானால், வாட்ஸ்அப்பின் தாக்கம் பலரும் சொல்வதைக் காட்டிலும் குறைவாகவே இருக்கக்கூடும். வலிமைவாய்ந்த பாஜக குழுக்கள் மக்களின் மனங்களை மாற்றுகின்றன என்னும் கதையாடல் கட்சியின் நலன்களுக்குக் கச்சிதமாகத் துணைபுரிகின்றன. தாங்கள் உருவாக்கிய இணைய ராணுவம் அல்லது வாட்ஸ்அப் இயந்திரங்கள் குறித்துக் கட்சித் தலைவர்கள் (இவர்களில் அமித் ஷா முன்னணியில் இருக்கிறார்) மார்தட்டிக்கொள்கிறார்கள். அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் கட்சி, எதிர்க்கட்சிகளின் தைரியத்தைக் குலைப்பதற்காக, வெல்ல முடியாத சக்தியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளவே விரும்பும் என்னும் பின்னணியில் இதைப் பார்க்க வேண்டும்.
இந்த வலைப்பின்னல்கள் எதிர்க்கட்சிகளின் வலைப் பின்னல்களைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்துவிட்டன. ஆனால் பாஜக தலைவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இவை அபாரமான ஆற்றல் வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கவில்லை. எளிமையாகச் சொன்னால் அரசியல் உளவியல், அரசியல் தகவல் தொடர்பு, விளம்பரம் ஆகியவை குறித்த எழுபதாண்டுக் கால ஆய்வுகள் பொதுவாக முன்வைக்கும் கருத்துக்கு - இயல்பான செயல்முறையைக் காட்டிலும் தொடர்ச்சியான தூண்டுதல் வலிமை வாய்ந்தது என்னும் கருத்துக்கு - எதிராகவே இந்த முடிவு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் இதேபோன்ற கேள்விகள் குறித்து நடந்துள்ள ஆய்வுகள் இணையத்தில் உலாவும் தவறான தகவல்களின் விளைவுகள் பெருமளவில் மிகைப்படுத்தப்பட்டவை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றன. சமூக வலைதளங்களில் இத்தகைய உள்ளடக்கத்தைப் பெறுபவர்கள் ஏற்கெனவே அத்தகைய கருத்துகளை நம்புபவர்கள் என்பது இதற்கு ஒரு காரணம். நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் குறைவான நபர்களே இந்தச் செய்திகளை முறையாக அலசுகிறார்கள் என்பது இன்னொரு காரணம்.
இந்தியாவில் கோவிட்19 தொடர்பான தவறான தகவல்களுக்கும் இதே தர்க்கம் பொருந்தும் என்று கருதுவது பொருத்தமானது. சமூக வலைதளங்கள் மூலம் பரவும் இந்தச் செய்திகள் பல்வேறு காரணங்களால் மிகச்சிறிய அளவிலான நபர்களிடத்தில் மட்டுமே தாக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தகவல்களைப் பலரும் முழுமையாகப் பரிசீலிப்பதோ தீவிரமாக எடுத்துக்கொள்வதோ இல்லை. இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஏற்கெனவே பல விதங்களில் இந்தத் தகவல்களைப் பெற்றுவிடுகிறார்கள். இந்நிலையில், கோவிட்19 தொடர்பாக பாஜக வாட்ஸ்அப் குழுக்கள் ஆற்றும் வினோதமான பங்கு இந்தியாவின் நிஜமான சவால் அல்ல. இதைக் காட்டிலும் பிரச்சினைக்குரியதொரு உண்மையே அந்தச் சவால். பாஜக தலைவர்கள் பல ஆண்டுகளாக அறிவியல் சார்ந்த தவறான தகவல்களை உரத்த குரலில் வாட்ஸ்அப்பிலும் இதர வழிகளிலும் முன்வைத்து வருகிறார்கள்; இதுதான் நிஜமான சவால்.
சைமன் சவுச்சார்த்: லீடன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் துணைப் பேராசிரியர்.
இக்கட்டுரை முதலில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இந்திய உயராய்வு மையத்தின் ‘மாறிவரும் இந்தியா’ என்னும் பிரிவில் (India in Transition, a publication of the Center for the Advanced Study of India, University of Pennsylvania) பிரசுரமானது. பல்கலையின் ஒப்புதலோடு இங்கு பிரசுரம் பெறுகிறது.
https://casi.sas.upenn.edu/sites/default/files/uploads/%28Tamil%29%20India%E2%80%99s%20Misinformation%20Crisis_What%20Role%20Do%20BJP%20WhatsApp%20Groups%20Really%20Play%20-%20Simon%20Chauchard_0.pdf