தமிழர் இனவாதம்
இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குப் பிழைப்புத் தேடி வரும் தொழிலாளர்களை முன்னிருத்தி விவாதங்கள் உருவாகியிருக்கின்றன. உணவகங்கள், சந்தைகள், கட்டுமானப் பணிகள் என உடல் உழைப்புசார் பணிகளில் வடமாநிலத் தொழிலாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இவர்களின் வரவால் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. அவர்கள் வன்முறை, திருட்டு, கொள்ளை, பாலியல் வன்புணர்வுக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பனபோன்ற குற்றச்சாட்டுகளும் மேலெழுந்து வருகின்றன. கூடவே அவர்கள்மீதான காழ்ப்பும் வன்மமும் பொதுவெளியிலும் சமூக ஊடகத் தளங்களிலும் அதிகரித்திருக்கின்றன. ‘வடக்கன்ஸ்’, ‘பீடா வாயன்’, ‘பான்பராக் வாயன்’ போன்ற இழிசொற்களும் பரவலாகிக்கொண்டிருக்கின்றன. சாமானிய மக்களிடமிருந்து மட்டுமின்றி அறிவுஜீவிகளாக அறியப்படுவோரிடமிருந்தும் இத்தகைய குரல்கள் எழுகின்றன. இவர்கள் இனவாதக் கருத்துகளைச் கூச்சமின்றி மட்டுமல்ல பெருமித உணர்வுடனும் சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர்.
வடமாநிலத் தொழிலாளர்களின் வருகையைப் பொருளாதாரப் புலம்பெயர்வு என வரையறுக்கலாம். இத்தகைய புலம்பெயர்வுகள் காலங்காலமாக நடந்துவருபவைதாம். முன்னர் தமிழர்களும் தொழில் வாய்ப்புகளுக்காகக் கேரளம், பெங்களூர், மும்பை போன்ற இடங்களுக்குப் பெருமளவில் சென்றதுண்டு. இந்தியாவில் சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருமானம் போன்றவற்றில் வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் இன்று தமிழ்நாடு வளமடைந்திருக்கிறது. வளமான பிரதேசத்திற்கு மக்கள் புலம்பெயர்வது இயல்பான சமூக இயக்கம்தான். இந்தியா பல்லின, மத, கலாச்சாரப் பன்மைகளை உள்ளடக்கிய ஜனநாயக நாடு. இந்தியக் குடிமக்கள் நாட்டின் எந்தப் பாகத்திலும் குடியேறலாம், வணிகம் செய்யலாம், கண்ணியத்துடனும் சுதந்திரத்துடனும் வாழலாம். இது அரசியல் சட்டரீதியான உரிமை.
சட்டத்திற்கு உட்பட்டுத் தமிழகத்துக்கு வந்து பணிபுரியும் வட மாநிலத்தவர்களின் கண்ணியத்துக்கு ஊறு செய்வது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. வடவர்களால் தமிழர்களின் இருப்புக்கும் நிலையான வாழ்வுக்கும் ஆபத்து ஏற்படும் என்னும் கருத்து சிக்கலானது. தரவுகளின் அடிப்படையின்றி உணர்ச்சியின் மொழியில் பரப்பப்படுவது. ‘அன்னியர்கள்’ தொடர்பான பொதுப்புத்தியில் ஊறிய அச்சத்தின் வெளிப்பாடாகவே இந்தக் கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகாரமற்ற இந்தத் தொழிலாளர்களின் மீதான அச்சம் தேவைதானா என்னும் கேள்வியைத் நாம் எழுப்பிக்கொள்ள வேண்டும். அச்சம் கொள்வதற்கான நியாயம் ஒருவேளை இருந்தாலும் அதற்கான எதிர்ப்பு இன வெறுப்பாக வெளிப்படுவதிலுள்ள விபரீதம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.
தமிழர்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் உலகின் பல நாடுகளுக்கும் பொருளாதாரக் காரணங்களால் புலம்பெயர்ந்த அனுபவம் கொண்டவர்கள். அதன் காரணமாகப் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளானவர்கள். தொடர் அரசியல் போராட்டங்களைச் செய்து சமவாய்ப்பு, சமத்துவத்திற்காகப் போராடியவர்கள். இந்தப் பின்புலத்துடன் வடமாநிலத் தொழிலாளர்களின் வருகையை அணுகி, அவர்களுக்கு எதிரான இனவாத வெறுப்புப் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மொழி, இனப் பெரும்பான்மையினராக வாழும் தமிழர்கள் இங்கு வரும் வடமாநிலத்தவரைக் கண்டு பதற்றமடைவது கவலையளிக்கக்கூடியது. இலங்கையில் சிங்களவர்களின் வேலைவாய்ப்புகள், கல்வி ஆகியவற்றில் தமிழர்கள் தாக்கம் செலுத்துகிறார்கள், எனவே சிங்களவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற வெறுப்புப் பிரச்சாரம் இறுதியில் தமிழின அழித்தொழிப்பில் கொண்டு நிறுத்தியது. யூதர்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரமும் இனத் தூய்மைவாதமும் கொலைக்களத்தை உருவாக்கின. அதே இலங்கையில் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு இலக்கான முஸ்லிம் இயக்கங்கள் கிறிஸ்தவர்களைப் ‘பிற’ராகக் கருதியதன் வெளிப்பாடாக ‘உயிர்த்த ஞாயிறு’ படுகொலை அரங்கேறியது. இலங்கைப் பொதுவெளிகளில் முஸ்லிம்கள் மேலும் தனிமைப்படுத்தப்படுவதற்கே இது வழிவகுத்தது. ஒருகாலத்தில் முதலில் தமிழர்களுக்கு எதிராகவும் பின்னாளில் வடமாநிலத்தவருக்கு எதிராகவும் மகாராஷ்டிரத்தில் சிவசேனை முன்னெடுத்த இனம் சார்ந்த வெறுப்புக் குரல்களையும் மறந்துவிட முடியாது.
புலம்பெயர் தொழிலாளர்களை இழிபிறப்பெனக் காண்பது இனவாதக் கண்ணோட்டத்தின் கூறு. இனவாதக் கண்ணோட்டம் ‘தான் - பிற’ என்கிற இருமையை உற்பத்தி செய்கிறது. இந்தக் கண்ணோட்டம் தான் அல்லாத பிறவற்றைச் சமூக நீக்கம் செய்து, அதன்மீது வன்மத்தை உருவாக்கிப் பின் மனித மாண்பைச் சீர்குலைக்கும் அழித்தொழித்தல் பண்பைத் தன் கருவுக்குள் கொள்வதாக மாறும். அந்தக் கருத்தியல் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள மற்றமைகள் மீதான வெறுப்பை முதலில் உருவாக்குகிறது. அழித்தொழித்தல், அதன் தர்க்க ரீதியான நீட்சி.
குறிப்பிட்ட இனத்தவர்மீதான இழிவான பார்வை, இளக்காரம், வெறுப்பு ஆகியவற்றின் வேர்கள் தன்னுடைய இனம் சார்ந்த மேட்டிமைத்தனத்திலிருந்தும் கற்பனையான பாதுகாப்பின்மையிலிருந்தும் பிறக்கின்றன. வடக்கத்திய ஊடகங்களும் திரைப்படங்களும் தமிழர்களை இழிவாகச் சித்திரிப்பது குறித்த கவலை தமிழர்களுக்கு இருந்ததுண்டு. ஆனால் தமிழர்களும் பிறர் சார்ந்து இதே மனப்பான்மையை வெளிப்படுத்துவதையும் சமகால வரலாறு பதிவுசெய்துவருகிறது. தன்னுடைய இனம், வரலாறு ஆகியவை குறித்த வரலாற்றுப் பெருமிதங்கள் நிரம்பிய தமிழ் மனம் பிறரைக் குறைவாக நினைக்கத் தலைப்படுவதைப் பார்த்துவருகிறோம். தமிழ்த் திரைப்படங்களில் அதற்கான அடையாளங்கள் கிடைக்கின்றன. எச். வினோத் இயக்கத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்னும் படத்தில் ராஜஸ்தான் கிராமத்து மக்களைச் சித்திரித்திருக்கும் விதம் இதற்கான ஒரு சான்று. தமிழ்ப் படங்களில் வடக்கத்திய இஸ்லாமிய வணிகர்கள் குறித்த சித்திரிப்புக்களையும் மார்வாடி வர்த்தகர்கள் பற்றிய சித்திரிப்புக்களையும் இத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். இவை யாவும் தமிழ்ப் பொதுமனத்தின் வெளிப்பாடுகளே.
பிறவாகக் கருதப்பட்டு வன்மத்திற்கு இலக்காகும் இஸ்லாமிய, தலித் அறிவுஜீவிகளும் வடக்கத்தியர்களுக்கு எதிரான இழிவுபடுத்தல்களில் இணைந்துகொள்வது கவலைக்குரிய முரண். தங்களுக்கு நேரும் இழிவு பிறருக்கு நேரக் கூடாது, அதுவும் தங்களால் நேரக் கூடாது என்னும் உணர்வின் இன்மையிலிருந்தே இத்தகைய போக்கு உருவாகும்.
உலகத்தில் இருக்கும் ஒவ்வோர் இன, மத, கலாச்சாரக் குழுவும் ஏதோவொரு விதத்தில் தம்மை உயர்ந்தவர்களாகக் கருதுகிறது. கூடவே மற்றோர் இனம் தாழ்ந்தது எனவும் கருதுகிறது. இந்த மனநிலையே சக மனிதர்மேலான வெறுப்பாகக் கொளுந்துவிட்டு எரிந்து தன்னையும் எரித்துக்கொள்கிறது. தமிழர்களிடத்தில் இத்தகைய இனவாதக் கண்ணோட்டம் கூர்மையடைவதற்கான வேர் இலங்கை ஈழப் போராட்டத்தின் காலகட்டத்திலிருந்து தொடங்குகிறது என்று கொள்ளலாம். அவ்வினவழிப்புக்குப் பிந்தைய கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழ் இனமொழி ஓர்மை சற்று அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. தமிழ்த் தேசிய இயக்கங்களின் முன்னெடுப்புகள் போரின் இறுதிக் காலத்திலிருந்து பாதிக்கப்பட்ட தரப்பின் உரிமைக் குரலாக வெளிப்பட ஆரம்பித்தன. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் தலைவர் மரணமடைந்ததோடு தமிழகத்திலும் தமிழர்கள் வாழக்கூடிய புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்த் தேசியக் கருத்தியலை முன்னெடுக்கும் இயக்கங்கள் பல உருவாயின. இவை இனத் தூய்மைவாதத்தையும் முன்மொழிந்தன.
புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் கறுப்பினத்தவர், அரேபியர்களை இன அடிப்படையில் இழிவுபடுத்தி இழிபெயர்கள் சூட்டி ஒதுக்கும் போக்கை புலம்பெயர் தமிழர்கள் பலர் கைகொள்கின்றனர். இனஅடிப்படையில் தங்கள் தாய்நாட்டிலேயே இழிவுபடுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட அனுபவத்திலிருந்து பாடம் கற்று மனவிரிவு கொள்ளாதிருப்பதையே இது காட்டுகிறது. தமிழகத்திலும் இனவாத இயக்கங்கள் வெளிப்படையாகப் பொதுவெளிக்கு வர ஆரம்பித்தன. அவ்வாறு வந்த இயக்கங்களின் எதிரியாகச் சிங்கள மக்களும் அந்த அரசும் இருந்தார்கள். பிரச்சினைகள் இருந்தால்தான் இயக்கங்களுக்கான தேவையும் இருக்கும். ஆக, சிங்கள எதிர் மனநிலை விரைவில் தமிழர் அல்லாதவருக்கு எதிரானதாகத் திரும்பியது. பெரியாறு அணைக்கட்டு தொடர்பான பிரச்சினையில் தமிழ்த் தேசிய இயக்கங்கள் மலையாளிகளை எதிரிகளாகச் சித்திரிக்கத் தொடங்கியமை இதன் அடையாளம். இன்றைக்கு வடமாநிலத் தொழி லாளிகள் மீதான வெறுப்பாக அது திசை திரும்பியிருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதன் ஆதரவாளர்களின் அரசியல் செல்நெறியும் வெறுப்பின்மேல் கட்டப்பட்டது தான். மற்றமை யொன்றைப் பொது எதிரியாகக் கட்டமைத்து அதிகாரத்தைக் கைக்கொள்ளுதல் என்ற அடிப்படை யிலேயே பாஜகவின் செயல்பாடுகளும் வளர்ச்சியும் அமைந்தன. இதன் விளைவுகள் முஸ்லிம்கள்மீதும் ஒடுக்கப்பட்ட தரப்புகள் மீதுமான வன்முறையாய் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில்தான் தமிழகத்திலும் இத்தகைய இனவாத நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது.
தமிழகத்திற்குப் புலம்பெயரும் வடமாநிலத்தவர்களைத் தமிழ் முதலாளிகள் குறைவான சம்பளம், 12 மணிநேர உழைப்பு, தங்குவதற்கான அடிப்படை வசதிகளற்ற இருப்பிடம் எனச் சுரண்டுகிறார்கள். பிழைப்புத் தேடிவரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் அடித்தட்டைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட பிரிவினர். வாக்குச் செலுத்தும் ஜனநாயக உரிமை இவர்களுக்கு இல்லை. இவர்களுடைய குழந்தைகளுக்கான உரிய கல்வியும் இங்கே கிடைப்பதில்லை. முதலாளிகள் தம் நலனுக்காகச் செய்யும் உரிமை மீறல்களும் சுரண்டல்களும் சமூக ஏற்றத்தாழ்வையே உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய சுரண்டல்களைக் கண்டும் காணாமல் இருப்பவர்கள் நாளை தொழிலாளர் நலன், மனித உரிமை தொர்டர்பான ஒன்றிய அரசின் முகமைகள் இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் நிலை வந்தால் மாநில உரிமை பறிபோவதாகக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய நிலை உருவாகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. வடமாநிலத் தொழிலாளர்களுக்காக நிர்வாக ரீதியிலான கட்டமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதன் மூலம் இத்தகைய சுரண்டல், இழிவாழ்வு, இழிசொல் ஆகியவற்றிலிருந்து அம்மக்களை விடுவிக்க முடியும். பணிபுரிபவர்களின் நதிமூலத்தைப் பார்க்காமல் தொழிலாளர்கள் இந்தியக் குடிமக்கள் என்னும் முறையில் சட்டப்படியான அவர்களின் உரிமைகளை உறுதிசெய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. வடமாநிலத் தொழிலாளர்களுக்கான தினக்கூலி, சம்பளம், கண்ணியமான வாழ்நிலை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான அமைப்புகளை அரசு நிறுவ வேண்டும். அத்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் மேல் வெறுப்பைத் தூண்டும் அமைப்புகளை இனங்கண்டு தடுக்க வேண்டிய தேவையும் உண்டு. பொதுத் தமிழ்ச் சமூகத்தின் ஊகங்கள், அதையொட்டி எழும் பதற்றம், அதனால் உண்டாகும் மீறல்கள், வன்முறைகள் ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியதும் அரசின் முக்கியமான பணிகள்.
தமிழ்நாட்டில் தமிழருக்கான வேலைவாய்ப்பு தொடர்பான கவலைகளை முன்வைப்பது வேறு, பிற மாநிலத்தவர்கள்மீது இன அடிப்படையிலான வெறுப்பைத் தூண்டுவது வேறு. தமிழர்களுக்கான வேலை வாய்ப்பைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் தமிழர்கள் செய்ய முன்வராத பணிகளில் வடமாநிலத்தவர்கள் அமர்த்தப்படுவதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ரயில்வே போன்ற மத்திய அரசுத் துறையில் தென்மாநிலங்களில் வடமாநிலத்தவர்களைத் திட்டமிட்டுப் பணியில் அமர்த்தும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபடுவதாகத் தமிழகத்தில் மட்டுமின்றி, இதர தென்மாநிலங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இது முக்கியமானதொரு பிரச்சினை. இதற்கான எதிர்ப்பும் நியாயமானது. ஆனால் இத்தகைய பிரச்சினைகளையும் கடைநிலைப் பணிகளுக்காக வரும் தொழிலாளர்கள் பிரச்சினையையும் வேறுபடுத்தி அணுக வேண்டும்.
நியாயமான கவலைகளைத் தாண்டி இனவெறுப்பைப் பிரதிபலிக்கும் குரல்களை இனங்காண வேண்டியதும் இந்த வெறுப்புச் செயற்பாட்டைக் கண்டித்துக் களைய வேண்டியதும் தமிழக மக்களின், தமிழக அரசின் பொறுப்பு. நீட் தேர்வு, இந்திய ஆட்சிப் பணி நியமனங்கள், ஜிஎஸ்டி வரியில் தமிழ்நாட்டிற்கான பங்கு, வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், பேரிடர் கால நிவாரண நிதி, மொழியுரிமை, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம், மசோதாக்கள் தொடர்பான ஆளுநரின் அணுகுமுறை, அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு முதலான பலவற்றில் தனது உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது. இந்த உரிமைகளுக்காகச் சட்டம், அரசியல், ஊடகம், நிர்வாகம் எனப் பல்வேறு தளங்களிலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் உள்ளன. இதில் தீவிரமாக ஈடுபடுவதை விட்டுவிட்டுப் பிழைப்புக்காக இங்கே வரும் கடைநிலைத் தொழிலாளிகளைக் குறிவைப்பது வியர்த்தமானதென்றால் அதில் வெளிப்படும் இன மேட்டிமையும் இன வெறுப்புணர்வும் அபாயகரமானவை. இன மேட்டிமைப் போக்கும் இன வெறுப்பும் ஒரே மனநிலையின் இரு பரிமாணங்கள். இவற்றின் தீய விளைவுகளை வரலாறு நெடுகிலும் பார்த்தும் அதிலிருந்து பாடம் கற்க மறுப்பது மடமை.