மார்ச் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வேங்கை வயல் அவமானம் நீளும் மௌனங்கள், சுருங்கும் உரையாடல்கள்
      தெருவிலே விட்டுவிட்டார் ராகுல்
      கானல் நீராகவே இருக்கும் கருத்துச் சுதந்திரம்
      ஒரு குறள், இரு குரல்கள்
      பின்னை மானுட யுகத்தின் தொடக்கம்
      நொய்யல்: தெளிவின்மையின் மெய்யறிவு
      கூடுவிட்டுக் கூடுபாயும் இலக்கிய வித்தைக்காரர்
    • கதை
      கண்டடைதல்
    • மறுமொழி
      தீண்டாமை யாத்திரையில் தொடர்ந்த உரையாடல்கள்
    • பதிவுகள்
      பன்னாட்டுப் புத்தகச் சந்தையும் பாடநூல் கழகமும்
    • பாரதியியல்
      வேத ரிஷிகளின் கவிதை மூலமும் காலமும்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      சாப்பிட்ட தட்டு
    • தொடர் 80+
      காத்திருக்கும் படைப்பாளி
    • திரை
      யதார்த்தத்திலிருந்து எழும் ஆன்மீக அனுபவம்
    • கடிதங்கள்
      கல்வியாளுமையும் மானுட ஆளுமையும்
    • மதிப்புரை
      அனுபவத்திலிருந்து சிறிது வெளிச்சம்
    • தலையங்கம்
      தமிழர் இனவாதம்
    • கவிதை
      அன்பில் சிறிய பாதைகள்
      ஆயிரத்து மூன்று இரவுகளை எழுதிப் பார்க்கும் ஒருவன்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2023 மதிப்புரை அனுபவத்திலிருந்து சிறிது வெளிச்சம்

அனுபவத்திலிருந்து சிறிது வெளிச்சம்

மதிப்புரை
எஸ். செந்தில்குமார்

விளக்கும் வெளிச்சமும்
(சிறுகதைகள்)

விமலாதித்த மாமல்லன்

வெளியீடு: 
சத்ரபதி வெளியீடு, 
MIG 6/13, TNHB 1500 MSB,
சோளிங்கநல்லூர்,
சென்னை.
ரூ. 180

விமலாதித்த மாமல்லன் எழுதிய ஒளி, உயிர்த்தெழுதல் ஆகிய இரு கதைகளும் இன்றளவும் வாசிக்கப்படுகின்றன. ‘ஒளி’ எனும் சிறுகதை தற்கொலை செய்துகொள்ள வேண்டி மலைக்கோயிலுக்கு வரும் இளைஞனின் மனப்போக்கையும் அவன் சந்திக்கும் புறவெளி சமூகத்தின் வழியிலான வாழ்வின் அவலத்தையும் உணரும்படியாக எழுதப்பட்டது.  சைக்கிளை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு அங்கிருக்கும் கடையில் டீ குடித்துவிட்டுக் காசு தர இயலாத இளைஞன், காணாமல் போகும் சிறுவனைக் கண்டுபிடித்து மற்ற சிறுவர்களுக்கு உதவுகிறான். தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு மலை இறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்வதாகக் கதை முடியும்.

பாதசாரியின் ‘காசி’ சிறுகதையில் வரும் காசியும் ‘ஒளி’ சிறுகதையில் வரும் இளைஞனும் வேறுவேறல்லர் என்று என்னுடைய வாசிப்பில் தோன்றும். விமலாதித்த மாமல்லனின் கதையுலகம் விசித்திரமானது. அன்றாடம் என்ற சொல்லை அவருடைய கதைகளின் மேல் ஏற்றிவைக்க இயலாது. அவருடைய கதைகளை வாழ்வின் இயல்பு, யதார்த்தம் என்றும் கூற முடியாது. மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வாழ்கிறான். அவனை, அவனது உலகத்தைத் தனது கதையின் வழியாக முன்வைக்கிறார் மாமல்லன்.

‘உயிர்த்தெழுதல்’ சிறுகதையில் “காத்துல வாழறதைக் கைல புடிச்சிட்டு இருக்கீங்களே சார்” என்ற  வசனம் வரும். பல்வேறு எண்ண அலைகளை உண்டாக்கும் வாக்கியம் இது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கரங்களில் எதையோ பற்றியபடி இருக்கிறான் என்கிற குற்றவுணர்ச்சியை உருவாக்கும் வாக்கியம். மனிதன் தன்னையே சில நேரங்களில் கையில் பிடித்து நிறுத்தியிருக்கிறான் என்றும் நினைக்கத் தோன்றும். பறக்க முடியாத பறவையைக் குறியீடு, படிமம், தத்துவ விசாரம் என்கிற பார்வையில் காணாமல் பறவையைப் பறவையாக மட்டும் கண்டு கதையை வாசித்தால் மனிதனின் குற்றச் செயல்களைக் காண முடியுமென்கிற வாசிப்புக்கும் சாத்தியம் உண்டு.

விமலாதித்த மாமல்லனின் ஆறு கதைகளைக் கொண்ட புதிய தொகுப்பான, ‘விளக்கும் வெளிச்சமும்’ என்ற நூலையும் வாசிக்கும்போது விசித்திரமான அனுபவத்தை அடைய முடிந்தது. புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன் ஆகியோர் குழந்தைகளை மையமாக வைத்து எழுதிய கதையுலகத்திற்கு நேர் எதிரான குழந்தை உலகத்தை மாமல்லன் எழுதியுள்ளார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவ்வகையான உலகம் அவருடைய அனுபவமாகவும் அவர் சந்திக்க நேர்ந்ததாகவும் இருக்கலாம். அன்பும் அரவணைப்பும் கருணையும் கரிசனமும் கூடிய குழந்தைகளின் உலகத்தை முன்னோர்கள் உருவாக்கினார்கள் என்றால் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் வன்முறை, பழிவாங்கல், குரோத எண்ணம், தீய செயல்கள் ஆகியவற்றைப் பள்ளிப் பருவத்தில் சந்திக்கும் மாணவர்கள் முதிர்ச்சியடைந்த காலத்தில் சந்திக்கும் வாழ்க்கைச் சூழலை இக்கதைகள் விவரிக்கின்றன. வன்முறையையும் தீய பழக்கங்களையும் கற்கக் குடும்பமே ஆதாரமாக அமைந்திருக்கிறது. ஐந்து கிலோ லிக்கோ கரிக்குப் பதிலாக நான்கு கிலோ கரி வாங்கிக்கொண்டு வா என்று அம்மா தூண்டிவிட்டு அப்பாவை ஏமாற்றும் குற்றச்செயலை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும் (வெளிச்சம்). அப்பாவை ஏமாற்ற அம்மா சொல்லித்தருகிறாள் என்று கருதுவதைவிட, இந்த உலகத்தை ஏமாற்றக் குடும்பம் அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது எனப் புரிந்துகொள்ள முடிகிறது. கரிக்கடையில் நான்கு கிலோ கரி வாங்கும் சிறுவன் காசைக் குறைத்துத் தந்துவிட்டு ஓடுகிறான். இந்த ஏமாற்றும் வேலையை யாரிடமிருந்து அவன் கற்றுக்கொண்டான்?

பள்ளிப் பருவத்தில் தங்களது தந்தைமார்களின் வழியாக வன்முறையைச் சந்திக்க நேர்ந்த இரு மாணவர்களின் உலகத்தை முதல் இரு சிறுகதைகளில் வாசிக்கலாம். ‘அமன்’ கதையில், சிறு வயதில் சந்திக்க நேரும் வன்முறையான சம்பவங்கள் வயதான காலத்தில் எப்படி பிரதிபலிக்கின்றன என்று காணலாம். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரி சாலையில் சுற்றும் மாணவனைக் கார் ஒன்று மோத அச்சிறுவன் நடுரோட்டில் விழுகிறான். அவன் அப்பா அவனை அடித்து நொறுக்குகிறார். இதனை அனுபவிக்க நேர்ந்த இளைஞன் யாருக்கும் இரவல் கொடுப்பதுமில்லை, வாங்குவதுமில்லை என்கிற தாட்சண்யமற்ற பழக்கவழக்கத்திற்கு உள்ளாகிறான். இந்தப் பழக்கத்தை மனைவியும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழல். அருகில் வசிக்கும் சிறுவனுக்கு சைக்கிள் தர மறுக்கிறாள். அவருடைய சைக்கிள் பஞ்சராக்கப்படுகிறது.

‘மறைவு’ கதையில் வரும் சி.என். ராவிற்குப் பால்யத்தில் ஏற்படும் துயரம் கொடூரமானது. டியூஷனுக்குப் போகாமல் சினிமாவிற்குச் சென்றதால் அவனுடைய தந்தை வீட்டின் முன்பாக நிர்வாணமாக நிற்கவைத்துத் தண்டிக்கிறார். ஆனால் அவனது நிர்வாணத்தை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காகக் கிறிஸ்துவர் ஒருவர் அப்பார்ட்மென்டின் மொத்த விளக்குகளையும் அணைத்துவிடுகிறார். சிறு வயதில் பார்த்த தனக்கு உதவிய பெர்னார்ட் ராஜேந்திரனின் குரலைப் பின்னாளில் அறிய நேரிடும்போது சி.என். ராவ் எதுவும் நடக்காததைப் போல் நடந்துகொள்கிறார். ஆனால் அச்சம்பவமும் பால்ய காலமும் அவருக்குள் கொடூரமான இரும்பு உருளையாக உருண்டுகொண்டிருக்கின்றன. நிர்வாணமாக்கப்பட்ட சிறுவன், பெர்னார்ட்டிற்கு மனதளவில் தூண்டுதலாக இருக்கிறான். வாழ்க்கை நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறான். பெர்னாாட் ராஜேந்திரன், சி.என். ராவிற்குக் கிடைத்த தகப்பனைப்போல் தனக்குக் கிடைக்கவில்லையென்று ஆதங்கப்படுகிறார். அப்படிக் கிடைத்திருந்தால் தானும் நன்கு வளர்ந்து பெரிய ஆளாகியிருப்போம் என்று நம்புகிறார். அவருக்குப் படிக்கும் வயதில் கிடைத்த தண்டனை பட்டினி கிடப்பது மட்டுமே. தப்பு செஞ்சா சோறு கிடையாது. அத்தோட சரி. ‘ஆட்டோமேட்டிக்கா மேரி முன்னால் நின்னு சத்தியம் செஞ்சிட்டு தட்டு முன்னால் உக்காந்துரலாம்.’

அவருடைய அனுபவம் வேறொன்றாக அமைந்திருக்கிறது. ‘இந்தக் காலத்துப் பசங்களுக்கும் பெண்களுக்கும் எப்படி இதெல்லாம் தெரிகிறது? நாம் பள்ளிப் பையனாக இருந்த காலத்தில் சாவைப் பார்த்துத்தானே பயப்படுவோம்? இந்தப் பசங்களுக்கு வாழ்வைப் பார்த்து ஏன் இவ்வளவு பயம்’ என்று ராவ் நினைத்துக்கொள்கிறார். ‘என்னையா அடிச்சே உங்கம்மா செத்துருவாங்க பாரு’ என்று சக மாணவன் ராவை அச்சுறுத்துகிறான். அவன் டியூஷனுக்குப் போகாததால் தந்தையால் நிர்வாணமாக்கப்படுகிறான். ஆனால் தண்டனை அடைந்தவன் மறுநாள் காலையில் ஒன்றும் நடக்காதவன்போல் பள்ளிக்கூடம் போகிறான். பள்ளிப் பருவத்தில் பெற்றோர்களின் தண்டனைகளை அடைய நேரிடும் மாணவர்கள்  பின்னாட்களில் மனநிலை பிசகி வாழ நேரிடும் அவலத்தை இக்கதையில் அறிய முடிகிறது.

ஒன்றில் தொடங்கி மற்றொரு கதைக்குள் நுழைந்து வேறொரு கதையாக வெளியேறும் அபூர்வ வடிவத்தை ‘மறைவு’, ‘அமன்’ ஆகிய இரு கதைகளும் கொண்டுள்ளன. இத்தன்மையை ஏற்கெனவே மாமல்லன் ஒளி சிறுகதையில் முயன்றிருப்பார். ஆனால் இவ்விரு கதைகளில் விஸ்தாரமாகவும் தெளிவாகவும் மேற்சொன்ன வடிவமும் நுட்பமும் முழுமையாக உருக்கொண்டுள்ளன.

தன்னை அடித்த அப்பாவின் செருப்பின் வாரை அறுத்துவிடுகிற குரூர மனப்பான்மைக்கு அப்பாவின் வன்முறையே காரணமாய் இருந்ததையும் தனக்கு சைக்கிள் தராத காரணத்தினால் அவருடைய சைக்கிளைத் தினந்தோறும் பஞ்சர் செய்துவிடுகிற வன்முறைக்கு ஒருவகையில் சைக்கிள் யாருக்கும் இரவல் தரக் கூடாது என்கிற எண்ணமும் சிறு வயதில் வன்முறையால் நிகழ்ந்த அனுபவமுமே காரணங்கள் என்று கூறலாம். சுந்தர ராமசாமி ‘எங்கள் டீச்சர்’, ‘பக்கத்தில் வந்த அப்பா’ ஆகிய கதைகளில் டீச்சருக்கு எதிராகவும் தந்தைக்கு எதிராகவும் வன்முறையைக் கையாளும் குழந்தைகளை எழுதவில்லை. கு.அழகிரிசாமியின் கதை உலகத்தில் வன்முறைக்கு இடமில்லை. தந்தைக்கும் இளவயது மகனுக்குமான உறவுகளை இடைவெளியோடு கையாண்டிருப்பது அக்காலத்தின் சூழலாக இருக்கும்பட்சத்தில் இக்கதைகளின் வாசிப்பின் வழியே கண்டடையும் பொருள், சமூக மாற்றத்தினால் நிகழும் அடிப்படையான குணங்களுக்குள் வன்முறையும் ஒன்றே எனக் கூற வேண்டும். குழந்தைகளின் வழியாகக் கதையை முன்னெடுத்துச் செல்லும் வடிவத்தைத் தொடர்ந்து விமலாதித்த மாமல்லன் பயன்படுத்திவருவது அவர் கதைகளில் புதிய மொழியையும் வடிவத்தையும் கதாபாத்திரங்களையும் தனக்கான மாற்று உலகத்தையும் கண்டடையத் தடையாக இருக்கிறது என்று கூற வேண்டும்.

பொதுவாக இத்தொகுப்பிலுள்ள கதைகள் கணவன், மனைவி இருவருக்குமான உரையாடலாகத் தொடங்கி மற்றொரு தளத்தில் வேறொரு காலத்தில் நிகழ்ந்து முடிவாகத் திரும்பவும் அவர்களிடம் வந்தடைகிறது. ‘பயம்’ சிறுகதையில் குழந்தையற்ற தம்பதியினருக்கு மன்னார்குடியிலிருக்கும் கோயிலுக்குச் சென்று வந்த பிறகும் அவர்களுக்குக் குழந்தைப் பேறு அமையாததைத் துயரமான குடும்பத்தின் பின்னணியில் கூறாமல் பரபரப்பான அலுவலகத்தின் பின்னணியில் கூறியிருப்பது சோகத்தை உருவாக்காமல் பதற்றத்தை உருவாக்கியுள்ளதைக் குறிப்பிட வேண்டும். எதற்காக அம்மா சொல்லி அந்த நபர் கோயிலுக்குச் சென்றிருக்கிறார் என்ற விவரம் கடைசிவரியில் மட்டுமே விளங்கும்.

‘காவி’ என்கிற குறுநாவல், வீட்டை விட்டு வெளியேறிச் சாமியராக முயலும் ஒருவனின் வாழ்வை வாசகருக்கு முழுமையாகத் தர முயல்கிறது. ஒளி சிறுகதையைப் போலத் தொடங்கும் இக்கதையில் சாமியார்களைத் தரிசிக்கும் சாமானியர்களைப் பற்றிய குறிப்புகள் சுவாரசியமானவை. ஊர் சுற்ற வேண்டும். பசிதீர்க்க எளிய வழி காவி என்பது துறவு பூண்டவனின் எண்ணம். அதற்கும் மேல் துறவுக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனித்துவம்தான் பிரச்சினை. தனித்துவத்துடன் வாழ்பவனைச் சமூகம் எப்படியாவது தனக்குள் இழுத்துக்கொள்ளப் பார்க்கிறது. பிடிவாதமாய்க் கரைய மறுப்பவனை முட்டாள், முரடன், பைத்தியம் என்று ஏதாவது ஒரு முத்திரை குத்தி வெளியே தள்ளிவிடப் பார்க்கிறது. அரசு அலுவலகம் எப்பேர்ப்பட்டவனையும் அள்ளி விழுங்கிச் செரித்துவிட்டுத்தான் மறுவேலை என்று பிரமாண்டமாய் நிற்கிறது என்று அவன் வாதிடுகிறான்.

சாமியாராகும் பொருட்டு மத்திய அரசு வேலையை ராஜினாமா செய்கிறான். கடிகாரத்தை சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவனுக்குத் தருகிறான். (அவன் காதல் தோல்வியால் சாமியாராகப் போகிறீர்களா என்று கேட்பது கேலி அல்ல.) பேருந்தின் கூரையில் உட்கார்ந்து பயணம்செய்கிறான். அனைவரும் சாமி என்று அழைக்கிறார்கள். எதிரே வருபவர்கள் வணக்கம் சொல்கிறார்கள். புதுச்சாமிக்கு எப்படி வணக்கம் செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. ஆனால் கோயில் பூசாரி இவனது உண்மையான நிலவரத்தைக் கண்டு வீட்டிற்குப் போகுமாறு சொல்கிறார். அவன் வீட்டுக்குப் போகிறானா இல்லை துறவு வாழ்க்கைக்குப் பழகப்பட்டு அதனைத் தொடர்கிறானா, என்று முடிவாகச் சொல்லவில்லை. துறவறத்திற்கும் வீட்டை விட்டுச் சலிப்புற்று ஓடிப்போவதற்கும் என்ன காரணமெனவும் இக்கதை விவாதிக்கவில்லை. சாமியார்களை எதிர்கொள்கிற சாமானியர்களைப் பற்றிய சித்தரிப்பு சுவாரசியமானது. வீட்டை விட்டு ஓடிவந்திருக்கிறான் என்ற உண்மையைக் கண்டுபிடிப்பதே சாமானியர்தான். மாமல்லனின் கதைகளின் தொடர்ந்து வரும் படிமாகத்துறவு உள்ளது.

மாமல்லனின் கதைகளில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். ஒன்று பெண்களின் குரல். மற்றொன்று கதையற்ற சம்பவங்களைக் கதையாக மாற்ற முயலும், கதைக்குள் கொண்டுவரும் முயற்சி. விமலாதித்த மாமல்லனின் கதைகளில் பெண்களின் உலகத்தை முழுமையாக வாசகர் அறிய முடிவதில்லை. ஆண்களின் உலகத்திற்குள் பெண்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக உள்ளது. ‘வெளிச்சம்’ கதையில் வரும் அம்மா, அப்பாவிடம் அடிப்பட்டும் வசவு வாங்கியும் கதைக்குள் நடமாடுகிறாள். இவளது பாத்திரம் மட்டுந்தான் நமக்குச் சிறிய அளவில் கிடைக்கப்பெறுகிறது. இதே கதையில் அப்பா தன்னுடைய மகனுக்குத் தமிழ், ஆங்கிலப் பாடங்கள் கற்பிக்கும் நிகழ்வு கதைக்கு வெளியே சென்று அபுனைவுத் தன்மையை உருவாக்கிவிடுகிறது. இவருடைய மொழி, கதையை வாசிப்பதற்குத் துணையாக அமைந்து வாசகருக்கு நெருக்கத்தைத் தருகிறது. அபுனைவு மொழியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இத்தகைய உரையாடல்கள் கதையை விட்டு வாசகர் விரைவில் வெளியேறிவிடச் செய்கிறது.

இந்தத் தொகுப்பு விமலாதித்த மாமல்லன் என்கிற சிறுகதை எழுத்தாளரின்  வழக்கமான கதை சொல்லும் தன்மைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. குழந்தைகளின் உலகில் மறைந்திருக்கும் கள்ளத்தனங்களை, பொய்களை, கசடுகளை, அறியாமைகளை, பயத்தை, வெறுப்பை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. சுந்தர ராமசாமி, அழகிரிசாமி உள்ளிட்ட எழுத்தாளர்கள் குழந்தைகள் ஏமாறும் உலகத்தையும் குழந்தைகள் ஏமாற்றப்படும் தருணங்களையும் கரிசனத்துடன் எழுதினார்கள். விமலாதித்த மாமல்லன் குழந்தைகள் பிறரை ஏமாற்றும் உலகத்தை வன்முறையுடன் எழுதுகிறார்.

      மின்னஞ்சல்: ssenthilkumar.writter@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.