ஆயிரத்து மூன்று இரவுகளை எழுதிப் பார்க்கும் ஒருவன்
ஓவியம்: மு. நடேஷ்
ஆயிரத்து மூன்று இரவுகளை எழுதிப் பார்க்கும் ஒருவன்
பதின்ம வயதொன்றில்
அவனது அவ்விரவுகள் விழித்தே கிடந்தன.
ஒரு கூடை மல்லிகைப் பூக்களும்
ரோஜா பதியங்களும்
அவனது
இரவுகளில் வந்து போவது சகஜமான ஒன்றாக இருந்தது.
ஒருமுறை
அவனை மேற்குத்திசைப் பள்ளத்தாக்கில் கடத்திவிட்டுச் சென்றிருந்தன இரவு ராணிகள்.
அவன்
இரவுகளில் பூக்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறான்.
சில வேளைகளில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருப்பவன்
பௌர்ணமி அன்று பித்தனாகிவிடுகிறான்.
அவனது
மலர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பூத்துக் குலுங்குகின்றன.
இப்போது அவன்
ஓர் அடர்வனத்தைக் கையிலேந்தி நடக்கத் தொடங்கிவிட்டான்.
பெரும் மழையும் பனிப்பொழிவும் அவனது இரவுகளில் வந்து சேர்கின்றன.
இங்ஙனம்
சளைக்காமல் இரவு அவனிடத்தில்
விளையாடிப் பார்க்கிறது.
இம் மத்திம காலத்தில்
அவனது ஆயிரத்து மூன்று இரவுகளையும் ஒரு சேர எழுதிவிடத் துடிக்கின்றானவன்.
இரவுகளை
எழுதி முடித்தல் அவ்வளவு சாத்தியமானதா என்று அவன் அறிந்திருக்கவில்லை.
ஞாயிறன்று கிடக்கும் வீடு
ஞாயிறன்று
இந்த வீடு மிகவும் அமைதியாக இருக்கிறது.
குளிருக்குப் போர்த்தியதை அப்பா இன்னும் விலக்கவில்லை.
ஒரு குழந்தை போல் முடங்கிப் படுத்திருக்கிறார்.
அம்மா குளித்து முடித்துப் பூஜையறையில் இருக்கிறாள்.
வழக்கமாக ஞாயிறன்று எப்போது தோன்றுகிறது
அப்போது எழும் நான் இன்று
நேரத்தில் எழுந்துவிட்டேன்.
முகம்கூட கழுவாமல் முதலில் வாட்ஸ் ஆப் பார்க்க ஆரம்பித்தேன்.
ஏனோ நேற்று இரவு இட்ட நல்லிரவிற்கு
இன்னும் பதில் இல்லை என்று
கவலை கொண்டவனாக
வடக்கு வாசல் தோட்டம் வந்தேன்.
துளசிச் செடிகளின் ஊடாக அணில் ஒன்று போய்க்கொண்டிருந்தது.
முருங்கைப் பூக்கள் துளிர்க்க ஆரம்பித்திருந்தன.
புதிய வீட்டின் வாழைகள் வளர்ந்திருந்தன.
சமீபத்தில் வைத்த செடியொன்றில் மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கின.
அது பார்ப்பதற்கு மிகவும்
அழகாக இருந்ததுடன் மனதையும் இலெகுவாக்கியது.
காட்டுக் குருவிகள் ஜோடிகளுடன் வரத் தொடங்கின.
தொட்டியில் இரவு ராணிகள் சிரித்துக்கொெண்டிருந்தன.
செம்பருத்தி
இன்று ஏன் இவ்வளவு அழகாக எனக்குத் தெரிகிறது.
அவள் மீன்களைச் சுத்தம் செய்துகொண்டிருக்க
கவிஞனும் பவியும் அற்ற இஞ்ஞாயிறு வீடு பேரமைதி கொண்டிருக்கிறது.
மின்னஞ்சல்: senthi.punaivu@gmail.com