கானல் நீராகவே இருக்கும் கருத்துச் சுதந்திரம்
“இந்த அடிப்படை உரிமைகள் பலவும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் பார்வையிலிருந்து இயற்றப்பட்டிருக்கின்றன”
-சோம்நாத் லகிரி, அரசமைப்பு அவை விவாதத்தின்போது.
பேச்சு, கருத்து, ஊடக சுதந்திரம் ஆகியவற்றைப் பொருத்தவரை இந்தியாவில் மிகப் பெரும்பாலானவர்கள், ஏன் அனைவரும் என்றுகூடச் சொல்லிவிடலாம், தங்களுக்கு ஆதரவான அல்லது பிடித்த கருத்துக்களுக்கு, எழுத்துக்களுக்கு, படங்களுக்குத் தடை வரும்போது மட்டுமே கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். தாங்கள் வெறுக்கிற, தங்களால் சகிக்க முடியாத, ஆபாசமான கருத்துக்களுக்கு, எழுத்துக்களுக்கு, படங்களுக்குத் தடை வரும்போது அதை ஆதரிக்கிறார்கள் அல்லது மெளனம் காக்கிறார்கள். நம்மால் ஒருபோதும் ஏற்கவே முடியாத, சகிக்கவே முடியாத கருத்துக்களை ஒருவர் பேசுவதற்கும், எழுதுவதற்கும் இருக்கும் உரி