வேங்கை வயல் அவமானம் நீளும் மௌனங்கள், சுருங்கும் உரையாடல்கள்
வேங்கை வயல் பற்றி எழுத நினைத்த போது முதலில் பெரும் தயக்கம் உருவானது. இவ்வாறெல்லாம் நடந்தது என்று மீண்டும் சொல்வதைத் தாண்டிப் புதிதாய் என்ன சொல்லிவிட முடியும் என்ற எண்ணமே அந்தத் தயக்கத்திற்கான காரணம். இங்கு தலித்துகள் தாக்கப்படுவது, அவமானப்படுத்தப்படுவது, அவற்றை மீண்டும் எடுத்துக் கூறுவது என்று எவையும் புதிதில்லை; நிலைமையிலும் பெரிய மாற்றம் இல்லை.
வேங்கை வயல் உள்ளிட்ட விஷயங்களில் நடைமுறை சார்ந்து மாற்றங்களைக் கோர வேண்டிய, அதற்கான ஆக்கப்பூர்வமான அழுத்தங்களைத் தர வேண்டிய அரசியல் தளம் மெளனம் பூண்டிருக்கிறது. ஆனால் அறிவுச் சமூகம் அவ்வாறு இருக்க முடியாது. இது போன்ற தருணங்களில் செய்ய வேண்டியதென்ன, யார் யாருக்கெல்லாம் பொறுப்புகள் இருக்கின்றன என்று அறிவுச் சமூகமாவது சிந்திக்க வேண்டும். ஆனால் அறிவுச் சமூகத்திலும் கொடும் மௌனம் நீடிக்கிறது. ஊடகங்களில் பெரிதாக எந்தக்