தீண்டாமை யாத்திரையில் தொடர்ந்த உரையாடல்கள்
‘
‘தீண்டாமை யாத்திரையில் ஒலித்த ஒடுக்கப்பட்டோரின் குரல்’ குறித்து ஜனவரி காலச்சுவடு இதழில் (277) பிரசுரமாகியிருந்த என்னுடைய கட்டுரைக்கு வந்த எதிர்வினைக் கடிதத்தை பிப்ரவரி இதழில் படித்தேன். மகிழ்ச்சி. எதிர்வினை எப்போதும் முக்கியத்துவம் உடையது. கண்டுகொள்ளாமல் போவதைவிட அதைப் பொருட்படுத்திவரும் எதிர்வினை குறிப்பிடத்தகுந்தது.
நான் எழுதிய கட்டுரை காந்தியின் ஒன்பது மாத காலத் தீண்டாமை யாத்திரையின் பல கூறுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே பேசுவதாக அமைந்திருந்தது. அக்கட்டுரையின் தலைப்பு அதை உறுதிப்படுத்துகிறது. 22,500 கி.மீ. நீண்ட பயணத்தில் ஒரே ஒரு பேசுபொருளை, அதாவது தீண்டாமைக்கு எதிரான கருத்துகளை மட்டுமே பேசிய இந்த யாத்திரை சிறப்புமிகுந்த பல கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதற்கு முந்தைய கட்டுரை ஒன்றிலும் (காந்தி: பெண்களும் தீண்டாமை யாத்திரையும், காலச்சுவடு. அக்டோபர் 2022 ) தீண்டாமை யாத்திரையில் பெண்கள் தம்மை இணைத்துக்கொண்டதையும், அவர்களின் வெளிப்புறப் பங்களிப்புகளையும் குறித்து எழுதியிருந்தேன். 1915இல் இந்தியா திரும்பியதுமே தீண்டாமைக்கு எதிரான செயல்பாடுகளில் காந்தி தம்மை எங்ஙனம் இணைத்துக்கொண்டார் என அந்தக் கட்டுரையிலும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
1931 வட்ட மேசை மாநாட்டுக்குப் பின் எழுந்த பல்வேறு அழுத்தங்களால், தீண்டாமைக்கு எதிரான தம் குரலை வலுவாக வெளிப்படுத்த வேண்டியதின் அவசியத்தை காந்தி உணர்ந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. Anti Untouchability League எனத் தொடங்கப்பட்டு பின் Harijan Sevak Sangh எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவின் பல்வேறு மாகாணங்களிலும் தொடங்கப்பட்டது. பொதுக்கருத்தை எட்ட பத்திரிக்கைகள் உதவுவதில் ஆழ்ந்த நம்பிக்கையும் அனுபவமும் கொண்டிருந்த காந்தி, தீண்டாமைக்கு எதிராக Harijan என்ற பத்திரிக்கையை இந்தக் கட்டத்தில் தொடங்கினார்.ஆங்கிலத்திலும் குஜராத்தியிலும் (ஹரிஜன பந்து) முதலில் வெளியாகத் தொடங்கி, பிறகு வேறு மொழிகளிலும் வெளியான அப்பத்திரிக்கை இன்று முக்கியமானதோர் ஆவணம்.
உடல்நிலை காரணமாக ஒரு வருடம் முன்னதாகவே விடுவிக்கப்பட்டுவிட்டாலும் தார்மீக ரீதியாகத் தாம் அரசியல் கைதியாக இருந்ததால் அரசியல் பேசாத அந்த முழு வருடத்தைத் தீண்டாமைக்கு எதிரான தமது குரலை அழுத்தமாகச் சமூகப் பொதுவெளியில் பதிய வைக்கும் ஆண்டாக காந்தி திறம்பட மாற்றிக்கொண்டார். அதன் விளைவாக 1933 நவம்பர் ஏழாம் தேதிமுதல் 1934 ஆகஸ்டு இரண்டாம் தேதிவரை தீண்டாமை யாத்திரை நடந்தது. உண்மையில் அது ஒரு சூறாவளிப் பிரச்சாரம்தான்.
இந்த யாத்திரையில் காந்தி பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கிறார். மக்கள் தங்களது கருத்துகளை, உடன்பாடுகளை, எதிர்ப்புகளை அவரிடம் தெரிவிக்கிறார்கள். அதோடு காந்தியைக் கடுமையாக எதிர்த்த பல்வேறு பிராந்தியங்களைச் சார்ந்த பல்வேறு குழுக்களும் சனாதனிகளும் கம்யூனிஸ்டுகளும் சுயமரியாதைக் குழுவினரும் ஒடுக்கப்பட்டோருக்காகப் பணியாற்றிய வேறு பல குழுக்களும் கிறித்துவ இஸ்லாமியக் குரல்களுமாகப் பல்வேறு தரப்பினரோடு காந்தி உரையாடுகிறார்.
விடுதலையைக் காட்டிலும் முக்கியமானது
இந்தியாவில் நிகழ்ந்த மிகச் சிறப்பான சமூகச் சீர்திருத்த இயக்கம், சமூக எழுச்சி இயக்கம் என்றே தீண்டாமை யாத்திரையைக் குறிப்பிட வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாகக் காந்தியைக் குறித்த பலநூறு புத்தகங்களில்கூட இதற்கு இரண்டொரு பக்கங்களே ஒதுக்கப்படுவது வேதனைக்குரியது.1933-34 காந்தியின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமன்றி இந்தியாவின் சமூகப் பரப்பிலும் முக்கியமான ஆண்டு. விடுதலையை எதிர்நோக்கியிருக்கும் இந்தியா, பிரிட்டிஷாரின் கையிலிருந்து அதிகாரத்தைப் பெற்ற பின் தம்மிடம் உள்ள ஒடுக்கப்பட்டவர்களை எப்படி நடத்தப்போகிறது என்ற முக்கியமான கேள்வியை எழுப்பிய சமூக இயக்கம் அது. இப்போதைக்கு அப்பிரச்சினை குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை; விடுதலை பெற்று அதிகாரம் கைக்கு வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் எனக் காங்கிரஸ்காரர்களே கைகழுவினார்கள். காந்திக்கு இந்திய விடுதலை முக்கியமானது. ஆனால் சமூக விடுதலை அதனினும் முக்கியம் என்ற தெளிவு இருந்தது. அவருடைய நிர்மாணத் திட்டப் பணிகள் அனைத்தும் விடுதலை அடைந்த இந்தியாவுக்கான சமூகக் கடமைகளை உணர்த்துபவையே. பொறுப்பான குடிமக்களையும் நேர்மையான ஊழலற்ற பரந்துபட்ட அதிகாரப் பகிர்வுகொண்ட அரசியல் அமைப்பையும் தம்மை மதிப்புறு குடிமக்களாகக் கருதும் சூழலைச் சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்டவர்களும் உணரும் விதமான சமூகச் சூழல் கொண்ட நாடாகவும் இந்தியாவை மலர்த்த வேண்டும் என்ற கனவுதான் அவருடைய நிர்மாணத் திட்டப் பணிகளின் முக்கிய மையமாக இருந்தது. அதையே தம் வாழ்நாள் முழுக்க அவர் உரையாடினார்.
உரையாடல், காந்தியத்தின் முக்கியச் சரடு. நூறு தொகுதிகளைக் கொண்ட காந்தி தொகுப்பு நூல்களைச் சற்றுப் புரட்டிப் பார்த்தாலே நமக்கு அது விளங்கிவிடும். அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள் காந்தியோடு உரையாடிய தருணங்களையும் அதில் வெளிப்பட்ட அவர்களின் உணர்வுகளையும் கேள்விகளில் இருந்த கூர்மையையும் அறிந்து கொள்வது முக்கியமானது. இத்தகைய குரல்களோடு எதிர்ப்புக் குரல்களை அதன் தீவிரத் தன்மையோடு பதிவுசெய்தவகையில் தீண்டாமை யாத்திரை முக்கியமானது. பல்லாயிரம் பேரின் முகத்திரையை விலக்கி வெளிக்காட்டிய நிகழ்வு அது.(சனாதனிகள் இந்த யாத்திரையின்போது நடந்துகொண்ட விதம் தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டியது.) அதில் ஒலித்த குரல்களின் தீவிரத்தை வாசித்துப் பார்த்தால் அதை உணர முடியும். இந்தத் தீவிரக் குரல்களின் தன்மை அடுத்து வரும் பதினைந்து ஆண்டுகளில் இந்தியா விடுதலை அடைந்ததும் மட்டுப்பட்டுவிடுமா? அதிகாரமற்றபோதே இவ்வாறெனில் அதிகாரமும் கைகளுக்கு வந்துவிட்டால்? இதுதான் காந்தியின் கேள்வி.
ஒடுக்கப்பட்டவர்களை இவ்வாறுதான் நடத்துவீர்களா, மனிதத் தன்மை கொண்டவர்கள் இவ்வாறுதான் நடந்துகொள்வார்களா, ஒரு மதத்தின் பேரால் இந்த அநியாயத்தைச் செய்ய முடியும் எனில் அந்த மதமே வேரற்றுப் போனால்தான் என்ன எனப் பிறர் யோசிக்கக்கூடத் தயங்கிய இத்தகைய கேள்விகளை காந்தி தொடர்ந்து மக்கள் முன் எழுப்பினார். இந்தக் கேள்விகளைச் சுமந்துதான் பல்லாயிரம் பேர் வீடு திரும்பினர். சில ஆயிரம் பேராவது அதை யோசித்துச் செயல்படுத்தித் தம்மால் இயன்ற அளவில் மாற்றத்தையும் சமூகத்தில் ஏற்றத்தையும் கொண்டுவந்தனர். சுற்றிச் சுழன்ற இந்தச் சூறாவளிப் பயணம் மாற விரும்பாதவர்களையும் அடையாளம் காட்டிய வகையில் முக்கியமானதொன்று.
காந்தி 1915இல் இந்தியா திரும்பும்போது, இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பல்வேறு குழுக்கள் நாடெங்கும் செயல்பட்டுவந்ததையும் கருத்தில்கொண்டார். அவர்களோடும் இணைந்து பணியாற்றினார். அதையும் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளேன். அக்குழுக்கள் தங்களாலான வகையில் இந்திய பிரிட்டிஷ் அரசிடமும் பொதுச் சமூகத்திடமும் கோரிக்கைகளை முன்வைத்தபடியேதான் இருந்தன. Depressed Class Mission என்ற பெயரில் பல குழுக்கள் இயங்கியுள்ளன. தம்முடைய மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள்,சட்ட ரீதியிலான பாதுகாப்பு எனப் பல தளங்களில் அவர்களும் தம்மாலியன்ற வகையில் குரல் கொடுத்தபடியேதான் இருந்தனர்.அவர்களை ஒன்றிணைக்கும் தலைவர்தான் அப்போது இல்லை.
ஆனால் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய முகமாகத் திகழ்ந்த காங்கிரஸ் சமூக விடுதலைக்கான பணிகளையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் காந்தி காங்கிரஸில் இணைந்த பின் வலுப்பெற்றது. காங்கிரஸ் மாநாடுகளின் வரலாற்றைப் பார்த்தாலே இது நன்கு விளங்கும். காந்திய யுகம் என வர்ணிக்கப்பட்ட காந்தியின் களமானது அரசியல் விடுதலையை மட்டுமின்றிச் சமூக விடுதலையையும் உள்ளடக்கியதே. இந்தியா திரும்பியதிலிருந்தே அதற்கான பணிகளை முன்னெடுக்கத் தொடங்கிய காந்தி, இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்குப் பின் தீவிரமாகக் களம் கண்டார்.1915இல் காந்தி சந்தித்த குழுவினரில் மதராஸில் பணியாற்றிய Depressed Class Mission குழுவினரும் உண்டு. ஒடுக்கப்பட்டோர் கட்டுரையை மீள்பார்வை பார்த்தாலே அது புரியும். பல கோடி ஒடுக்கப்பட்டவர்களுக்கிடையே அவர்களுக்காகக் குரல் கொடுக்கவும் சிந்திக்கவும் வேண்டிய சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும் அவர்களுக்குள்ளும் இருந்தனர். அத்தோடு, காந்தியின் செயல்பாடும் மக்களை அரசியல்படுத்துவதாகும். அரசியல்படுத்தினால் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள். எனவே தங்கள் நிலை குறித்து உணர்ந்துகொண்டிருந்த ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்காகத் தாங்களே குரல் கொடுக்கவும் தொடங்கியிருந்தனர். அதில் ஒரு பகுதிதான் காந்தியின் தீண்டாமை யாத்திரையில் எதிரொலிக்கிறது.
காந்தி நிகழ்த்திய உரையாடல்கள்
தீண்டாமை யாத்திரையின்போது காந்தி மகாராஷ்டிரத்தில் அகோலா என்ற இடத்தில் சில மணிநேரம் தங்கியிருந்தார். அவரைச் சந்திக்க அம்பேத்கரின் ஆதரவாளர்கள் சிலர் வந்தனர். காந்தியிடம் சில கேள்விகள் கேட்க விருப்பம், அதற்கு அவர் கோபமோ ஆத்திரமோ கொள்ளக் கூடாது என முன் அனுமதி கேட்கின்றனர். காந்தி, அவை இரண்டுக்கும் இங்கு இடமில்லை எனக் கூறி, எத்தகைய கேள்விகளானாலும் தயக்கமின்றிக் கேட்கலாம் என்கிறார்.
கேள்வி: ஒத்துழையாமை இயக்கத்திற்கு முன் நீங்கள் ஏன் தீண்டாமைக்கு எதிரான பணிகளை முன்னெடுக்கவில்லை?
காந்தி: நான் 1920களிலேயே இந்தப் பணியில் இறங்கிவிட்டேன். காங்கிரஸ் மாநாட்டில் தீண்டாமைக்கான தடையைத் தீர்மானமாக முன்மொழியச் செய்தேன்.1915இல் ஆசிரமங்களை அமைத்தபோதும் அதையே நான் செய்திருக்கிறேன். மக்கள் என் குரலைச் செவிமடுப்பார்கள் என்ற நம்பிக்கை வந்ததும் காங்கிரஸின் நிர்மாணத் திட்டப் பணிகளில் ஒன்றாகவும் அதைச் சேர்த்திருக்கிறேன்.
கேள்வி: வட்ட மேஜை மாநாட்டில் நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர் என்றும் டாக்டர் அம்பேத்கரின் தலைமை ஏற்கத்தக்கதல்ல என்பது போலவும் நடந்துகொண்டது ஏன்?
காந்தி: இல்லை. இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நான் பிரதிநிதி என்றும் டாக்டர் அம்பேத்கரோடு சேர்ந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் பொறுப்பும் எனக்கு உண்டு என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.
கேள்வி: கோயில் நுழைவுப் போராட்டம் அரசியலோடு தொடர்புடையதா?
காந்தி: இல்லை. நிச்சயமாக அது சமயத்தோடு தொடர்பு கொண்டது மட்டுமே.
கேள்வி: ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக நீங்கள் இதுவரை எவ்வளவு செலவழித்திருப்பீர்கள்?
காந்தி: இருபது இலட்சம்வரை செலவாகியுள்ளது. அதில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் என் சொந்தப் பணத்திலிருந்தே செலவு செய்திருக்கிறேன். மேலும் திலகர் நிதியிலிருந்தும் கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது.
கேள்வி: டாக்டர் அம்பேத்கர் வட்டமேஜை மாநாட்டில் உங்களை எதிர்த்தார். அப்படிச் செய்ததன் மூலம் அவர் நாட்டுக்கு நியாயம் செய்தாரா இல்லையா?
காந்தி: நியாயம் செய்ததாக அவர் நினைத்தார். ஆனால் அது நியாயம் இல்லை என்று நான் நினைத்தேன்.
கேள்வி: திலகர் படத்தில் நான்கு கைகள் வரைந்து மக்கள் பூஜிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். டாக்டர் அம்பேத்கரையும் நாங்கள் அவ்வாறு பூஜிக்கவே விரும்புகிறோம். அவர் எங்களுக்காக நிறைய செய்திருக்கிறார்.
காந்தி: நிச்சயமாகச் செய்யுங்கள். அதற்கான அத்தனை உரிமையும் உங்களுக்கு உண்டு. எரவாடா சிறையில் இருக்கும்போது நானும் வல்லபபாய் படேலும் அவர் குறித்து அடிக்கடி பேசுவோம். அவரது கட்சியின் ஜனதா பத்திரிக்கையையும் நான் தொடர்ந்து வாசிப்பேன். அவரைத் திருப்திப்படுத்தும் விதமாகவே நான் யோசிப்பேன். அவரது துணிச்சலையும் தைரியத்தையும் நான் போற்றுகிறேன். நான்கூடத் துணிச்சலானவன்தான். ஆனால் துணிச்சலானவர்கள் தவறு செய்ய மாட்டார்களா என்ன? நான்கூடச் சில தவறுகள் செய்ததுண்டு. அதையே அவரும் செய்கிறார்.
கேள்வி: ஹரிஜன் சேவக் சங் உறுப்பினர்கள் சரிவரப் பணி செய்வதில்லை.
காந்தி: உங்கள் குறைகளையும் குற்றச்சாட்டுகளையும் எழுத்தில் எழுதித் தாருங்கள். நான் விசாரிக்கிறேன்.
கேள்வி: மன்னிக்க வேண்டும். நான் பரம ஏழை. இப்போது ஊர் திரும்பக்கூடப் பணம் இல்லை. கடிதம் எழுதச் செலவு செய்ய முடியாதே.
காந்தி: பரவாயில்லை. கடிதம் மட்டும் எழுதி அனுப்புங்கள். அதை இரண்டரை அணா கொடுத்து நான் வாங்கிக்கொள்கிறேன்.
கேள்வி கேட்ட இருவரும் காந்திக்குக் கதர் மாலை அணிவித்து விடை பெறுகிறார்கள். (Mahatma Gandhi Warnings and Flashes in Harijan Tour, S.Mahadevan, Journalist Publishing House,1932, pg 8-11.)
இது ஒரு சான்று மட்டுமே. இதைப் போன்ற பல நூறு உரையாடல்கள் காந்தி தொகுப்பு நூல்களிலும் ஹரிஜன் இதழ்களிலும் பதிவாகியிருக்கின்றன. செல்லுமிடமெங்கும் காந்தி ஒடுக்கப்பட்டவர்கள் குடியிருப்புகளைப் பார்வையிட்டு அவர்களிடத்தில் சில மணிநேரம் தங்கி உரையாடியபடியேதான் செயல்பட்டிருக்கிறார். இந்தியாவின் பல ஆயிரம் ஒடுக்கப்பட்டவர் குடியிருப்புகளில் காந்தியின் கால் தடம் உண்டு. எனவே, அம்மக்கள் அவரோடு விரிவாகவே உரையாடியிருக்கிறார்கள்.
அம்பேத்கர் குறித்து அந்தக் கட்டுரை பேசவில்லை எனக் கடிதம் குறிப்பிடுகிறது. அதில் காந்தியின் பதில்களையும்கூடக் குறிப்பிடவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் நிலை குறித்துப் பெற்றிருந்த விழிப்புணர்வே சுட்டிக்காட்டப்படுகிறது. அவர்கள் காந்தியின் முன் வைத்த கோரிக்கைகளும் வினாக்களும் அதையே சுட்டுகின்றன. அதை காந்தியும் தமது தீண்டாமை யாத்திரையின் நிறைவில் குறிப்பிடவே செய்கிறார். 1934 ஆகஸ்டு மாதம் இரண்டாம் தேதி செய்தியாளர் சந்திப்பில் ஒடுக்கப்பட்டவர்கள் தங்களின் இருப்பு, நிலை குறித்த காத்திரமான கேள்விகளை முன்வைத்ததை தாம் வழிநெடுகக் கண்டதாக மகிழ்வோடு குறிப்பிடுகிறார். அந்த விழிப்புணர்வையே அந்தக் கட்டுரை சுட்டிக் காட்டியது. கட்டுரையின் மைய நோக்கமும் அதுவே. அதைத் தெளிவாக வெளிப்படுத்தியதாக உணர்கிறேன்.
மற்றபடி, எதிர்வினைக் கடிதம் எழுப்பியிருக்கும் வினாக்கள் பல தளங்களில் விரிவாகப் பேசப்பட வேண்டியவை. எனவே, அம்பேத்கரின் பங்கை மறுக்கும் எந்த நோக்கமும் அக்கட்டுரையில் இல்லையென்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மின்னஞ்சல்: chithra.ananya@gmail.com